நியாயம்தானா?

11

நியாயம்தானா?

கறாரும் கண்டிப்புமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு ‘மிலிட்டரி’ ‘மேஜர்’, ‘பட்டாளத்துக்காரர்என்றெல்லாம் மாணவர்கள் பட்டப் பெயர் சூட்டுவது நம்மூர் வழக்கம். நிஜமான ராணுவ அதிகாரிகளையே ஆசிரியர்கள் ஆக்கிவிட்டால் ?

அப்படி ஒரு முயற்சி இங்கு நடக்கிறது. ‘பனிப்போர்’ (அதாவது சோவியத் யூனியனுடன் இருந்த ஆதிக்கப் போட்டி) முடிந்துவிட்டதால் இப்போது அமெரிக்க ராணுவத்தில் ஆட்குறைப்பு நடக்கிறது. “மூன்று வருஷத்துக்கு முன்புவரை 7,62,000 பேர் அமெரிக்க ராணுவத்தின் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். இன்னும் சில வருடங்களில் இந்த எண்ணிக்கை 4,00,000 ஆகக் குறைந்துவிடும். இதற்கும் கீழே கூட குறையலாம்என்கிறார் ஜார்ஜ் பெதர்ஸ்டோன் என்ற ராணுவ கர்னல்.

இப்படி பணி முடிந்துவிட்ட முன்னாள் ராணுவத்தினருக்காக ஏதாவது வழி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ஒரு தீர்வு கிடைத்தது. அங்கே பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை. ஆசிரியர்கள் மட்டுமல்ல, பள்ளிக்கூடத்தின் மற்ற பணிகளையும் கவனிக்க ஆள் தட்டுப்பாடு.

ராணுவத்தில் மெக்கானிக்கல் பிரிவில் பணிபுரிந்தவர்களை, ஸ்கூல் பஸ் ஓட்டுநர்களாகப் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று அந்த மாநிலக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. அமெரிக்காவில் ஸ்கூல் பஸ் ஓட்டுநர்களைப் பற்றி எப்போதும் ஒரு மனக்குறை. ‘‘சிறைக்குப் போய் திரும்பிய முன்னாள் கேடிகள் ஸ்கூல் பஸ் ஒட்ட வந்துவிடுகிறார்கள்என்று சிலருக்கு அதிருப்தி. “போதைப் பழக்கம் இருப்பவர்கள் டிரைவர்களாக இருந்து வருகிறார்கள். அவர்கள் குழந்தைகள் கண்ணெதிரிலேயே குடிக்கிறார்கள் ; அவர்களிடமிருந்து போதை மருந்து குழந்தைகளுக்குப் போகிறதுஎன்பது சிலரது புகார்.

இந்தப் புகார்களுக்கும் முணுமுணுப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு வழி தேடிக் கொண்டிருந்த கல்வி அதிகாரிகள் ராணுவ மெக்கானிக்குகளை, பஸ் டிரைவர்களாக பரீட்சார்த்தமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார்கள்.

பரிசோதனை முடிவுகளில் எல்லோருக்கும் திருப்தி. முன்னாள் ராணுவத்தினர் எல்லா வகையிலும் சுத்தமாக இருந்தார்கள். நேரத்திற்கு பஸ்ஸை எடுத்தார்கள். பொறுப்பாக ஓட்டி பத்திரமாகக் குழந்தைகளைக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.

அடுத்த கட்டமாக, ராணுவத்தின் உணவு விடுதியில் (மெஸ்சில்) பணிபுரிந்தவர்களைச் சத்துணவிற்குப் பொறுப்பானவர்களாக நியமித்தார்கள். (அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில் சத்துணவு உண்டு) எல்லாம் கச்சிதமாக நடந்தன.

அப்போதுதான் ராணுவத்தினரை ஆசிரியர்களாக நியமிக்கிற யோசனை உருவானது. மெக்கானிக் தொழில், மெஸ் நிர்வாகம் எல்லாம் ராணுவத்தினர் ராணுவத்தில் செய்து வந்த வேலைகள். அவற்றில் அவருக்கு அனுபவம் உண்டு. ஆனால் ஆசிரியர் தொழில் அப்படியா? அதற்கு பயிற்சி வேண்டாமா? அந்தமாதிரி ‘சாதுவான ஒரு வேலையைச் செய்ய ராணுவத்தினருக்கு விருப்பம் இருக்குமா? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன.

உலகமே இருண்டு போய்விட்டது என்று புலம்பிக் கொண்டு இருப்பதைவிட ஒரு சின்ன மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உருப்படியான காரியம் என்று சிலர் நினைத்தார்கள். ‘படையில் இருந்து பள்ளிக்குஎன்று ஒரு திட்டம் தீட்டப்பட்டது. ராணுவத்தில் இருந்து விடைபெற இருக்கிறவர்கள், ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னதாக  விண்ணப்பிக்க வேண்டும். பட்ட தாரியாக இருக்கிறவர்களுக்குக் கோடை விடுமுறையின்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பின்னர் ஒரு வருடம் அவர்கள் அனுபவம் பெற்ற ஆசிரியர் ஒருவரின் நேரடி மேற்பார்வையின்கீழ் வகுப்பு நடத்துவார்கள். அந்த வருடம் அவர்கள் பகுதி நேரப் படிப்பும் படித்துத் தேற வேண்டும். அப்படித் தேறினால் அவர்கள் அடுத்த வருடத்திலிருந்து முழுத்தகுதி பெற்ற ஆசிரியர்கள்.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் வருடம் – அதாவது 1992 ல் ஒன்பது பேர் – எண்ணி ஒன்பதே பேர் விண்ணப்பித்தார்கள். போனவருடம் இந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. இப்போது 300 பேர் என்ற அளவிற்கு வந்திருக்கிறது.

இந்தப் பட்டாளத்துக்கார்களைப் பள்ளி மாணவர்கள் ஏற்றுக் கொள் கிறார்களா? முரட்டுத்தனமாக ஏதாவது பண்ணி வைப்பார்கள். முரட்டுத் தனமாக  ஏதாவது பண்ணி வைப்பார்கள் என்றுதான் முதலில் பெரும்பாலான பெற்றோர்கள் பயந்தார்கள். ஆனால் என்ன ஆச்சரியம்! ஒரு வருடத்தில் மாணவர்களிடம் மகத்தான மாறுதல்கள் ! அடங்காப் பிடாரிகளாக இருந்தவர்கள் எல்லாம் அற்புதமான குழந்தைகளாக மாறிவிட்டார்கள். தறுதலைகள் என்று ‘தண்ணிதெளித்துவிடப்பட்டவர்கள் எல்லாம் தங்கக் கம்பிகள் ஆகிவிட்டார்கள்.

எப்படி இந்த மாற்றம் நேர்ந்தது? கட்டுப்பாடு, மரியாதை இந்த இரண்டும் ராணுவத்தின் ஆதார குணங்கள். தன்னைச் சின்னப் பையனாக நடத்தாமல் மனிதனாக மதிக்க வேண்டும் என்பது இரண்டும் கெட்டான் வயதில் இருக்கிற குழந்தைகளின் ஆசை. கட்டுப்பாடு இல்லாத மனிதன், மரியாதையைப் பெறவோ, மரியாதை கொடுக்கவோ முடியாது என்ற சூட்சுமத்தை அந்தச் சின்ன மூளைகளுக்கு இந்த ராணுவத்தினர் புரியவைத்துவிட்டார்கள். அதுதான் காரணம் என்று மனோதத்துவ ரீதியில் விளக்கம் கொடுத்தார் ஒரு ஆராய்ச்சியாளர்.

“ஆதர்சங்களைத் (Role Model) தேடுகிற வயது அது. அப்படி ஒரு ஆதர்சமனிதனைக் கண்டு விட்டால் அந்த வயதில் அவர்கள் என்ன சொன்னாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு செய்வார்கள்என்று இன்னொருவர் வேறு ஒரு காரணம் சொன்னார்.

தத்துவங்களுக்குள் போகாமல் நடைமுறைக்கு வந்தால் வேறு சில பரிமாணங்கள் கிடைக்கின்றன. வில்லி காஸ்டிலோ, விமானப் படையில் மேஜராக 25 வருஷம் பணிபுரிந்துவிட்டு நான்காம் வகுப்பிற்கு ஆசிரியராக வந்திருப்பவர். அவர் சொன்னார் ; “என்னுடைய வகுப்பில் இருக்கும் குழந்தை களில் 98 சதவிகிதம் பேர் தகப்பனின் அன்பை, வழிகாட்டலை இழந்தவர்கள். தனியொருத்தியாக, தாயால் (Single Parent) வளர்க்கப்படுவார்கள். அவர்கள் ஓர் ஆசிரியரிடத்தில் தந்தையின் அன்பையும் வழிகாட்டலையும் எதிர்பார்க்கிறார்கள்

வேறு ஒரு ஊரில் வேறு ஒரு வகுப்பை ஆராய்ந்த ஒருவர், இந்தக் கருத்தை உறுதிப்படுத்துவது போல வேறு ஒரு கோணத்தில், ஒரு விஷயம் சொன்னார்; “ராணுவத்தில் இருக்கும் பலர் தங்கள் குழந்தைகளுடன் பொழுதைச் செலவிடும் வாய்ப்பை இழந்தவர்கள். அவர்கள் விடுமுறையில் வந்துபோகும சில மாதங்களைத் தவிர மற்ற நாட்களில் குடும்பத்தைப் பிரிந்திருந்தவர்கள். அவர்கள் ஓய்வு பெற்றுத் திரும்பும் போது அவர்களது குழந்தைகள் வளர்ந்து பெரிய வர்களாகி இருப்பார்கள். அதனால் அவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்ற வரும்போது இயல்பாகவே குழந்தைகள் மீது அன்பைச் சொரிகிறார்கள்என்பது அவர் சொல்லும காரணம்.

ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளிடம் அன்பையும் மரியாதையையும் பெற்றிருக்கும் முன்னாள் ராணுவத்தினர், அரசாங்கத்திடம் அவற்றை இழந்திருக் கிறார்கள் என்பது வேறு ஒரு கதை.

ஓய்வூதியம், மருத்துவ உதவி கோரி முன்னாள் ராணுவத்தினர் அனுப்பிய மனுக்கள் அதற்கான அரசு அலுவலகத்தில் மலைபோல குவிந்து கிடக்கின்றன. மாலைபோல என்று சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லவில்லை. நிஜமாகவே குவிந்து கிடக்கின்றன. அரசாங்கம் தந்திருக்கும் புள்ளி விவரங்களின்படி, பரிசீலிக்கப்பட வேண்டிய கோப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரம். இன்றைக்கு மனு போட்டால் இடைக்கால நிவாரணம் கிடைக்க 200 நாட்கள் ஆகும். மேல்முறையீடு செய்தால் கூப்பிட்டு விசாரிக்கவே ஆறு வருடங்கள் ஆகும். இதுவும் அரசாங்கம் தரும் ஒரு விவரம்தான். “1991ல் 45000 மனுக்களின் மீது முடிவெடுத்தோம். இந்த வருடம் 13,000 மனுக்களுக்கு மேல் கவனிக்க முடியும் என்று தோன்வில்லைஎன்கிறார் ஓய்வூதியம், இழப்பீடு இவற்றுக்குப் பொறுப்பான துறையின் இயக்குநர் கேரி ஹிக்மேன்.

கம்ப்யூட்டர் நெட்வொர்க், பரவலாக்கப்பட்ட அதிகாரம் என்று சூழ்நிலை நிலவும் அமெரிக்காவில் நம்மூர் தாலுக் ஆபீஸ் மாதிரி வேலை நடப்பானேன்?

“முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக மனுவின் வடிவத்தை மாற்றி அமைத்தோம். அது எங்கள் வேலையைசி சிக்க லாக்கி விட்டதுஎன்கிறார்,  முன்னாள் ராணுவத்தினரின் விவகாரங்களை நிர்வகிக்கும் துறையின் சார்பாகப் பேசவல்ல ஜோசப் வயலான்டே.

“அதெல்லாம் சும்மா. அலட்சியம்தான் காரணம். நாங்கள் எல்லாம் கறிவேப்பிலைகள். சமையல் முடிந்துவிட்டது. இனி தேவைப்படமாட்டோம். அதனால் அலட்சியம்என்று பொருமுகிறார் சாம் லெட்வித். 73 வயதாகும் இவர் இரண்டாவது உலகப்போர், கொரியா யுத்தம் இவற்றில் அமெரிக்கக் கப்பற் படையில் பணிபுரிந்தவர். அரசாங்கத்தின் அலட்சியம் பற்றி அவர் கதை கதையாகச் சொல்கிறார்.

“சிகிச்சைக்காக நாலு வருஷமாக ஆஸ்பத்திரிக்கு நடந்தேன். ஒவ்வொரு முறையும் மணிக்கணக்கில் காத்திருக்கிறேன். நாலு வருஷத்துக்குப் பிறகு சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரி பில் வந்தது. அதற்குக் கட்டிய பணத்தை ஈடு செய்யக்கோரி மனுச்செய்தேன். மறுபடியும் நாலு வருஷ அளவில் காத்திருத்தல். ஆஸ்பத்திரி தேவலை என்கிற மாதிரி அரசாங்கம் நடந்துகொண்டது. அதற்குப் பிறகு ஆஸ்பத்திரிக்குக் கட்டிய பணத்தில் 40 சதவீதத்தைத் தர ஒப்புக் கொண்டது. விஞ்ஞான ரீதியாகக் குறைபாடு உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் 40 சதவிகிதம் தான் தர முடியும் என்று சொல்லிவிட்டதுஎன்கிறார் சாம்.

நாலு வருஷமாக சிகிச்சை பெறுமளவுக்கு சாமிற்கு என்ன கோளாறு? கான்சரா? புற்றுநோயா? எய்ட்சா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கேட்கும் சக்தியைக் காது இழந்துவிட்டது. “விஞ்ஞானபூர்வமாக நிரூபணம் ஆகவில்லை என்றால் எனக்கு இதை ஏன் பொருத்தினார்கள் என்று ஹியரிங் எய்டைக் கழற்றிக் காட்டுகிறார். “ என்னுடன் அரைமணி நேரம் பேசிப் பார்த்தால் என்னுடைய குறை தெரிந்துபோகும். இதை நிரூபிக்க எந்த விஞ்ஞானம் வரவேண்டும்?என்று கோபத்தில் கத்துகிறார்.

கோபப்படுவானேன். மேல்முறையீடு செய்ய வேண்டியதுதானே என்று கேட்டால். “என்னால் எத்தனை வருடம் காத்திருக்க முடியும்? அன்று எதிரியோடு போரிட என்னால் முடிந்தது. ஆனால் இன்று என் நாட்டு அரசாங்கத்தோடு போராட சக்தியில்லைஎன்கிறார்.

பரிதாபம்தான். ஆனால் அதைவிட விசித்திரம் வளைகுடா போரில் கைதிகளாகப் பிடித்துவரப்பட்ட இராக்கிய ராணுவத்தினரை அமெரிக்காவில் குடியேற்றிப் பராமரிக்க தலைக்கு வருடத்திற்கு ஏழாயிரம் டாலர் அமெரிக்க அரசாங்கம் செலவழித்து வருகிறது. அதேசமயம் அந்த யுத்தத்தில் அமெரிக்கா விற்காகப் போரிட்ட அமெரிக்க ராணுத்தினர் தாங்கள் ஒரு புதுவகை நோயால் – வளைகுடாப்போர் நோய் (Gulf War Syndrome)  என்றே அதற்குப் பெயர் வைத்திருக் கிறார்கள்– அவதிப்படுவதாகச் சொல்லி தங்களுக்குச் சிகிச்சை அளக்க வேண்டும் என்று கோரிவருகிறார்கள். போருக்குப் போன இடத்தில் இராக் ரசாயன அல்லது நுண்கிருமிகள் கொண்ட ஆயுதங்களைத் தங்கள் மீது ஏவியது என்ற மனப்பிரமைதான் இதற்குக் காரணம். அந்தப் போரில் அப்படி எதுவும் நடக்க வில்லை என்று அரசாங்கம் முன்னாள் போர் வீரர்களின் கோரிக்கையை மறுத்து வருகிறது.

எதிரியின் ஆயுதத்தால்தான் இது நடந்திருக்க வேண்டும் என்பதில்லை. நம் தரப்பில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் கதிரியக்கப் பொருளான யுரேனியம் இருந்தது. அதனால் ஏற்பட்டிருக்கலாம். அங்கே எண்ணெய்க் கிணறுகள் மாதக் கணக்கில் எரிந்து புகைந்து கொண்டிருந்தன. அசுத்தமான காற்றைப் பல நாட்கள் தொடர்ந்து சுவாசித்ததால் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கலாம். இவை எதுவுமே இல்லாவிட்டால், பாலைவனத்துத் தண்ணீர் மூலம் ஏதாவது நடந்திருக்கலாம். அரசாங்கம் ஏன் விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது என்று ஒரு தரப்பினர் வாதிடுகிறார்கள்.

வளைகுடா மர்மத்தை மறுக்கிற அரசாங்கம் இன்னொரு ரகசியத்தை ஒப்புக்கொள்கிறது. (நீண்ட போராட்டத்திற்குப் பிறகு) இரண்டாவது உலகப்போர் முடிந்த பிறகு, முப்பது வருட காலத்திற்கு, அதாவது 1979 வரை, கதிரியக்கப் பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ராணுவ வீரர்களை, அவர்களை அறியாம லேயே, அரசு பயன்படுத்தி வந்தது என்பது தான் அது. அதாவது ராணுவ வீரர்கள் உடலில், அவர்களுக்குத் தெரியாமலே, ஊசி மூலம் கதிரியக்கப் பொருள்கள் செலுத்தப்பட்டு வந்தன என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பரிசோதனைகள்  இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன என்ற அறிவிப்பைச் சில மாதங்களுக்கு முன்பு, சக்தித்துறை அமைச்சர் (Secretary, Dept. of Energy) ஹசல் ஒலொரி அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பு, பலருக்கு அணுகுண்டு. “இப்போது நிறுத்தப்பட்டு விட்டது என்பது என்ன நிச்சயம்?என்று அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் குரல் எழுப்பினார்கள். நிச்சயமாக நிறுத்தப்பட்டு விட்டது என்று சத்தியம் செய்யும் அமைச்சர், பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் சொல்லிவருகிறார்.

“ இந்தத் தேசத்திற்காக உயிரையே பணயம் வைத்தோம். ஆனால் தேசம் எங்களைக் கைவிட்டுவிட்டதுஎன்று முன்னாள் ராணுவத்தினர் பொருமுகிறார்கள்.

தேசம் என்று அவர்கள் சொல்வது அரசாங்கத்தை மட்டுமல்ல, வருடா வருடம் நவம்பர் 11ம் தேதியை முன்னாள் வீரர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம். தேசத்திற்காகப் போராடியவர்களை கௌரவிப்பதற்காக அந்த தினம்.

ஜான் திரேசியா என்று ஒரு முன்னாள் ராணுவ வீர்ர். வளைகுடாப் போரில் தலைக்குமேல் ஸ்கட் ஏவுகணைகள் பறந்து கொண்டிருந்தபோது களத்தில் இறங்கிப் போரிட்டவர் அவர். இப்போது விமானங்களைப் பழுதுபார்க்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். அந்தக் கம்பெனியில் வேலை நேரத்தில் கம்பெனிச் சீருடை அணிந்திருக்க வேண்டும் என்பது விதி.

முன்னாள் ராணுவத்தினர் தினத்தன்று தன்னுடைய ராணுவச் சீருடையை மாட்டிக்கொண்டு வேலைக்குப் போனார் ஜான். அதைக் கழற்றிவிட்டு கம்பெனிச் சீருடையைப் போட்டுக்கொள்ளும்படி நிர்வாகம் வற்புறுத்தியது. மாட்டேன், இன்று முன்னாள் ராணுவத்தினர் தினம் என்றார் ஜான். நிர்வாகம் அவரது அன்றைய கூலியைப் பிடித்துக் கொண்டுவிட்டது. முன்னாள் ராணுவத்தினர் தினத்தன்று, அந்த முன்னாள் வீரருக்கு வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை. “விதி என்றால் எல்லோருக்கும் ஒன்றுதான். ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். ஜான் எங்களது முன்னாள் ஊழியர். இப்போரு ராணுவத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வளைகுடாப் போருக்கு சவுதி அரேபியாவுக்குப் போகிறார். அங்கே ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு, ராணுவத் சீருடைக்குப் பதில் எங்கள் கம்பெனி சீருடை அணிந்து கொள்கிறேன் என்று சொன்னால், ராணுவம் சரி என்று ஒப்புக் கொள்ளுமா?என்று கேட்கிறார் டான் பிரயன்ட்.

அதானே என்று தோன்றுகிறதோ? “நான் என்ன, தினம் போட்டுக்கொள்ள  வேண்டும் என்றா கேட்கிறேன். எதோ ஒரு நாளைக்கு. நான் பொதுமக்கள் வந்து போகும் கவுண்டரில் வேலை பார்த்தால், அவர் சொல்வது சரி. நான் எங்கேயோ ஒரு மூலையில் ஒர்கஷாப்பில் இருக்கிறேன். ஒருநாள் வேறு சீருடை மாட்டிக் கொண்டால் என்ன குடிமூழ்கிவிட்டது?என்று எதிர்வாதிடுகிறார் ஜான். இதிலும் நியாயம் இருப்பது போலத் தோன்றுகிறதோ?

“முன்னாள் ராணுவ வீரர் தினத்தைக் கொண்டாடுவதில், அவருக்கு அத்தனை ஆர்வம் என்றால், லீவைப் போட்டுவிட்டு வீட்டில் இருக்க வேண்டியது தானே – ஆபீசுக்கு வந்து ஏன் கலாட்டா பண்ணுகிறார்? என்கிறார் பிரயன்ட்.

இதுவும்…

எது சரி? என்னைத் தீர்ப்பு வழங்கச் சொல்லாதே உனக்கு நூறு சல்யூட் !

 

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these