வாழ்க்கையிலிருந்து பெறப்பட்ட கதைகள்

சிறுகதை என்பதைக் கவலையோடு பார்க்கிற காலம் இது. உலகெங்கும் சிறுகதை வாசிப்பில் மக்கள் ஆர்வம் இழந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்ப் பத்திரிகைகளில் கதைகளுக்கான இடம் குறைந்து வருவது அது உண்மைதானோ என்ற கேள்விகளை எழுப்புகிறது.இலக்கியச் சிற்றேடுகளில் கூட இன்று அ-புனைவு அதிகம் இடம் பிடிக்கிறது.

 

இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

 

கதை என்பது புனைவு என்ற புரிதல் ஒரு காரணம். அதாவது அதில் காணப்படும் சம்பவங்கள் பாத்திரங்கள் யாவும் கற்னபையே, அது இருப்பவரையோ, இறந்தவரையோ குறிக்காது என்று கற்பனைக் குதிரையில் ஏறிக் கதை பறிக்க முனைவது, வாசகனை, எழுத்திலிருந்து அந்நியப்படச் செய்திருக்கக் கூடும். வாழ்வின் வெதுவெதுப்பில் நாம் எல்லோருமே நம்முடைய குழந்தை மனங்களை இழந்திருக்கிறோம்.

 

வாழ்க்கையைப் படிக்காமல், புத்தகங்களைப் படித்துப் புத்தகங்களைச் செய்கிற மேட்டிமை ஒரு காரணம். இது உலர்ந்த ஒரு நடைக்கும் கதைக்கும் வாசகனை இட்டுச் செல்கிறது.

 

இலக்கியம் என்பது, வார்த்தைகளால் எழுதப்படுவது அல்ல. அது வாழ்வனுபவத்திலிருந்து பெறப்படுவது. அதை மேம்படுத்துவது. அந்த அனுபவ வெளிச்சத்தில் நம் நம்பிக்கைகளை -அது ஆன்மீகமானாலும் சரி, அரசியலானாலும் சரி- பரிசீலித்துக் கொள்ள உதவுவது. எனக்கு இப்படி நடந்தது அது உனக்கும் நடக்கலாம், அப்படி நடந்தால் இது உனக்கு உதவலாம் என்ற பரிவில் விளைவது. ஓ! உனக்கு அப்படியா நடந்தது. இதுவே எனக்கு நடந்திருந்தால் நான் இப்படி எதிர் கொண்டிருப்பேன் எனப் பிறரைத் தானாகப் பார்க்கிற புரிதலில் பிறப்பது.

 

இவை கொண்ட கதைகள் என்றும் வாசிக்கப்படும். யோசிக்கப்படும். அவை நேசிக்கவும்படும். ஏனென்றால் இந்தக் கதைகளின் அடிப்படையாக வாழ்க்கை இருக்கும்.

 

நண்பர் சாந்தனின் கதைகள் வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டவை. எனவே அவை உண்மைக்கு அருகில் இருக்கின்றன.

 

நான் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்த நாள்களில் அரசு மருத்துவமனைகள் இயங்கும் விதம் குறித்து அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். எளியவர்கள் அங்கே அலட்சியப்படுத்தப்படுவதையும், அவமானப்படுத்தப்படுவதையும் கண்டிருக்கிறேன். அதைக் கண்டித்திருக்கிறேன். சண்டையிட்டிருக்கிறேன். கதையாகப் பதிந்திருக்கிறேன். அந்தத் தகுதியில் சாட்சியம் சொல்கிறேன். சாந்தன் ஊற்றுக்கண் கதையில் அரசு மருத்துவமனைகளைப் படம் – புகைப்படமல்ல, எக்ஸ்ரே- பிடித்திருக்கிறார்.

 

இப்படி ஊடுருவிப் பார்க்கிற பார்வை படைப்பாளிக்கு பலம். அதுதான் ‘எழுத்தாளனை’யும் ‘படைப்பாளி’யையும் பிரித்துக்காட்டுகிற லட்சுமணக் கோடு. சாந்தனின் இந்தப் பார்வையை அவர் காவல்துறையின் கடைநிலை ஊழியர் குமாரவேலுவை அணுகுகிற கோணத்திலும் பார்க்கலாம். அதிகாரத்தின் அடையாளமாகச் சாதரண மக்களால் அறியப்படுகிற நம் காவல்துறையில் கடைசிப் படிகளில் இருக்கிறவர்களது வாழ்க்கை துயரமானது. ஒரு சாதாரணக் குடிமகனுக்கு வாய்க்கிற சந்தோஷங்கள் – குழந்தை, குடும்பம்- கூடப் பறிமுதல் செய்யப்பட்டுவிட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அவர்கள். சாந்தன் இந்தக் கதையைப் இதயத்தின் ஈரம் சொட்டச் சொட்ட எழுதியிருக்கிறார்.

 

முரசு கட்டிலில் தூங்கிய மோசி கீரனைப் போல இன்ஸ்பெக்டர் அறையிலேயே வந்து தூங்கும் ‘அக்யூஸ்ட்’களையும் பார்க்கிறோம்.சட்டம் செய்யாத சமத்துவத்தை ஒரு கொசு சாதித்துவிடுவஹில் உள்ள நையாண்டியைக் கண்டு முறுவலிக்கிறோம்

 

சாந்தனின் வார்த்தைகள் வீர்யமிக்கவை. சில இடங்களில் அவை மிடுக்காக மிளிர்கின்றன. “பேனாவில் எழுதி, எழுதியை எச்சில் தொட்டு அழுத்தி, அழித்த பின் தெரியும் காகிதத்தைப் போல” என ஒரு கிராமத்தை அறிமுகப்படுத்துகையில் அங்கே கவிதை கசிகிறது. ‘எப்போதும் பதில் ஒன்றாய், இரண்டாய், ஏன் மூன்றாய்க் கூட அமைந்துவிடலாம் தப்பில்லை.ஆனால் கேள்வி மட்டும் ஒன்றாய் சரியானதாய் அமைதல் வேண்டும்” என்னும் போது அங்கே தத்துவம் தலைகாட்டுகிறது. கணவன் மனைவி மீது கொட்டுகிற ஆத்திரத்தையும், அது பின் தனிமையில் மனைவியால் திருப்பித் தரப்படுவதையும் சொல்லும் இடத்தில் ‘விதைத்தது முளைக்கிறது’ என்ற வரி வந்து விழுகிறதே அங்கே யதார்த்தம் சொடுக்குகிறது.

 

இத்தனை சின்னப் புத்தகத்தில் உள்ள அத்தனை பக்கங்களையும் வரி வரியாய்ப் பேசிக் கொண்டு போவது அத்தனை சரியில்லை. நீங்களும் வாசித்து உங்கள் அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்ள இடம் அளித்து நகருவதுதான் நியாயம். குயிலைப் பற்றி நூறு வரிகளில் கவிதை எழுதினாலும் அவை அதன் குக்கூ என்ற ஒற்றைச் சொல்லின் இனிமையைச் சொல்லிவிடாது. நீங்களே படியுங்கள். உங்கள் அனுபவமும் சாந்தன் சொல்லையும் பொருளையும் தேர்ந்தெடுத்து எழுதும் ஒர் சிறப்பான படைப்பாளி என்பதை என்னைப் போல நீங்களும் ஏற்பீர்கள்.

 

நண்பர் சாந்தனுக்கு என் நல்வாழ்த்துகள்

 

அன்புடன்

மாலன்

 

   

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *