தோழர் பிரகாஷ் அவர்களுக்கு

வணக்கம் தோழரே!

இருந்திருந்து, இன்றைக்கெல்லாம் உங்களுக்கு என்ன  வயதிருக்கும்? 60, 62 இருக்குமா? ஆனால் இந்த வயதில் இப்படி ஒரு மறதியா? கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அது இளம் வயதுதானே!

 

இரண்டு மாதங்களுக்கு முன்னால்தானே கோழிக்கோடில் நடந்த  மாநாட்டில் ஒர் அரசியல் தீர்மானம் போட்டீர்கள், அதற்குள்ளாகவா அதை மறந்து விட்டீர்கள்? அடுத்த மூன்றாண்டுகளுக்கு கட்சி என்ன நிலை எடுக்க வேண்டும் என  இரண்டு மாதங்களாகக் கட்சிக்குள் விவாதிக்கப்பட்டு, 3713 திருத்தங்கள் முன் மொழியப்பட்டு, அவற்றில் 163 திருத்தங்கள் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தை அதற்குள்ளா மறந்து விட்டீர்கள்? அத்வானிக்குத்தான் செலக்க்டிவ் அம்னீஷியா, உங்களுக்குமா?

 

அந்த அரசியல் தீர்மானம் 8 விஷயங்களை உயர்த்திப் பிடித்தாலும் அதன் சாரம் இரண்டுதான்: ஒன்று இனி வரும் நாள்களில் இடதுசாரி, ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவது, மற்றொன்று, முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றும் காங்கிரசையும், மதவாத பாஜகவையும் எதிர்ப்பது.

 

ஆனால் தோழரே, நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதென்று முடிவு எடுத்திருக்கிறீர்களே, அது எந்த அடிப்படையில்? அவரது வெற்றி காங்கிரசிற்கு பலம் சேர்க்குமா? பலவீனப்படுத்துமா?

 

ஒருவேளை அவர் சோஷலிசக் கொள்கைகளின் காதலரோ?, இது கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘தந்திரோபாயமோ? என்று தலையைப் பிய்த்துக் கொள்கிறேன். இடதா, வலதா, இரண்டும் கெட்டானா, கொள்கை அடிப்படையில் பிரணாப் முகர்ஜி எந்தப் பக்கம் சாய்ந்திருந்தார் என்பதைக்  கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால் கண்டுபிடித்து விடலாம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் போட்ட கட்சித் தீர்மானத்தையே மறந்துவிட்ட உங்களுக்கு, அவர் 1994ல் மொராக்கோவில் நடந்த WTO மாநாட்டிற்கு இந்திய அமைச்சர்கள் குழுவின் தலைவராகச் சென்று இன்று இந்தியா பின்பற்றும் உலகமயக் கொள்கைகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் என்பது மறந்து போயிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவர் 1982ல் உலக வங்கி,மற்றும் IMFன் இயக்குநராகவும் இருந்தவர்.

 

இந்திய வரலாற்றில் ஜனநாயகம் சவப்பெட்டிக்குள் திணிக்கப்பட்டுத் திணறித் திகைத்த காலம் ஒன்றுண்டு. அது எமெர்ஜென்சிக் காலம். கட்சித் தீர்மானத்தை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் ஒன்றரை வருடம் நீங்கள் தலைமறைவாக வாழ நேர்ந்த நாட்களை, உங்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டு நீங்கள் உயிருக்குப் போராடிய அந்த எட்டு நாட்களை மறக்கவா முடியும்? அந்த எமெர்ஜென்சி நாட்களில் பிராணப்பின் பங்கு என்ன? ஓய்வு கிடைக்கும் போது உங்கள் தத்துவப் புத்தகங்களை ஒதுக்கி வைத்து விட்டு, ஷா கமிஷன் அறிக்கையைப் புரட்டிப் பாருங்கள். அந்த அறிக்கைகள் கடுமையாகச் சாடும் பிரணாப்பை உயர்ந்த ஒரு பதவியில் உட்கார்த்த வாக்களிக்கப் போகிறார்கள் உங்கள் தோழர்கள்! சபாஷ்!

 

வரலாறு வழித்துக் கொண்டு சிரிக்கிறது, தோழரே!. வாய்விட்டு நகைக்கிறது. இன்னொரு புறம் இடதுசாரி ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவோம் என்ற உங்கள் தீர்மானம் வெற்றுக் காகிதமாய் விண்ணில் பறக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர சோஷலிச கட்சியும் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பது என முடிவெடுத்திருக்கின்றன. அவர்களோடு நீங்களும் அணி வகுத்திருந்தால் இடதுசாரி சக்திகளை வலுப்படுத்துவதில் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதன் அடையாளமாகவாவது அது இருந்திருக்கும்.

இடது முன்னணியின் ஒற்றுமையை உடைத்தெறிந்து விட்டாவது இந்தத் தேர்தலில் பிராணாபை ஆதரித்தே தீர வேண்டும் என்று உங்களுக்கு என்ன முடை? உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டில்லை. சிபிஐ விசாரணை இல்லை. ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அப்படியிருக்க ஏன் இப்படி ஒரு முடிவு?

 

யோசித்துப் பார்த்தால் ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது. உங்கள் எதிரி மம்தா, பிரணாபை எதிர்க்கிறார். எனவே நீங்கள் அவரை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறீர்கள்.

உலகு தழுவிய பார்வையோடு இயங்க வேண்டிய ஒரு கட்சி, உள்ளூர்ப் பூசல்களின் அடிப்படையில் வழி நடத்தப்படுவதைக் கண்டு வெட்கப்படுகிறது தேசம்.

 

மார்க்ஸ் சொன்ன ஒரு வரி மனதில் வந்து போகிறது. ”உலகை வெறுமனே புரிந்து கொள்வதை விட மாற்றுவது  முக்கியம்” (The point is not merely to understand the world, but to change it.)

 

அந்த ஞானம் இனியேனும் கிட்டட்டும்

 

அனுதாபங்களுடன்

இளந்தமிழன்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *