கூரையில்லாமல் ஓர் குடில்

எழுத உட்கார்ந்த போது என் ஜன்னலுக்கு வெளியேயிருந்து மடியில் வந்தமர்ந்தது அந்தப் பந்து. திடுக்கிட்டுத்தான் போனேன். எதிர்பாராத தருணத்தில் ஏதேனும் மேலே வந்து விழும்போது உடம்பு ஒரு சொடுக்கு சொடுக்குமே அந்தத் திகைப்பு அது. ஆனால் திகைப்பை முறுவலாக மாற்றியது ஒரு குரல்.

“அங்கிள், பால்!” எனக் கேட்டுக் கொண்டு வந்தான் அண்டை வீட்டுச் சிறுவன். நான் கையில் பந்தை வைத்துக் கொண்டு அவனைக் கண்ணகலப் பார்த்தேன். அவன், “ஸாரி!” என்றான். குரலில் வருத்தமில்லை. ஆனால் அவன் முகம் சிவந்து, பின் சில கணங்கள் வாடியது. அவன் ’ப்ளீஸ்!’ என ஆரம்பிப்பதற்குள் பந்தைத் தூக்கிப் போட்டேன். ஒரு குருவியைப் போல உற்சாகம் சிறகசைக்க அவன் பறந்து போனான்.

அவனைக் கண்ணகலப் பார்த்த அந்த கணத்தில் நானும் சிறுவனானேன், என்னுடைய நேற்று என் நெஞ்சில் நிழலாடியது, நானும் அவன் வயதில் வீதியில் கிரிக்கெட் ஆடி, வீட்டுக்குள் விழுந்த பந்தைத் தேடிக் கதவேறிக் குதித்திருக்கிறேன், காலடிச் சத்தம் கேட்காமல் பூனை நடை நடந்து, தேடியிருக்கிறேன். அகப்பட்டுக் கொண்டு வசவும் வாங்கியிருக்கிறேன். அந்த வசவுகள் எல்லாம் கல்யாணப் பந்தலில் தெளிக்கிற பன்னீர்த் துளிகளைப் போல உடம்பையோ உள்ளத்தையோ தொடாமல் அடுத்த கணமே காற்றில் கலந்து மறைந்து போயின.

காலங்கள் எத்தனை கடந்தாலும் காம்பெளண்ட் சுவற்றில் கரிக்கோடுகள் வரைந்து வீதியில் விளையாடுவது என்பது, அன்றைக்கிருந்த அளவு இல்லை என்றாலும், இன்றைக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதைக் காணும் போது, ஏன் இன்னும் குழந்தைகள் வீதிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி என் மீது அந்தப் பந்தைப் போல வந்து விழும்.

வேறெங்கோ உள்ள மைதானத்தை தேடிப் போய் ஆடமுடியாத சோம்பேறி பயில்வான்கள் வீட்டருகேயே விளையாடத் தீர்மானித்து வீதிகளையே ஆடுகளமாக ஆக்கிக் கொள்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இன்று நகரங்களில் விளையாடப் போதுமான மைதானங்கள் இல்லை என்பதும்.

விளையாடுவதற்கென்றிருந்த பொட்டல் வெளிகள் எல்லாம் சென்னையில் பூத்துக் குலுங்கும் பூங்காகளாகி, நடுத்தர வயதினர் தொப்பையைக் குறைக்கும் நடைப்பயிற்சிக்கான தடங்களாக மாறிவிட்டன.இன்று அங்கு இளைஞர்களுக்கு இடமில்லை.

பள்ளிகளில் கூட மைதானங்கள் ஒப்புக்குச் சப்பாணி, ஊருக்கு மாங்கொட்டை என்ற அளவில்தான் இருக்கின்றன. அவையும் ஐந்து மணிக்கு அடைக்கப்படுகின்றன. பணி முடிந்து வீடு திரும்பும் ஃபாக்டரித் தொழிலாளர்களைப் போல, பள்ளி முடிந்ததும் கொத்துக் கொத்தாக ஸ்கூல் பஸ் ஏறி குழந்தைகள் கூடு திரும்புகின்றன. அங்கு அவர்களுக்கு ட்யூஷன் என்ற புட்டிப்பாலோ, வீட்டுப் பாடம் என்ற பூதமோ, தொலைக்காட்சி என்ற மோகினியோ காத்திருக்கும்.

இதையெல்லாம் மீறி விளையாட்டை விரும்பும் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்க நம்மிடத்திலே மைதானங்கள் இல்லை. காலி இடங்களில் எல்லாம் கான்கீரிட் மரங்கள் எழுந்து நிற்கின்றன. கிரிக்கெட் மட்டுமல்ல, கைப்பந்து, ஹாக்கி, ஏன் கிளித்தட்டு, பாண்டிக்குக் கூட இடம் இல்லை. கிராமங்களில் கூட குலை குலையா முந்திரிக்காய்களைக் காணோம். பூப்பறிக்க வருகிறோம் என்றொரு விளையாட்டிருந்தது என்பதை இன்று புத்தகங்களை சுவாசிக்கும் குழந்தைகள் அறியமாட்டார்கள்

கலாசாரம் மாறியதால் விளையாட்டுத் திடல்கள் காணாமல் போனதா அல்லது காணாமல் போனதன் காரணமாக கலாச்சாரம் மாறியதா என்பது முட்டையா கோழியா முதலில் எது என்பதைப் போன்ற ஒரு கேள்வி.

இன்னொரு புறம் விளையாட்டைத் தொழில்முறையில் கற்பிக்க நினைக்கும் பெற்றோர்கள் கணிசமாகப் பணம் செலுத்திக் கோடைக்காலப் பயிற்சி முகாம்களில் குழந்தைகளைக் கொண்டு சேர்க்கிறார்கள். மரங்களைத் தொட்டிகளில் வளர்க்க முனையும் இந்த முயற்சியில் எப்போதாவது மிகச் சில கனிகள் கிடைக்கின்றன. என்றாலும் பல நேரங்களில் இந்த போன்சாய் மரங்களிலிருந்து காற்றுக் கூடக் கிடைப்பதில்லை என்பதுதான் யதார்த்தம்.

பெண் குழந்தைகள் நிலைமை இன்னும் பரிதாபம். இசைப்பள்ளிக்கும், நாட்டிய கேந்திராக்களுக்கும் அனுப்பத் தயாராக இருக்கும் பெற்றோர்கள் அவர்களை கிரிக்கெட் கற்கவோ கபடியில் பயிற்சி பெறவோ களம் இறக்குவதில்லை. கராத்தேயும் டென்னிசும் பயில பெண் குழந்தைகளை அனுப்புவதையே கூடப் பெருமையாக எண்ணிப் பெருமிதம் கொள்ளும் பெற்றோர்கள்தான் பலர். காரணங்களைக் கண்டு பிடிப்பது கடினமில்லை. நாட்டியத்தையும் இசையையும் போலப் பெண்களை விளையாட்டோடு இணைத்து எண்ணும் கலாசாரம் நம்மிடையே இல்லை

கலாசாரத்தின் ஓர் அங்கமாக விளையாட்டு இல்லாத சமூகத்தில் வெற்றுத் திடல்கள் காணாமல் போவதும் வீதிகளே மைதானங்களாக மாறு வேஷம் கொள்வதும் இயல்புதான். ஆனால் அதில் பாதிக்கப்படுவது இளைஞர்கள்தான் என்பதை எண்ணிப் பார்த்தால் ஓர் துயரம் உள்ளே எழும்.  காரணம்-

ஆரோக்கியமான இளைஞர்கள் இல்லாத ஒரு தேசம் கூரையில்லாத வீடு,

புதிய தலைமுறை பிப்ரவரி 14 2013

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *