பேரன்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்

தீக்குளிப்பு செய்தி கண்டேன், திடுக்கிட்டேன்.

அன்று தீ பரவட்டும் என்ற அண்ணாவின் குரல் கேட்டு சிறை சென்றவர் நீங்கள். ஆனால் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் அளித்திருப்பது தீக்குளிப்பேன் என்ற தீனக் குரல். அண்ணாவின் முழக்கம் ஆவேசத்தில் எழுந்த போர்க்குரல். இது விரக்தியில் விளைந்த தற்கொலை முயற்சி. வயோதிகம் உங்களை எப்படி வளைத்துவிட்டது பார்த்தீர்களா?

சாதனைகளும் சர்ச்சைகளும் நிறைந்த 75 ஆண்டுகாலப் பொது வாழ்க்கை, ஐந்து முறை முதல்வராக ஆண்ட அனுபவம் உங்களுடையது. இன் தமிழால் இதயங்களை வெல்லலாம் என்பதை உங்கள் எழுத்துக்கள் உலகிற்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.உங்களை ஓர் உதாரணமாக எடுத்துக் கொண்ட இளைஞர்கள் எத்தனையோ ஆயிரம் பேர்.

இத்தனை அனுபவமும் ஆற்றலும் முதிர்ச்சியும் கொண்ட நீங்கள் தீக்குளிப்பேன் எனச் சொல்வது இளைஞர்களுக்கு எத்தனை தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதை நீங்கள் உணர்ந்துதான் சொன்னீர்களா? யோசித்துதான் பேசினீர்களா? தற்கொலைக்கு வழி காட்டுவதா ஒரு தலைவரின் பணி?

சரித்திரத்தைச் சற்றே புரட்டிப் பாருங்கள். தீக்குளிப்புகள் என்ன சாதித்தன? இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துத் தீக்குளித்தார் சின்னச்சாமி. இன்றும் இந்தி, இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. முத்துக் குமரனின் தீக்குளிப்பு இலங்கை யுத்ததத்தை நிறுத்தியதா? செங்கொடியின் தீக்குளிப்பு அந்த மூவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவித்துவிட்டதா? தீக்குளிப்பு என்பது தினசரிகளுக்கு ஒரு நாள் செய்தி. அத்தோடு சரி.

வழக்கு ஒன்று நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அதன் தீர்ப்பு இப்படி அமையாவிட்டால் நான் தீக்குளிப்பேன் என ஒருவர் அறிவிப்பது நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுப்பதாக, நீதிமன்றத்தை மறைமுகமாக மிரட்டுவதாகும் என வழக்கறிஞர்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் கேட்கவிரும்புவதெல்லாம் அதுவல்ல

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் காவிரி இன்னும் கானல் வரியாகவே இருக்கிறதே அதற்குத் தீக்குளிப்பேன் என ஏன் உங்களுக்கு அறிவிக்கத் தோன்றவில்லை? முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம் என கேரளம் சட்ட மன்றத்தில் அறிவிக்கிறதே அதற்கு தீக்குளிப்பேன் என அறிவிக்கவில்லையே நீங்கள்? அண்ணாவின் கனவு என நீங்கள் வர்ணித்த சேதுசமுத்திரத்திட்டம் அந்தரத்தில் தொங்குகிறதே அதற்கு உச்ச நீதிமன்றம்- வேண்டாம் உங்கள் யுபிஏ அரசு- உகந்த முடிவு எடுக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்றா சொன்னீர்கள்?

இத்தனையும் விடுங்கள். புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழ் சமூகத்தின் முன் வைத்த இலங்கைப் போர்க் குற்றக் காட்சிகளைக் கண்டு அத்தனை தமிழர்களின் இரத்தமும் கொதித்துக் கொண்டிருக்கிறது. இதயம் உறைந்து கனக்கிறது. அதற்காக நீங்கள் தீக்குளிக்க வேண்டாம். இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்காவிட்டால் அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள், அது போதும்

உணர்ச்சிகளை உதறிவிட்டு அறிவைத் தீட்டுவதுதான் முதிர்ச்சியின் முத்திரை. அதைத்தான் தமிழ்ச் சமூகம் தங்களிடம் எதிர்பார்க்கிறது

புத்தகங்கள் அருமையானவை.அதில் சந்தேகமில்லை. ஆனால் மனித உயிர்களைவிட எந்தப் புத்தகமும் அருமையானதில்லை.

அன்புடன்

இளந்தமிழன்

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *