தலைவலிக்குத் தீர்வு தலையை வெட்டிக் கொள்வதல்ல

தலைவலிக்குத் தீர்வு

தலையை வெட்டிக் கொள்வதல்ல

 

எந்த ஒரு விஷயத்தையும் எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து முடிவெடுப்பது என்பதுதான் நிலைத்த பயனை, நீடித்த நன்மையைத் தரும் என்பது நிர்வாகவியலில் ஓர் அடிப்படை சூத்திரம். இதற்கு நிர்வாகவியல் அறிவு வேண்டாம். ‘காமன் சென்ஸ்’ போதும். இதை கிராமப் புறங்களில் ’நல்லது கெட்டது நாலையும் பார்த்து முடிவு செய்யணும்ல’ என்று சாதாரணமாகச் சொல்வார்கள். பசுமைப் புரட்சி தந்த பாடங்கள் இதை நமக்கு அனுபவ பூர்வமாக உணர்த்தியிருக்கின்றன. 70களில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது என்ற ஒற்றை நோக்கத்தில் வீரிய ரகப் பயிர்களையும், அதற்கேற்றவாறு செயற்கை ரசாயன உரங்களையும் பயன்படுத்தப் போய் இன்று நிலம் அதன் இயல்பில் திரிந்து வேளாண்மை என்பது ஒரு சவாலாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.

 

தனிமனிதர்களுக்கு நல்லது கெட்டது நாலையும் ஒருவரோ, ஒரு குடும்பமோ சேர்ந்து ஆராய்வது சாத்தியம். ஆனால் அரசாங்கம் என்று வரும் போது அதை ஒருவரால், ஒரு அமைப்பால் செய்ய நடைமுறையில் இயலாது என்பதால்தான் அரசாங்கம் பல அமைச்சகங்களாகவும், துறைகளாகவும் பிரிக்கப்பட்டு அவற்றின்வசம் குறிப்பிட்ட பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. ஆரோக்கியமான ஆளுகைக்கு அதிகாரப் பரவாலாக்கல் உதவும் என்பது மட்டுமல்ல, அது ஜனநாயத்தின் அடிப்படையும் கூட.

 

ஆனால் இந்த அடிப்படையையும், ;காமன் சென்ஸ்’சையும் காற்றில் விசிவிட்டு, மத்திய அரசின் நிதி அமைச்சகம் தேசிய முதலீட்டு வாரியம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்த எண்ணுகிறது. இந்த அமைப்பு மறைமுகமாக மற்ற அமைச்சகங்களின் முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தன்வசம் எடுத்துக் கொள்ள எண்ணுகிறது. முதலீடு தொடர்பான மனுக்களுக்கு அமைச்சகங்கள் அனுமதி அளிக்கக் காலதாமதம் செய்வதால் இத்தகைய அமைப்புத் தேவை என வாதிடப்படுகிறது.

 

’தாமதம்’ என்பது ஒரு தலைவலியாக இருக்கலாம். ஆனால் தலைவலிக்குத் தீர்வு தலையை வெட்டிக் கொள்வதல்ல

 

சூழலை மாசு படுத்தும் ஒரு தொழிற்சாலையை ஒரு பன்னாட்டு நிறுவனம் அமைக்க முன் வரும் போது, முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படும், நிதி அமைச்சகம் அல்லது தொழில் அமைச்சகம், சூழல் பற்றிய பிரச்சினைகளைப் பொருட்படுத்தாமல் அதை வரவேற்கவே செய்யும். ஆனால் சுற்றுச் சூழல் அமைச்சகம் அதை எதிர்க்கும். தேசிய முதலீட்டு வாரியம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி அதனிடம் நீங்கள் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முடிவிற்குக் காத்திருக்க வேண்டியதில்லை எனவும் சொல்லிவிட்டால் சுற்றுச் சூழல் என்பது நாசமாவதைத் தடுக்க முடியாது போய்விடும்.

 

இதே போல நாட்டின் இயற்கை வளங்களும் கொள்ளை போக நிறைய வாய்ப்புண்டு. அண்மைக்காலமாக அலைக்கற்றை, நிலக்கரி, நிலம், தாதுக்கள் காடுகள் ஆகிய இயற்கை வளங்கள், வருவாய் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பன்னாட்டு/ பெரிய வர்த்தக  நிறுவனங்களிடம் அளிக்கப்படுவதையும், அவற்றில் பல லட்சம் கோடிகளுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகச் செய்திகள் வருவதையும் பார்க்கிறோம். இந்த நிலையில் தேசிய முதலீட்டு வாரியம் என்ற அமைப்பு இவற்றை விரைவுபடுத்தவும், விரிவுபடுத்தவுமே செய்யும்.. எனவே அந்த அமைப்பை நிறுவும் யோசனையை அரசு கைவிடுவதே நல்லது.

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *