தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள், புதிய பாதைகள்

‘புதிய’ என்பது தமிழின் பழைய சொற்களில் ஒன்று. சங்க காலக் கவிஞன் கணியன் பூங்குன்றன், “சாதலும் புதுவது அன்றே” என்று எழுதுகிறான். ரோம, எகிப்து சாம்ராஜ்யங்களுக்கு உள்ள வணிக வாய்ப்புக்களையும், கடல் வழிகளையும் விவரிக்கும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த Periplus of the Erythraean Sea என்ற நூல் பாண்டிச்சேரியை ‘புதுகை’ எனக் குறிப்பிடுகிறது.

நெடுங்காலமாகவே தாயகம் கடந்து போதல் என்பது தமிழ் சமுதாயத்தின் ஓர் அம்சமாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரமே கூட நாடு விட்டு நாடு பெயர்ந்து Custodial deathக்கு உள்ளான ஒருவனது கதைதான். “அருளும் அன்பும் நீங்கித் துணை துறந்து பொருள் வயிற் பிரிவோர்” பற்றிக் கோப்பெருஞ் சோழன் குறுந்தொகையில் எழுதுகிறான். தாயகம் கடப்பது தமிழருக்குப் புதிது அல்ல.

என்வே சொல்லும் பழையது. பொருளும் பழையது.

என்றாலும் சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது. காரணம்: பெண்ணியம், தலித்தியம், நாட்டார் வழக்கு இலக்கியம் என்பது போல் தமிழிலக்கியத்தின் தனியொரு துறையாகக் கருதும் அளவிற்குத் தாயகம் கடந்த தமிழ் எழுத்துக்கள் தனித்துவமான சில பரிமாணங்களோடு இன்று விளங்குகின்றன.

தாயகம் கடந்த தமிழிலக்கியம் இந்தப் புதிய நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், (2001 முதல் 2011 வரை) கண்ட மாற்றங்களையும், சில பொதுப் பண்புகளையும் இந்தக் கட்டுரை உங்கள் சிந்தனைக்கு முன் வைக்கும்.

என்ன அந்தப் பொதுப் பண்புகள்?

அவற்றைப் பேசும் முன் ஒரு முன் குறிப்பு: (Disclaimer)

என்னுடைய பார்வையில் இலக்கிய விமர்சனம் என்பது, சிறந்தது, சிறந்ததல்லாதது பற்றிய பட்டியல் தயாரிப்பதல்ல. படைப்பின் சூழ்நிலையையும், படைப்பின் பிரதியையும் ((The context and text) ஒன்றிணைத்து நோக்கி ஒன்றையொன்று எவ்வாறு தாங்குகின்றன அல்லது கைவிடுகின்றன என ஆராய்வது;அந்தப் படைப்பு வரித்துக் கொண்ட வகையும் வடிவமும் சமூக வாழ்வின் இயக்கங்களை (Dynamics of social existence) வெளிப்படுத்துப் போதுமானவையாக இருக்கின்றனவா என்பதை ஆராய்வது  இவையே. அந்த அணுகுமுறையையே இங்கும் பின்பற்றியிருக்கிறேன். நேரமும் இடமும் கருதி கவிதை, சிறுகதை ஆகிய இரு வகைகளை மட்டுமே இங்கு விவாதிக்க எடுத்துக் கொண்டிருக்கிறேன்

இனி அந்தப் பொதுப் பண்புகள். சரி  என்னதான் அந்தப் பொதுப் பண்புகள்?

1.வரலாற்றிலிருந்து விடைபெறுதல்:

புனைவு, புனைவின் மொழி இரண்டிலும் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகள் தளர்ச்சி கண்டுள்ளன. அந்த இடத்தில் புதிய முயற்சிகள் அரும்பத் தொடங்கியிருக்கின்றன

2. மொழி கடந்த மானுடம்

மொழி,நாடு,இனம், மதம், சாதி, வர்க்கம் என்ற அடையாளங்களுக்கு அப்பால் உள்ள ஒரு பொதுமனிதனைப் பற்றித் தாயகம் கடந்த தமிழ் இலக்கியங்கள் பேசத் தலைப்படுகின்றன. மொழி, நாடு, இனம், மதம், சாதி, அடையாளங்களின்றி,எல்லோரும் ஜீன்ஸ் அணிவதைப் போல, மென்பானங்கள் பருகுவதைப் போல, பயணம் செய்வதைப் போல,பொய் சொல்வதைப் போல,கைபேசி வழியே கதைப்பதைப் போல, சமகால மனிதனுக்குச் சில பொது அடையாளங்களும், பொதுக் கவலைகளும்  பொதுத் தன்மைகளும்  இருக்கின்றன. தாயகம் கடந்த தமிழ் எழுத்துக்கள் இவற்றைப் பேச முற்படுகின்றன.

3. இரு தளங்கள் (Duality):

இன்னொரு புறம் பல தருணங்களில் புகலிடம் பெயர்ந்தோரது  எழுத்துக்கள் இரண்டு தளங்களில் செயல்படுகின்றன. புகலிட வாழ்க்கையை, மாந்தர்களைத் தாயகக் கலாசாரத்தின் விழுமியங்களோடு அணுகுவது..அதைப் போல புகலிடங்களிலிருந்து தாயகத்திற்குத் தற்காலிகமாக வந்து செல்லும் தருணங்களில் நேரும் அனுபவங்களைப் புகலிடப் பார்வைகளூடாக நோக்குவது.

4.பீறிட்டெழும் பெண்மொழி:

புலம் பெயர்தல் பெண்களுக்குப் புதிய சிறகுகளைக் கொடுத்திருக்கின்றன. ஆண் பெண் உறவுகள் புதிய தளங்களை எட்டியுள்ளன. பெண்ணிய வாதங்கள் கூர்மை பெற்றிருக்கின்றன. அதன் ஒரு கூறாக முன்வைக்கப்படும் பெண்மொழி தமிழ் மொழிக்கு புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது

5.தொழில்நுட்பங்களின் கொடை:

எல்லைகளைத் தகர்த்திருக்கிற இணையம் தமிழுக்குப் புதுமைகளை மட்டுமல்ல பொதுமைகளையும் தந்திருக்கிறது.

கதையாடல்களைப் (Narration)  பொறுத்தவரை, லட்சியவாதம், யதார்த்தம், ரொமண்டிசம், பின் நவீனத்துவம், மாய யாதார்த்தம், புத்திதழியல் எனவும் அறியப்படும் Non – fiction fiction எனப் பலவகைகளையும் தரத்தையும் காண முடிகிறது

வரலாற்றிலிருந்து விடைபெறுதல்:

 ஆரம்பகால மலேசியத் தமிழ் இலக்கியம் –அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளுக்கு சற்று முந்திய காலத்துத் தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டு இலக்கியத்தை முன்னுதாரணமாகக் கொண்டே எழுதப்பட்டன. ஆனால் மலேசியாவின் ஆரம்பகாலப் புதுக்கவிதையின் விதைகள் தமிழ்நாட்டிலிருந்து பெறப்பட்டவை அல்ல.

வரலாற்றாசிரியர்கள் பாரதியின் புதுக்கவிதைகளைத் தமிழ்ப் புதுக்கவிதையின் தொடக்கமாகச் சுட்டுகிறார்கள்.அந்தக் கவிதைகள்  1916ல் வாசகர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் சுதேசமித்ரனில் ரிக் வேதத்தை மொழிபெயர்க்கத் துவங்கியபோது அவற்றில் காணப்படும் இயற்கையை வழிபாடும் ஸ்லோகங்களின் கவிதை நயத்தால் மனக்கிளர்ச்சியுற்ற பாரதியால் எழுதப்பட்டவை. அதற்கு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் ந.பிச்சமூர்த்தி எழுதிய கவிதைகளிலும் இயற்கை, காதல், தனிமனித மனச்சிக்கல்கள், தத்துவ விசாரங்கள்தான் பாடு பொருட்களாக இருந்தன. தமிழகத்தின் ஆரம்பகாலப் புதுக்கவிதைகளில் சமூக விமர்சனம் மிக மிகக் குறைவு.

ஆனால் மலேசியாவின் முதல் புதுக்கவிதையே சமூக விமர்சனத்தை உள்ளடக்கியதாக இருந்தது.1964ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதியிட்ட தமிழ் முரசு நாளிதழில் சி.கமலநாதன் எழுதிய அந்தக் கவிதையின் தலைப்பே கள்ளபார்ட்டுகள்.[1] அன்றைய நாடகங்களில் வில்லன் வேடத்தைக் குறிக்கும் சொல் அது. அரசியல்வாதிகள் அல்லது தமிழ்சமூகத் தலைவர்களை

மதியின்றிப் பிதற்றுவதும், இங்கு

உள்ளவரை தின்று

ஊதிப் பெருத்ததல்லால்

உருப்படியாய்ச் செய்ததென்ன?

எனச் சீற்றத்துடன் சாடுகிறது அந்தக் கவிதை. தமிழகத்தின்  கவிதைகளில் காணப்படாத சமூக விமர்சனம் மலேசியவின் ஆரம்பக் கவிதையிலேயே அறிமுகமானது எப்படி?

 மலேசியப் புதுக்கவிதையின் அந்தக் கூறு மலாய் மொழியிலிருந்து அதற்குக் கிடைத்த ஒரு பேறு. 1945ல் இந்தோனீசியாவில் அங்கத்தான் 45 என்ற இலக்கிய இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. (அங்கத்தான் என்ற சொல்லுக்கு தலைமுறை என்று பொருள்) ஐரோப்பாவிற்கு, குறிப்பாக ஹாலந்த், நெதர்லாந்திற்குச் சென்று வந்த இளைஞர்கள் சிலர் மலாய் மொழியில் மரபு துறந்த கவிதைகளை எழுதி வந்தார்கள். அரசியல் சமூக விமர்சனங்களை உள்ளடக்கமாகக் கொண்ட அந்தக் கவிதைகள் ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பின் போது துண்டுப் பிரசுரங்களாக மலேசியாவிலும் நுழைந்தன. மலேசிய கவிஞர்களும் மலாய் மொழியில் புதுக்கவிதை எழுதத் துவங்கினார்கள்.

 மலாய் மொழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த முயற்சிகளை அறிந்திருந்த சி.கமலநாதன் அதைப் போலத் தமிழிலும் முயற்சித்திருந்திருக்க வேண்டும். மலேசியக் கவிஞர்கள் பெரும்பாலும் தங்கள் தமிழ் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ள முயன்ற போது கமலநாதன் அதற்கப்பால் ஒரு அடையாளத்தை விரும்பினார் என்பதை அவர் சூடிக் கொண்ட புனைப் பெயர்கள் உணர்த்துகின்றன. புத்ரா மலேசியா,  மகாபாரத சூர்ய தர்மன், ஆயர்பாடி சத்ய நாராயணகாரு, எழுத்தச்சன், சாஸ்திரவான் என்பன அவர் பெயர்களில் சில.தாயகம் பெயர்ந்து ஒரு பல்லினச் சமூகத்தில் வாழும் போது தமிழுக்குக் கிடைக்கும் கொடைகளில் ஒன்று இது.

 ஆனால் இன்று மலேசியாவில் எழுதப்பட்டு வரும், நவீன கவிதைகளில் சமூக விமர்சனக் குரல்களை அதிகம் காண முடிவதில்லை.” இவ்வகை நவீனக் கவிதைகளில் தனிமனித அந்தரங்க உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது…. இவ்வகைக் கவிதைகள் பெரும்பாலும் அகவயப்பட்டவையாக உள்ளன.சமூகப் பார்வை அதிகம் காணப்படவில்லை என்கிறார் மலேசியப் புதுக்கவிதைகள் குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கும் திருமதி இராஜம் இராஜேந்திரன்.[2]

 சமூக விமர்சன குரலோடு துவங்கிய மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதை, நீர்வழிப் படும் புணை போல பலவாறாகப் பயணம் செய்து இன்று அகச் சிக்கல்கள் நிறைந்த நவீன கவிதையாக மாற்றம் கொண்டு  நிற்கின்றன.

ஆனால் இந்தக் கவிதைகளில் சமகால வாழ்வின் யதார்த்தங்களைப் பார்க்க முடிகிறது. இந்த யதார்த்தங்கள் மலேசியத் தமிழர்களினுடையது மட்டுமல்ல, இன்றைய உலகப் பொதுமனிதனின் யதார்த்தங்கள்

 `கடவுள் கேட்கிறோம்

வாழ்வு முழுவதும்
பேய்களாய் அழைகின்றோம்

என்ற அகிலனின் கவிதையும்,

கைககோர்த்தபடி ஒன்றாகச்

சென்றோம்…
எனது சொல்லும்
உனது சொல்லும்
ஒவ்வாத நிலையிலும்

என்ற சிவத்தின் கவிதையும் இதற்குச் சாட்சி

உலகமயமாதல் ஒரு பொது மனிதனை உருவாக்குகிறது என்ற யதார்த்தத்தைப் பின் நவீனத்துவவாதிகள் ஏற்க மாட்டார்கள். ஏனெனில் பொது உண்மை என ஒன்றில்லை என்பது பின் நவீனத்துவத்தின் வாதங்களில் ஒன்று.பொது உண்மை, பொது மனிதன் என்பவை மையப்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டவை, மையப்படுத்துதல் அதிகாரத்தைக் கட்டமைப்பவை என பின் நவீனத்துவம் வாதிடுகிறது.

அதிகாரம் பற்றிப் பேசும் போது மொழி தொடர்பான கருத்துக்களும் கவனத்திற்கு வருகின்றன. அடிப்படையில் மொழி அதிகாரத் தன்மையுடையது. மொழியின் வழி நிறுவப்படும் நிறுவனங்கள் அதிகாரத்தின் மையங்களாக விளங்குகின்றன. அர்த்தப்படுத்துதல் என்பது மொழியைப் புதிரானதாக்குகிறது என்பது மொழியைப் பற்றிய இன்னொரு சிந்தனை.

 நானே அர்த்தங்களாய்

விரிகின்ற இன்பம்
இந்த மொழிகளின் உலகில்
கிடைப்பதில்லை

 என்ற அகிலனின் குரல் மொழி பற்றிய இந்தச் சிந்தனைகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. வாழ்வை வாழ்ந்து பார்த்தன்றி ஏட்டுச் சுரைக்காய்களால் அதாவது புத்தகங்கள், எழுத்துக்களால்  அறிய முடியாது என்ற ஜென் பெளத்த வாதத்தை, என்ற நவீனின் குரல் எதிரொலிக்கிறது,   

 `வாழ்வு பற்றி

உதிர்ந்த என் எழுத்துகளை
சில எறும்புகள்
பொறுக்கிச் சென்றன…………….
………………………………………….
புற்றுக்குள் குவிக்கப்பட்ட எழுத்துகளை
என்ன செய்வதென்று தெரியாத
எறும்புகளுக்கு
இடஞ்சலாகவும் அடசலாகவுமாகி
பின் மறந்தும் போனது.

 எப்படி 1964ல் தமிழ் மரபுக்கு வெளியிலிருந்த ஒரு கவிதை வடிவத்தைத் தனக்கான ஒரு வடிவமாக சுவீகரித்துக் கொண்டதோ அதைப் போல தமிழ் பாரம்பரியத்திற்கு வெளியிலிருந்து வரும் சிந்தனைகளையும் தத்துவங்களையும் இன்றைய மலேசிய நவீன கவிதை உள்வாங்கிக் கொள்ளத் துவங்கியிருக்கிறது.

மலேசியக் கவிதை கண்டிருக்கும் இந்த மாற்றம் அல்லது இந்த  மாற்றத்தை முன் வைக்கும் புதிய தலைமுறை அங்கு உற்சாகமாக வரவேற்கப்பட்டிருப்பதற்கான தடயங்களைக் காண முடியவில்லை.. ஆனால் எதிர்மறையான விமர்சனங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. மலேசியாவின் நவீன கவிதை உரையாடலை நோக்கி நகர்வதாகவும், அவற்றில் கவித்துவம் குறைவாக இருப்பதாகவும் ”பழைய புதுக்கவிதை” யாளர்களில் ஒருவரான முனியாண்டி ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.[3]

 மலேசியாவின் சென்ற தலைமுறைக் கவிஞர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம் இதுதான்..

`புன்னகை முற்றிலும் தொலைத்தவர்
சாலையோரத்தில் உதிர்ந்த
பூக்களையும் இலைகளையும்
ரசனையற்று பெருக்கிக்கொண்டிருக்கிறார்

என்ற சந்துருவின் கவிதை, சென்ற நூற்றாண்டின் இறுதியில் வந்த மலேசியக் கவிஞர்களுக்கும்,
`
ஜன்னல் பழையதுதான்
என்றாலும்
புதிதாய் எதையாவது பார்க்க
நேர்ந்துவிடுகிறது  

என்ற தோழியின் கவிதை மலேசியக் கவி உலகிற்குமே கூடப் பொருத்தமான கூற்றுகளாகிவிடுகின்றன. 80களிலும் 90களிலும் மலேசியக் கவிதைகள் சுணங்கின என்பதை நீங்கள் ஏற்பவரானால் இந்தக் கூற்றுக்களையும் நீங்கள் ஏற்கக் கூடும்.

 நெடுங்காலத்திற்கு மலேசியக் கதைகளுக்கு தோட்டம் என்பதே களனாகவும் குறியீடாகவும் இருந்திருக்கிறது. சை.பீர்முகமது பெருமுயற்சி எடுத்துத் தொகுத்திருக்கும் வேரும் வாழ்வும் முதல் தொகுதியில் உள்ள 50 ஆண்டு மலேசியச் சிறுகதைகளில் இதைப் பார்க்கலாம். அதி உள்ள கதைகள் பலவும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விபச்சாரம், குடி, சுரண்டல் ஆகியவற்றை மையக் கருத்தாகப் பேசுகின்றன. [4]

ஆனால் இன்று அவை தோட்டத்தைவிட்டு வெளியே வந்துவிட்டன. அவை புதிய களங்களை, கருத்துக்களை அனுபவங்களை வேண்டி நிற்கின்றன. தன் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை கேட்டு எழுதிய  பாலசேனா என்ற இளம் எழுத்தாளருக்கு டாக்டர் சண்முக சிவா எழுதிய கடிதம் இந்த விருப்பத்தைப் பேசுகிறது:[5]

 பீல்மோர் தோட்டத்தில் மிச்சமிருக்கும் மரங்களின் மடிகளில் உங்களின் அன்றைய பால்ய காலம் இன்னமும் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதாக நீங்கள் சொன்னபோது அந்த வருத்தம் முகத்தில் தெரிந்தது.

சிறுவனாக அந்தச் சிதறிக் கிடந்த நினைவுகளைக் குனிந்து எடுத்து சேகரித்த வண்ணம் நடந்து செல்லும் உங்களை, இப்பொழுது அங்கே கட்டப்பட்டிருக்கும் ஐந்து நட்சத்திர விடுதியின் நேப்பாள காவலாளி தடுத்து நிறுத்துவது போலவும், அல்லி மலர்கள் படர்ந்திருக்கும் செயற்கை குளத்தருகே நீங்களிருவரும் வந்து சேருகையில் நடுத்தர வயதின் நரைகளுடன் நீங்கள் இருப்பது போலவும் ஒரு காட்சி தோன்றி மறைந்தது. மண்ணும் காலங்காலமாக அங்கே வாழ்ந்த அந்த மண் சார்ந்த மனிதர்களும் அந்நியமாகிப் போக, பன்னாட்டு நிறுவன முதலாளிகளும் அவர்களைப் பாதுகாக்கும் நேப்பாளி கூர்க்காக்களுமாகச் சூழல் மாறிவிட்ட நிலையில் எது உங்களது, எது அவர்களது? .

 உலகமயமாதலையும் சமூக யதார்த்தங்களைப் பற்றியும் இளைய தலைமுறை எழுத வேண்டும் என் விரும்புகிறார் சிவா.ஆனால் அவர்கள் வேறு ஒரு யதார்த்தத்தின்பால், மாந்திரீக யதார்த்தத்தின்பால், ஈர்க்கப்படுவதற்கான சமிக்ஞைகள் மஹாத்மன் போன்றோரின் கதைகளில் தெரிகிறது. பாரம்பரியமான கதையம்சத்தைவிட, புனைவும் புனைவின் மொழியும் அவர் கதைகளைச் சிறக்கச் செய்கிறது. மனிதர்கள் மீது நம்பிக்கையும் கடவுள் மீது கேள்விகளும் கொண்ட அவர் கதை மலேசியத் தமிழுக்குப் புதிது.[6]

 உலகின் நவீன நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிற சிங்கப்பூர், நெடுங்காலத்திற்குத் தமிழ்க் கவிதைகளின் நவீனப் போக்குககளை ஏற்க மறுத்து வந்திருக்கிறது என்பது வரலாற்றின் முரண்களில் ஒன்று. சிங்கப்பூர் குடியரசாக மலர்ந்த 1965லிருந்து 1999 வரை சிங்கப்பூரில் வெளியான மரபுக் கவிதை நூல்கள் 71.ஆனால் புதுக் கவிதை நூல்கள் வெறும் 8. அதுவும் முதல் நூலாக ச.இளங்கோவனின் ”விழிச்சன்னலுக்குப் பின்னாலிருந்து” 1979ல் வெளியாகிப் பத்தாண்டுகளுக்குப் பிறகே, இக்பாலின் ‘முகவரிகள்” வெளியாகிறது. அதுவும் கூட முழுவதும் புதுக்கவிதைகள் கொண்ட நூலல்ல.[7]

