கணிமையின் முன் உள்ள கடமைகள்

உலகம் முழுவதும், குறிப்பாக ஊடகங்களில், மொழி என்பது நா:ளுக்கு நாள் சுருங்கி வருகிறது. கைத் தொலைபேசியில் வருகிற செய்திகளே இதற்குச் சான்று. BEFORE என்ற ஆறெழுத்து ஆங்கிலச் சொல், B4 என்ற ஓரெணெழுத்தாக மாறிவிட்டது.டிவிட்டர் என்ற குருவி வந்து,140 எழுத்துக்குள் செய்தி சொல்ல வேண்டுமென்ற நிபந்தனை விதித்தபோது குறுஞ்செய்தியின் மொழி இணையத்திற்குள்ளும் வந்து விட்டது. தொலைக்காட்சி செய்தியினிடையே இடம் பெறும் பேட்டிகள் (பைட்) 30 நொடிகள் எனச் சுருங்கி விட்டது. பத்திரிகைகளில் 500 வார்த்தைகளுக்கு மேல் எழுதாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.

ஆங்கிலத்தில் சொற்களைச் சுருக்குவது போல தமிழில் குறுகத் தறிக்க முடிவதில்லை என்பது தமிழ் மொழியின் பலங்களில் ஒன்று.. ஆனால் அநேகமாக எல்லா இதழ்களும், ஒற்றைப் பயன்படுத்துவதைக் கை விட்டுவிட்டன. அடுத்தாற்போல வேற்றுமை உருபுகளுக்கு ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. ‘அமைச்சர் மனைவி கிராமத்திற்கு போனபோது’ என்பது போல எழுதுவது சகஜமாகி வருகிறது. அமைச்சரின் மனைவி கிராமத்திற்குப் போனபோது என்று புரிந்து கொள்வதா, அல்லது அமைச்சர், மனைவியின் கிராமத்திற்குப் போனபோதா என்பதை இடமறிந்து புரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு வாசகன் தள்ளப்பட்டிருக்கிறான்.

 சுருக்கமாகச் சொன்னால், இன்று நாம் ஒரு மொழியைப் புரிந்து கொள்ள சொற்களை விட, நம்முடைய புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெரிதும் சார்ந்திருக்கும் நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

இது பொதுவாக உலகமெங்கும் எழுந்திருக்கும் சவால்.

ஆனால் தமிழ் மொழிக்கு இத்துடன் வேறு சில சவால்களும் இருக்கின்றன. எழுத்து வடிவிலான தமிழ், பாரம்பரியமாக தமிழ்ச் சமூகத்தின் அரசியல், ஆன்மீகம், பொருளாதார, சமுகத் தேவைகளுக்கே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அறிவியல் தொடர்புக்கு, சித்த மருத்துவம் போன்ற சில துறைகளைத் தவிர, அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் கணினியின் வரவு மொழியிடம் பல தேவைகளைக் கோருகிறது.

தமிழ்ச் சமூகம் கையால் ஆவணங்களை எழுதி வந்த நாட்களில் சொல் திருத்தி என்றவொன்றிற்குத் தேவைகள் இருந்ததில்லை. அண்மைக்காலம் வரை பெரும்பாலான தமிழர் வீடுகளில் நூலகம் என்ற ஒன்றிருந்ததில்லை. நூல்களை வாங்கி வைத்திருக்கும் வீடுகளில் கூட தமிழ் அகராதி, அகர முதலி போன்ற நூல்களை வாங்குகிற வழக்கம் இருந்ததில்லை. பொருளிலோ, இலக்கணத்திலோ சந்தேகம் வந்தால் ‘கேட்டுத் தெரிந்து’ கொள்வதே வழக்கமாக இருந்தது. நகர்புற இரண்டாம் தலைமுறைப் படிப்பாளிகளின் குடும்பங்களில் ரென் அண்ட் மார்ட்டின் போன்ற இலக்கண நூல்கள் இருக்கும். ஆனால் நன்னூல் இருக்காது. ஆக்போர்ட் டிக்ஷனரியின் கையடக்கப் பதிப்பாவது இருக்கும். ஆனால் கழகத் தமிழ் அகராதி இருக்காது. தமிழரிடையே தமிழ்-தமிழ் அகராதி என்பது தனியொருவர் சொத்தாக இருந்தது என்பது அரிது. அது பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது நூலகம் போன்ற அமைப்புக்களின் பொதுச் சொத்தாகத்தான் பெரும்பாலும் இருந்தது.

 

ஆனால் தொழில் நுட்பம், குறிப்பாகக் கணினி தொழில்நுட்பம், தமிழர்கள் தமிழை அணுகும் முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. ஐம்பதுகள் அறுபதுகளில் தமிழை அதன் தொன்மை காரணமாக வியந்து போற்றுகிற மனோபாவம் பரவலாக இருந்தது. வடமொழிக்கு எந்த வகையிலும் தமிழ் குறைவானது அல்ல, இன்னும் சொல்லப்போனால் அதைவிடப் பன் மடங்கு மேலானது என்ற கருத்தியல், தொன்மையைக் குறித்துப் பெருமிதம் கொள்வதன் அடி நீரோட்டமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் இன்று தமிழை ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது, ஆங்கிலத்தில் உள்ளவற்றையெல்லாம் தமிழிலும் கொண்டு வர வேண்டும் என விரும்புவது, தமிழ் செம்மொழி மட்டுமல்ல, அது ஒரு நவீனமான மொழி என நிறுவுவது ஆகிய மனப்போக்குகள் பெருகி வருகின்றன. இந்த மாற்றத்திற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.ஆனால் அவற்றில் கணினிப் பயன்பாடு என்பது முக்கியமானது.

 

கணினியைக் கொண்டு ஆங்கிலத்தில் எழுதுவதைப் போலத் தமிழிலும் எழுத வேண்டும் என்ற விருப்பமே தமிழைக் கணினிக்கு கொண்டு வந்தது. ஆங்கிலத்தைப் போல தமிழிலும் மின்னஞ்சல் எழுத வேண்டும், ஆங்கிலத்தைப் போலத் தமிழிலும் இணையப் பக்கங்கள் வேண்டும், ஆங்கில நாளிதழ்களைப் போலத் தமிழ்த் தாளிகைகளையும் இணையத்தில் வாசிக்க வேண்டும், ஆங்கிலத்தைப் போலத் தமிழ் வழி தேடு பொறிகளில் தேட வேண்டும், ஆங்கில வலைப்பதிவுகளைப் போல தமிழிலும் வலைப்பூக்கள் மலர வேண்டும் என்ற விருப்பங்கள் நிறைவேறிவிட்டன. இந்த மகிழ்ச்சி தரும் மாற்றத்திற்கு நாம் தமிழ் ஆர்வம் கொண்டக் கணினிப் பொறிஞர்களுக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

 

அதைப் பதிவு செய்யும் அதே வேளையில் நான் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். தமிழுக்கான குறியீடுகளைத் தரப்படுத்துவதில் நாம் வெகு காலம் செலவழித்து விட்டோம். எல்லோரும் ஏற்கக்கூடிய ஒரு பொதுக் குறியீட்டை எட்ட நமக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அது குறித்து இன்னமும் கணினிப் பொறிஞர்கள், மொழி வல்லுநர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டுதானிருக்கின்றன.

 

ஒரு பொதுக் குறியீட்டு முறையை ஏற்க நெடுங்காலம் செலவழித்ததாலோ என்னவோ, இன்னமும் தமிழ்க்கணிமை என்பதைக் குறியீட்டு பிரசினையாகவே நாம் விவாதித்து வருகிறோம். உத்தமம் குழுவில், குறியீடு பற்றிய நீண்ட விவாதம், அண்மையில் கூட, அதாவது ஒரு பொதுக் குறியீடு வழக்கத்திற்கு வந்து ஏழெட்டு ஆண்டுகள் ஆனதற்குப் பிறகும் கூட, நடந்து மடல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

 ஆனால் இன்று தமிழ்க் கணிமை எட்ட வேண்டிய இலக்குகளும் முன்னேறிச் செல்ல வேண்டிய தளங்களும் பல இருக்கின்றன.  

                                                                                 -சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை   .

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these