தேனீக்களும் கரையான்களும்

தேனீக்களும் கரையான்களும்


கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அக்னி 5 ஏவப்பட்டு அடுத்த சில நாள்களிலேயே, உளவு பார்க்கும் ரிசாட் செயற்கைக் கோள் வானில் பறக்கிறது. அதன் மறுநாள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் வெள்ளோட்டம் விடப்படுகிறது.

பெருமையாக இருக்கிறது. இந்தியாவின் தொழில்நுட்பம் சிகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இல்லை,இல்லை பறந்து கொண்டிருக்கிறது,

இந்தச் செய்திகள் வெளியாகியுள்ள அதே நாளில் அநேகமாக முதல் பக்கத்தில் பாதுகாப்புத் துறை தொடர்புடைய வேறு செய்திகளும் வெளியாகியுள்ளன, போபர்ஸ் பீரங்கிகள் வாங்குவதில் நடந்த ஊழலில் போதிய ஆதாரங்கள் இருந்தும் லஞ்சம் பெற்றவர்களை அரசு தப்ப விட்டுவிட்டது என்கிறது ஒரு செய்தி, இன்னொரு செய்தி, ஆளும் கட்சித் தலைவரின் ஊழலை வெளிக் கொண்டு வருவதற்காக ராணுவத்திற்குக் கருவிகள் விற்கப் பேரம் பேசுவது போல் ஒரு பத்திரிகை நடத்திய நாடகத்தில் அந்த அரசியல் தலைவர் கத்தைகத்தையாக ரூபாய் நோட்டுக்கள் பெற்றுக் கொண்டதும், அதற்காக அவர் தண்டிக்கப்பட்டு சிறை சென்றதையும் விவரிக்கிறது. ராணுவத்திற்கு  டிரக் விற்றதில் ஊழல் செய்ததாக  விசாரணைக்குள்ளாகியிருக்கும் பி.இ.எம்.எல் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான கூட்டுறவு சங்கத்தின் நிலம் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளின் குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்திருப்பதைச் சொல்கிறது இன்னொரு செய்தி. தன்னை நேரில் சந்தித்து 14 கோடி ரூபாய் அளவிற்குப் பேரம் பேசியதை சொல்லும் தலைமைத் தளபதியின் பேட்டி இன்னொரு இடத்தில் பிரசுரமாகிறது.

அதாவது தொழில் நுட்பத்தில் சிகரங்களைத் தொட்டிருக்கும் நாம் ஊழலில் மிக அதல பாதாளத்தில் இருக்கிறோம்.

தேசம் என்ற இந்த மரத்தின் உச்சியில் பறந்து திரிந்து தேனிக்கள் தேன் கூடை அமைக்கின்றன. தங்கள் உழைப்பால் அவற்றில் தேனை  கொண்டு வந்து நிரப்புகின்றன.  ஆனால் அதே மரத்தின் அடியில் கரையான்கள் புற்றுக்கள் அமைக்கின்றன, அந்த வேரின் ஆணி வேரைத் தின்ன அவை படையெடுக்கின்றன.

நாம் நம் சாதனைகளைக் கண்டு தலை நிமிர்வதா? ஊழல்களைக் கண்டுத் தலை குனிவதா?

நாம் அடைந்திருக்கும் எல்லா வெற்றிகளையும் அர்த்தமற்றதாக்கி விடக்கூடியது ஊழல். அதை நாம் என்று உணர்கிறோமே அன்றுதான் நாம் உண்மையிலேயே வெற்றிக்குத் தகுதியானவர்களாக ஆவோம். ஏனெனில்-

வெற்றி என்பது வெறும் சொல் அல்ல

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *