காணமற் போன பேனாக்கள்

திருநெல்வேலி இந்துக் கல்லூரிக்கு எதிரே ‘கடைச் சங்கம்’  என்றொரு அமைப்பு இருந்தது. தமிழ் அறிஞர்கள் கூடிப் பேசுகிற இடமது. பாரதியார், வேதநாயகம் பிள்ளை போன்ற எழுத்தாளர்களும் அங்கு வந்து போவதுண்டு

 ஒரு முறை பாரதி அங்கிருப்பதை அறிந்து கொண்டு, சங்கரன் நயினார் கோயில் தர்மகர்த்தா  அவரைப் பார்க்க வந்தார். ‘எங்கள் கோமதி அம்மனைப் பாட வேண்டும்’ என்ற வேண்டுகோளாடு பாரதியாருக்கு ஊற்றுப் பேனா ஒன்றை அவர் பரிசளித்தார். அந்த நாளில் ஊற்றுப் பேனா ஒரு விலையுயர்ந்த பொருள். சாதாரணமாக ஒரு குச்சியில் ஒரு நிப்பைக் கட்டிக் கொண்டு மசியில் தோய்த்துத் தோய்த்துதான் எழுதுவார்கள்.  அதற்கும் வழி இல்லையென்றால் கோழி இறகின் அடிப்பகுதியைப் பேனா போல் சீவிக் கொண்டு  எழுதுவார்கள்.

பாரதியார் கோமதி அம்மனைப் பற்றி எழுதத் துவங்கினார். தர்மகர்த்தாவிற்குத் திருப்தி. சில மணி நேரம்கழித்து வருவதாகச் சொல்லிக் கிளம்பினார்.

இரண்டு மணி நேரம் கழித்து அவர் வந்த போது பாட்டு அரை குறையாக எழுதப்பட்டிருந்தது. அதைவிட அவர்க்குக் கவலை தந்த விஷயம், அவர் பாரதியாருக்கு அளித்திருந்த ஊற்றுப் பேனா பாரதியிடம் காணப்படவில்லை.

தர்மகர்த்தாவிற்குத் தாங்கவில்லை. ஊற்றுப் பேனா என்ன ஆயிற்று என்று பாரதியாரிடம் நேரில் கேட்கத் தயங்கிக் கொண்டு சுற்றியிருந்தவர்களிடம்  விசாரிக்க ஆரம்பித்தார். அவர்கள் நடந்ததைச் சொன்னார்கள். என்ன நடந்தது?

பாரதி எழுதிக் கொண்டிருக்கும் போது அவரைப் பார்க்க இந்துக் கல்லூரி மாணவன் ஒருவன் வந்தான். பார்த்தாலே பரம ஏழை என்று தெரியும்படியான தோற்றம். அழுக்கு வேட்டி. கிழிந்து தைத்த சட்டை. அந்தச் சட்டையில் ஆங்காங்கே மைக் கறைகள். " என்னப்பா கறை?" என்று அவனை பாரதியார் விசாரித்தார். " இறகுப் பேனாவை மையில் தொட்டுத் தொட்டு எழுத வேண்டியிருக்கிறது. அப்படித் தொட்டு எழுதும் போது இப்படி மை மேலே தெறித்து விடுகிறது"  என்று அவன் பதில் சொன்னான்.
 பாரதிக்குத் தாங்க முடியவில்லை. படிக்கிற பிள்ளைக்குப் பேனா இல்லை. பார்வதிக்கு என்ன பாட்டு வேண்டியிருக்கிறது என்று நினைத்தாரோ என்னவோ? எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு,  " இந்தா இதைக் கொண்டு எழுது. பாராசக்தி உன்னைக் காப்பாற்றுவாள்" என்று  அந்தப் பேனாவை ஏழை மாணவனிடம் கொடுத்து விட்டார்.

பி.ஸ்ரீ இந்த சம்பவத்தைத் தன் நூல் ஒன்றில்  மிக ரசமாக எழுதியிருக்கிறார். உண்மையோ, பொய்யோ, மிகையோ தெரியாது. ஆனால்  பாரதியின் கோமதி மஹிமை என்ற அந்தப் பாட்டு முடிவு பெறாமல் பாதியில் நிற்கிறது என்பது நிஜம்.

பாரதியிடம் பேனாவை வாங்கிப் போன அந்த மாணவன் என்ன ஆனான் என்று ஏதும் தகவல் இல்லை. ஆனால் எழுத்து வன்மை,  சமூக அக்கறை நடை இவற்றை வைத்துப் பார்த்தால் இரண்டு பத்திரிகையாளர்களை பாரதியின் பேனாவைப் பற்றி நின்றவர்கள் என்று சொல்ல முடியும்.

ஒருவர் வெ.சாமிநாத சர்மா. பாரதியின் சமகாலத்தவர்.அவருக்குப் பின் நெடுங்காலம் வாழ்ந்தவர்.கல்கியின் குரு.  பிளாட்டோவையும், சன்யாட்சென்னையும் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். அவர் எழுதிய கார்ல்மார்க்சின் வாழ்கை வரலாறு, தமிழில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளில் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

" பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டாத நாங்களெல்லாம் மேடைகளில் பிளாட்டோவையும் சாக்ரெட்டீசையும், மார்க்சையும் பற்றிப் பிளந்து கட்டுகிறோம் என்றால் அதற்க்குக் காரணம் வெ.சாமிநாத சர்மா. ஒரு தலைமுறையே அவருக்குக் கடன் பட்டிருக்கிறது" என்று கண்ணதாசன் சொன்னார். அதோடு கூடவே இன்னொன்றும் சொன்னார்: " ஜோசியப் புத்தகம் எழுதியிருந்தால் சர்மா பெரும் பணக்காரர் ஆகியிருப்பார். நாவல், கதை என்று எழுதியிருந்தால் நாலு காசு பார்த்திருப்பார். ஆனால் அவர் கனமான அரசியல் தத்துவங்களை எளிய தமிழில் எழுதினார். அதனால் தன் கைக் காசைக் கொண்டு அவரே பதிப்பிக்க வேண்டி வந்தது"

கனமான அரசியல் புத்தகங்களைத் தமிழில் தர சர்மா மேற்கொண்ட முயற்ச்சிகளை நினைத்தால் மனம் சிலிர்க்க்கிறது. தி.ஜானகிராமன் சொல்கிற மாதிரி, முதுகுத் தண்டு சொடுக்குகிறது.

உங்கள் வீட்டில் சுனாமி புகுந்தால் என்ன செய்வீர்கள்?. நாலைந்து துணிமணி, அவசியமான பாத்திரம் பண்டம், நகை நட்டு ஏதாவது சேர்த்து வைத்திருந்தால் அவை இவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்புவீர்கள். உங்களிடம் உள்ள புத்தகங்களை நினைத்துப் பார்ப்பீர்களா?

சர்மாவாக இருந்தால் புத்தகங்களைத் தான் எடுத்துக் கொண்டு கிளம்புவார். ஊகத்தில் சொல்லவில்லை. உள்ளதைத்தான் சொல்கிறேன். அவர் காலத்தில் சுனாமி வரவில்லை. அதைவிடக் கொடுமையான உலக யுத்தம் வந்தது. அப்போது அவர் ரங்கூனில் ‘ஜோதி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1941ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜப்பானிய விமானங்கள் பல முறை  ரங்கூன் மீது குண்டுமழை பொழிந்தன.  குண்டு வீச்சுக்குப் பயந்து  பெரும்பாலான இந்தியர்கள் ஊரை விட்டுக் காலி செய்து கொண்டு இந்தியாவை நோக்கி நடைப் பயண்மாக வந்து கொண்டிருந்தார்கள். 1942ம் வருடம் பிப்ரவரி மாதம் ஜப்பானிய படைகள் ரங்கூனை நோக்கி வரத் துவங்கிய போது மிச்சம் மீதி இருந்தவர்களும் அங்கிருந்து புறப்படத் துவங்கினார்கள். சர்மாவும் அப்போதுதான் கிளம்பினார்.

"நகரத்தைக் காலி செய்ய வேண்டியது கட்டாயமாகிவிட்டது.நானும் என் மனைவியும் சில நண்பர்களும் எங்கள் வீட்டுத் தட்டு முட்டுச் சாமான்களையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டுப் புறப்பட்டோம். எங்கு? இந்தியாவை நோக்கித்தான். தரை மார்க்கம்தான்…. பிளாட்டோவினுடைய அரசியல் என்ற நூலின் ஆங்கிலப்பதிப்புகளில் எந்தப் பதிப்பு என் மொழி பெயர்ப்புப் பணிக்கு உறுதுணையாக இருந்ததோ அந்தப் பதிப்பு, அதுவரையில் மொழி பெயர்த்திருந்த பகுதி,ஒரு நோட்டுப் புத்தகம், ஓர் ஊற்றுப் பேனா ஆகிய இவற்றை மட்டும்  எடுத்துவர நான் மறந்துவிடவில்லை. அப்படி எடுத்து வர மறந்திருந்தால் என் நடைப் பயணம் சோர்வைத் தந்திருக்கும்" என்று எழுதுகிறார் சர்மா.
 
தலைக்கு மேல் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்த போதும் சர்மா பதுங்கு குழிக்குள் உட்கார்ந்து பிளாட்டோவை மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்.

" ஜப்பானிய விமானங்கள் குண்டுகளைப் பொழிந்த வண்ணம் இருக்கும். குண்டுகள் எட்டுப் பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் விழுந்தாலும், வீழ்ச்சியின் அதிர்ச்சியில், அந்தக் குழியின் பக்கவாட்டில் உள்ள மண் சரிந்து விழுந்து கொண்டே இருக்கும். குண்டு விழுகிற ஒவ்வொரு முறையும் குழியில் இருக்கிறவர்களைத் தூக்கிவாரிப் போடும். ஆனால் – என்னைப் பொறுத்தமட்டில் சொல்லிக் கொள்கிறேன் – உயிரைத் துரும்பாக மதிக்கக் கூடிய மனப்பான்மைதான் எனக்கு ஏற்பட்டது. இப்பவோ பின்னையோ, மற்றெந்த நேரத்திலோ என்ற நிலைக்கு என் மனம் தயாராய் இருந்தது.ஆதலால்  உயிர் பிரிவதற்கு முன்பு பிளாட்டோவின் அரசியல் நூலைத் தமிழாக்கித் தருகிற ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டுப் போகவேண்டும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டது"  

உயிரைத் துரும்பாக மதித்து’ சர்மா மேற்கொண்ட முயற்சி  எதன் பொருட்டு? சாகாவரம் பெற்ற ஒரு காதல் கதையை எழுதி இலக்கிய உலகில் என்றென்றும் அழியாத ஒரு இடத்தைப் பிடித்துவிட வேண்டுமென்ற பெயராசையா? அல்ல. தமிழ் மட்டுமே அறிந்த தமிழனை- கண்ணதாசன் சொன்னது போல பள்ளிப் படிப்பைத் தாண்டாதவனை- அவன் அறிந்திராத ஓர் அறிவுலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடவேண்டும் என்ற பேராசைதான் காரணம்.

ஆனால் இன்று எத்தனை தமிழனுக்கு சாமிநாத சர்மாவைத் தெரியும்? மூன்றாம்தர எழுத்தாளனை அறிந்த வாசகனுக்குக்கூட முன்னோடிப் பத்திரிகையாளனைத் தெரியாது.

தமிழன் மறந்த இன்னொரு மனிதன் தி.ஜ.ரங்கநாதன் என்ற தி.ஜ.ர. கற்பனைக் கதைகள் எழுதுவது ஒரு ஃபாஷனாகவும், புத்திசாலித்தனமானதாகவும் கருதப்பட்ட காலத்தில் தர்க்க ரீதியான அமைப்பைக் கொண்ட கதைகளை எழுதியவர். அவரே சொல்கிற மாதிரி ‘யூக்லிட்டின் க்ஷேத்ர கணித ஆராய்ச்சி போல’ படிப்படியாக ஒரு ஒழுங்கில் வளர்ந்து கொண்டு செல்பவைதான் அவரது கதைகள். அது தற்செயலோ, விபத்தோ அல்ல. தெளிவான சிந்தனைக்குப் பின் அவர் மேற்கொண்ட முடிவு.

ஒருமுறை ஒரு பத்திரிகையாசிரியர், கற்பனை நிறைந்த கதைகளை எழுதி அனுப்பக் கேட்டுக் கொண்டபோது தி.ஜ.ர. அனுப்பிய பதில் இது:

"வானத்தில் பறக்க மாட்டேன் என்று நான் சொலவில்லை.விமானம் வேண்டும்; அல்லது இறக்கை முளைக்க வேண்டும். அப்போதுதான் நான் வானத்தில் பறப்பேன். ஆதாரம் இல்லாமல் நான் ஜாலம் செய்யத் துணிய மாட்டேன்.எனக்கு விருப்பமும் இல்லை. இறக்கை முளைக்காது என்பது நிச்சயம்.விமானம் இப்போது கையில் இல்லை.கிடைத்ததும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.அதுவரை பூலோகக் கதைகளையே என்னிடம் எதிர்பாருங்கள்.’வானத்துக்’ கதைகளை எதிர்பார்த்துப் பயன் இல்லை. நமஸ்காரம்"

நேர்படப் பேசு என்ற பாரதியின் வார்த்தைகளை தன் எழுத்தின் ஆதாரமாக ஏற்றவர் தி.ஜ.ர. ஒரு முறை ராஜாஜியின் நூல் ஒன்றிற்கு அவர் எழுதிய விமர்சனம்:

" ராஜாஜியின் புத்தகத்தின் மூலம் ஸ்யின்ஸை தமிழில் எழுதமுடியும் என்பது நிச்சயமாய் நிரூபணம் ஆகிவிட்டது.ஆனால் ஸயின்ஸைத் தமிழில் படித்துப் புரிந்து கொள்ள முடியும் என்பது மாத்திரத்தால் நிச்சயப்படவில்லை"

புரியாத தமிழில் புதிரான கதைகள் செய்து, அதை  பிரபலத்தின் முன்னுரை வாங்கிப் புத்தகமாகப் போட்டு,  புகழ்ந்து பேச ஆள்பிடித்து,விழா எடுத்து, புகழ் பெற்றதாகக் கிறங்கி, கோஷ்டி சேர்த்து, கும்மி அடித்து. கூட இருந்தவனையே ஒருநாள் வசைபாடி, ‘அழியாப் புகழ்’ பெற்று (வாங்கி?) விடும் எழுத்தாளர்களை தமிழர்கள் கொண்டாடிக் களிப்பார்கள். அறிவுலகங்களுக்கு அவனை அழைத்துச் செல்ல அதிகாரத்தின் முன் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை கெட்டு அடையாளம் இல்லாத மனிதர்களாக வாழ்ந்து முடிகிற பத்திரிகையாளனை அவன் ஆயுட்காலத்திலேயே மறந்து போவார்கள்.

இதுதான்யா தமிழகம்.
  
                                                                                            தமிழ்முரசு சிங்கப்பூர் ஆகஸ்ட் 2 2006

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these