சித்திரமும் சொல்லும்

சித்திரமும் சொல்லும்

 பல வருடங்களுக்கு முன்னால் நடந்தது. சிங்கப்பூரில்தான். பள்ளி ஒன்றில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். பாடப் புத்தகங்களுக்கு அப்பாலிருந்தும் எப்படித் தமிழை –இலக்கியம், நாளிதழ் வழியே- பயில இயலும், பழக இயலும் என்பதைப் பற்றியது பேச்சு. பேசி முடித்ததும் ஒரு மாணவி கேட்டார்: “ ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசிப் பழக வேண்டுமென எங்கள் ஆசிரியை (பெண் ஆசிரியர்களை அங்கே சாதாரணமாக அப்படித்தான் சொல்கிறார்கள். அவர்களையும் ஆசிரியர் என்றே சொல்லலாம். அந்த ‘ர்’ மரியாதையைக் குறிக்கும் விகுதி)  சொல்கிறார். ஆனால் ஜெயகாந்தனுடைய அக்னிப் பிரவேசம் ’காலேஜ் முடிந்து அவள் பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த போது’ என்பதைப் போலத் துவங்குகிறது. அது சரியா?”

 

ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் வர்க்கம் இருக்கிறது என்று இடதுசாரிகள் சொல்வது வழக்கம்.மொழி என்பதே நடுநிலையற்றது என்பது அந்த வாதத்தின் சாரம். ஒருவர் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு அவரது மதம், இனம், ஜாதி, பால், இடம், காலம் ஆகியவற்றைக் கண்டறிந்து விடலாம் என்பது தமிழைப் பொறுத்தவரை உண்மைதான்.

 

’சாப்பிட்டுண்டிருக்கேன்’, ’சாப்பிட்டுக்கிட்டிருக்கேன்’என்ற சொல்லில் ஒருவர் எதைப் பயன்படுத்துகிறார் என்பதை வைத்து அவரது சாதியை அடையாளம் கண்டு கொள்ள முடியும். இதைத் தவிர்க்கத்தானோ என்னவோ ஒரு பொதுத்தமிழ் அச்சு ஊடகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் அந்தத் தமிழைக் கொண்டு கூட ஒருவரது பால் அடையாளங்களை அறிந்து கொண்டு விட முடியும். அறுபதுகள் எழுபதுகளில் எழுதப்பட்ட புனைகதைகளில் அம்மாவோ, மனைவியோ, ’வந்தாள்’தான். அம்மாவிற்குப் பயன்படுத்தப்பட்ட ‘ள்’ விகுதி அப்பாவைக் குறிப்பிடும் போது மரியாதைக்குரிய ‘ர்’ ஆகி வந்தாரென எழுதப்படும். அப்பாக்களை விமர்சிக்கிற கதைகளில் கூட ’அவன்’ என்று தந்தையர்கள் குறிப்பிடப்படுவதில்லை. வேலைக்காரர்கள் இன்னும் ‘ன்’ விகுதியில்தான் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

கதைகள் பாடமாக பாடப் புத்தகங்களில் நுழையும் போது கூட அங்கு மொழி ‘சுத்தமோ’ அல்லது ‘நடுநிலைப்படுத்தவோ’ படுவதில்லை. ஆனால் கார்ட்டூன்களுக்கு அந்த உரிமை கிடைப்பதில்லை.

 

அம்பேத்கர் கார்ட்டூனை அடுத்து இப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் (வட இந்தியர்கள் இதைக் ’கிளர்ச்சி’ என்று எழுதுகிறார்கள். ஆங்கிலயேர்கள் முதல் சுதந்திரப் போரை சிப்பாய்க் ’கலகம்’ என்று எழுதியதைப் போல) குறித்த கார்ட்டூன் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் அந்தக் கார்ட்டூனுக்கும் அந்தக் கார்ட்டூனை பாடப் புத்தகத்தில் சேர்த்ததற்கும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. கவனிக்க வேண்டிய விஷயம் தமிழகக் கட்சிகள் மட்டுமே கண்டித்திருக்கின்றன. ’தேசிய’ கட்சிகள் வாய் திறக்கவில்லை/

 

கார்ட்டூனைப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பது என்ற எண்ணமே, ‘பாடப் புத்தகங்களை’ சுவாரஸ்யமாக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் எழுந்ததுதான். அதிலும் வரலாறு, அரசியல், போன்ற ‘உலர்ந்த’ பாடங்களுக்கு சுவையூட்ட, காட்சி ஊடகங்கள் ஆட்சி செலுத்தும் இந்தக் காலத்தில், கார்ட்டூன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

 

ஆனால் வரலாற்றைப் பயிற்றுவிக்க கார்ட்டூன்களைப் பயன்படுத்த முடியுமா? என்பதுதான் கேள்வி. கார்ட்டூன் என்பது ஒரு கருத்தை கருக் கொண்டு பிறப்பது. தமிழில் அதைக் கருத்துப் படம் என்ற சொல்கொண்டு கூடக் குறித்ததுண்டு. அதைக் கருத்துப்படம் என்று சொல்வதை விட, செய்திச் சித்திரம் என்று சொல்லலாமா என்று கூட நான் என் இதழியல் சகாக்களுடன் விவாதித்ததுண்டு. ஆனால் அது செய்தியை மட்டுமல்ல, செய்தியின் மீதான கருத்தையும் முன் வைக்கிறது  என்பதால் கருத்துப் படம் என்பதே சரி என்றே நான் முடிவு செய்தேன்.

 

வரலாற்றை கருத்து சார்ந்து போதிப்பது என்பது நியாயமாகுமா? அது ‘உண்மை’கள் அல்லது தகவல் சார்ந்து அல்லவா கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் கேள்வி.

 

சர்ச்சைக்குரிய இந்த இந்தி எதிர்ப்புக் கார்ட்டூனில் தமிழக மாணவர்கள் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழியை அறிந்து கொள்ளாமல் வன்முறையில் இறங்கியிருப்பதைப் போன்ற ஒரு கருத்து வெளிப்படுகிறது. ‘அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது போல’ என்று தமிழர்களைப் பார்த்து அது எள்ளி நகையாடுகிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிந்தைய இந்த 47 ஆண்டுகளில் தமிழர்கள் ஆங்கிலத்தில் தங்களுக்குள்ள திறனை உலகெங்கும் சென்று மெய்ப்பித்து விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் நேருவின் உறுதிமொழிக்கு சட்டபூர்வ அந்தஸ்து அளிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் வாதாடியவர்கள் தமிழர்கள். May என்ற ஆங்கிலச் சொல்லையும், shall என்ற ஆங்கிலச் சொல்லையும் பயன்படுத்துவதிலுள்ள நுட்பமான வேறுபாட்டைச் சுட்டி வாதாடிய நாஞ்சில் மனோகரனின் பேச்சு ஆங்கில இலக்கணப் பாடப்புத்தகங்களில் துணைப்பாடமாக வைக்கத் தகுந்தது.

இந்தப் பின்னணியில் இந்தக் கார்ட்டுன் அர்த்தமற்றது. உண்மை என்னவெனில் சுதந்திர இந்தியாவில், அரசியல் கட்சிகளோடு சம்பந்தமற்று இருந்த இளைஞர்கள், அவர்களில் பலர் நடுத்தர வர்க்கத்தினர், பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடிய தன்னெழுட்சியான ஓர் நிகழ்வு 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பதை அதில் பங்கேற்றவர்களில் ஒருவன் என்ற வகையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இன்னும் சொல்லப் போனால் அரசியலில் ஒரு இளம் தலைமுறையின் வருகைக்கும்  ஒருதலைமுறை அரசியல் உணர்வு கொள்வதற்கும் (politicization) அது ஓர் காரணியாக அமைந்தது  என்பதுதான் உண்மையான வரலாற்றுப் பதிவு.

 

மொழி வார்த்தைகளால் ஆனது மட்டுமல்ல என்பதைப் போன்றே உலகம் உண்மைகளால் மட்டுமல்ல, கருத்துக்களலும் ஆனது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அபிப்பிராயங்களின் அடிப்படையில் வரலாறுகள் எழுதப்படுவது ஆபத்தானது.

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *