கதவைத் திற காற்று வரட்டும்

15

கதவைத் திற காற்று வரட்டும்

      உனக்கு ஒரு கேள்வி ; உலகில் மனிதன் எப்படித் தோன்றினான்?

      (அ) குரங்கில் இருந்து தோன்றினான். அந்தப் படிப்படியான மாற்றங் களைக் கடவுள் வழி நடத்தினார். (ஆ) குரங்கில் இருந்துதான் தோன்றினான். ஆனால் கடவுளுக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. (இ) இப்போது இருக்கிற உருவிலேயே கடவுள் மனிதனைப் படைத்தார்.

      இதற்கு அமெரிக்கர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பது பல விதங்களில் முக்கியமானது. ஏன்? விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கிற தேசம் இது. மரவு அணுக்களை நகல் எடுப்பதில் இருந்து சோதனைக் குழாய்க் குழந்தைகள்  வரை பகிரங்கமாக விவாதங்கள் நடக்கிற அறிவுலகம் இது. காபி போடுகிற மிஷினில் இருந்து, கை விரல் வரை பல அற்புதங்களை உருவாக்கிய தேசம் இது. (அதை இவர்களிடமே விற்று காசு பண்ணியவர்கள் ஜப்பான்காரர்கள் என்பது இன்னொரு ‘அற்புதம்!) விஞ்ஞானத்தில், ஏதாவது ஒரு துறையில், அமெரிக்கர்களின் பெயர் இல்லாமல் நோபல் பரிசுப் பட்டியல் இதுவரை ஒரு வருடம்கூட வெளியானதே இல்லை.

      இன்னொரு புறம், கடவுள் மனிதனைப் படைத்தார் ; “உண்டாகக் கடவது ஒளிஎன்று ஒளியை, கடலை, மலையை, உயிரினங்களைப் படைத்தார், பின்பு ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது அவர்கள் மதத்தின் ஆதாரமான நம்பிக்கை.

      டார்வின் சித்தாந்தம் ஒரு முனை; விவிலியத்தின் வேத வாசகம் இன்னொரு மனை. இந்த எதிர் துருவங்களுக்கு இடையில் எதை நோக்கி அமெரிக்கர்கள் செல்கிறார்கள்? போன வருடம் (1993) ஜுன் மாதம் ஒரு கருத்துக் கணிப்பு நடந்தது. அதன்படி 47 சதவீதம் அமெரிக்கர்கள், கடவுள் மனிதனைப் படைத்தார் என்று நம்புகிறார்கள். பத்து வருடத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 44 சதவீதமாக இருந்தது. குரங்கு மனிதனாக வளர்ச்சி காண கடவுள் வழிகாட்டினார் என்பது 35 சதவீத மக்களின் கருத்து. டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்கு விழுந்த ஓட்டு பதினொரு சதவீதம்தான். எனக்குத் தெரியாது, ஆளை விடுங்க சாமி என்பவர்கள் ஒன்பது சதவீதம். சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கர்கள் டார்வினைவிட பைபிளை நம்புகிறார்கள்.

      இது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதைவிட ஆச்சரியம் பைபிளை நம்புகிற தேசத்தில் பள்ளிக்கூடத்தில் பிரார்த்தனை கிடையாது! பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் நேற்று சட்டமன்றத்தில் தோற்றுப் போயிற்று. பின்னணி இதுதான் : இங்கு பள்ளிக்கூடங்களில், பிரார்த்தனை என்பது கிடையாது. அதாவது நம்மூர் பள்ளிகளைப் போல, காலையில் எல்லா மாணவர்களும் ஒன்று கூடி, “பொன்னார் மேனியனேஎன்றோ, “பரமண்டலத்தில் இருக்கும் பரமபிதாவேஎன்றோ, “அல்லாஹு அக்பர்என்றோ கடவுளை அழைத்து, அல்லது நினைத்து வணங்கிவிட்டுப் பாடத்தை ஆரம்பிப்பது கிடையாது. ஆரம்பிக்க முடியாது. காரணம், அமெரிக்காவின் அரசியல் சட்டம். அதன் முதல் திருத்தம் அரசாங்கம் வேறு, மதம் வேறு என்று தெள்ளத் தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறது.

      ஐரோப்பாவில் மன்னராட்சிக் காலங்களில் ஆட்சியமைப்பின் ஒரு அங்கமாக மதம் இருந்ததும், பின்னர் மதத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே நடந்த மோதல்களையும் (Religion Vs State) அதன் விளைவுகளையும் பற்றி நமக்கு வரலாறு, பக்கம் பக்கமாகச் சொல்கிறது. வரலாற்றைப் புரட்ட அலுப்பாக இருந்தால், அது தந்த கதைகளைப் படிக்கலாம். (பெக்கெட் என்ற நாவலை நான் சிபாரிசு செய்கிறேன். அது, அதே பெயரில், ரிச்சர்ட் பர்ட்டன், பீடர் ஓடூல் நடித்து சினிமாவாகக்கூட வந்தது : என்றைக்காவது, ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் நேரக் காட்சியாக, ஒரு ‘மழை பெய்கிற’ “புதியகாப்பி திரையிடப்படலாம். பார்க்கத் தவறாதே. ஒரு வேளை விடியோவாகக்கூட அது இப்போது கிடைக்கலாம்)

      வரலாறு சொல்லும் அந்தப் பாடங்களை அமெரிக்கர்கள் மறக்க வில்லை. அரசியல் சட்டத்திற்குப் பிள்ளையார் சுழி போடும்போதே, அதன் முதல் பிரிவாக மதம் கலவாத அரசு (State free from Religion) என்று வரையறுத்துக் கொண்டு விட்டார்கள்.

      என்றாலும் கடந்த சில வருடங்களாக, பள்ளிக் கூடங்களில் பிரார்த்தனையைக் கொண்டு வருவது என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சித்து வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து தோல்வி கண்டு வருகிறார்கள்.

      இன்ன கடவுள் என்று பெயரிட்டுப் பிரார்த்தனை செய்யாமல், பொதுவாக “பெரிய கடவுள் காக்க வேண்டும்என்றோ “எல்லாம் வல்ல பரம்பொருளைவேண்டியோ,அல்லது “இயற்கையை வாழ்த்தியோபிரார்த்தனை வாசகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்று கேட்டுப் பார்த்தார்கள். பதில்; நோ. பிரார்த்தனை என்ற வார்த்தை வேண்டாம், துதி, வந்தனம், (Invocation) என்று வைத்துக் கொள்ளலாம் ; ம்ஹும். பிரார்த்தனை இருக்கட்டும், ஆனால் அதில் கலந்துகொள்ள வேண்டியது கட்டாயம் இல்லை என்று அறிவித்து விடலாம் ; மறுபடியும்நோ. பிரார்த்தனையைப் பற்றி அரசாங்கம் தீர்மானிக்க வேண்டாம். பள்ளிகளை நிர்வகித்துவரும், உள்ளூராட்சிகளுக்குப் பொறுப்பான ஸ்கூல் போர்டுகள் தீர்மானிக்கட்டும் ; மன்னிக்கவும் அது முடியாது. பெரும்பான்மை மாணவர்கள் விரும்பினால் பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாமா? யோசிக்கலாம் என்று சட்டப்பேரவை (ஹவுஸ்) சொன்னது. அந்தச் பேச்சையே எடுக்காதீர்கள் என்று மேலவை (செனட்) ஒரே போடாகப் போட்டுவிட்டது தீர்மானம் தோற்றுப்போயிற்று. இப்படி இது தோற்றுப் போவது பதினான்காவது முறை. புளோரிடா போன்ற மத நம்பிக்கை வேரூன்றிய மாநிலத்தின் சட்டமன்றத்திலேயே இந்த நிலைமை.

      ஏன் இந்த முரண்பாடு? “இதில் முரண்பாடு எங்கே இருக்கிறது? மதம் தொடர்பான உரிமைகள் என்பது, பெரும்பான்மை தீர்மானிக்கிற விஷயமல்ல. அது அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற உறுதிமொழிஎன்று சொன்னார், ராபர்ட் வெக்ஸ்கியர் என்ற செனட்டர்.

      “ஊரெங்கும் பல சர்ச்சுகள் இருக்கின்றன. யாராவது பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நினைத்தால், தாராளமாக அவர்கள் அங்கே போய் வழிபாடு நடத்தலாம். தடையில்லை. ஆனால் அதைப் பள்ளிக்கூடம் போன்ற இடத்தில், திட்டமிட்டு நடத்துவது என்பது வேறு விஷயம் இல்லையா?என்று விளக்கினார் வில்லியம் டர்னர் என்ற இன்னொரு செனட்டர்.

      பிரார்த்தனையை வலியுறுத்தும் செனட்டர்கள் சொல்வதெல்லாம் ஒன்று தான்; “ பள்ளிகளில் பிரார்த்தனையைக் கொண்டுவருவது கட்டுப்பாட்டைக் கொண்டுவரும். இன்று தேசம் சந்தித்து வருகிற பல பிரச்சினைகள், தானே தீர்ந்துபோகும்.

      அரசியல்வாதிகள் சொல்வது இருக்கட்டும், கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? ரிச்சர்ட் ரென்னர் என்று ஒரு புரபசர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியர். அவர் சொன்னார்; “தான் விரும்பியவண்ணம் ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ வளர்வதற்கு ஒரு குழந்தைக்கு உரிமை இருக்கிறது. பள்ளிக்கூடம் போன்ற ஒரு அமைப்பில், பிரார்த்தனை என்பதை ஒரு விதியாக, ஒரு வழக்கமாக ஏற்படுத்தும்போது அது அவனுடைய அந்த உரிமையைப் பறிப்பது ஆகாதா?

            இதில் ஒரு முக்கியமான விஷயம், ரென்னர் நாத்திகர் அல்ல. அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு.

      ரென்னருடன் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. இந்தியாவில் இருந்தபோது, பேராசிரியர் நன்னனை ஒரு முறை பேட்டி காணப் போயிருந்தேன். நீதிநெறிகளைப் போதிக்கிற அறநூல்களைப் பற்றி பேச்சு வந்தது. நான் கேட்டேன் ; “திருக்குறளுக்கு வயது 2000 ஆண்டுகள் என்று சொகிறீர்கள். அதற்குப் பிறகு, கொன்றைவேந்தன், நாலடியார் என்று வேறு பல அறநூல்களும் பல நூறு வருடங்களாக இருந்துவருகின்றன. கள்ளுண்ணாமை, பிறன்மனை நோக்காமை போன்று திருக்குறள் வற்புறுத்திய நெறிகளை மக்கள் பின்பற்றாமல் போனதால் அந்த நெறிகளை அவர்களுக்கு உபதேசமாக எடுத்துச் சொல்லாமல், கதையாகச் சொல்லலாம் என்பதற்குத்தான் கம்பன் ராமாயணத்தை எழுதினான் என்று பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் ஒரு நூலே எழுதியிருக்கிறார். ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று பக்தி இலக்கியம் எழுதியவர்கள், ஆணவம் என்பது பிணி, மலம், தான் என்ற அகந்தையைக் கிள்ளி எறிவதுதான் நல்லது, ஆண்டவனிடம் முற்றாகச் சரணடைந்துவிடுவதுதான் மோட்சத்திற்கு வழி என்றெல்லாம் பன்னிப்பன்னி பலமுறை வலியுறுத்துகிறார்கள். குத்துமதிப்பாகக் கணக்குப் போட்டால், ஒழுக்கம் என்பதற்கான பிரசாரம், தமிழ்நாட்டில் குறைந்தது ஒரு ஆயிரம் வருஷங்களாக நடக்கிறது. லட்சக்கணக்கான வார்த்தைகள் எழுதப்பட்டுவிட்டன. அப்படியிருந்தும், இத்தனை வருஷங்களுக்கும், வார்த்தைகளுக்கும் பிறகும் தமிழ்நாட்டில் கொலை, களவு, காமம், சூது, குடி என்ற எல்லாம் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆணவம் இல்லாத அரசியல்வாதிகளைப் பார்க்க முடிவதில்லை. அரசியல்வாதிகளை விடுங்கள். ஆணவம் இல்லாத மடாதிபதிகளைப் பார்க்க முடிவதில்லை. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? அறநூல்கள் தோற்றுவிட்டனவா?’‘

            நீண்ட கேள்வி. ஆனால் நன்னன் அவரது குழந்தை போன்ற சிரிப்பு மாறாமல் சுருக்கமாகச் சொன்னார்; “இப்போது பத்துக்கு இரண்டு பேர் திருடனாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த அறநூல்கள் இல்லாது போயிருந்தால் பத்துக்கு ஒன்பது பேர் திருடனாக  ஆகியிருந்திருக்கக்கூடும்.நன்னன் ஆத்திகர் அல்ல. அவருக்குக் கடவுள் நமபிக்கை கிடையாது.

      ரென்னர், நன்னன் இரண்டு பேர் சொன்னதின் சாராம்சமும் இதுதான்; ஒழுக்கம் என்பது வேறு ; இறை நம்பிக்கை என்பது வேறு, இறை நம்பிக்கை இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால்  அதற்கு அர்த்தம் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் “கெட்டுப் போவார்கள்என்பது அல்ல.

      வேறு விதமாகச் சொன்னால், கடவுளை நம்புவதா வேண்டாமா என்பது ஒரு தனி மனிதன் தன்னளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய முடிவு. அவன் சார்பில் அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவு அல்ல.

      அமெரிக்காவின் ஐந்து சதம் நாணயத்தில் “In God We trust|| என்று ஒரு வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் பொருள் ; “நாங்கள் கடவுளை நம்புகிறோம்”. அதன் இன்னொரு விளிம்பில், ‘Liberty’ என்று இன்னொரு வாசகம். அதற்கு அர்த்தம் சுதந்திரம். இந்த இரண்டையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல அதன் மக்கள் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களது திறந்த மனம்.

      இந்தத் திறந்த மனம் அவர்களது பெரிய பொக்கிஷம் என்று நான் நம்புகிறேன். அவர்களது இன்னொரு பெரிய செல்வம் தேடல் (Quest). அமெரிக்காவின் பெருமை, உலகின் உயர்ந்த கட்டடம் என்று பெருமை அடித்துக் கொண்டு நியூயார்க்கில் நிற்கிறதே எம்பயர் ஸ்டேட் பில்டிங், அதுவல்ல. பென்சிலைச் சீவி நிறுத்தினார்போல் வாஷிங்டனில் நிற்கிற நினைவு ஸ்தூபி அல்ல. ‘ஸ்ட்ரக்சுரல் மார்வல்என்று பொறியியல் நிபுணர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி ஆர்லாண்டோவில் எழுந்து நிற்கிறதே ஓர் உலோகக் கோளம் அதுவல்ல. அவர்கள் சந்திரனுக்குப் போனதோ, அல்லது எங்கும் போகாமல், உங்களை உட்கார்ந்த நாற்காலியிலேயே கட்டிப்போட்டு, விண்வெளியில் தலை தெறிக்கிற வேகத்தில் பறப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்களே, அந்த எலக்ட்ரானிக் அற்புதங்களோ அல்ல.

      மக்கள், அவர்கள்தான் அந்த தேசத்தின் பெரிய செல்வம். அதிசயம் அத்தனைக்கும் ஆதாரம். இது என்ன, அது என்ன, இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு, அந்த பிரச்சினைக்கு எது ஆரம்பம், இது மாற்றா, அல்லாது ஏமாற்றா, முன்னேற்றத்தை நோக்கி முதலடி வைக்கிறோமா என்று இடைவிடாத தேடல். கூடவே, இதற்கு பதில் இந்து வேதாந்தத்தில் இருக்கிறதாமே, படித்துப் பார்க்கலாம் ; இஸ்லாமியச் சட்டங்களில் இருக்கிறதென்றால் அதை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது, இதன் திரவுகோல் சீனாக்காரனிடம் இருக்கிறதா கூப்பிடு அவனை, இந்த வேலையைச் செய்ய ஜப்பான்காரன்தான் சரி என்று தோன்றுகிறதா, அவனை அழைத்து வா, நாம் பின்பற்றி வருகிற முறையை விட ஆங்கிலேயன் வகுத்து உலகிற்கு அளித்திருக்கிற அமைப்புதான் சரியா, அதை ஏன் பரீட்சித்துப் பார்க்கக்கூடாது என்று ஒரு திறந்த மனம். இதுதான் இந்தத் தேசத்தின் பலம்.

      சென்னைக்கு வந்து, கிருஷ்ணமாச்சாரியாரிடம் யோகம் பயின்று, அதை ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் ஒருவன் “ஐயங்கார் யோகாஎன்று பத்துப் பேருக்குச் சொல்லிக் கொடுப்பான். இன்னொரு புறம் காசு கேட்காமல், கடவுளை விற்காமல், தினந்தோறும் சாம்பார் சாதமும், ரவா கேசரியும் வருகிறவர்களுக்கெல்லாம் தட்டில் வாரி வாரி வைக்கும் ஹரே கிருஷ்ணாக்கள். காவி நிற ஜிப்பா, பஞ்சக்கச்சம், உச்சிக் குடுமி, டோலக் ஜால்ரா, ஆர்மோனியத்துடன் நூலகத்திற்கு முன் உள்ள பச்சைப் புல் வெளியில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று பாடி நடனமிடும் அந்த வெள்ளைக் தோல் அமெரிக்கர்கள். என் வீட்டிற்கு எதிர் வீட்டில், இரண்டு நாளாக ஒரு போர்டு தொங்குகிறது ; மகரிஷி மகேஷ் யோகி சென்டர். நான் கதவைத் தட்டி, எங்கிருந்து புதிதாக முளைத்தீர்கள் என்று கேட்டேன். அந்த அம்மாள், ஐம்பது வயதிருக்கும், அமெரிக்கப் பெண்மணி. 25 வருஷமாக காலை மாலை இரண்டு வேளையும் தியானம் செய்து வருகிறார்களாம். ஒரு விஷயத்தை முழுதாகத் தெரிந்து கொள்ளாமல், இன்னொருவருக்கு உபதேசிக்கக்கூடாது என்று நினைத்தேன். அதற்குப்பிறகு. நாம் கற்றுக் கொண்டது நமக்குப் பலன் தருகிறதா என்று பரீட்சித்துப் பார்த்துக் கொண்டேன். அதிலேயே 25 வருஷம் போய்விட்டது. இனிமேல் சொல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றியதுஎன்றார்கள் சாவதானமாக. ஏதோ இந்தியாதான் கொடி கட்டிப் பறக்கிறது என்று நினைக்க வேண்டாம். சைனாக் காரனிடமிருந்து அவனது யோகமான, டை – சீ – சுவானை ஒருவன் கற்றுக் கொண்டு வந்து இங்கே கடை விரிப்பான். அங்கே ஒரு பத்து அமெரிக்கர்கள் இருப்பார்கள். ரிக்ஷர்க்கி ஒன்று ஒரு எகிப்திய நடனம். அங்கே ஒரு பத்துப்பேர். இத்தனையும் இவை உடம்பு பற்றிய விஷயம் என்பதால் அல்ல. விஞ்ஞானத்திலும் அப்படித்தான். வியாபாரம் பற்றிய படிப்பா? அதில் அப்படித்தான். பத்திரிகைத் துறையா, அப்படித்தான். பக்தி இலக்கியமா அப்படித்தான். சங்கீதம், நடனம், சித்திரம் எல்லாவற்றிலும் இந்தத் தேடல், இந்தத் திறந்த மனம்.

      இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு பிரமிப்பாக இருக்கும். இங்கிருந்து  இதை வாரிக் கொண்டு போய் இந்தியாவில் இறக்கி வைத்து விட முடியாதா என்று தவிப்பாக இருக்கும். எங்கேயிருந்தடா உங்களுக்கு இப்படி ஒரு மனசு வாய்த்தது என்று சில சமயம் பொறாமையாக இருக்கும். இந்தத் தேடுகிற புத்தியும், திறந்து வைத்த மனசும் என்றைக்கு என் தேசத்திற்குக் கிடைக்கும் என்று ஏக்கமாக இருக்கும்.

      நம் ஜன்னல்களை நாம் என்றைக்குத்தான் திறக்கப் போகிறோம்?

 

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *