விளையாட்டல்ல

13

விளையாட்டல்ல

     

      நான் இங்கு வந்து இறங்கி இரண்டு வாரம் ஆகியிருக்கும். எனது தெரு முனையில், 10 அடிக்கு 12 அடி சைசில் பிரம்மாண்டமாக ஒரு பேனர் ‘ Scalp the Indians ’  அதாவது ‘இந்தியர்களின் தலையை வாங்கித் தோலைச் சீவு ! என்று உற்சாகமாகக் கூசிக் கொண்டிருந்தது.

      அமெரிக்காவில் இந்தியன் என்று சொன்னால், பொதுவாக அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியும். அதுவும் தவிர அமெரிக்கா லண்டன் அல்ல ; ஜெர்மனி அல்ல ; இந்தியர்கள்பால் இனத் துவேஷம் காட்டுவதற்கு. அதனால் இந்த பேனரைப் பார்த்ததும் எனக்கு பயம் எதுவும் ஏற்படவில்லை.

      ஆனால், ஒரு ஆர்வக் குறுகுறுப்பு. எதற்காக இந்தியர்களின் தலையை வாங்கித் தோலைச் சீவ வேண்டும்? ஏதாவது போருக்குப் போய் வெற்றி கண்டால், எதிரியின் தலையை வாங்கி ‘வெற்றிச் சின்னமாகதோலை உரித்து எடுத்துக் கொண்டு வருவது சிவப்பிந்தியர்களின் ‘வீரவரலாறு என்று நான் படித்திருக்கிறேன். ஆனால், அது அந்தக் காலம். இன்று இவர்கள் இந்தியர்களின் தலையை அல்லவா வாங்கச் சொல்கிறார்கள்? ஏதாவது பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் சமாசாரமா?

      அந்த வார இறுதியில், அதற்கு விடை கிடைத்தது. பாடப் புத்தகத்தில் அல்ல. பல்கலைக் கழக விளையாட்டு மைதானத்தில் ‘இந்தியர்கள்என்பது ஒரு கால்பந்து அணியின் பெயர். அவர்களோடு எங்கள் பல்கலைக்கழக அணி ‘மோதுகிறது’. இந்தத் தலையை வாங்குகிற கூவல், எங்கள் அணியை உற்சாகப்படுத்த.

      கால்பந்தாட்டம் என்றால் ஏதோ அதை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். முதலில் அது நம்மூரைப் போல ஒரு உருண்டையான பந்தைக் காலால் உதைத்து ‘கோல்போடுகிற விளையாட்டல்ல, அதற்கு இங்கு ‘சாக்கர்என்று பெயர். அது இங்கு அவ்வளவு பிரபலமல்ல.

      இங்கு ஃபுட்பால் என்று அழைக்கப்படும் விளையாட்டு, ஒரு முரட்டு விளையாட்டு. கொஞ்சம் கபடி. கொஞ்சம் ஓட்டப் பந்தயம், கொஞ்சம் கால்பந்து எல்லாம் சேர்ந்த கலவை அது. நீள்வட்டமான (elliptical) ஒரு பந்தை ஒரு கோஷ்டி, எதிர் முனைக்கு எடுத்துச் சென்று அங்கு ‘பவடிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘கோலுக்குள்போட வேண்டும். நம்மூரில் கால்பந்தாட்டத்தின்போது பந்தைக் கையால் தொட்டால் (கோலியைத் தவிர) அது – ஃபௌல் – தப்பாட்டம். இங்கு பந்தைக் கையால் எடுத்துக் கொண்டுதான் ஓட வேண்டும். இது கையால் ஆடும் கால்பந்து ! நீங்கள் எதிர்முனைக்கு பந்தை எடுத்துக் கொண்டு போய்விடாமல் எதிர் கோஷ்டி தடுக்கும். அதாவது, கபடி மாதிரி மேலே பாய்ந்து, கீழே தள்ளி, எழுந்திருக்க விடாமல் அமுக்கி, காலை வாரி.

      போருக்குப் போவது மாதிரிதான் முன்னேற்பாடுகளும் நடக்கும். ஒரு அணியில் 100 பேர் இருப்பார்கள். களத்தில் 11 பேர். அணியைச் சார்ந்த ஒருவர் வேளியேறும்போது மற்றொருவர் உள்ளே இறங்கி அவரது இடத்தில் ஆடுவார். எல்லோரும் தோள், புஜம், மார்பு, தொடை, முதுகு எல்லா இடங்களிலும் ஃபோமினால் ஆன கவசம் அணிந்திருப்பார்கள். தலைகவசம் கட்டாயம். ஒவ்வொருவரும் மல்யுத்த வீரர்களைப் போல, ஒரு 300 பவுண்டு எடை, ஆறடி உயரம் என்று ஆஜானுபாகுவாக இருப்பார்கள்.

      எதிரியின் மேல் பொத் பொத்தென்று ஒரே சமயம் ஐந்தாறு பேர் விழுவார்கள். நமக்கு அந்த ஆள் சட்னிதான் என்று தோன்றும்.

‘விளையாட்டு மட்டுமல்ல, அணிகளின் பெயரும் அந்த முரட்டுத் தனத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி இருக்கும். வேட்டை நாய், புலிகள், யானை, காட்டுப்பன்றி, இப்படி. இந்த முரட்டு விளையாட்டை முப்பதாயிரம், நாற்பதாயிரம் மக்கள் நின்று பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் 20,25 ஆயிரம் பேர் வந்து நின்று, “விடாதே ! அமுக்கு அவனைஎன்று கூச்சல் போடுவதைக் கேட்கும்போது மயிர் கூச்செறியும். அடி வயிறு கலங்கும்.

      உள்ளூர் போட்டிகளுக்கே இந்த ஜுரம். தேசிய அளவில் சாம்பியன்ஷிப் நடக்கும்போது அதற்குப்பெயர் சூப்பர் பௌல் – நாடு முழுக்கத் திருவிழாதான். டிக்கெட் கிடைப்பதற்குப் பெருந்தவம் செய்ய வேண்டும். அப்போதும்கூட நிச்சயமில்லை. நுழைவுக் கட்டணம் நூற்றுக்கணக்கான டாலர்கள். நேரில் போக முடியாதவர்கள் டி.வி. முன் ஆஜராகிவிடுவார்கள், ஆளுக்கொரு பீர் புட்டி, நொறுக்குத்தீனி சகிதம். இதற்கு விதிவிலக்குகள் கிடையாது. ஜனாதிபதி கிளிண்டனில் இருந்து, சாதாரண குடிமகன் வரை, வைத்த கண் வாங்காமல் போட்டியைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சூப்பர் பௌலின்போது, ஜனாதிபதி, டி.வியில் போட்டியைப் பார்ப்பதை டி.வி.யிலேயே காட்டினார்கள்.

      கால்பந்தாட்டத்திற்குத்தான் என்றில்லை, விளையாட்டுகளுக்கே அமெரிக்காவில் சிறப்பான இடம் உண்டு. உறைபனிக் காலம் முடிந்த பிறகு ஏப்ரல் மாதம் வசந்தகாலம் துவங்கும். அப்போது உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பேஸ் பால் தடிகள் வெளியே வரும். பேஸ் பால் அமெரிக்காவின் தேசிய விளையாட்டு. கிட்டத்தட்ட கிரிக்கெட் மாதிரிதான். கிரிக்கெட்டில் மட்டை. இங்கே தடி. கிரிக்கெட்டில் ஓடி வந்து கையைச் சுழற்றி பந்து வீசுவோம் ; இது நின்ற இடத்தில் இருந்தே (வேகம் வேண்டும் என்பதற்காக உடலை வளைத்து) வீசுகிற விளையாட்டு, கிரிக்கெட்டில் ஒரு முனைகள் (விக்கெட்). இங்கே நான்கு ‘வீடுகள்’. இப்படிச் சின்ன வித்தியாசங்கள். மற்றபடி ஒன்றுக்கொன்று சித்தப்பாபிள்ளை – பெரியப்பா பிள்ளைதான்.

      ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, பேஸ்பால் சீசன் துவங்கியது. (இயற்கையின் பருவ காலங்களைப் போல இங்கே விளையாட்டிற்கும் பருவ காலங்கள் உண்டு. இலையுதிர் காலத்தில் புட்பால். பனிகாலத்தில் பேஸ்கட் பால். வசந்தம் வந்தால் பேஸ் பால்) சீசனைத் துவக்கி வைத்தவர், மாண்புமிகு கிளிண்டன். துவக்கி வைப்பது என்றால், ஏதோ விளையாட்டு வீரர்களுக்குக் கைகொடுத்து, கூட்டத்தைப் பார்த்துக் கும்பிடு போட்டுவிட்டு, நிழலில் போய் உட்கார்ந்து விடுவதல்ல. ‘இந்தியன்என்று எழுதப்பட்ட நீலமும், சிவப்பும் கலந்த பிளேசர் (மேல் சட்டை) மாட்டிக் கொண்டு, தொப்பி போட்டுக் கொண்டு வந்தார் ஜனாதிபதி. முதலில் பந்த விசினார். (கிளிண்டன் இடது கைப் பழக்கமுள்ளவர்) அப்புறம் கொஞ்ச நேரம், தடி பிடித்து, ‘ஓசி காஜிஅடித்தார். கிளிண்டனின் வீச்சுகள் பிரமாதமாக இருந்தன என்று சொல்வதற்கில்லை. ஒரு வீச்சின்போது பந்து அறுபதடி ஆறு அங்குலம் போயிற்று. ஆனால், போன வருடம் புஷ் வந்து ஆடினதைவிட இது பரவாயில்லை. புஷ் ஆடியபோது, பந்து இருந்த இடத்தைவிட்டு நகரமாட்டேன் என்றது. “அண்ணே, இது பேஸ் பால், கால்ஃப் இல்லைஎன்று அப்போது பத்திரிகைகள் கிண்டலடித்தன.

      வசந்த காலத்தில், ஜனாதிபதி வந்து பேஸ் பால் சீசனைத் துவக்கிவைப்பது என்பது ஒரு மரபு. இப்போதுதான் அமெரிக்காவிற்கு இரண்டு ஜனாதிபதி களாயிற்றே! கிளிண்டன் கிளீவ்லாண்டில் போட்டியைத் துவக்கிவைத்த அதெ நேரத்தில், திருமதி கிளிண்டன், சிகாகோவில் இதே மாதிரி தொப்பியெல்லாம் மாட்டிக்கொண்டு வந்து, பந்து வீசி சீசனைத் துவக்கி வைத்தார்.

      விளையாட்டு விஷயத்தில் மீடியாவும் சளைத்தவை அல்ல. பத்தாயிரம் பிரதி விற்கிற இத்துனூண்டு நாளிதழ்கள் கூட தினம் விளையட்டிற்கு என்று தனிபகுதி வெளியிடுகின்றன. (அமெரிக்காவில் நாளிதழ் என்பது நாற்பது, ஐம்பது பக்கம் இருக்கும். தினமும்) டி.வி. ரேடியோ செய்திகளில், அவற்றிற்கு கணிசமான நேரம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இரண்டு வானொலி நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில், நான் வாரத்திற்கு இரண்டு நாள் ‘செய்திகள்நிகழ்ச்சியைத் தயாரிக்கிறேன். ஒவ்வொன்றும் முப்பது நிமிட நிகழ்ச்சி. முதல் நாளே சொல்லிவிட்டார்கள், பத்து நிமிடம் விளையாட்டுகளுக்கு ஒதுக்கி விடுங்கள் என்று. பல்கலைக் கழக நிகழ்ச்சி என்பதால் இப்படி என்று நினைக்க வேண்டாம். எங்களைவிடச் சிறிய நிலையங்கள் இருக்கின்றன. அவர்களும் அப்படித்தான். ABC போன்ற பெரிய நிலையங்கள் இருக்கின்றன. அவர்களும் அப்படித்தான். டி.வி.யில் விளையாட்டிற்கு என்று தனி சானலே இருக்கிறது. 24 மணி நேரமும் விளையாட்டு நிகழ்ச்சிகள்தான். சுருக்கமாகச் சொன்னால், நம்மூரில் சினிமாவிற்கு கிடைக்கும் வரவேற்பு இங்கு விளையாட்டிற்கு.

      சினிமா மாதிரி நிறைய பணம் புரளும் தொழில் இது. ஆமாம் தொழில்தான். என்ன பிசினஸ் பண்ணுகிறீர்கள் என்று கேட்டால், நம்மூரில், ஸ்பேர் பார்ட் தயாரிக்கிறேன், மருந்து தயாரிக்கிறேன், ரெடிமேட் உடைகள் தயாரிக்கிறேன் என்று சொல்வதைப் போல, இங்கு சிலர் ஒரு புட்பால் டீம் வைத்திருக்கிறேன், பேஸ் பால் டீம் வைத்திருக்கிறேன் என்று சொல்லக்கூடும். விளையாட்டு வீரர்களைப் பெரிய தொகை கொடுத்து – லட்சக்கணக்கான டாலர்கள் – முழு நேர ‘ஊழியர்களாக வேலைக்கு அமர்த்தி, ஒரு கோச்சை நியமித்துப் போட்டிகளுக்குப் போவதற்கென்றே அவர்களைத் தயார் செய்வது.

      சுலபமாகத் தோன்றினாலும் இது எல்லோராலும் செய்யக்கூடிய தொழில் அல்ல. நிறைய முதலீடு வேண்டும். சினிமா நட்சத்திரங்களைப் போல விளையாட்டு உலகின் நட்சத்திரங்கள் – மைக்கல் ஜோர்டன், மேஜிக் ஜான்சன், மைக் டைசன், சாலி, அகாசி, மெக்கன்ரோ – கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பவர்கள். அவர்களை வைத்து வேலை வாங்குவது என்றால், அது யானையைக் கட்டித் தீனி போடுவது போல, விளையாட்டு வீரர்கள் ஆடிச் சம்பாதிப்பதைப் பேசியே சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். சூப்பர் பௌல் போட்டியின்போது – போட்டியே ஒரு மணி நேரம்தான் – டி.வி.வர்ணனையாளர் களுக்குக் கொடுக்கப்பட்ட சன்மானம் 60 ஆயிரம் டாலர்கள் ! ஒரு மணி நேரத்திற்கு 60 ஆயிரம் டாலர் !

      இப்படி வாரி வழங்க எங்கிருந்து பணம் வருகிறது? வர்ணணையாளருக்கு ஒரு மணி நேரத்திற்குக் கொடுக்கப்படும் பணத்தை, போட்டிக்கு ஏற்பாடு செய்பவர்கள் ஒரு நிமிடத்தில் சம்பாதித்து விடுவார்கள். ஆம், டி.வி. விளம்பரங்கள் மூலம்… அதைத் தவிர போட்டிகளின் முத்திரையை டிஷர்ட், ஸ்வெட்டர், தொப்பி, காபிக் கோப்பை. சாவி வளையம் என்று சகல பொருட்களிலும் பயன்படுத்த ஒரு கணிசமான தொகை, போட்டியின்போது நுழைவுக்கட்டணம், அரங்கில் வைக்கப்படும் விளம்பரங்கள் என்று பலவிதங்களில் பணம் புரள்கிறது.

      நிமிடத்திற்கு 60 ஆயிரம் டாலர் என்பது ஒரு வகையில் பெரிய தொகையே அல்ல, தேசம் முழுக்க உட்கார்ந்து டி.வி.பார்க்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, வேறு மீடியாவில் இத்தனை கோடிப் பேரை ஒரு விளம்பரம் சென்றடைய இதைவிடப் பலமடங்கு பணமும், ஒரு வருடமும் ஆகும். அப்படிப் பார்த்தால், இது கொள்ளை மலிவு அல்லது மலிவான கொள்ளை.

      அதனால், விளம்பரங்கள் வந்து குவிகின்றன. இதற்கென்றே ஸ்பெஷலாக விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த முறை எல்லோர் கவனத்தையும் கவர்ந்த விளம்பரம், உருளைக்கிழங்கு வறுவலுக்கானது. அதில் ‘நடித்தவர்முன்னாள் துணை ஜனாதிபதி டான் குவில். அமெரிக்காவில் அவர் பெயர் உருளைக்கிழங்கோடு பின்னிப் பிணைந்தது. அவர் துணை ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு பள்ளிக்கூடத்திற்கு விஜயம் செய்தார். ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனை அழைத்து உருளைக்கிழங்கிற்கு, அதாவது ‘பொட்டாட்டோவிற்கு என்ன ஸ்பெல்லிங் என்று கேட்டார். மாணவன் விழித்தான். ஐந்தாம் கிளாஸ் பையனுக்கு இது தெரியவில்லையே என்று கடிந்துகொண்டு விட்டு P-O-T-A-T-O-E  என்று சொல்லிக் கொடுத்தார். அருகில் இருந்தவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். (காரணம், பொட்டாட்டோவிற்கு சரியான சரியான ஸ்பெல்லிங் P-O-T-A-T-O. உருளைக்கிழங்குகள் என்று அதைப் பன்மையில் எழுதும்போது es சேர்த்து POTATOES என்று எழுதுவதுண்டு. துணை ஜனாதிபதி ‘S’ ஐ மட்டும் நீக்கிவிட்டு, Potatoe ஆக்கிவிட்டார்.) உருளைக்கிழங்கிற்கு ஸ்பெல்லிங், ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு மட்டுமல்ல, துணை ஜனாதிபதிக்கே தெரியவில்லை !

      இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரது பெயரைச் சொன்னாலே, எல்லோருக்கும் உருளைக்கிழங்கு ஞாபகம் தானாகவே வரும். இதை இந்த வருட சூப்பர் பௌலின் போது தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் கம்பெனி. இப்போது டான்குவில் பெயரைச் சொன்னால், உருளைக்கிழங்கு அல்ல, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஞாபகம் வருகிறது.

      பணம் சுரக்கும் காமதேனுவாக, விளையாட்டுக்கள் மாறிவிட்டதால், பல்கலைக்கழகங்கள் அவற்றிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றன. கோடை விடுமுறையிலும் இங்கு பல்கலைக்கழகங்கள் வகுப்புகள் நடத்தும். ஆனால் அவற்றில் மாணவர்கள் அதிகம் சேர மாட்டார்கள். அடுத்த வருடம் பல்கலைக்கழகத்திற்குக் கட்ட வேண்டிய பணத்தை சம்பாதிக்க உழைத்துக் கொண்டிருப்பார்கள். மாணவர்கள் வரவில்லை என்றால், வருமானம் ஏது? அதனால் கோடை விடுமுறை வகுப்புகளினால் – Summer School – பல்கலைக் கழகத்திற்கு நஷ்டம்தான்.

      ஒருமுறை, ஒரு பல்கலைக்கழகத்தில், சம்மர் ஸ்கூல் நடத்த போதிய பணம் இல்லை. பல்கலைக்கழகத் தலைவர், துறைத்தலைவர்களை அழைத்து விவாதிக்கவில்லை. அதற்குப் பதில், விளையாட்டுகளுக்கான கோச்களை அழைத்துப் பேசினார் !

      கடந்த வருடம் எங்கள் பல்கலைக்கழகம் நுழைவுக் கட்டணமாக அறுபது ஆயிரம் டாலர்களும், முத்திரைப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததன்மூலம் 14 ஆயிரம் டாலரும், டி.வி. நிகழ்ச்சிக் கட்டணத்தின் மூலம் பத்து லட்சம் (ஒரு மில்லியன்) டாலரும், ஆக மொத்தமாக விளையாட்டின் மூலம் சுமார் பத்து லட்சத்து எழுபத்தைந்தாயிரம் டாலர்கள் சம்பாதித்தது. இந்த வருடம் இந்தத் தொகை இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில், இந்த வருடம், நாங்கள் கால்பந்து, கூடைப்பந்து இரண்டிலுமே தென்பிராந்திய சாம்பியன்கள். எனவே எங்கள் முத்திரை அதிகம் விற்பனை ஆகும் !

      பணம் வந்து கொட்டுவதற்கான ஒரு முக்கிய பாதையாக விளையாட்டு இருப்பதால், ஒரு சங்கடமும் உண்டு. பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள், தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார்கள். நெபராஸ்கா பல்கலைக்கழக கால்பந்து வீரர் ஒருவர், சக மாணவர் ஒருவரது காரைப் பார்த்து சரமாரியாகச் சுட்டார் என்று ஒரு செய்தி. நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக வீரர் ஒருவர், நடுராத்திரியில், பெண்கள் விடுதிக்குள் நுழைந்து, அவர்கள் தூங்கும் அழகைப் பார்த்து ரசித்தார் என்று ஒரு புகார். சூபர்ன் பல்கலைக்கழகம், நாட்டர்டாம் பல்கலைக்கழகம் இங்கேயும் சில குற்றச்சாட்டுகள், எங்கள் மாணவர் ஒருவர் போலீஸ்காரருடன் மோதியபோது, உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகம் தயங்கியது.

      பணம் வரும் விளையாட்டுகளில்தான் பல்கலைக்கழகங்கள் கவனம் செலுத்துகின்றன. மற்ற விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றன என்று ஒரு குற்றச்சாட்டு. இந்த ‘மற்ற விளையாட்டுகள்பெண்களின்  விளையாட்டுகளாக அமைந்து விட்டதால், பிரச்சினை முற்றுகிறது. உதாரணமாக முழுக்க முழுக்க ஆண்களே விளையாடும் விளையாட்டான கால்பந்தில், லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் முழுக்க முழுக்க பெண்களே ஆடும் சாப்ட் பால் எனப்படும் கைப்பந்தில் கவனம் செலுத்தப்படவே இல்லை என்பது பெண்நிலைவாதிகளின் கருத்து. இந்த நிலையை மாற்ற அவர்கள் கோர்ட்டுக்குப் போகத் தீர்மானித்திருக்கிறார்கள். கோர்ட்டுக்கு போனால், அவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஏனெனில், விளையாட்டுக்குக்கூட ஆண்- பெண் பேதம் காட்டக்கூடாது என்று சொல்கிறது அரசியல் சட்டம்.

      சட்டத்தின் கருத்தும், சமூகத்தின் நினைப்பும் ஒத்துப்போவதில்லை என்பதில்தான் சிக்கல். 1973-ம் வருடம் என்று நினைக்கிறேன். பாபி ரிக்ஸ் என்ற முன்னாள் விம்பிள்டன் சாம்பியன், விளையாட்டு விஷயத்தில், பெண்கள் ஆண்களைவிட மட்டம்தான், திறமை குறைந்தவர்கள்தான், ஆனால் அவர்களுக்கு ‘எப்படியோபணமும் புகழும் கிடைத்து விடுகின்றன என்று ஒரு குற்றச்சாட்டை வீசினார். தன்னுடைய தரப்பை நிரூபிப்பதற்கு ஒரு சவாலும் விடுத்தார். அது: இந்த வயதிலும் தன்னால், பெண் டென்னிஸ் வீரர்களைத் தோற்கடித்துக் காட்ட முடியும். அவருக்கு அப்போது வயது 55. மே முதல் வாரம் மார்க்கரேட் கோர்ட்டும் அவரும் மோதினார்கள். பாபி ஜெயித்துவிட்டார். இதைப் பார்த்ததும், அப்போதைய விம்பிள்டன் பெண்கள் சாம்பியன் பில்லி ஜீன் கிங் ரோஷத்துடன் களத்தில் இறங்கினார். 36 தேசங்களில் டி.வி. முன்பு ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்க, 6-4, 6-3, 6-3  என்ற நேரடி செட்களில், அவர் பாபி ரிக்சைத் தோற்கடித்தார் !

      இது வரலாறு. ஆனால், புதிய வரலாறு இல்லை. கிரேக்க புராணத்தில் அட்லாண்டா என்று ஒரு கதை உண்டு. அட்லாண்டா கிரேக்க நாட்டு இளவரசி. அவளுக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தார் அவளது அப்பா. ஆனால், அவளுக்கோ அதில் விருப்பமில்லை. அரசர் ஒரு ஓட்டப்பந்தயத்தை அறிவித்தார். யார் பந்தயத்தில் ஜெயிக்கிறாரோ அவருக்கு இளவரசியைத் திருமணம் செய்து கொடுப்பதாக அறிவித்தார். போட்டி நடந்தது. வென்றவர், அட்லாண்டா. ஆம், தனது சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, அவரும் ஆண் வேடத்தில் போட்டியில் கலந்து கொண்டார். ஆண்களது பந்தயத்தில் ஆண்களோடு போட்டியிட்டு, ஆண்களையே ஜெயித்துக் காட்டினார், அந்த வீராங்கனை!

      அமெரிக்காவின் பிரம்மாண்டமான விளையாட்டு அரங்குகள், போட்டிகள், அவற்றை வேடிக்கை பார்க்க வருகிற கூட்டம், அவர்களது உற்சாகம், விளையாட்டு வீரர்கள், அவர்களை ஆதரிக்கும் நவீன பிரபுக்கள் இவற்றையெல்லாம் பார்க்கும்போது, கிரேக்க, ரோம புராணங்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாது.

      காலம்தான் மாறியிருக்கிறது. அமைப்போ, ஆட்களோ அல்ல !

 

 

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *