கேரள முதல்வர் ஓமன் சாண்டி அவர்களுக்கு

சேட்டா!

ஆங்கிலத்தில் உங்கள் பெயரை முதன்முறையாக வாசிக்க நேர்ந்த போது, அதைச் சாண்டி என்று உச்சரிக்க வேண்டுமா? சண்டி என்று உச்சரிக்க வேண்டுமா என எனக்கு ஒரு குழப்பம் இருந்தது. எங்கள் பக்கத்தில் அடங்க மறுக்கிற, பிடிவாதம் பிடிக்கிற குதிரைகளைச் சண்டிக் குதிரை, என்று சொல்வது வழக்கம். சண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு என்று தமிழில் ஒரு பழமொழியே தமிழில் இருக்கிறது.

 

உங்கள் பெயரின் உச்சரிப்பை அகராதியில் பார்த்துத் தெரிந்து கொள்ள இயலாது என்பதால் உங்கள் செயலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனக் காத்திருந்தேன். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நீங்கள் நடந்து கொள்வதைப் பார்த்ததும் சண்டி என்பதுதான் உங்கள் பெயராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். அல்லவாம், சாண்டிதான் என்று எங்கள் டீக்கடை நாயர் சொல்கிறார்.

 

தமிழகத்திற்குத் தண்ணீர், கேரளத்திற்குப் பாதுகாப்பு என்பதுதான் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உங்கள் முழக்கம்.

 

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்தின் தலைமையில் அமைந்த வல்லுநர் குழு நீரியல், வடிவமைப்பு, நிலவியல் ஆகிய எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது, என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அதற்கும் மேல் ஒருபடி போய் அணையின் நீர் மட்டத்தை இப்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடிவரை உயர்த்திக் கொள்ளலாம் என்று சொன்னதோடல்லாமல் கேரள அரசு புதிய அணை கட்டுகிற யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் சொல்லி வருகிற ‘கேரளத்திற்கு பாதுகாப்பு’ என்பது அறிவியல் ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில் வல்லுநர்களால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பின்னும் நீங்கள் புதிய அணை என்ற பழைய பல்லவியை மீண்டும் ஆரம்பித்திருக்கிறீர்கள். இது சண்டித்தனமா? சாண்டித்தனமா?

 

ஆபத்து என்பது முதல்வர் அவர்களே அணையில் இல்லை, உங்கள் மூளையில் இருக்கிறது. உங்கள் அணுகுமுறையில் இருக்கிறது. உங்கள் வாக்கு வங்கி அரசியலில் இருக்கிறது.

 

ஒரு பொறுப்பான முதலமைச்சராக நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். அணை பாதுகாப்ப்பானது என அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட உண்மைகளை மக்களிடத்திலே எடுத்துச் சென்று பிரசாரம் செய்திருக்க வேண்டும். அவர்கள் மனதிலே ஏதேனும் அச்சம் இன்னும் மிச்சமிருக்குமானால் அதை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். பிரச்சினை உச்சத்தில் இருந்த போது பத்திரிகையாளர்களுக்கெல்லாம் தனிப்பட கடிதம் எழுதி அழைத்து அவர்களிடத்தில் பேசினீர்களே அதே போல இப்போது அழைத்து வல்லுநர் குழுவின் அறிக்கையை மக்களிடம் எடுத்துச் சொல்லி மனதை மாற்ற உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும்.

 

ஒரு பொறுப்பான முதலமைச்சராக இருந்தால் அதைத்தான் நீங்கள் செய்திருப்பீர்கள். ஏனெனில் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இருக்கும் பிணைப்பு வெறும் நில ரீதியானதல்ல, நீர் வழிகளால் ஆனதல்ல, அது பொருளாதார ரீதியான உறவு என்பது பொறுப்பான முதல்வருக்குத் தெரிந்திருக்கும். தமிழகத்திலிருந்து பாலும் காய்கறியும் அரிசியும் எல்லை தாண்டிப் போகவில்லை என்றால் அங்குள்ளவர்கள் தொல்லைக்குள்ளாவர்கள் என்ற யதார்த்தத்தைப் பொறுப்பான முதலமைச்சர் புரிந்து கொண்டிருப்பார். லட்சக்கணக்கான கேரளத்துச் சகோதரர்கள் இங்கு பணியில் இருக்கிறார்கள், தங்கம் முதல் தேநீர் வரை தமிழகத்தில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள், அவர்களது பாதுகாப்பு முக்கியம் என்று பொறுப்பான முதல்வர் கவலைப்பட்டிருப்பார்.

 

அதை விட்டு பழைய பிரச்சினைகளைப் பேசி பகைமை நெருப்பில் குளிர் காய நினைக்கமாட்டார்.

 

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியலையும் தாண்டிச் சிந்திக்க கடமைப்பட்டவர்கள் என்பது அடிப்படையான ஆரம்பப் பாடம்.  அருமை நண்பரே, அதை முதலில் படியுங்கள் அதற்கு முன் ஒரு வார்த்தை

 

தமிழர்கள் அண்டை அயலாரோடு அமைதியாக வாழ விரும்புபவர்கள். தானாகத் தகராறுகளில் இறங்க மாட்டார்கள், அதே நேரம் தற்காத்துக் கொள்ள நேர்ந்தால் அதற்குத் தயங்க மாட்டார்கள்.

 

அன்புடன்

இளந்தமிழன்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *