வெற்றியின் திறவுகோல் தகவல்கள்

வெற்றியின் சிகரத்தில் உலவுகிறவர்களுக்கும், ஓரளவு வெற்றி கண்டவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் எதனால் ஏற்பட்டது என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? சுமாராக வெற்றி கண்டவர்களுக்கும் வெற்றியைத் தவற விட்டவர்களுக்குமிடையே உள்ள இடைவெளிக்குக் காரணம் என்னவாக இருக்கும்?

அதிகம் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். இந்தக் கேள்விகள் இரண்டிற்கும் விடை ஒன்றுதான். அது: தகவல் அறிவு.

யார் அதிகமான தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்களோ அவர்கள் மற்றவர்களை விட அதிகமாக அல்லது எளிதாக வெற்றி பெறுகிறார்கள். இது இன்று எல்லாத் துறைகளுக்க்கும் பொருந்தும். என்றாலும் இது வணிகத் துறையில் அப்பட்டமாக வெளியே தெரியும் உண்மை.

எந்தத் தொழிலிலும் முன்னணியில் இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். அந்த வெற்றிக்கான காரணங்களில் ஒன்று, அவர்கள் அந்தத் துறையில் முதலில் அடியெடுத்து வைத்தவர்களாக இருப்பார்கள். அந்தத் துறையில் நுழையலாம் என அவர்களுக்கு தைரியம் அளித்தது அதைக் குறித்து அவர்கள் திரட்டிய தகவல். முதலில் அடியெடுத்து வைத்தவர்களாக இல்லாது போயினும் வெற்றி கண்டவர்கள் உண்டு.அதற்கு அவர்கள் அறிமுகப்படுத்திய தொழில் நுட்பம், அல்லது வணிக அணுகுமுறை காரணமாக இருக்கும். அவற்றின் அடிப்படை தகவல். போட்டியாளார்களை எளிதாகப் புறங்கண்டவர்களின் வெற்றிக்கும் சந்தையைப் பற்றியும், போட்டியாளர்களின் பலம் பலவீனங்களைப் பற்றிய அவர்கள் அறிந்து வைத்திருந்ததுதான்.

வணிகத்திலும், தகவல் மிக முக்கியமான இடம் வகிக்கும் வணிகம், ஏற்றுமதி. சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், பொருளைத் தகுந்தவாறு பதப்படுத்தல், உரிய முறையில் பாக்கிங் செய்தல், அரசின் சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகள், அன்னியச் செலாவணியின் மாற்று விகிதங்கள், கப்பல் அல்லது விமான அட்டவணைகள், இன்ஷூரன்ஸ் குறித்த தகவல்கள், பொருளை இறக்குமதி செய்பவரின் பின்னணி, அவர் நாட்டின் பொருளாதார நிலை, ஏன் அரசியல், வெப்ப தட்ப நிலைகூட, இப்படி ஏற்றுமதித் தொழிலின் ஒவ்வொரு கட்டத்திலும் தகவல்கள் அவசியமாகின்றன.

இந்தத் தகவல்களை எங்கு பெறுவது எப்படிப் பெறுவது எனத் தெரியாமல் தவிப்பவர்கள் ஏராளம்.

இன்னொருபுறம், உலகமயமாதலின் விளைவாக வர்த்தகத்திற்கான வாய்ப்புக்கள் அதிகாரித்துள்ளன. துடைப்பத்திலிருந்து தங்க ஆபரணங்கள் வரை பல வகையான பொருட்கள் ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கின்றன, ஆனால அந்த வாய்ப்புக்களை நம் தமிழ் இளைஞர்கள் பெருமளவு பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்குப் பல காரணங்கள். அவற்றில் முக்கியமானது போதுமான அளவு தகவல்கள் கிடைக்கப் பெறாதது. கிடைக்கும் தகவல்களும் ஆங்கிலத்தில் இருப்பது.

தமிழ் இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ள புதிய தலைமுறை இதழ், அவர்களுக்கு உதவும் வகையில் ஏற்றுமதி குறித்து வாரம் தோறும் தொடர் ஒன்றினை வெளியிட்டு வந்தது.

இந்தத் துறையில் வல்லுநரான அரிதாசன் மிகுந்த அக்கறையோடு, அரிய தகவல்களை எளிய நடையில் புதிய தலைமுறையில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தக் கட்டுரைகளைப் படித்து வந்த இளைஞர்கள் முன்னேற்றப் பாதையில் பீடு நடைபோட்டு வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே எவ்வளவு பயனுள்ள நூல் இது என்பதைச் சொல்லும். தங்களுக்கு இந்தக் கட்டுரைகள் எந்த அளவு பயனளித்து என்பதை பயனாளிகளின் குரலிலேயே நீங்கள் இந்த நூலில் வாசிக்கலாம்.

புதிய தலைமுறையிடமிருந்து உங்களைத் தேடி வரும் இன்னொரு பயனுள்ள நூல் இது.

மாலன்

(எல்லோரும் செய்யலாம் ஏற்றுமதி நூலுக்கு எழுதிய முன்னுரை)

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *