’குக்’கிற்கு ஒரு பொங்கல்

.’குக்’கிற்கு ஒரு பொங்கல்

சுதந்திர தேவிச் சிலையையும், வானுயர்ந்த எம்ப்யர் ஸ்டேட் கட்டிடத்தையும் பார்த்துத் திரும்பும் நியூயார்க் சுற்றுலாப் பயணிகள் தவறவிடுகிற ஒரு விஷயம் ப்ரூக்ளின் பிரிட்ஜ். அது ஒன்றும் அந்தரத்தில் தொங்கும் அதிசயப்பாலம் அல்ல. ஆனால் அதன் பின்னுள்ள கதை அதை மனித முயற்சிக்குச் சாட்சியாக சரித்திரத்தில் பதிவு செய்திருக்கிறது.

ஜான் ரோப்லிங் என்ற ஒரு பொறியாளர் 1863ல் அந்தப் பாலத்தைக் கட்ட வேண்டும் எனத் திட்டமிட்டார். பாலம் கட்டுவதில் வல்லுநர்கள் எனப் பெயர் பெற்ற பலர் அது வீண் முயற்சி விட்டுவிடு என்று அறிவுரை சொன்னார்கள்.

ஆனால் ஜான் அசந்து விடவில்லை. தன் மகன் வாஷிங்டனுடன் தன் கனவைப் பகிர்ந்து கொண்டார்..இரண்டு பேரும் சேர்ந்து இரவு பகலாக யோசித்து என்னென்ன இடையூறுகள் வரும் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று திட்டம் தீட்டினார்கள்.

ஆனால் அவர்கள் திட்டமிடாத ஒன்று நடந்தது. பணி ஆரம்பித்த சில மாதங்களில் விபத்து ஒன்றில் சிக்கி ஜான் இறந்து போனார். வாஷிங்டன் பலத்த காயத்துடன் படுக்கையில் விழுந்தார். அவரால் நடக்கவோ, பேசவோ இயலாத அளவிற்கு அவரது மூளையில் சேதம்.

பாலப் பணி அவ்வளவுதான் என்று பலரும் நினைத்தார்கள். காரணம் அதைக் கட்டுவது தொடர்பான நுட்பங்கள் இரண்டு பேருக்குத்தான் தெரியும். ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவரால் பேச, நடக்க முடியாது. ஆனால் வாஷிங்டன் திட்டத்தைக் கைவிடுவதாயில்லை. அவரால் ஒரு விரலை, ஒரே ஒரு விரலை அசைக்க முடிந்தது.

அதைக் கொண்டு மனைவியின் கையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகத் தட்டுவதன் மூலம் ஒரு சங்கேத மொழியை உருவாக்கிக் கொண்டார். அந்த பரிபாஷையில் அவர் சொல்லச் சொல்ல அவர் மனைவி அதை ‘மொழி பெயர்த்து’ மற்றவர்களுக்குச் சொல்ல, மெல்ல மெல்ல 13 ஆண்டுகளில் அந்தப் பாலம் உருவாயிற்று.

மனித சக்திக்கு மாற்று சக்தி இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. அது மனிதாபிமானத்தோடு சேர்ந்து வெளிப்படும் போது வரலாறாகிவிடுகிறது. ஒர் உதாரணம் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்  என்று தமிழக அரசு அறிவித்துள்ள ஜான் பென்னி குக்

ஜான் பென்னிகுவிக் மறைந்து நூறாண்டுகள் ஆகின்றன (மார்ச் 9 1911) ஆனால் அவர் இன்றும் பேசப்படுகிறார். பேசப்படுகிறார் என்பது மட்டுமல்ல, தேனி கம்பம் பகுதிகளில் உள்ள சிறு கிராமங்களில் அவர் தெய்வமாக வணங்கப்படுகிறார். வீட்டுக்கு வீடு அவரது படங்கள் தொங்குகின்றன. பொங்கலன்று, அதுதான் அவரது பிறந்த தினம் (ஜனவரி 15 1841) அவருக்குப் பொங்கல் வைத்து விழா எடுக்கும் வழக்கம் பல்லாண்டுகளாக அந்தப் பகுதியில் நடைபெற்றுவருகிறது.

அப்படிக் கொண்டாடும் அளவிற்கு என்ன செய்து விட்டார் பென்னிகுவிக்? முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினார் என்ற ஒற்றை வரிச் செய்திக்குப் பின் உள்ள அற்புதங்கள் பலருக்குத் தெரியாது.

ஆங்கில அரசின் ராணுவ அதிகாரியாக இந்தியா வந்த பென்னிகுவிக் ஒரு என்ஜினியர். பெரியாறு அணை கட்டப்படும் முன் வைகை நதியின் வடிகால் பகுதிகளில் பலமுறை உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. வடகிழக்குப் பருவ மழையினால் மட்டுமே நீர் பெறும் ஆறாக வைகை இருந்தது. அந்த மழை பொய்த்தால் வறட்சிதான். இதைக் குறித்து ஆராய்ந்தபோது பென்னி குக்கிற்கு ஒரு உண்மை புலப்பட்டது. வருசநாடு கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகள் தென் கிழக்குப் பருவ மழையின் போதும் மழை பெறுகின்றன, அந்தப் பகுதியில் ஓடி வரும் முல்லை, பெரியாறு என்ற நதிகளைக் கிழக்குப் பக்கமாகத் திருப்பி வைகை ஆற்றுக்கு நீர் வரும்படி செய்தால் லட்சக்கணக்கான விளைநிலங்கள் நீர் பெறும், வறட்சி விடைபெறும் என்பதுதான் அது.

நதியைத் திருப்புவது, நதிகளை இணைப்பது என்பதெல்லாம் இன்றும் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால் அன்று பென்னி அதற்குத் திட்டம் தயாரித்தார். இங்கிலாந்திற்கு அனுப்பி அரசிடம் பணமும் பெற்று அணைகட்டும் வேலையை ஆரம்பித்தார்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு அணை வேலை பாதி நடந்து கொண்டிருந்த போது தீடிரென்று வந்த வெள்ளம் கட்டியதை அடித்துக் கொண்டு போனது. போனால் போகட்டும் இதற்கு மேல் பணம் கொடுக்க முடியாது என்று அரசு சொன்னபோது, தன் சொத்துக்களை விற்றுப் பணமாக்கி அணையை முடித்தார் பென்னி. காட்டு விலங்குகள், கனமழை, திடீர் வெள்ளம், விஷப்பூச்சிகள் இவற்றைப் பொருட்படுத்தாமல், தன் சொந்தக் காசில் அவர் கட்டித் தந்த அணையால் இன்று 2.23லட்சம் ஏக்கர் நிலங்கள்   பாசனம் பெறுகின்றன. தலைமுறை தலைமுறையாக மக்கள் வறட்சியின் கோரப்பிடியிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள்.

பென்னிகுக் தீவிர கிரிக்கெட் ரசிகர். சேப்பாக்கம் மைதானம் அரசிடம் பேசி அவர் பெற்றுத் தந்ததுதான். ஆண்டுதோறும் கல்லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடத்த கிரிக்கெட் சங்கத்திற்குக் கோப்பை ஒன்றை அளித்தவர் அவர்.

இன்று 20:20 போட்டிகளின் வெளிச்சத்தில் கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி என்பது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் அணை நிற்கிறது அதே உறுதியுடன்.

சக மனிதர்களுக்கு நீர் கிடைப்பதற்காகத் தன் சொத்தை விற்று அணை கட்டியதன் மூலம் பென்னி குக் தான் ஒரு மனிதன் என நிரூபித்தார் பென்னி குக்.. நாம் நம் அரசியலின் மூலம் மனிதர்கள் தமிழன், மலையாளி என்று  குறுகிப் போனதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறோம். கை கொட்டிச் சிரிக்குமோ காலம்?

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *