நாளைய அமெரிக்காவிற்கான இன்றைய செய்தி

முன்னெப்போதும் இல்லாத அளவு மிகக் கடுமையான போட்டியாக அமைந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பாராக் ஒபாமா மீண்டும் வென்றிருக்கிறார். அமெரிக்காவில் ஒருவர் தொடர்ந்து இருமுறைதான் அதிபராகப் பதவி வகிக்க முடியும். ஆனால் அமெரிக்காவின் 223 ஆண்டு வரலாற்றில் இரு முறை அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 15 பேர்கள்தான். அப்படி ஒரு வாய்ப்புத்தான் ஒபாமாவிற்குக் கிட்டியுள்ளது. ஆனால் 1993க்குப் பிறகு, அதாவது பில் கிளிண்டன் காலத்திலிருந்து அதிபர் பதவி வகித்தவர்கள் தொடர்ந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள் என்பதைக் கவனிக்கும் போது இதை ஒரு சாதனையாகக் கருத இயலவில்லை.

அண்மையில் நடந்து முடிந்துள்ள தேர்தல்கள், அமெரிக்கா இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடப்பதைக் காட்டுகிறது. இன ரீதியாக மட்டுமல்ல, கிராமங்களில் வசிப்பவர்கள், நகர வாசிகள் என்ற இரு தரப்பினரிடையேயும் எண்ணத்தில் பெரும் வித்தியாசம் இருப்பதையும் காண முடிகிறது.

ஒபாமாவிற்குப் கணிசமான அளவு பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள் (55 சதவீதம்) அதிலும் கறுப்பினப் பெண்கள் அமோக ஆதரவளித்திருக்கிறார்கள் (93 சதவீதம்) அதே போல ஆசிய இனத்தவரும்,(73%) லத்தீன் அமெரிக்கப் பகுதியிலிருந்து குடியேறிய ஸ்பானிஷ் மொழி வம்சாவளியினரும் (71%) ஒபாமாவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக எண்ணிக்கையில் வளர்ச்சி கண்டு வரும் சமூகப் பிரிவுகள் இவை. உதாரணத்திற்கு மக்கள் தொகையில் 18 வயதிற்குட்பட்டவர்களில் ஸ்பானிஷ் மொழி பேசுவோர் இப்போது 23 சதவீதம் பேர். 2020ல் இது 36 சதவீதமாக இருக்கும் ஆனால் கல்லூரிகளில் உள்ள மாணவர்களில் 6 சதவீதம் பேர்தான் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.காரணம் பொருளாதர வசதியின்மை. அமெரிக்க மக்கள் தொகையில் ஆசியர்கள் 6 சதவீதம்தான். ஆனால் அவர்களின் வளர்ச்சி வீதம் 46%
சுருக்கமாகச் சொன்னால் நாளைய அமெரிக்கா இன்று ஒபாமாவிற்கு வாக்களித்துள்ளது.

சமூகத்தில் பெருமளவு அதிகாரம் பெற்றிராத மக்கள், அதே நேரம் எண்ணிக்கையில் வளர்ச்சி பெற்று வரும் மக்கள் ஒபாமாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது அமெரிக்க அரசியலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது சுவாரஸ்யமான, கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கும். இந்த வாக்காளர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், ஒபாமா இடதுசாரிப் போக்கினை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தத் தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் சோஷலிஸ்ட்என்று விமர்சிக்கப்பட்டார். அமெரிக்காவில் சோஷலிசம்மலருமானால் அதை ஆராய்வது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். அடுத்த முறை ஒபாமா போட்டியிடமுடியாது. அதனால் அவர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இடதுசாரிப் பாதையிலிருந்து முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்பட்டால் அவர் தனக்கு வாக்களித்தவர்களிடமிருந்து அன்னியப்படுவார்.

இந்தியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் இராது. பாகிஸ்தானில் குழப்பம் நீடிக்கும் வரை, சீனாவைக் கட்டுக்குள் வைக்கும் நிர்பந்தம் அமெரிக்காவிற்கு இருக்கும்வரை இந்திய அமெரிக்க உறவு சுமுகமாகவே இருக்கும். ஆனால் வர்த்தகத்தைப் பொறுத்தவரை அவுட் சோர்சிங் போன்ற துறைகள் ஊக்கமளிக்கப்படாமல் போகலாம். ஆனால் அமெரிக்கா மட்டுமே உலகமல்ல என்பதை நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் வாய்ப்புப் பெறாதவர்கள் தங்கள் குரலை உயர்த்தி வருகிறார்கள். அமெரிக்காவும் அதற்கு விலக்கல்ல.   

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *