இங்கும் வாரிசு அரசியல்

9

இங்கும் வாரிசு அரசியல்

      கருணாநிதியின் மகன், எம்.ஜி.ஆரின் மனைவி, நேருவின் பேரன், பக்தவத்சலத்தின் பேத்தி, என்.டி.ஆரின் மருமகன், பெரியாரின் மருமகள் என்று வாரிசுகள் வலம் வந்த / வரும் இந்திய அரசியல் உனக்கு போரடிக்கிறதா?

      உனக்கு ஒரு செய்தி :

      அமெரிக்காவிலும் வாரிசுகள் தேர்தலில் குதிக்கிறார்கள்.

      இந்த வருடக் கடைசியில், மாநில சட்டசபைகளுக்கு, கவர்னர் என்று அழைக்கப்படும் மாநில முதல்வர் பதவிக்கு, செனட் என்ற பாராளுமன்றத்   திற்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலில் இறங்க முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் பிள்ளைகள், கிளிண்டனின் மச்சான் ஆகியோர் வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கென்னடியின் மகனும் களத்திற்கு வரக்கூடும் எனக் கிசுகிசு.

      முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷிற்கு நான்கு பிள்ளைகள். அவர்களில் இருவர் அரசியலுக்கு வருகிறார்கள். மூத்த மகன் ஜார்ஜ் பாக்கர் புஷ் (அப்பாவின் பெயரே பிள்ளைக்கும் ! ) டெக்சாஸ் மாநில முதல்வர் பதவிக்குப் போட்டியிட இருக்கிறார். அவருக்கு அடுத்த மகன் ஜெப் புஷ் – முழுப் பெயர் ஜான் எல்லிஸ் புஷ்-ஃபுளோரிடா முதல்வர் பதவிக்குப் போட்டியிட இருக்கிறார். இரண்டு பேருமே அப்பாவின் கட்சி. அதாவது குடியரசுக் கட்சி.

      ஜார்ஜிற்கு வயது 46. ஏல் பல்கலைக் கழகத்தில் பிசினெஸ் மானேஜ்மெண்ட் படித்தவர். ஹார்க்கென் எனெர்ஜி குரூப் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். பூமிக்கு அடியில் இருந்து பெட்ரோல் எடுக்கும் கம்பெனி இது. அப்பா புஷ் ஜனாதிபதியாகும் முன் நடத்தி வந்த நிறுவனம். அதைத் தவிர டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் என்ற பேஸ்பால் குழுவையும் நடத்தி வருகிறார் (அமெரிக்காவில் விளையாட்டு என்பதும் வியாபாரம்தான். விளையாட்டு வீரர்களுக்குச் சம்பளம் கொடுத்து தனியார், குழுக்களை நடத்தி வருகிறார்கள்). ஜென்னா, பார்பரா என்று இரட்டைக் குழந்தைகள் அவருக்கு.

      அவரது தம்பி ஜெப்க்கு வயது 40. டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் படித்தவர். டெக்சாஸ் காமர்ஸ் பேங்க் என்ற வங்கியைக் கொஞ்சகாலமாக நடத்தி வருகிறார். அதற்கு முன்னர் 12 வருடமாக, ஒரு வீட்டு மனை வாங்கி விற்கிற கம்பெனியை நடத்திவந்தார் 9 வயது, 16 வயது, 17 வயதில் மூன்று குழந்தைகள்.

      அண்ணாவிற்குப் பெரிய எதிர்ப்பு இருக்காது என்று தோன்றுகிறது. கட்சியின் டிக்கெட் கிடைத்துவிடும் (இங்கு அதற்கும்கூட பகிரங்க போட்டி. கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களில் இருந்து ஒருவரை அவர்களது தொகுதியில் உள்ள, கட்சிக்கு ஆதரவாகப் பதிவு செய்து கொண்டுள்ள வாக்காளர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் இந்தத் தேர்தலுக்கு பிரைமரி – ஆரம்பக் கட்டத் தேர்தல் – என்று பெயர் ). பிரைமரியில் பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

      ஆனால், நிஜத் தேர்தலில், கடுமையான மோதலைச் சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது டெக்ஸாஸ் மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஆன் ரிச்சர்ட்ஸ் என்பவர் நறுக்கென்று பேசக்கூடியவர். (புஷ்ஷின் மகனைப் பற்றி அவர் சொன்னது ; அப்பாதான் பெரிய புதர் (புஷ்) ; இவர் வெறும் புல் ! ) சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்று அவரது கட்சிக்காரர்கள் – ஜனநாயகக் கட்சி – சொல்கிறார்கள்.

      அண்ணாவிற்குத்தான் எதிர்ப்பிராதே தவிர தம்பிக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. குடியரசுக் கட்சியில் நான்கைந்து பேர் ஃபுளோரிடா முதல்வர் பதவியில் கண் வைத்திருக்கிறார்கள். ஃபுளோரிடாவில் குடியரசுக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் (ஆனால் போனமுறை ஜனநாயகக் கட்சிக்காரரை முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தது. அதற்கு அவரது தனிப்பட்ட செல்வாக்கும் காரணம். இந்த முறை அநேகமாக அவர் போட்டியிடமாட்டார் என்று பேச்சு அடிபடுகிறது. அதனால் பல பேருக்குக் கண்).

      எனவே, தம்பி சுறுசுறுப்பாகக் களத்தில் குதித்துவிட்டார். இப்போதே ஊர் ஊராகப் போய் ஆதரவு திரட்டி வருகிறார். இங்கே எங்கள் பல்கலைக் கழகத்திற்கும் வந்திருந்தார்.

      பதவிக்கு வந்தால் என்ன செய்வேன் என்பதை முன்கூட்டியே தேர்தலில் நிற்க விரும்புகிறவர்கள் சொல்ல வேண்டும் என்பது இங்கு மரபு. மூன்றுபடி போடுகிறேன் என்று சொல்லிவிட்டு முக்கால்படி போட்டால், ஜனங்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் சும்மா இருந்தாலும் பத்திரிகைகள் கிண்டிக் கொண்டே இருக்கும்.

      தம்பி ஜெப் புஷ் என்ன சொல்கிறார் ? “ நான் பதவிக்கு வந்தால் ; மாநில அரசின் பொறுப்பில் இருக்கும் கல்வித்துறையை ஒழித்துக்கட்டுவேன் என்கிறார். ஐயய்யோ, அப்புறம்? “ கல்வி என்பதை ஊராட்சிகளின் பொறுப்பில் கொடுத்துவிடுவேன்என்கிறார். அதாவது அதிகாரத்தைப் பரவலாக்குவது. நம்மூர் பாஷையில் சொன்னால் பஞ்சாயத்து ராஜ், மாநில சுயாட்சி. வேறு என்னென்ன செய்யப்போகிறார் ? அதிகம் சிறைகள் கட்டுவது, தண்டனை களைக் கடுமையாக்குவது, கருச்சிதைவிற்கு இருக்கும் சட்டபூர்வமான அங்கீகாரத்தை ரத்து செய்வது, தன்னினப் பால் உறவு (Homosexuals) கொள்பவர்களுக்கு இருக்கும் ‘ உரிமை ‘ யைப் பறிப்பது இப்படி போகிறது பட்டியல்.

      அண்ணா புஷ்ஷும் கிட்டத்தட்ட இதே தொணியில்தான் பேசுகிறார். “நிறைய வரி போட்டு நிறைய செலவழிக்கும் மாநிலமாக இருக்கிறது டெக்ஸாஸ். அதை முதலில் மாற்றுவேன்என்பது அவர் முழக்கம். குற்றங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, கல்வியைச் சீரமைப்பது மற்ற அம்சங்கள்.

      “இரண்டு பேர் பேசுவதும் கடைந்தெடுத்த பழமைவாதம்என்கிறார் ஃபுளோரிடா பல்கலைக்கழக அரசியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஷெர்.

      பழமைவாதம், பிற்போக்குத்தனம் என்று அரசியல் விமர்சகர்கள்தான் சொல்கிறார்களே தவிர, புஷ் சகோதரர்களின் கூட்டங்களுக்குப் பெரிய அளவில் கூட்டம் வருகிறது. ஆனால் அது வேடிக்கை பார்க்கும் கூட்டம் என்பது அது கேட்கும் கேள்விகளிலேயே தெரிகிறது.

      “உங்கள் அப்பா வீட்டில் மதுரையா, சிதம்பரமா, யாருடைய ஆட்சி ?என்று ஒரு கேள்வி. “ கிறிஸ்துமஸ் இரவு அன்று வெள்ளை மாளிகையில் அடித்த கூத்தைப் பற்றி கொஞ்சம் சொலுங்கள் ஜெப்   என்று இன்னொரு குரல்.

      ஜெப்பும், ஜார்ஜும் இதற்கெல்லாம் அசந்துவிடவில்லை. திரும்பத் திரும்ப ஒரே பல்லவியைப் பாடுகிறார்கள்.

      “ நாங்கள் புஷ்ஷின் பிள்ளைகள் என்பதால் தேர்தலில் போட்டியிட வில்லை. ஜென்னா, பார்பராவின் (அல்லது, ஜார்ஜ், நோயல்) தந்தை என்பதால் போட்டியிடுகிறோம்   (அதாவது மாநிலத்தில் உள்ள குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகப் போட்டியிடுகிறேன் என்று அர்த்தம்).

      இவர்களுக்குத் திரைமறைவில் இருந்து அரசியல் ஆலோசனைகள் கொடுத்து வருவது புஷ்தான் என்று ஒரு பேச்சு இருக்கிறது. தேர்தல் சூடு பிடிக்கும்போது பிரசாரத்திற்கு புஷ் வருவார் என்பது பலர் சொல்லும் ஆரூடம்.

      அரசியல் என்பது புஷ் குடும்பத்தின் ரத்தத்தில் ஊறிய விஷயம். புஷ்ஷின் அப்பா, பிரஸ்காப் புஷ் 1952 – லிருந்து 1963 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

      சரி, புஷ்ஷின் பிள்ளைகள் யாராவது பிற்காலத்தில் ஜனாதிபதியாக வர முடியுமா? சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தேன். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே ஒரு முறைதான் அப்பாவும் பிள்ளையும் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்கள். ஜான் குவின்சி ஆடம்ஸ் என்பத அந்த அப்பாவின் பெயர். அதனால், புஷ் சகோதரர்கள் ஜனாதிபதியாக வெள்ளை மாளிகைக்குள் அடியெடுத்து வைப்பது என்பது சற்று கஷ்டமான காரியம்.

      ஆனால், இப்போது வெள்ளை மாளிகையில் இருப்பவருடைய மச்சான், வாஷிங்டனுக்குப் போகத் துடிக்கிறார். அதுவும் ஃபுளோரிடாவில் இருந்து.

      கிளிண்டனின் மனைவி ஹிலாரியுடைய தம்பி ஹீக்ரோடம். இங்கே ஃபுளோரிடாவில் உள்ள ஒரு சிற்றூரில், அரசாங்க வக்கீலாக இருக்கிறார். அவருக்குப் பாராளுமன்றத்திற்குப் போக ஆசை. ஆசை இருக்கு சரி, அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது?

      கட்சியில் டிக்கெட் கிடைப்பதே –  அதாவது ஆரம்ப கட்டத் தேர்தலில் தேறிவருவதே – கஷ்டம். இப்போது செனட்டராக இருப்பவர் கன்னி மாக். அவர் “கன்னிங்மாக்கும்கூட. அதாவது அரசியல் வேலைகளில் சித்தர். மச்சான் ரோடமோ கற்றுக்குட்டி. மாக் கையில் 20 லட்சம் டாலர் வைத்திருக்கிறார். ரோடம் கையில் அவ்வளவு காசு இல்லை. இந்த 20 லட்சம் தவிர, நினைத்த மாத்திரத்தில் லட்சங்கள் புரட்டக்கூடிய செல்வாக்கு மாக்கிற்கு உண்டு. ரோடம் அத்தனை பெரிய ஆளில்லை.

      ஆனால், ரோடமிற்கு டாம்பா என்ற நகர மேயரின் ஆதரவு இருக்கிறது. அவர்தான் இவரைக் கொம்பு சீவிவிட்டு, தூண்டிவிடுகிறார் என்று சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனால், மாக் சில காலமாகவே கிளிண்டனுக்கு எதிர்பாட்டுப்பாடி வருகிறார். அவரும் கிளிண்டனும் ஒரே கட்சியை – ஜனநாயகக் கட்சி – சேர்ந்தவர்கள்தான். ஆனாலும் கிளிண்டன் எடுக்கும் நடவடிக்கைகளைப் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்த கிளிண்டன் ஒரு சட்டம் கொண்டு வந்தார். அதை எதிர்த்துப் பாராளுமன்றத்திலேயே பேசியவர் மாக். கிளிண்ட்னுக்கு, இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஹிலாரிக்கு பிடித்தமான விஷயம், ஏழைகளுக்கு மருத்துவ உதவிபுரியும் திட்டம் (Health care plan). அதையும் விமர்சித்து வருகிறார் மாக்.

      “தப்புத் தாளம் போடுகிறார் மாக்என்று ஜனநாயகக் கட்சியிலேயே பலர் நினைக்கிறார்கள். அவர்கள் ரோடமை ஆதரிக்கக்கூடும்.

      ஆனால், ஹிலாரியின் ஆதரவு இருக்கிறதா?

      “அக்காவிடம் நான் இன்னும் இதைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அவளுக்குத் தெரியாமலா இருக்கும். சி.ஐ.ஏ அவளது புருஷன் கையில்தானே இருக்கிறது?என்று சொல்லிச் சிரிக்கிறார் ரோடம். தெரியும் என்று சொன்னால் அக்கா என்ன சொல்கிறார் ?  “ இதுவரைக்கும் ஒன்றும் பெரிய கூச்சல் போடவில்லைஎன்கிறார் ரோடம். அப்படியானால் மௌனம் சம்மதமா? அப்படிச் சொல்வதற்கில்லை என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் சொல்கின்றன. கிளிண்டனுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிற விஷயம் இது என்று அவரது ஆலோசகர்கள் அவரிடம் சொல்லிவருகிறார்கள். கட்சியிலும் அப்படி ஒரு உபதேசம் நடந்துவருகிறது.

      “ரோடம் களத்தில் குதித்தால், போட்டி அவருக்கும், குடியரசுக்கட்சி வேட்பாளருக்கும் என்ற அளவில் இருக்காது. எதிர்க்கட்சிக்காரர்கள் மறைமுகமாக, கிளிண்டனைப் பற்றிய கருத்துக் கணிப்பாக அதை மாற்றி விடுவார்கள். ஏற்கெனவே புஷ்ஷிற்கு ஓட்டுப்போட்ட மாநிலம் ஃபுளோரிடா. அங்கே இந்த விஷப்பரீட்சை தேவைதானா?என்பது அவர்கள் கிளிண்டனிடம் எழுப்பிவரும் கேள்வி.

      ஆனால் யார் சொன்னாலும் கேட்கக்கூடிய மனநிலையில் ரோடம் இல்லை. கிளிண்டன் தலையசைக்கவில்லை என்றால் குடும்பத்தில் குழப்பம் வரலாம்.

      லாஸ் ஏஞ்சல்சிலிருந்து, டெய்லி நியூஸ் என்று ஒரு பத்திரிகை வருகிறது. புத்தாண்டு பிறப்பதற்கு முன், 94 எப்படி இருக்கும் என்று ஜோசியம் போட்டிருந்தார்கள். ஜோசியம் என்றால் பத்திரிகைக்கார்கள், மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டு கணிக்கிற அரசியல் கணிப்பு அல்ல. ஜோசியர்களிடம் கேட்டு வாங்கிப்போட்டது. அதில் ஒன்று “ஹிலாரிக்கும் கிளிண்டனுக்கும் மனப்பிணக்கு ஏற்படும். ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும் மணவிலக்கு ஏற்படும். அதன்பின் ஹிலாரி அரசியலில் குதித்து பெரிய நட்சத்திரமாக வருவார்”.

            அபத்தம் என்கிறார் அரசியல் பேராசிரியர் ரிச்சர்ட். “ இதற்கு மோட்டு வளையத்தைப் பார்த்துக் கொண்டு பத்திரிகையாளர்கள் எழுதுகிற கணிப்பு தேவலாம்.

            பத்திரிகைக்காரர்கள் இன்னொரு நபரைப் பற்றி ஒரு கணிப்புச் சொல்லி வருகிறார்கள். கென்னடியின் மகன் ஜே.எஃப்.கே. ஜுனியர் தேர்தலில் நிற்கப் போகிறார் என்பது அது. என்ன ஆதாரம்? எந்த அடிப்படையில் இப்படிக் கயிறு திரிக்கிறார்கள் ?

      போன மாதம் அமெரிக்காவில், கறுப்பர்களின் சரித்திரத்தை நினைவு கூர்கிற மாதம் (Blackk History Month). அதற்காக நியூயார்க் நகரத்தைப் பற்றித் தயாரிக்கப்பட்ட டி.வி. நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கினார் ஜே.எஃப்.கே. அதுவரை டி.வி. நிகழ்ச்சிகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதவர் அவர். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக, ஒரு பெரிய தொகையை அளிக்க டி.வி.நிறுவனம் முன்வந்தது. தொடமறுத்துவிட்டார். “கறுப்பர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை இதுஎன்பது அவர் சொன்ன காரணம். அத்துடன் அவர் சொன்னது ;  “ நியூயார்க் நான் வளர்த்த நகரம், அதற்கும் நான் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ’‘

            ஒன்றும் ஒன்றும் இரண்டு என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். “அப்படித்தானா?என்று அவரை நேரிடையாகவே கேட்டுவிட்டார் ஒரு பத்திரகைக்காரர். “ இல்லை   என்று பலமாக மறுத்துவிட்டார் ஜே.எஃப்.கே. தேர்தல் நடக்கும் வருடத்தில் இல்லை என்றால்  என்று சொன்னால் ஆமாம் என்று அர்த்தம். ஆமாம் என்றால் அது இல்லை என்று பத்திரிகையாளர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.

      நம்மூர் அனுபவத்தைக் கொண்டு நான் இதற்கு ஆமாம். ஆமாம் என்றேன் !

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these