விபத்தும் எழுத்தும்

விபத்தும் எழுத்தும்

பரபரப்பான அரசியல் செய்திகள் ஏதும் அகப்படாமல் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த தொலைக்காட்சிகளுக்கு சுறு சுறுப்பேற்றியது அந்த விபத்து. சில தினங்களுக்கு முன்பு சென்னை நகரின் வயிற்றுப் பகுதியான (இதயம் மனித உடலின் மையத்திலா அமைந்திருக்கிறது?) ஜெமினியில் அமைந்துள்ள மேம்பாலத்திலிருந்து பேருந்து ஒன்று தலைகுப்புற விழுந்துவிட்டது. காரணம் என்ன என்பதைக் காவல்துறை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. கைபேசியாக இருக்கலாம் எனக் காற்று வாக்கில் வதந்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. அதாவது வண்டியை ஓட்டும் போது பேருந்து ஓட்டுநர் கை பேசியில் பேசிக்கொண்டே ஓட்டியதாகவும் அதனால் கவனம் சிதறி விட்டதாகவும் பேச்சு.

 

ஜெமினி மேம்பாலம் கட்டப்பட்ட 70 களில் அது ஒரு பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று சென்னை நகரெங்கும் மேம்பாலங்கள். மோட்டார் வாகனங்கள் செல்வதற்காக முளைத்தெழுந்திருக்கும் பாலங்கள் தவிர அண்மைக்காலமாக மெட்ரோ ரயில் தடங்களைத் தாங்கி நிற்கும் தூண்கள் ஆங்காங்கு எழுந்து நிற்கின்றன.

 

அண்ணாந்து பார்க்கும் உயரத்தில், (ஆகாயத்தில்?) ஓடும் மெட்ரோ ரயில் என்பதுவே சிங்கப்பூரிலிருந்து இரவல் பெற்ற ஒரு சிந்தனைதான். வெகு காலத்திற்கு முன்னால் தரையில் சாலை நடுவே, பேருந்துகளுக்கும், கார்களுக்கும், குதிரை வண்டிகளுக்குமிடையே ரயில் ஓடிக் கொண்டிருந்ததாக மணிக்கொடிச் சிறுகதைகளில் வாசித்திருக்கிறேன். டிராம் என அழைக்கப்பட்ட அந்த ரயில் பெட்டிகளை இப்போது அருங்காட்சியகத்தில் கூடக் காண முடிவதில்லை.

 

அண்மையில் மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே இலக்கியம் பேசிக் கொண்டிருந்த போது, டிராம் என்றால் எப்படி இருக்கும் என்று ஒரு மாணவி உரைக்குப் பிந்திய கேள்வி நேரத்தில் கேட்டார். இன்று ஒரு தலைமுறையால் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத வாகனம் அது.

 

சரி, மருத்துவக் கல்லூரிக்குள் இப்போது ஏன் டிராம் வந்தது என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். (எழுந்தால் நீங்கள் நேர் கோட்டுச் சிந்தனை கொண்டவர் என்று கருதிக் கொள்ளலாம்) ஒரு மருத்துவ மாணவியை புகழ் பெற்ற எழுத்தாளராக மாற்றியதில் இந்த டிராமிற்கும் ஒரு பங்கு உண்டு,

 

டிராமைப் போலவே லஷ்மி என்ற எழுத்தாளரைப் பற்றியும் இந்தத் தலைமுறை அறிந்திருக்காது. ஒரு காலத்தில் ஜெயகாந்தனும் பின்னர் சுஜாதாவும் ஆனந்த விகடன் வாசகர்கள் மனதை ஆக்ரமித்திருந்ததைப் போல அவர்களுக்கு முன்பு அந்த வாசகர்கள் மனதில் கோலோச்சியவர் லஷ்மி.

 

அவர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி. இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது இடி ஒன்று தபாலில் வந்து இறங்கியது. அதை அனுப்பி வைத்தவர் அவருடைய அப்பா ஸ்ரீனிவாசன். குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் இனி உனக்கு மாதாமாதம் அனுப்பிவரும் முப்பது ரூபாயை அனுப்ப இயலாது எனவே படிப்பை நிறுத்திவிட்டு ஊர் வந்து சேர் என அவர் எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்த லஷ்மி அதிர்ந்து போனார், மருத்துவராக வேண்டும் என்பது அவரது நெடுநாள் கனவு.

 

என்ன செய்வது எனக் குழம்பிக் கொண்டிருந்தவர் கையில் அமெரிக்கச் செய்தித் தாள் ஒன்று அகப்பட்டது. படிக்கப் பணமில்லாத மாணவர் ஒருவர் பகுதி நேரமாக டிரக் ஓட்டிப் பணம் சம்பாதித்துக் கல்வியைத் தொடர்வதாக அந்த நாளிதழில் வந்த கட்டுரை பேசியது.

 

நாமும் இது போலப் பகுதி நேர வேலைக்குப் போனால் என்ன என்ற கேள்வி மனதில் ஓட டிராம் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார் லஷ்மி. போகலாம், ஆனால் யாரைப் போய்க் கேட்பது என்ற கேள்வியும் எழுந்த போது டிராம் நின்றது. அது நின்ற இடம் ஆனந்த விகடன் அலுவலக முகப்பு.

 

ஆனந்த விகடன் அவரது அபிமானப் பத்திரிகை. சிறுமியாக இருந்த காலத்திலிருந்து அதைப் படித்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது வந்து உரையாடும் உறவினரைப் போல அந்தப் பத்திரிகை அவர் உணர்வில் கலந்திருந்தது.

 

உள்ளே போனார். அவரது அதிர்ஷ்டம் வாசனைச் சந்திக்க முடிந்தது. தன் கதையை உருக்கமாகச் சொன்னார். உதவி கேட்டார். நீங்கள் கதை எழுதுவீர்களா எனக் கேட்டார் வாசன். அதுவரை அவர் வாசகிதான். கதைகள் நிறையப் படித்ததுண்டு ஆனால் எழுதியதில்லை. என்ன சொல்வது என யோசித்துக் கொண்டிருந்த போது, எழுதிக் கொண்டு வந்து கொடுங்கள் பிரசுரமானால் சன்மானம் கொடுப்பார்கள் என்று சொல்லிவிட்டுப் போனார் வாசன்.

 

”தகுந்த தண்டனையா?” என்ற தனது முதல் கதையை எழுதிக் கொண்டு போய்க் கொடுத்தார். அன்று வாசன் இல்லை. கல்கி இருந்தார். எல்லாப் பத்திரிகையாசிரியர்களைப் போலவும் சரி பார்க்கிறேன் எனச் சொல்லி வாங்கி வைத்துக் கொண்டார். சில நாள்களில் கதை பிரசுரமாகியது. ஏழு ரூபாய் சன்மானமாக வந்தது. கூடவே ஒரு கடிதமும். எங்களுக்கு மாதம் மூன்று கதை அனுப்புங்கள் முப்பது ரூபாய் தருகிறோம் என்றது கடிதம்.

 

அதன்பின் லஷ்மி நிறைய எழுதினார். நிறைய சம்பாதித்தார். நாவல் எழுதிக் கிடைத்த பணத்தில் தன் சகோதரி திருமணத்தை நடத்தியதாகக் கூடச் சொல்வார்கள். பணத்தை மட்டுமல்ல, வாசகர்களையும் ஏன் அவரது கணவரையும்கூட அவரது எழுத்துத்தான் அவருக்கு ஈட்டித் தந்தது. ஆனாலும் லஷ்மி எழுத்தாளராக ‘செட்டில்’ ஆகி விடவில்லை. கடைசி வரை மருத்துவராகவே பணி புரிந்தார்.

 

எழுத்தாளர்களும் ஒரு விதத்தில் மருத்துவர்கள்தானே?

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *