சின்னதாய் சில நம்பிக்கைகள்


சின்னதாய் சில நம்பிக்கைகள்


கடந்த நான்காண்டுகளை விட இந்த டிசம்பரில் பெய்த மழை அதிகம். அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் லிட்டில் இந்தியாப் பகுதியை பாதித்தது, நீரில் மூழ்கிய ஆர்சர்ட் சாலை என்ற செய்திகளைப் படித்த போது இந்தக் குழந்தை என் நினைவில் வந்து போனது.

அந்தக் குழந்தைக்கு ஆறேழு வயது இருக்கும். வெள்ளை நிறத்தில் சின்னச் சின்ன சாக்லேட் பூக்கள் சிதறிக் கிடந்த கவுன் அணிந்து இரட்டைப் பின்னல் போட்டு மடித்து ரிப்பன் வைத்துக் கட்டியிருந்தாள். வலக்கை அம்மாவின் விரலைப் பற்றிக் கொண்டிருந்தது. அம்மா மழைக்காக ஒரு அங்காடி வாசலருகே ஒதுங்கியிருந்தார். நானும்தான்.

மழை இப்போதைக்கு ஓயும் என்று தோன்றவில்லை. பூமியை அடித்துத் துவைத்து விட வேண்டும் எனப் புறப்பட்டு வந்ததைப் போலப் பொழிந்து கொண்டிருந்தது. சாலைகள் கணினி வரைகலையில் செய்த மாயம் போல் சட்டென்று ஆறுகளாகி விட்டன. விண்ணிலிருந்து விழுந்து சிதறும் நீர்ப்பூக்களையும் மண்ணின் சுவாசத்தில் மலரும் நீர்க்குமிழிகளையும் ரசிக்கும் மனம்தான் யாருக்குமில்லை.

அங்கிருந்த அனைவரது கண்களும் அவ்வப்போது வானத்தைப் பார்த்துப் பார்த்துச் சலித்தன. ’இப்போ இந்த மழை இல்லைனு யார் அழுதா?’ எனச் சிலர் முணுமுணுத்தனர்.. கழுத்தறுப்பாப் போச்சே இந்தக் கஷ்டம் என்று வேறு சிலர் வாய் விட்டே அரற்றிக் கொண்டிருந்தனர் வேலைக்குக் குறுக்கே வந்த வில்லன் என்ற அவர்களின் புழுக்கத்தைக் கண்டு புன்னகைத்துக் கொண்டிருந்தேன்.

”வாம்மா, போகலாம்!” என்ற குரல் என்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தது.

அம்மா பதிலேதும் பேசாமல் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார். அதன் சாம்பல் நிறத்தில் சற்றும் மாற்றமில்லை..

”வா போலாம்!” என்று மறுபடியும் அழைத்ததும், “கொஞ்சம் இரு போகலாம்” என்று வாய்தா வாங்கினார் அம்மா.

அவர் அதைச் சொல்லி ஒரு நிமிடம் கூட ஆகியிராது. அதுவே குழந்தைக்கு ஒரு யுகமாக இருந்திருக்க வேண்டும். மீண்டும் அழைப்பு விடுத்தது.

“இரு, மழை நிற்கட்டும் போகலாம்!” என்றார் அம்மா.

”இல்லை, இப்பவே போகலாம்!”

“இப்பப் போனா நனைஞ்சிடுவ” என்று அம்மா அந்தக் குழந்தைக்கு யதார்தத்தை விளக்க முற்பட்டார்.

“நனையமாட்டோம்!” என்றது குழந்தை உறுதியாக.

” நனைஞ்சிடுவடா” என்றார் அம்மா மறுபடியும்.

“நனையமாட்டேனு நீ சொன்னியே?” என்றது குழந்தை

“மழையில போனால் நனையமாட்டாய் என்று நான் எப்ப சொன்னேன்?”

“காலையில அப்பாகிட்ட பேசும் போது சொன்னியே. கடவுள் நம்மை இதிலிருந்து காப்பாற்றிட்டார். இனிமே எந்த கஷடத்திலிருந்தும் காப்பாற்றிவிடுவார்” னு சொன்னியே”

வேலை போய்விடுமோ என்று சில நாள்களாகப் பயந்து கொண்டிருந்த கணவனது வேலைக்கு இனி ஆபத்தில்லை எனத் தெரிய வந்தபோது அவரிடம் தான் சொன்ன வார்த்தைகள்தான் இவை என்பது அம்மாவிற்கு நினைவு வந்தது.

கஷ்டங்களிலிருந்து கடவுள் நம்மைக் காப்பார் என்றால் இந்த மழையிலிருந்து காக்க மாட்டாரா என்ன? குழந்தை அம்மாவை நம்புகிறது. கடவுள் காப்பார் என்று சொன்னதை நம்புகிறது.

இப்போது மழைக்குப் பயந்து இங்கேயே ஒதுங்கிக் கொண்டிருந்தால் குழந்தை என்ன நினைக்கும்? நம்பிக்கைகள் உருவாகிற அந்த வயதில் அம்மாவைப் பற்றிய அபிப்பிராயத்தில் விரிசல் விழும். கடவுளைப் பற்றிய நம்பிக்கையில் மெலிதாக பிளவு ஏற்படும்.

அந்த அம்மாவின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? மழைக்குப் பயப்படுவீர்களா? குழந்தையின் வெள்ளை மனம் அழுக்காகிவிடக் கூடாது என்று மழையில் நடப்பீர்களா?

அந்த அம்மா இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். “சரி வா, போகலாம்!” எனப் புறப்பட்டார். “உடம்பு ஈரமாச்சுனா பயப்படாதே!, கடவுள் உன்னைக் குளிப்பாட்டிவிடுகிறார்!” என்றும் சொல்லி வைத்தார். ஈரத்தில் இறங்கியதும் தானாகவே கைப் பையை எடுத்து தலைக்கு மேலே பிடித்துக் கொண்டு நடந்தார். ஆனால்-

அந்தக் குழந்தை கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு துள்ளித் துள்ளி மழையில் நடந்தது.

சின்னச் சின்ன நம்பிக்கைகள் அவைதான் வாழ்வின் பெரிய விஷயங்களைத் தீர்மானிக்கின்றன.

அந்த நம்பிக்கைகளில் பல அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்க முடியாதவையாகத் தர்க்க ரீதியாகத் தாக்குப்பிடிக்க முடியாதவையாகக் கூட இருக்கும்.

தர்க்க ரீதியாகப் பார்த்தால் இன்று என்பது நேற்றின் தொடர்ச்சி. நாளை என்பது மற்றுமொரு நாளே. புத்தாண்டு என்பது டிசம்பர் 31ன் மறுநாள். டிசம்பர் 31ல் இருந்த பலவீனங்கள், சிக்கல்கள், தீமைகள் எல்லாம் தீடீரென ஒரு நள்ளிரவில் மறைந்துவிடாது.

ஆனால் ஒவ்வொரு புத்தாண்டும் நம்பிக்கைகளோடுதான் துவங்குகிறது. வேண்டுதல்களுடன் விடிகிறது.

நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் உள்ளுணர்வின் உந்துதல்களின்படிதான் நடக்கிறோம். தர்க்கங்களின் அடிப்படையில் அல்ல. ஒரு சமூகம் அதன் விழுமியங்களின் வழி நடக்கிறது சட்டங்களின் வற்புறுத்தலால் அல்ல

நாட்டில் எல்லோரும் நேர்மையானவர்களாக இருந்தால் சட்டங்களே தேவையில்லை. நேர்மையற்றவர்கள் என்றால் சட்டங்களால் பயனில்லை என்று எழுதினார் பெஞ்சமின் டிஸ்ரேலி.

அன்னா ஹசாரே டிஸ்ரேலியை வாசித்திருப்பாரா எனத் தெரியவில்லை. ஆனால் ஊழலை சட்டத்தால் ஒழிக்க முடியும் அல்லது ஒடுக்க முடியும் என்றெண்ணி லோக்பால் அமைப்பை ஏற்படுத்தும் சட்டத்தை வற்புறுத்தி வருகிறார்.

ஆனால் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மனிதர்கள் வானுலகிலிருந்து இறங்கி வரப்போவதில்லை. 10 ஆயிரம் வழக்குகளை மேல் நிலுவலையில் வைத்திருக்கிற சிபிஐயும், இதுவரை இருந்த 16 தலைமை நீதிபதிகளில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஊழல் பேர்வழிகள் என்று அன்னா குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டாரே அந்த நீதித்துறையும்தான்.

இந்தியாவின் தேசியகீதமான ஜனகணமன இயற்றப்பட்டு இந்த டிசம்பரோடு நூறாண்டுகளாகின்றன. அதில் இந்தியாவை வழி நடத்துவதாகக் குறிப்பிடப்படும் பாக்கிய விதாதா யார் என்று தாகூரைக் கேட்டார்கள். அவர் destiny (விதி?) என்று சொன்னார்.

அன்னா தர்க்கத்தை நம்புகிறார். தாகூர் உள்ளுணர்வை நம்புகிறார். நான் அன்னா ஹசாரவைவிட தாகூரை அதிகம் நம்புகிறேன்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these