பரிவில் எழுந்த படைப்புக்கள்

பரிவில் எழுந்த படைப்புக்கள்

எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவர்களை எல்லாம் படைப்பாளிகள் என்று உலகம் கொண்டாடுவதுண்டு. அவர்களுக்கே கூட அந்தப் பெருமிதம் உண்டு. ‘படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்று கண்ணதாசன் பாடினார். ஆனால் என்னைப் பொறுத்தவரை எழுதுகிறவரின் பெருமை அவரது படைப்பாற்றலில் இல்லை. ஒன்றைப் பிறப்பிப்பதில் பெருமை ஏதும் இல்லை. அது ஒரு இயற்கையான, அல்லது லெளகீக அல்லது physical act. ஏதோ ஒன்றாகப் பிறக்கிறோமே, அதுதான் மகிழ்ச்சிக்குரியது. அதுவும் கணந்தோறும் பிறக்க முடிந்தால் நாம்தான் கடவுள். நன்றிந்தக் கணம் நான் புதிதாய்ப் பிறந்தேன், நலிவிலாதோன், நான் கடவுள் என்று மகாகவி (பாரதி) நமக்குத் தெளிவாகச் சொல்லி வைத்திருக்கிறான்.

பறவைகளுக்கு இரண்டு பிறப்பு உண்டு, முட்டையாக பூமியில் விழுவது ஒன்று. முட்டையை மோதி உடைத்துக் கொண்டு குஞ்சாக வெளி வருவது மற்றொன்று என்று சொல்வார்கள். ஆனால் கதாசிரியர்களுக்கு எண்ணற்ற பிறப்புக்கள். ஒவ்வொரு கதையிலும் அவர்கள் தங்கள் பாத்திரங்களாகப் பிறக்கிறார்கள். அந்தப் பாத்திரங்கள் எதிர் கொள்ளும் சூழ்நிலைகள்  தங்கள் மனவுலகில் எதிர் கொள்ள வேண்டும்,  அந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்ளுவார்களோ அதைப் போல தங்கள் மனவுலகில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களைப் போல சிந்திக்க வேண்டும். ஒரு கதையையும் – ஒரு நல்ல கதையையும், ஒரு நல்ல கதையையும் – ஒரு சிறந்த கதையையும் வேறுபடுத்துவது, இந்தப் ‘பிறப்பில்’ கதாசிரியர் எந்த அளவிற்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து அமைகிறது. முற்றிலுமாக தனது பாத்திரங்களாக மாறி விடுகிறவர்களது கதைகள் சிறந்த கதைகளாக அமைகின்றன.

இப்படித் தன்னை இழப்பதற்கு, இழந்து வேறு ஒன்றாக ஆவதற்கு ஒரு மனம் வேண்டும். தன்னைத் தாண்டிப் பிறரை நேசிக்கிற மனம். அது நேச்ம் கூட அல்ல. அதற்குப் பெயர் பரிவு. வடமொழியில் தயை என்று ஒரு சொல்கிறார்களே அது.

ஜெயந்தி சங்கருக்கு இப்படி ஒரு தயை ததும்பும் மனம் வாய்த்திருக்கிறது. அதுதான் அவரை எழுதச் செய்கிறது. மிகையாகச் சொல்லவில்லை. அவரது ஈரம் கதையைப் படித்துப் பாருங்கள். அல்லது நுடம் கதையைப் படித்துப் பாருங்கள், அல்லது இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் கை போன போக்கில் சில கதைகளைத் தேர்ந்து படித்துப் பாருங்கள் நான் சொல்வது சரி என்று புரியும்.

சிங்கப்பூரைப் பற்றி எத்தனையோ கவர்ச்சிகரமான சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான தமிழர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு, அது ஒரு கனவு பூமி. 70களில் வந்த தமிழ்த் திரைப்படங்கள் அதை ஒரு சொர்க்கலோகமாகக் காண்பித்தன. இப்போதும் கூட சில வணிக மேம்பாட்டுக்கான போட்டிகளில் முதல் பரிசு சிங்கப்பூருக்கு ஒரு சுற்றுலாவாக இருக்கும். (இரண்டாம் பரிசு தங்க நாணயம்) சற்று வளப்பமான மேல்தட்டு வட்டாரங்களில், ‘ என்ன இன்னுமா நீங்கள் சிங்கப்பூர் பார்த்ததில்லை?’ எனக் கண்களில் கேள்வி/கேலி மிதக்கும். பல இளைஞர்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புற இளைஞர்களுக்கு, சிங்கப்பூரில் போய் வேலை செய்து கை நிறைய சம்பாதித்துக் குடுமபத்தை செளகரியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஜீவ லட்சியம்.

அந்த நம்பிக்கையோடு, ஆண்டுதோறும் பலர், இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும், பிலிப்பைன்சிலிருந்தும், சிங்கப்பூர் வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளைப் பற்றி எழுதுகிற அளவிற்கு தமிழ் ஊடகங்கள் இவர்களைப் பற்றி எழுதுவது இல்லை. அந்த ஊடகங்கள் தீட்டிய சித்திரங்களை மாத்திரமே படித்துவிட்டு சிங்கப்பூர் வருகிறவர்கள், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சிராங்கூன் வீதிக்குச் சென்று பார்த்தால் அதிர்ந்து போவார்கள்.

ஜெயந்தி இந்த மனிதர்களைப் பற்றி எழுதுகிறார். இந்த மனிதர்களாக மாறி எழுதுகிறார்.அவர் அனுப்பிய ஈரம் கதையை திசைகளில் பிரசுரத்திற்கு பரிசீலனை செய்யப் படிக்க முனைந்த போது விக்கித்துப் போனேன். வாழ்விற்கு ப்படி ஒரு முகமிருக்கிறதா? என்ற சிந்தனை நாள் முழுக்க மனதில் ஓரமாக இழையோடிக் கொண்டிருந்தது.

இந்தக் கதையின் சிறப்பு அந்தக் கதையை அவர் குரலை உயர்த்தாமல், சினந்து சீறாம்ல், சாபம் கொடுக்காமல், சலித்துப் புலம்பாமல் சொல்லியிருப்பது. அது கதைக்கு ஒரு கூர்மையைக் கொடுக்கிறது. கதை முடிந்து உங்கள் மனச் செவியில் ஒரு விம்மல் கேட்கும். அதுதான்  ஜெயந்தியினுடையது. பிஜித் தோட்டத்துப் பெண்களுக்காக விம்முகிற மகாகவியின் விம்மலைப் போன்ற விம்மல் அது.

நுட்பமாகக் கதை சொல்கிற அவரது ஆற்ற்லை அந்தக் கதையைப் படிப்பதற்கு முன்பே நான் அறிந்திருந்தேன். 2002ம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உலகம் முழுதும் எழுதப்படும் தமிழ்ப் படைப்புகள் நேற்றும் இன்றும் நடக்கிற வழித்தடங்களை வரைந்துகாட்ட முற்ப்பட்டேன். அதற்காக உலகின் பல பகுதிகளில் எழுதப்பட்ட படைப்புக்களை ஒரு சேர வாசிக்கிற அனுபவம் எனக்குக் கிடைத்தது. ஒரு வாசகன் என்ற முறையில் அது எனக்குக் கிடைத்தப் பெரும் பேறு. ஒரு பேரானந்தம்.

சிங்கைத் தமிழ் இலக்கிய முன்னோடிகள், அவர்களது படைப்புக்கள் பற்றி எனக்குக் கடுகளவு அறிந்திருந்தேன். சமகாலப் படைப்பாளிகள், அதிலும் இளைய த்லைமுறையினர் என்ன எழுதுகிறார்கள் என அறிந்து கொள்ள் ஆர்வமாக இருந்தேன். நண்பர் ஆண்டியப்பன் சில நூல்கள் அனுப்பி வைத்திருந்தார். நூல்களாகத் தொகுக்கப்படாத, நூலாகக் கொண்டுவரும் அளவிற்கு எழுதிக் குவித்திராத எழுத்துக்களைப் படிக்க எண்ணிய போது, நண்பர் பிச்சினிக்காடு இளங்கோ அனுப்பியிருந்த சிங்கைச் சுடர் இதழ்கள் கிடைத்தன. அதில்தான் எனக்கு ஜெயந்தியினுடைய நுடம் படிக்கக் கிடைத்தது. அந்தக் கதை மேற்கொண்டிருந்த உளவிய்ல் அணுகுமுறை சிந்தையை ஈர்த்தது.

ஜெயந்தி சங்கரின் கதைகள் எல்லாவற்றிலும் இந்த சிந்தனையைத் தூண்டும் அம்சத்தைப் பார்க்கலாம். வெறும் கதை சொல்கிற சுவாரஸ்யத்திற்காக அவர் எழுதுவதில்லை. கதையில் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிற கலை நுட்பங்களைக் காப்பாற்றுவதற்காக அவர் எழுதுவதில்லை. வெகுஜனப் பத்திரிகைகள் ஆதரிக்கிற கதையம்சம், சிற்றிதழ்கள் வலியுறுத்துகிற கலைநுட்பம் இவற்றைத் தாண்டிய கதைகள் இவை. அதற்காக இவை இந்த அம்சங்களில் கவனம் செலுத்தாத அல்லது அக்கறை காட்டாத கதைகள் என்பது அர்த்தம் அல்ல. அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, அவற்றையும் திறமையாகக் கையாண்டு, ஆனால் அவற்றையும் தாண்டிக் கதைகளை எடுத்துச் செல்கிறார் ஜெயந்தி.

புலம் பெயர்ந்து வாழ்கிற தமிழர்கள் பலர் தங்களது மொழி அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும், தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டும் இலக்கியத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. அது வரவேற்கப்பட வேண்டியதும்கூட. ஆனால் அவை பெரும்பாலானோரது விஷயத்தில் ஆரம்ப வசீகரங்களாக முடிந்து போகின்றன.வயது ஏற ஏற வாழ்வு வேறு இலக்குகளைத் தேடுகிறது. அதன் காரணமாக அவர்கள் சாதனைகள் ஏதும் செய்யாது மறைந்து போகின்றனர்.

ஆனால் ஜெயந்தி சாதிப்பார். ஏனெனில் அவர் அடையாளம் த்ருவதற்கோ, அடையாளம் பெறுவதற்கோ எழுதுவதில்லை. அவர் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளவும், சிந்தனையைத் தூண்டவும் எழுதுகிறார். ஆற்றில் மிதந்து செல்லும் மலரல்ல அவர். நதியின் மடியில் கால் பதித்து நிற்கும் கற்பாறை அவர்.

சிங்கைத் தமிழ் எழுத்துகளின் மீது உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடியவர்களில் ஒருவராக ஜெயந்தி சங்கர் திகழ்வார். அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
மாலன்             
 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these