 அன்று சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உலகில் தனியொரு தீவாக இருந்தது. இன்று இணையம் அதை உலகோடு பிணைத்திருக்கிறது.2007 இறுதியில் வெளியான வேறொரு மனவெளி என்ற சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு ”உலகளாவிய வாசகர்களைப் பெற்றவர்” என ஜெயந்தி சங்கரை அறிமுகப்படுத்துகிறது. அதில் மிகை இல்லை. அந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இன்னொருவரான ரம்யா நாகேஸ்வரன், தமிழகத்தில் வெள்யாகும் கல்கி வார இதழின் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர். மற்றொரு எழுத்தாளரான சிவஸ்ரீ காலச்சுவடு இதழின் பரிசைப் பெற்றவர். அதில் உள்ள பல இளைய தலைமுறை எழுத்தாளர்களது அறிமுகங்கள், “இவரது கவிதைகள், திண்ணை.காம், திசைகள்.காம், கீற்று.காம், தேன்கூடு.காம் தமிழோவியம்.காம் தமிழ் சிஃபி.காம் ஆகிய இதழ்களில் வெளியாகி உள்ளன” என முடிகின்றன. [8]

 பிரசுர சாத்தியங்கள் மட்டுமல்லாமல், சிங்கப்பூர் எழுத்துக்களிலும் உலகு தழுவிய தாக்கங்களைப் பார்க்க முடிகிறது. லதாவின் செப்டம்பர் 11 ஓர் உதாரணம்[9]

 எங்கள் அடுக்குமாடி

ஒன்றாய் நின்று

கல்விச் சுமை பற்றிப் பேசும்

கட்டண உயர்வைக் கண்டிக்கும்

ஆட்சியாளர்களின்

வீட்டுக் கதை ஆராயும்

ஆண்டு முழுதும்

பண்டிகை கொண்டாடும்.

பிள்ளைகள் பலகாரம்

எடுத்துச் செல்வர்

பெரியவர் அவர்களுக்கு

திருநாள் காசு தருவர்

 அவசர வாழ்விலும்

எங்கள் காலைகள்

அழகாய் விடியும்

 அப்படித்தான்

செப்டம்பர் 11ம் விடிந்தது

 ஈரத்துணியின் கனம்

தாங்காத காலாக் கம்பு

ஒடிந்து விழுந்தது

ஒன்பதாம் மாடி வீட்டின்

மூங்கில் கழி

இரண்டாம் மாடிவரை

சேதம் செய்தது

பள்ளிச் சீருடை பறி போனதென

எட்டாவது மாடி.

வேலைச் சீருடைக்கும்

பதில் சொல் என்று

ஐந்தாம் மாடி.

நான்காம் மாடியோ

போலிஸை அழைத்தது

 நடுராத்திரியில்

நடுங்கியெழுந்த  அடுக்குமாடி

முஹமதின் கம்பு

திட்டமிட்டே விழுந்ததாய்

தனித்தனியாய் குசுகுசுத்தது

 அதன்பின் தொடர்ந்த

அத்தனை நிகழ்வும்

மெல்லப் பேசும் ரகசியமானது.

அத்தனை பேரும்

பேச்சைக் குறைத்தோம்

 மத்தாப்பு கூட

ஆள் பார்த்துச் சிரித்தது.

 பிள்ளைகள்

வேதம் படிக்கத் தொடங்கினர்

 வேலை இழப்பும்,

வருமானக் குறைப்பும்

எல்லாக் கம்புகளையும்

உள்ளே இழுத்துப் போட்டன.

எங்கள் அடுக்குமாடியில்

காலைப் பொழுது

கவனத்தோடு விடிந்து வருகிறது.

 தொழில் நுட்பம் உலகத்தை ஒன்றாக்கும் என்ற நவீனத்துவ நம்பிக்கையை இலக்கிய உலகில் மெய்ப்பித்தவை சிங்கப்பூரின் கடந்த பத்தாண்டு இலக்கியப் படைப்புக்கள்.

நவீனத்துவத்தின் வேறு சில அம்சங்களுக்கும் இடமளிக்கக் கூடிய நகரமும் அதுதான். மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பு, முற்றிலும் நகர்மயமான சமூகம், கணிசமான நடுத்தர வர்க்கம், உயர் தொழில்நுட்பம், போன்றவை நவீனத்துவக் கூறுகளைக் கொண்ட இலக்கியங்கள் உருவாவதற்கு இயல்பாகவே ஏற்ற சூழல். நவீனத்துவத் தன்மை கொண்ட இலக்கியம் வலுவான ஒரு மையக்கரு, அக்கருவை நிறுவுவதற்கான தர்க்கம், அதற்கு ஏதுவான  தெளிவான, ஒருங்கிணைந்த வடிவம், அதற்கேற்ற மொழி, இவற்றைக்  கொண்டிருக்கும். சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டில் எழுதப்பட்டு  எனக்குக் கிடைத்த பெரும்பாலான சிறுகதைகள், இந்த அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.

எனவே பின் நவீனத்துவ வகைக் கதைகள் சிங்கப்பூரிலிருந்து வர வாய்ப்பே இல்லை எனக் கருதிக் கொண்டிருந்த எனக்கு வியப்பளித்தது ஒரு கதை. அதை முற்றிலும் பின் நவீனத்துவக் கதை என வகைப்படுத்திவிட முடியாது என்றாலும் அதன் ஒரு அம்சத்தைக் கொண்டிருந்தது அது.விளிம்பு நிலை மாந்தர்களின் மொழிக்கு  இலக்கியத்தில் செயல்பட இடமிருக்க வேண்டும் என்பது பின் நவீனத்துவக் கருத்துக்களில் ஒன்று. சிவஸ்ரீ என்பவர் எழுதிய கதையின் மொழி முற்றிலுமாக இந்தியாவிலிருந்து இங்கு பணிப் பெண்ணாக வருகிற ஒருவருடையதாக அமைந்திருந்தது.சற்றும் மிகையில்லாமல், பாவனையில்லாமல்,இயல்பாக,அடித்தள மக்களின் மொழிஅந்தக் கதையில் செயல்பட்டிருந்தது. “கதாசிரியர் உண்மையில் ஒரு பணிப்பெண்ணா என்று கூடக் கேட்டேன். அந்த அளவிற்குக் கதை மிக இயல்பாக இருக்கிறது” என்கிறார் சை.பீர் முகமது.[10] ஆனால் கதையை எழுதியவர் எம்.சி.ஏ படித்த கணிப்பொறியாளர். இப்போது பத்திரிகைத்துறைக்கு வந்திருப்பவர் என்கிறது அவரைப் பற்றிய குறிப்பு.

 மொழி கடந்த மானுடம்:

 தமிழர்கள் தாயகம் கடந்து குடியேறியதன் விளைவாகப் தமிழ்ப் புனைவுலகில் ஏற்பட்ட ஒரு தாக்கங்களில் ஒன்று சர்வதேச மானிடத்தைப் பேசும் ஒரு சாதனமாக தமிழ்ப் புனைவுகள் பரிணமித்தது.நாடு, மொழி, இனம், அவை சார்ந்து உருவான ஒழுக்கநெறிகள் என்ற கற்பனை வரைவெல்லைகளைத் தாண்டி மானுட நடத்தைகளையும், அவற்றின் பின்னுள்ள மானுட நேசம், வன்மம், அற்பத்தனம, சுய பரிதாபம் ஆகிய உணர்வுகளையும் பதிவு செய்யும் ஓர் களமாகத் தமிழ்ச் சிறுகதைகள் வளர்ச்சி கண்டன.

 தமிழின் இந்தப் பரிமாணத்திற்கான உதயம், தமிழ்த் தாயகங்களான தமிழ்நாடு, இலங்கையில் அல்ல, மலேசிய-சிங்கப்பூரில் நிகழ்ந்தது. தங்கள் சமூகத்தில் சக ஜீவிகளாக வாழும் மலாய்க்காரர்களையும்  சீனர்களையும் கதைமாந்தர்களாகக் கொண்டு ஆதி மலேசிய, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள், சில கதைகளை எழுதியிருக்கிறார்கள். மா.இராமையாவின் பறி, எம்.ஏ.இளஞ்செல்வனின் நொண்டிவாத்து, சண்முக சிவாவின் மனக் கதவு, ஐ.இளவழகுவின் போராட்டம் ஆகிய கதைகள் என் நினைவில் நிழலாடுகின்றன.

ஆனால் இன்றைய தாயகம் கடந்த தமிழ்ச் சிறுகதைகள் தங்கள் வாழ்விடத்தில் உள்ள மனிதர்களைப் பற்றி மட்டுமல்ல, வேற்றுச் சூழலில் வாழும் மனிதர்களைப் பற்றிப் பேச முற்படுகிறது. கனடாவில் வசிக்கும் முத்துலிங்கம், பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தின் புறநகரில் வசிக்கும் ஓரு சிறுவணிகன் அதிகாரத்திற்கு முகம் கொடுப்பதைப் பற்றி எழுதுகிறார்.[11] ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆசி.கந்தராஜா ஜப்பானில் வசிக்கும் ஒரு சிறுமியின் கல்விச் சுமை பற்றி எழுதுகிறார்.[12] பாங்காங்கில் வசிக்கும் ஆனந்த் ராகவ் அமெரிக்க, ஜெர்மானிய, ஆங்கிலேய, தாய்லாந்து சகாக்கள் இந்திய அரசியல் சமூகச் சூழல் பற்றி விவாதிப்பதை எழுதுகிறார்.[13] ஜெர்மனியில் வசித்த நா.கண்ணன் ஓர் ஆசிய ஏழை தங்க இடமின்றி குளிரில் மரித்துப் போவதை எழுதுகிறார்.[14] போலந்திலிருந்து வந்து குடியேறிய பாலியல் தொழிலாளியைப் பற்றி இன்னொரு ஜெர்மன் தமிழரான பொ.கருணாகரமூர்த்தி எழுதுகிறார். [15]

சியாரா லியோன் தேசத்து தும்பு இலையான் கடிக்காது, நம் தோளில் முட்டையிடும், கண்ணுக்குத் தெரியாத முட்டைப் புழு நம் சருமத்துள் புகுந்து வாழத் துவங்கும் என்பது போன்ற தகவல்களையும், எலக்ட்ரானிக்ஸ் துறையில் உச்சத்தைத் தொட்டுள்ள ஜப்பானில் ஆரம்பப்பள்ளி வகுப்புகளில் Sorban என்ற மணிச்சட்டத்தைப் பயன்படுத்திக் கணிதம் கற்பிக்கிறார்கள் என்ற சுவாரஸ்யமான துணுக்குகளையும், குட்டென் டாக் என்றால் ஜெர்மன் மொழி முகமன்களையும் தாண்டி அவை ஒரு வாழ்க்கையை நம் முன் வைக்கின்றன.

’உலகத்தில் இன்று ஒரு மில்லியன் மக்கள் அராமிக் மொழியைப் பேசுகிறார்கள்.ஆனால் துயரம் என்னவென்றால் அவர்கள் ஓர் இடத்தில் இல்லை. அவர்களுக்கு ஒரு நாடு இல்லை சிதறிப் போய் ஈரான், ஈராக், இஸ்ரேல், லெபனான்,சிரியா போன்ற பல நாடுகளில் சிறுசிறு குழுக்களாக வாழ்கிறார்கள். அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தான்.’ என்கிறார் பொறியியல் படித்துவிட்டு கனடாவில் முடிவெட்டும் ஈராக்கியர். அ.முத்துலிங்கத்தின் அந்தப் பாத்திரம் தான் பேசும் மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்காக இரவில் சுவருடன் அராமிக் பேசுகிறது.” நான் பேசும் ஒவ்வொரு நிமிடமும் என் மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது” என்று ஆறுதல் கொள்கிறது.

”இந்த ஊர்க் குழந்தைகளுக்குச் சாப்பிடும் சிக்கன் பறக்கும் பறவை என்பதே தெரியவில்லை. எல்லாம் பதனப்படுத்தப்பட்ட பொருள்களாக சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.தின்கின்ற இறைச்சி புல்லைத் தின்னும் பசுவாக இருந்தது என்பது எவ்வளவு பெரிய புதிர் இந்த நாட்டில்!” என நா.கண்ணனின் ஆசிய ஏழை திகைக்கிறான்.

“யப்பானிய ஆரம்பப் பாடசாலைகளின் இறுதியாண்டில் இத்தகைய போட்டிப் பரிட்சைகளின் மூலம்தான் மாணாக்கரைத் தரம் பிரிப்பார்கள்.எல்லோரும் விரும்பியபடி பல்கலைக்கழகத்துக்கோ, தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கோ செல்வது இவர்களால் இயலாத காரியம்.இவர்களின் தலைவிதி இவ்வாறு ஆரம்பப் பாடசாலைகளிலேயே தீர்மானிக்கப்படுவது முறைதானா’ என்ற கேள்வி ஆசி.கந்தராஜாவின் பாத்திரமான நளாயினியின் தலையைக் குடைகிறது.

உலகமயமாதலின் ஒரு முக்கிய விளைவு போட்டி.போட்டித் திறன் இல்லாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள். உலகமயமாதலின் இன்னொரு முக்கிய அம்சம் உள்ளூர் அடையாளங்களை மொழியை, கலைகளை, உணவை, கலாசாரத்தை அவசியமற்றதாக ஆக்கிவிடுவது. (Making local irrelevant).

இரவு மிகத்தாமதமாகப் பணியை முடித்துவிட்டு தனது வாடகைக்காரில் வந்து ஏறும் கறுப்பு இளைஞனின் கண்களைப் பார்க்கிறார் கருணாகரமூர்த்தி

“நீ தமிழனா?என விசாரிக்கிறார்.

திடுக்கிட்டு, “எ எ எ எப்படித் தெரியும்? என்றான் பையன்.

“எப்படியோ தெரியுது மேன்

“என்னை ஆப்ரிக்கன் என்றுதான் எல்லோரையும் நம்ப வைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பலே கில்லாடியாக் இருக்கிறீர்களே!

அடையாளங்களை மறைத்துக் கொள்வது ஒருவகை. அடையாளங்களே இல்லாமல் பிறப்பது இன்னொரு வகை.ஓர் இலங்கைப் பெண்ணுக்கும்,வியட்நாமிய ஆணுக்குமிடையில் ஆப்ரிக்க கொடையில்கிடைத்த உயிரணுக்களால் உண்டாக்கிய சிசு என்னவாகப் பிறக்கும் என்று வேதாளப் புதிர் போல முத்துலிங்கம் கதையில் ஒரு வரி வருகிறது

இது போன்ற அம்சங்களைத் தமிழ்க் கதைகள் பேசத் தலைப்படுவது தாயகம் கடந்த தமிழ் எழுத்துக்களிலேயே சாத்தியமாகியிருக்கிறது.

உலகமயமாதல் பற்றிய உரையாடல்களில் அதிகம் பேசப்படாத விஷயம், தனிமனிதர்களின் சுயத்திற்கு அது விடும் சவால்

தன் டாக்சியில் பயணம் செய்யும் விலைமாதுவிடம் கருணாகர மூர்த்தி கேட்கிறார்: “ஒரு ஆணோ பெண்ணோ என்னிடம் வந்து உனக்கு பத்தாயிரம் தருகிறேன், என்னை உன் மடியில் ஐந்து நிமிடம் வைத்திருக்கிறாயா என்று ஒரு நிபந்தனையாய் கேட்டால் அதை என் சுயம் ஏற்காது. அனுமதிக்காது. அப்படிக் கேட்டவரை உதைக்கக் கூடச் செய்வேன்.இந்தமாதிரி உங்களுக்கேயான சுயம், மானத்தைச் சீண்டவல்ல கோபம், சுயமரியாதை ஒன்றிருக்குமில்லையா?

இந்தக் கேள்விக்குப் பாலியல் தொழில் செய்யும் பெண் சொல்லும் பதில்: ”உள்ளான உணர்வுகளின் போர் ஒன்றிருக்குந்தான்.தத்துவங்கள், கோட்பாடுகள், நெறிகள் பற்றிய விசாரங்கள், எல்லாம் எங்களுக்குமிருக்கும்.நாம் ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்களில்லையே. ஆனா நடைமுறை வாழ்க்கையும் பிரச்சினைகளும் வெல்றதுதான் இங்கே யதார்த்தமா இருக்கு.அதாவது வாழ்க்கை எல்லாக் கேள்விகளுக்கும் தேடல்களுக்குமான பதிலைத் தரமுதலே எங்களை ஒரு வித ஞானிகளாக்கிவிடுகிறது.”[16]

அமெரிக்காவில் வசிக்கும் எழுத்தாளரான காஞ்சனா தாமோதரனின் பாத்திரமான ரஞ்சனிக்கும் சுயம் பற்றிய இந்தச் சிக்கல் எழுகிறது. அவர் பாலியல் தொழிலாளி அல்ல. நாற்பது பில்லியன் டாலர் விற்பனை வருமானம் உள்ள கம்பெனியில் வெற்றிகரமாக ஒப்பந்தங்களை முடிக்கும் பெரிய அதிகாரி அவள். கம்பெனி செலவில் விடுமுறைக்காக அவள் செல்லும் ஜப்பானிய கிராமமான ஹாகியில் அவள் தங்குமிடமும், சீராக அடுக்கப்பட்ட கழற்றப்பட்ட செருப்புக்களின் வரிசையும் வாசல் வழியே சாய்ந்தடிக்கும் சாரலும் அவளுக்குத் தாமிரபரணிக் கரையில் ஓட்டு வீட்டில் இருப்பது போன்ற பிரமையைத் தருகின்றன. அவள் நினைவுக்கு வரும் சிட்டுக் குருவிகள் அவளது சுயத்தை ஞாபகப்படுத்துகின்றன. அவள் வெற்றி காணும் கார்ப்போரட் விளையாட்டுக்களில் அவள் அதை இழந்து வருகிறாள் என்பதையும்.

”இது நான் உருவாக்கிய விளையாட்டு அல்ல. இதன் விதிகள் எனக்கு அந்நியமானவை.ஏதோ ஒருவிதத்தில் ஆட்டத்திற்கு நான் தேவைப்படுகிறேன். இதுவரை இந்த ஆட்டம் எனக்கும் தேவையாகத் தெரிந்தது” என்ற உணர்வு மேலோங்குகிறது. வெண்ணிற உடலும், கறுத்த கால்களும், சிவப்புக் கொண்டையும் கொண்ட, பாஷோவின் ஹைக்கூக்களில் உலவும், ஐந்தடி உயர நாரைகளில் அவள் பார்வை பதிவதோடு கதை முடிகிறது. ஜப்பானிய கலாசாரத்தில் மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவற்றின் குறியீடு இந்த நாரைகள்.[17]

இரு தளங்கள்

சுயம் அல்லது அடையாளம் நெருக்கடிகளைச் சந்திக்கும் போது மனிதன் அரவணைப்பை, நிச்சியத்தன்மை கொண்ட பாதுகாப்பை நாடுகிறான். அம்மாவின் கருப்பையில் இருந்ததைப் போன்ற ஒரு பாதுக்காப்பு. அம்மாவின் கருப்பைக்கு மீண்டும் போக முடியாதவர்களுக்கு அவர்களது நினைவோடை(Nostalgia) அதை உறுதி செய்கிறது.

இலங்கை அளவெட்டியில் பிறந்து 90களின் நடுவில் உக்கரைனுக்கும், ஜெர்மனிக்கும் பின் இங்கிலாந்திற்கும் குடி பெயர்ந்து, என் நினைவில் அவரது சிற்றிதழின் பெயரையும் சேர்த்து ‘புதுசு’ இரவி எனத் தங்கிவிட்ட அ.இரவியின் கால்ம் ஆகி வந்த கதையில் இதைப் பார்க்கிறேன். 2003ல் வெளியிடப்பட்ட அந்த நூலில் 1970களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வசித்த ஒரு 7 வயதுச் சிறுவனின் பார்வையில் படைப்பு விரிகிறது.”யாழ்ப்பாணத்து எழுத்துக்களில் இரவியைப் போல் 7, 8, 10, 11 வயதுச் சிறுவனை சித்தரித்துள்ளவர்கள்

நான் அறிய யாருமே இல்லையெனலாம்” என்று அந்த நூலைப் பற்றி கா.சிவத்தம்பி எழுதுகிறார்.[18]

“பொன்னம்மா வாத்தியர் எது செய்தாலும் அழகாகச் செய்வா. ஒவ்வொரு நாளும் பின்னால கொசுவம் வைத்து வெளுத்த சீலை கட்டுவா.நரைத்த தலையில் அழகான கொண்டை இருக்கும். அவர் நெற்றியில் குங்குமம் ஒருபோதும் இருந்ததில்லை.வெள்ளியில் சந்தனம் இருந்தது.விபூதி பூசாதவர்களை ஏசுவா

“நீறில்லா நெற்றி பாழ்

நெய்யில்லா உண்டி பாழ்

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்என்று பாடுவா

 புதிதாக சிலேட் வாங்கினால் அவரிடம் கொடுப்போம். சிங்கம்  மார்க் சிலேட்தான் வாங்க வேண்டும். சிலேட்டின் கரையில் உள்ள பலகையில்மெல்லிய ஆணி அடிப்பா. சிலேட்டின் ஒரு பக்கத்தில் அடிமட்டம் வைத்து ஆணியால் கோடு அடிப்பா. அந்தப் பக்கம் தமிழ் எழுதவும் மறுபக்கம் கணக்குச் செய்யவுமாக இருக்கும்.

இரவியினுடையதைப் போல இவ்வளவு விவரங்களோடு இல்லாவிட்டாலும் குடி பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே அயலக வாழ்வனுபவங்களை எழுதும் அதே தருணத்தில் தங்கள் தாயக நினைவுகளை ஏதோ ஒரு தளத்தில் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த இருமை நிலையில் வியக்கத் தக்கது ஏதுமில்லை. ஆனால் அது குறிக்கத் தக்கது.

பீறிட்டெழும் பெண்மொழி

இந்த யதார்த்தத்தின் இன்னொரு புறம், அரசியல் நிகழ்வுகளின் காரணமாகப் புலம் பெயர்ந்து செல்பவர்களுக்கு மொழி சார்ந்த அடையாளங்கள், ஏதிலார் (அகதி) சலுகைகளைப் பெறவும் குடி உரிமைகளைப் பெறவும் மட்டுமல்ல அவர்களே ஒருவர் இனம் கண்டு கொள்ளவும் அவசியமாகின்றன. இப்படி மொழி அடிப்படையில் ஒருமித்தல் அல்லது ஒன்று திரளலில் கிடைக்கும் Synergy தங்களது வேறு முகங்களை இனம் கண்டு கொள்ளவும்  அதனடிப்படையில் தாயகம் கடந்த தமிழிலக்கியத்தில் ஒரு விசையாகச் செயல்படவும் வழி கோலுகிறது என்பது வரலாறு.

1985ல் அதுவரை அமைதியாக இருந்த ஜெர்மனியின் ஹெர்ன் நகரம் பரபரப்புக்குள்ளாகியது. பொது இடங்களில் கூட்டமாக ஜெர்மன் அல்லாத வேறு ஓர் மொழியில் உரத்துப் பேசும் அந்த மண்நிறத்து மக்கள் யார்? அவர்கள் எப்படி இங்கே வந்தார்கள்? எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்ற கேள்விகளை அந்த ஊரின் குடிமக்கள் எழுப்பினார்கள். ஜெர்மன் பத்திரிகைகள் அந்தக் குரலை எதிரொலித்தன. தேவாலாயத்தின் பிரார்த்தனை உரைகளில் விவாதிக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்காக கட்டப்பட்டு அப்போது கைவிடப்பட்டிருந்த கட்டிடங்களில் அவர்களைத் தங்க வைத்த அரசு அவர்களுக்கு உதவ ஒரு தகவல் மையத்தையும் அமைத்தது. அந்தத் தகவல் நிலையம் செய்த முதல் வேலை தமிழ்ப் பத்திரிகைகளையும் புத்தகங்களை வரவழைத்து சிறிய நூல் நிலையம் ஒன்றை அமைத்ததுதான். மொழி அடையாளத்தைப் பிரதிநிதித்தவை பத்திரிகைகளும் நூல்களும்தான். ஆனால் அந்தப் பத்திரிகைகளை வாங்கிச் செல்ல ஆண்களே வந்தனர். பாலின சமத்துவத்தில் நம்பிக்கை உள்ள ஜெர்மன் அமைப்புகள், பெண்கள் ஒருவரோடு ஒருவர் சந்தித்துப் பேசவும், அவர்களுக்கு வெளி உலகோடு தொடர்பு ஏற்படுத்தவும், பெண்கள் வட்டம் ஒன்றை 1987ல் துவங்கியது.இந்த சந்திப்புகள்தான், பின்னாளில் பல்வேறு நிலைகளைக் கடந்து ஆண்டு தோறும் ஐரோப்பியத் தமிழ் பெண்கள் சந்திக்கும் பெண்கள் சந்திப்பாக வளர்ந்தது.[19]

25 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இந்த சந்திப்புக்களில் பெண்ணிய, கலாசாரப் பிரசினைகளோடு இலக்கியமும் விவாதிக்கப்படுகிறது, ஓர் இலக்கிய மலரும் வெளியாகிறது. இந்த விவாதங்களில் இடம் பெறும் பொருள்களில் ஒன்று பெண்மொழி.

ஒரு மொழியின் இயக்கம் சமூகத்தின் கருத்தியல்களையும், செயல்பாடுகளையும் ஒட்டியே வெளிப்படுகிறது. அது இயல்பானது. ஏனெனில் சமூகம் உருவாகிய பின்தான் மொழி உருவாகிறது.

ஆண்களை மையப்படுத்திய கருத்தியல்களே நிறைந்த தமிழ்ச் சமூக அமைப்பில், இலக்கிய வெளியை ஆண்களே, அல்லது ஆண்கள் வலியுறுத்தும் விழுமியங்களே  அடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் பெண் தனக்கான இடத்தை நிறுவிக்கொள்ளும் இயல்பான ஒரு செயல்தான்  பெண்ணெழுத்து. சமத்துவமற்ற சூழலில் ஆண் –பெண் சமத்துவததை வளர்த்தெடுப்பதற்கான ஆரம்பம் அது. எனவே அது ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்பதில், விமர்சிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

தாயகம் கடந்த தமிழிலக்கியத்தில் பெண் எழுத்து மூன்று தளங்களில் செயல்படுகிறது.

1.பெண்கள் எழுட்சி கொள்ள அவர்களை நோக்கிப் பேசும் எழுத்துக்கள்

2.ஆண்களை விமர்சித்து (சினந்தும், கேலியாகவும்) பேசும் எழுத்துக்கள்

3.இகழாமலும் புகழாமலும் சமத்துவம் கோரிப் பேசும் எழுத்துக்கள்.

இதில் முதலாவது வகை எழுத்துப் பெரும்பாலான நேரங்களில் உள்ளீடற்ற மேடை முழக்கங்களாக முடிந்து போகின்றன (Rhetoric).நவீன தமிழ்க் கவிதை Rhetoric களைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டன. இரண்டாவது வகைப் படைப்புகள் சில நேரம் அனுபவங்களைத் தாங்கியும், சில நேரம் பகடி செய்வதில் உள்ள சின்னச் சந்தோஷங்களுக்காகவும் எழுதப்படுபவை.பாடு பொருளைப் பொறுத்து அவை கவனிக்கத்தக்கவையாகவோ, உதிர்ந்து போகின்றவையாகவோ அமைகின்றன.மூன்றாவது வகைக் கவிதைகள் சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்தும் வலிவைப் பெற்றவை.

பெண்மொழி கவிதைகளில் ஏற்படுத்தியிருக்கும் ஒரு விளைவு என நான் கருதுவது கவிதை நடையில் ஏற்பட்டிருக்கும் ஓர் ஒற்றைப் பரிமாணம்.பெரும்பாலான கவிதைகள் ஒரேமாதிரியான மொழி நடையில் எழுதப்படுகின்றன. எழுதியவரின் பெயரை நீக்கிவிட்டுப் பார்த்தால் அது யாருடைய கவிதை எனச் சொல்வது கடினம். இன்னொரு புறம் மொழியைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர இயலாதவர்கள், கவிதையை உருவகங்களாலும் படிமங்களாலும் நிரப்பித் தங்கள் சாமர்த்தியத்தை நிரூபிக்கத் துடிக்கிறார்கள். சாமர்த்தியம் வெளிப்படுகிறது. ஆனால் கவிதை பாரம் தாங்காத பை போல தொய்ந்து தொங்குகிறது.

இதற்கு ஒரு விலக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஆழியாள். தனக்கென ஒரு மொழி, அதுவும் எளிமையான ஒரு மொழி, உருவகங்களை விடப் பெரிதும் அனுபவங்கள் சார்ந்த மொழி என அவரது கவிதைகள் விரிகின்றன.

நீயும் நானும்

வரையறைகளைக் கடக்க வேண்டும்-நான்

உன் விவேகத்தோடும்

நீ என் வீரியத்தோடும்

கடக்க வேண்டும்

எனினும்

என் கருவறையை

நிறைப்பது உன் குறியல்ல

என்ற புரிதலோடு

வா!

ஒன்றாய்க் கடப்போம்

நீ என் விவேகத்தோடும்

நான் உன் வீரியத்தோடும் [20]

சிங்கப்பூரில் அண்மைக்காலமாக எழுதத் துவங்கியிருக்கும் இளம் எழுத்தாளர்களிடமும் பெண்ணுரிமைக் குரல்களைக் கேட்கிறேன். செளம்யாவின் நான் என்னைக் காதலிக்கிறேன் என்ற கதை ஓர் உதாரணம்.உனக்கு அதிக சுதந்திரம் கொடுத்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டு என் சுதந்திரத்தை எனக்கே கொடுக்கிறார்கள். அதெப்படி? என்று அவரது கதை கேட்கிறது [21]

தொழில்நுட்பம் தந்த கொடை:

நான் கணினியில் எழுத உட்காரும் ஒவ்வொரு முறையும் முத்து நெடுமாறனுக்கு மானசீகமாக நன்றி சொல்லித்தான் துவங்குகிறேன். எனக்கு அவரது முரசு அஞ்சல்தான் கணினியில் எழுதுவதை எளிமைப்படுத்தியது. அதற்கு முன்பு கணினியில் எழுத முற்பட்டு கடினமாக இருந்ததன் காரணமாக அதைக் கைவிட்டவன் நான்.

அதே போல இணையத்தில் தமிழை வலையேற்றிய இரவு அந்தச் செய்தியை என்னோடு தொலைபேசியில் பகிர்ந்து கொண்ட நா.கோவிந்தசாமியின் குரலும் என் நினைவில் இப்போதும் தங்கியிருக்கிறது.

கணினி, இணையம் இந்த இரண்டும் தமிழ் எழுத்துலகிற்கு அளித்துள்ள கொடைகள் பற்றி தனி ஒரு அமர்வில் விரிவாகப் பேசியிருக்கிறோம். எனவே அதைப் பற்றி இங்கும் விரிக்கப்போவதில்லை.

ஆனால் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் இணையம் என் சுதந்திரத்தை அதிகரித்திருக்கிறது.ஒரு பத்திரிகையாசிரியன் என்ற வகையில் என் அதிகாரங்களைப் பறித்திருக்கிறது. வாசகனாக என் வாசக அனுபவம் விரிந்திருக்கிறது. ஆனால் ஒரு தமிழனாக என் மொழி சுருங்கத் துவங்கியிருக்கிறதோ என்ற கவலைகளும் எழுகின்றன.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற கணியனின் மொழிகள் இன்று வேறெதையும்விட இணையத்திற்கு மிகப் பொருத்தமானவை.

தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்திற்கும்தான்.

***

உசாத்துணை

1.  மலேசியப் புதுக்கவிதைகள்: தோற்றமும் வளர்ச்சியும்: பக்கம் 65 மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ் வெளியீடு.
2. மலேசியத் தமிழ் இலக்கியம் 2007 பக்கம் 113 மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடு
3. வல்லினம் இணைய இதழ்
4. வேரும் வாழ்வும் தொகுப்பு:சை.பீர்முகம்மது. மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ் வெளியீடு.
5. வல்லினம் இணைய இதழ்
6. மேலது
7. சிங்கப்பூர் தமிழிலக்கியம்: சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும்: பக்கம்.3. டாக்டர். ஏ.ஆர்ஏ.சிவகுமாரன், திருமதி.சீதாலட்சுமி, டாக்டர்.சுப.திண்ணப்பன்
8. வேறொரு மனவெளி:தொகுப்பு: பாலு மணிமாறன். தங்கமீன் பதிப்பகம்
9. பாம்புக்காட்டில் ஒரு தாழை பக்கம்:92-93 காலச்சுவடு பதிப்பகம்
10. வேறொரு மனவெளி:பக்கம்:226 தங்கமீன் பதிப்பகம்
11. “பத்து நாட்கள்” அமெரிக்கக்காரி சிறுகதைத் தொகுப்பு . அமுத்துலிங்கம். காலச்சுவடு பதிப்பகம்
12. “தேன்சுவக்காத தேனீக்கள்” உயரப்பறக்கும் காகங்கள் தொகுப்பு.ஆசி.கந்தராஜா மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ் வெளியீடு.
13. ”சின்ன விவாதம்”.க்விங்க் தொகுப்பு. ஆனந்த் ராகவ் கிழக்குப் பதிப்பகம்
14. “ஒரு பனிக்கால குறிப்பு” நிழல்வெளி மாந்தர் தொகுப்பு. நா.கண்ணன் மதி நிலையம் வெளியீடு
15. ”அப்ப நீ பூ விக்கலையா?” பெர்லின் இரவுகள் (திசைகள் மின்னிதழில் வெளியான தொடர்) பொ.கருணாகரமூர்த்தி உயிர்மைப் பதிப்பகம்.
16. மேலது
17. ”இனி” காஞ்சனா தாமோதரன் நெஞ்சில் நிற்பவை தொகுப்பு சிவசங்கரி வானதி பதிப்பகம்
18. காலம் ஆகி வந்த கதை அ.இரவி. அந்திவானம் பதிப்பகம்
19. தேவிகா பெண்கள் சந்திப்பு மலர் 2005
20.ஆழியாள் உரத்துப் பேச
21. ”நான் என்னைக் காதலிக்கிறேன்” வேறொரு மனவெளி தொகுப்பு செளம்யா  தங்கமீன் பதிப்பகம்

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *