தேசத்தின் தேவை

தேசத்தின் தேவை

 

நூற்றியிருபது கோடி மக்களுக்கு மேல் உள்ள இந்தியாவிற்கு மிகச் சில வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள்தான? சிறிய நாடுகள் கூடப் பதக்கங்களைக் குவிக்கும் போது நம்மால் ஏன் பெரிய அளவில் பதக்கங்களை வெல்ல முடிவதில்லை?

 

நான்காண்டுகளுக்கு ஒரு முறை, ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் முடிவிலும் நாடு முழுவதும் கேட்கப்பட்டு இரண்டு நாளில் இறந்து போகிற இந்தக் கேள்வி இப்போதும் எழும். ஆனால் இன்னும் சில வாரங்களில் இலங்கையில் 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் துவங்கும் போது பதிலே இல்லாமல் இந்தக் கேள்வியை ஊடகங்களும் வாசகர்களும் செளகர்யமாக மறந்து போவார்கள்

 

என்றாலும் இந்த ஒலிம்பிக், ஏன் ஒவ்வொரு ஒலிம்பிக்குமே உணர்த்துகிற பாடம் ஒன்றுண்டு.

 

இந்த ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர்கள் சுஷீல்குமார், விஜயகுமார், மேரி கோம், ககன் நரங், சாய்னா நெய்வால், யோகேஷ்வர் தத். இவர்கள் அனைவருமே தனியாக விளையாடி இந்தச் சாதனையை நிகழ்த்தினார்கள். நாம் அணியாக ஆடிய ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் வெற்றி காணவில்லை. ஹாக்கியின் நிலைமை பயங்கரம். ஒரு போட்டியில் கூட நாம் வெற்றி பெறவில்லை.

 

தனியாக சாதனைகளை நிகழ்த்திய இந்தியா அணியாக ஆடும் போது வெற்றி பெறுவதில்லை. ஏன்? 

 

இதுதான் இந்தியர்களின் மனோபாவம். ஓர் அணியாகச் சேர்ந்து செயலாற்ற நாம் அறிந்திருக்கவில்லை. அப்படிப் பயிற்றுவிக்கவும் படுவதில்லை. நம் ஒவ்வொருவருடைய ஈகோவும் இமயமலையை விடப் பெரிது. அவற்றை சமன்படுத்துவது அத்தனை எளிதல்ல. ஒலிம்பிக் போட்டிக்கான டென்னிஸ் அணியை அறிவிக்கும் முன் நடந்த ‘மல்யுத்தத்தை’ நாடு கண்டது. இத்தனைக்கும் அது ஏதோ பத்துப் பதினைந்து பேர் கொண்ட அணி அல்ல. இரண்டு பேர். இரண்டே இரண்டு பேர்!

 

இந்த ஒலிம்பிக இன்னொரு பாடமும் சொல்கிறது. இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இந்த அறுவரில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் எளிய பின்னணி கொண்டவர்கள். சுஷீல் குமாரின் தந்தை ஒரு பஸ் டிரைவர். யோகேஷ்வரின் பெற்றோர் ஆசிரியர்கள். மேரி கோமின் பெற்றோர்கள் காட்டை கழனிகளாகத் திருத்தும் விவசாயிகள்.

 

இந்த வாழ்க்கைச் சூழலிலும் இவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறைக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்கள். எத்தனை இடர்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வெல்வது ஒன்றையே இலட்சியமாகக் கொண்டிருந்தார்கள்.

அரையிறுதிப் போட்டியில் வென்ற சுஷீல் குமார் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இறுதிப் போட்டிக்குக் களம் இறங்க வேண்டும். அதற்குள் வாந்தியும் பேதியும் அவரை வாட்டின. அந்த மூன்று மணி நேரத்திற்குள் ஆறு முறை கழிவறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். உடல் உலர்ந்து சோர்ந்து விட்டது. அத்தோடு அரையிறுதிப் போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் வேறு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இத்தனையும் மீறித்தான் அவர் இந்த வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவிற்கு வென்று கொடுத்தார். யோகஷ்வரும் மேரி கோமும் கடந்த வந்த பாதைகளும் கடினமானவை

 

வறுமையைக் கண்டு பயந்து விடாமல் திறமையின் மீது வைக்கிற நம்பிக்கை, இடர்களைக் கண்டு மலைத்து விடாமல் இலட்சியத்தை எட்டிப் பிடிக்கிற தாகம், அகங்காரங்களை உதறிவிட்டு அணியாகச் சேர்ந்தாடுகிற திறமை இவையெல்லாம் விளையாட்டுக்களுக்கு மட்டுமல்ல, தேசத்திற்கும் தேவை

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *