இன்று கம்ப்யூட்டர் இருக்கு, இனி பாராளுமன்றம் எதற்கு?

6

இன்று கம்ப்யூட்டர் இருக்கு

இனி பாராளுமன்றம் எதற்கு?

இன்று எங்கள் கூட்டணியில் ஒரு சுவாரஸ்யமான சர்ச்சை.

எங்கள் குழுவில் என்னையும் சேர்த்து ஏழு பேர். நான்கு பேர் பத்திரிகையாளர்கள்; மூவர் கம்ப்யூட்டர் அறிஞர்கள். (ஆராய்ச்சி பத்திரிகை, கம்ப்யூட்டர் இரண்டிற்கும் சம்பந்தம் உடையது). இஸ்ரேல்காரன், கிரீஸ் நாட்டவன், இந்தியன் என்று பல தேசத்து மூளைகள் சங்கமிக்கும் ஒரு கூட்டணி இது. எங்களை வழி நடத்துபவர், கடல் அளவு கம்ப்யூட்டர் ஞானமும், பழுத்த பத்திரிகை அனுபவமும் கொண்ட ஒரு அமெரிக்கர். இங்குள்ள ஒரு பெரிய தினசரியில் ஆசிரியர். இப்போது தற்காலிகமாக, பல்கலைக் கழகத்திற்குப் பேராசிரியராக வந்து ஆராய்ச்சியில் வழி நடத்துகிறார்.

இந்த கோஷ்டியில்தான் சர்ச்கை. சர்ச்சைக்குக் காரணம் இதுதான்:

இங்கே பக்கத்தில் கூப்பிடு தூரத்தில். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்று ஒரு சிற்றூர். அங்குள்ள ஒரு கல்லூரியில் நேற்று போலீஸ் புகுந்து, இரண்டு மாணவர்களைத் “தள்ளிக்“ கொண்டு போய்விட்டது. என்ன விஷயம்? போதை மருந்தா? திருட்டா? ராகிங்கா? சோடா புட்டி வீசி விட்டார்களா? துப்பாக்கி சமாசாரமா? இல்லை. யாரையாவது பார்த்து “வாடி என் கப்பங்கிழங்கேபாடி விட்டார்களா?

அதெல்லாம் எதுவுமில்லை. இங்கே ஈ-மெயில் (E-Mail) என்றொரு வசதி உண்டு. ஈ-மெயில் என்பது எலக்ட்ரானிக் மெயில் என்பதன் சுரக்கம். உலகத்தின் ஒரு மூலையில் உள்ள கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு மூலையில் உள்ள கம்ப்யூட்டருக்குக் கடிதம் அனுப்பலாம். (சொத்து விஷயமா அண்ணன் தம்பிங்க அடிச்சுக்கிட்டு செத்தாங்க என்று ஒரு வரியில் மகாபாரதத்தைச் சுருக்குவது மாதிரி, ஈமெயில் பற்றிய எளிமையான, சுருக்கமான விளக்கம் இது)

இந்தக் கல்லூரி நூலகத்தில் உள்ள கம்ப்யூட்டரை, அக்கம் பக்கத்தில் உள்ள 28 கல்லூரி கம்ப்யூட்டர்களுடன் ஜோடி சேர்த்திருந்தார்கள். நாம் தேடுகிற புத்தகம் இந்த நூலகத்தில் இல்லை என்றால் அங்கே இருக்கிறதா என்று விசாரிப்பதற்காக இந்த வசதி.

இந்த இரண்டு குறும்பர்களுக்கும் கொஞ்ச நாளாகவே கை துருதுருவென்று இருந்தது. ஒரு நாள் அதிகாலையில் நூலகத்திற்கு வந்து (வாசல் கதவு வழியாகத்தான். இங்கே நூலகங்களுக்கெல்லாம் அடையா நெடுங்கதவு) THE என்று துவங்குகிற புத்தகங்களின் பட்டியல் தருக என்று கம்ப்யூட்டர்களுக்கு ஆணையிட்டார்கள். கம்ப்யூட்டர்கள் திக்கு முக்காடி விட்டன. நம்மூர் கல்லூரி மாணவர்களின் பாஷையில் சொல்வது என்றால், “மண்டை காய்ந்துவிட்டனதி என்று ஆரம்பிக்கும் புத்தகம் 28 கல்லூரியிலும் லட்சம் புத்தகம் இருக்கும். அவற்றை ஒரு சேர எல்லோரும் போய் மொய்த்தால்?

கம்ப்யூட்டர்கள் ஸ்தம்பித்துப் போய்விட்டன சில நிமிடங்களுக்குத்தான்.

ஏன் கம்ப்யூட்டர்கள் ஸ்தம்பித்துப் போயின என்பதைச் சில நூறு மைல்கள் தள்ளியிருக்கிற மாநிலத் தலைநகரில் இருந்து ஒருவன் தற்செயலாகக் கண்டுபிடித்தான். போலீசிற்குச் செய்தி போக, குறும்பர்களைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டார்கள்.

இதே தலைநகரில், ஏழை மக்களுக்குக் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட அரசுப் பணத்தை, கம்ப்யூட்டர் பிரிவில், துணைச் செயலர் பதவியில் மாதம் 7500 டாலர் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, கம்ப்யூட்டர் மூலம் திருவிளையாடல்கள் புரிந்து, சில பல லட்சங்களைச் சாப்பிட்டுவிட்டாள். விஷயம் அம்பலம் ஆனதும், பணத்தைத் திருப்பித் தந்து விடுவதாகச் சத்தியம் செய்ய, அரசாங்கம் அவளை மன்னித்து விட்டது. சீட்டைக் கிழிக்கக் கூட இல்லை. “அவங்களை எல்லாம் விட்டுறுவான்க. சின்னப் பசங்க ஏதோ ஒருவித ஆர்வத்தில் விஷமம் பண்ணிட்டானுங்க. உடனே அவன்களைத் தள்ளிக்கிட்டு போயிடறதா? என்னங்கடா நியாயம் இது?என்று குமுறலும் பொருமலுமாக விக்குக்தான் சர்ச்சையை ஆரம்பித்தான்.

“என்னைக் கேட்டால், இவ்வளவு அபத்தமாக ஒரு புரோகிராம் எழுதினவனை, அவனது முட்டாள்தனத்திற்காகக் கைது பண்ண வேண்டும் என்பேன்என்றார் பேராசிரியர். “இவ்வளவு சுலபமான விஷயத்தை எதிர்பார்த்திருக்க வேண்டாமா?

இது வேண்டுமானால் ஏதோ அறியாமல் செய்த விஷமமாக இருக்கலாம். ஆனால் வர வர ஈ மெயிலில் போர்னோகிராபியெல்லாம் வர ஆரம்பித்துவிட்டது.

“பச்சை பச்சையாக எழுதறான்கள்என்று பொரிந்தாள் வனீசா வில்பர்ன். “அந்த வேசி மகன்களை (வனீசா டெக்சாஸ் மாநிலத்துப் பெண். கௌபாய் வம்சம். அவர்களுக்கு இப்படித்தான், சொடக்குப் போடும் நேரத்திற்குள் சட்டென்று ரத்தம் கொதிக்கும்) எலக்ட்ரிக் சேருக்கு (அமெரிக்காவில் அதுதான் தூக்கு மேடை) அனுப்ப வேண்டும்.

இனிவரும் நாட்களில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இது போன்ற சர்ச்சைகளைத் தவிர்க்க முடியாது. ஏனெனில், அவை மிக வேகமாக எலக்ட்ரானிக் மயமாகி வருகின்றன.

எலக்ட்ரானிக்மயமாவது என்றால்?

நம்மூரில் எழுதுவது, கணக்குப் போடுவது, படம் வரைவதற்கு, பட்டியல் போடுவதற்கு எல்லாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம் அல்லவா. இவர்கள் அதையெல்லாம் தாண்டி வெகுதூரம் போய்விட்டார்கள். அம்மன் சந்நிதிக்குள் போகும் முன் பிள்ளையாருக்கு உக்கி போடுவது மாதிரி, ஆரம்பமே கம்ப்யூட்டரித்தான். பல்கலைக் கழகத்தில், பட்ட வகுப்பில் சேர வேண்டுமானால், முதலில் ஜி.ஆர்.ஈ என்று ஒரு பரீட்சை எழுதித் தேற வேண்டும். (இங்கிருப்பவர்களும்தான்). இந்தப் பரீட்சையை நம்மூரில், வட்ட வட்டமாகக் குமிழிகள் அச்சிடப்பட்ட ஒரு படிவத்தை பென்சிலைக் கொண்டு தீற்றி நிரப்புவோம். இங்கே கம்ப்யூட்டரில் கேள்விகள் இருக்கும். பதிலையும் அதிலேயே எழுத வேண்டியதுதான்.

சுலபமான கேள்விகள், கஷ்டமான கேள்விகள் இரண்டுமே இருக்கும். உனக்கு எது வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சுலபமான கேள்விகளுக்கு விடை சொன்னால், இன்னும் சுலபமான கேள்விகள் வரும். கஷ்டமான கேள்விகளுக்குப் பதில் சொன்னால், அவற்றை விடக் கஷ்டமான கேள்விகள் வரும். ஆனால் ஒன்று சுலபமான கேள்விகளுக்குரிய விடைகளுக்கு மார்க் குறைவு. கஷ்டமான கேள்விகளுக்கு அதிகம். இந்த முறைக்கு “பூனை“ அதாவது CAT (Computer Adaptability Test) என்று பெயர்.

ஜி.ஆர்.ஈ எழுதி பாஸ் செய்து, அட்மிஷனுக்கு மனுப் போட்டால், அங்கேயும் கம்ப்யூட்டர். அதன் மூலம்தான் செலக்ஷன். அதைத் தாண்டி வகுப்பறைக்குள் வந்தால் 

அதில் சினிமாத் தியேட்டர் மாதிரி இரண்டு பெரிய திரைகள். கம்ப்யூட்டர் உருவாக்கிய பிம்பங்கள் அதில் திரையிடப்படும். அதை கண்ட்ரோல் பண்ணும் விசை, பாடம் நடத்தும் பேராசிரியர் கையில். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கீ போர்ட் அல்லது, அவர் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால், நம் கையில், மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கீ போர்ட் பேராசிரியரைக் கேள்வி கேட்க வேண்டுமென்றால், அல்லது அவர் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால், நம் கையில் இருக்கும் கீ போர்ட் மூலம் பேராசிரியருக்குச் செய்தி அனுப்பலாம். வாத்தியாரும் மாணவரும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இப்படி ஒரு ஏற்பாடு வர்ஜீனியாவில் உள்ள ஜேம்ஸ் மாடிசன் யூனிவர்சிட்டியில். இதை அவர்கள் 21-ஆம் நூற்றாண்டு வகுப்பறை என்று மார் தட்டிக் கொள்கிறார்கள்.

இதைவிட நவீனமானது, நியூயார்க்கில் உள்ள பேஸ் பல்கலைக் கழகத்தில் இருக்கிறது. மல்டிமீடியா என்று பெயர். எழுத்து, படம், இசை எல்லாம் ஒருங்கிணைந்த ஒரு சிஸ்டம். பாரி மகளிரைப் பற்றிய பாடம் என்று வைத்துக் கொள்வோம். “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்என்று கம்ப்யூட்டர் திரையில் ஓடும் வரி மீது ஒரு தட்டுத் தட்டினால், (கையால் அல்ல, “எலி- அதாவது Mouse- என்ற சாதனத்தின் மூலம்) திரையில், பாரி வாழ்ந்த குன்று, பெளர்ணமி நிலவு, பாரி மகளிர், ஔவையார் எல்லாம் உள்ள காட்சி தோன்றும். ஸ்பீக்கரில் அந்தப் பாட்டு ஒலிக்கும் (கிட்டத்தட்ட சினிமா மாதிரி) உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே, சங்க காலத்திற்குப் போய்விடலாம்.

வகுப்பறையை விட்டு நூலகத்திற்குப் போனால் அங்கே கம்ப்யூட்டர் புத்தகங்கள். புத்தகம் என்றால் தலையணை மாதிரி இராது, பள பளவென்று மின்னுகிற இசைத்தட்டு மாதிரி இருக்கும். அவற்றை சிடி ராம் என்று சொல்வது. இந்த ராமிற்கும் பா.ஜ.க விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிடிராம் என்பது காம்ப்பாக்ட் டிஸ்க்-ரீட் ஒன்லி மெமரி (Compact Dist Read only Memory). கடுகைத் துளைத்து அதில் ஏழ்கடலைப் புகுத்தி என்று சொல்வார்களே அது இதுதான். ஒரு முழு கலைக் களஞ்சியத்தை ஒரு டிஸ்க்கில் அடக்கி விடலாம். ஒரு டிஸ்கில் 18 ஆயிரம் டைப் செய்யப்பட்ட பக்கங்களை அடக்கி விட முடியும். விலை மிக மலிவு. இந்தப் “புத்தகங்கள்” 40 டாலர் –  அதைப் போட்டுப் படிக்கக்கூடிய ப்ளையர் 300 டாலர் –  இப்போது இந்தியாவிலும் மல்டி மீடியா வந்துவிட்டது. பேச்சுகளை, அவரது குரலிலேயே கேட்க முடியும்.

      சிடி இசைத் தட்டுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். (சிங்கப்பூரில், டொரன்டோவில் தமிழ்ப் பாட்டுகள், பாரதியார் பாடல்களில் இருந்து, சேஷகோபாலன் கச்சேரி வரை சிடியில் கிடைக்கின்றன. விலை கொள்ளை மலிவு. 10 டாலர்தான்!) இப்போது கேசட் மாதிரி அழித்துவிட்டு, புதிதாக அந்த இடத்தில் பதிவி பண்ணிக் கொள்ளக்கூடய சிடிகள் வந்து விட்டன. “அடி ராக்க முத்துகேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது என்றால் அதை அழித்துவிட்டு “உட்டாலக்கடி உட்டாலக்பதிவு பண்ணிக் கொண்டு விடலாம்.

      இவையெல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது ஈ மெயில். ஒரு போனில் இருந்து இன்னொரு போனிற்குப் பேசுவது போல, ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்குச் செய்தி அனுப்பலாம். அதுதான் ஈ மெயில். அந்த இரு கம்ப்யூட்டர்களும் ஒரே ஆபீசிற்குள் இருக்கலாம். அல்லது ஒன்று அமெரிக்காவிலும் இன்னொன்று அடையாறிலும் இருக்கலாம்.

      இவைகளுக்கு இடையே நெட் ஒர்க் ஒன்ற பிணைப்பு மூலம் தொடர்பு சாத்தியமாகிறது. இந்த நெட் ஒர்க்குகளுக்குள் பிரம்மாமண்டமானது இன்டர்நெட். 35000 கிளைகள் கொண்ட ஒரு பிரம்மாண்டமான மரத்தைக் கற்பனை செய்து கொள். அதுதான் இன்டர்நெட் ஒவ்வொரு கிளையும் ஒரு வட்டாரத்தை –  சில தேசங்களை – இணைக்கும் நெட் ஒர்க். அப்புறம் அதற்குள் உட்கிளைகள், சின்னச் சின்னக் குச்சிகள், இலைகள், தளிர்கள். அமெரிக்காவில் மட்டும் ஐந்து கோடி பேர் ஈ மெயிலைப் பயன்படுத்துகிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு ஈ மெயில் இலவசம்! பைசா செலவு இல்லாமல், உலகத்தின் எந்த மூலைக்கும், எத்தனை நீளமாக வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம். அரைமணி நேரத்திற்குள் போய்ச் சேர்ந்துவிடும்.

      இதனால் மாணவர்கள் எழுதிக் கொண்டே ஏஏ இருக்கிறார்கள். மும்முரமாக ஈ மெயில் எழுத உட்கார்ந்து பரீட்சையைக் கோட்டை விட்டவர்கள் உண்டு. “ஒன்றுக்கு மூன்று பங்குதான் தண்ணீர் வைத்தேன். ஆனாலும் சாதம் கஞ்சியாகக் குழைந்து போகிறது. என்னடா செய்வது?’’ என்பதில் இருந்து எட்டாம் நூற்றாண்டுக் கல்லறைகள் வரை ஈ மெயிலில் அலசப்படுகிறது. நிறைய அரசியல் விஷயங்கள் சுடச்சுட – சூடாகவும் – விவாதிக்கப்படுவதைப் பார்க்கலாம். சார்க்நெட் என்று ஒரு கிளையில் இலங்கைத் தமிழர்கள் அரசியல் பேசுவார்கள். இன்னொரு புறம், காஷ்மீரில் குண்டு வெடித்தால் அரை மணி நேரத்தில் அது இங்கே எதிரொலிக்கும்.

      ஈ மெயிலின் இன்னொரு வசதி, கம்ப்யூட்டர் திரையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு இன்னொரு மூலையில் இருப்பவருடன் அரட்டை அடிக்கலாம். தபால் எழுதி பதில் வரக் காத்திருக்க வேண்டியதில்லை.

      கடிதம் என்றால், காதல் இல்லாமலா? வழக்கமான ‘ஐ லவ் யூ வில் இருந்து “வர்றியா?வரை உண்டு.

      இன்னும் சில மேதாவிகள், அடிமை ஏலம் Slave auction – ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கள் கோஷ்டியில் இருக்கும் இளம் பெண்களில் ஒருத்தியை “ஏலம்போடுவது, அதிக தொகை கேட்பவர் அந்தப் பெண்ணுடன் ஒரு நாள் ஊர் சுற்றலாம். (Dating) பணம் காசு எதுவும் கைமாறாது. சும்மா ஒரு தமாஷிற்கு. இவர்களை எல்லாம் தாண்டி, இங்கே ஃப்ளோரிடாவில், ஒரு அரசியல்வாதி, வெகுதூரம் போய்விட்டார்.

      கம்ப்யூட்டர் இருக்க பாராளுமன்றம் எதற்கு? என்பது அவர் முழக்கம். விளக்கமாகவே சொல்கிறேன். புதிதாக ஒரு சட்டம் போட வேண்டும் அல்லது இருக்கிற சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்கிறோம். பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் அல்லது கட்சி ஒரு சட்ட முன் வடிவை முன்மொழிகிறார். மற்றவர்கள் விவாதிக்கிறார்கள். ஓட்டுப் போடுகிறார்கள். முடிவு செய்கிறார்கள். கோடிக்கணக்கான மக்களின் தலை எழுத்தை, ஏன் சில நூறு பேர் தீர்மானிக்க வேண்டும் என்பது இவரது கேள்வி. சட்ட முன்வடிவு ஈ மெயிலில் அனுப்பப்படட்டும். 10 நாள், 15 நாள், ஒரு மாதம் கெடு வைக்கட்டும் அதற்குள், ஒவ்வொருவரும், அதாவது நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், கம்ப்யூட்டர் மூலம் விவாதிக்கட்டும் ; ஓட்டுப் போடட்டும். தேர்தல் கிடையாது, பாராளுமன்றம் கிடையாது வெட்டிப் பேச்ச, வீண் செலவு கிடையாது நிஜமாகவே குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு ! முன்னொரு காலத்தில் வாஷிங்டன் வெகு தூரத்தில் இருந்தது. எல்லோரும் போக முடியாது என்பதால், ஒரு பிரதிநிதியை அனுப்பி வைத்தோம். அந்தப் பதினெட்டாம் நூற்றாண்டு வழக்கத்தை இப்போதும் ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்பது இவரது வாதம்.

      இந்த எலக்ட்ரானிக் ஜனநாயகம் பற்றியும் கூட்டணியில் பேச்சு வந்தது. அது மட்டும் அமலுக்கு வந்தது என்றால், குழப்பம்தான். செய்வதற்கு வேறு வேலை எதுவும் இல்லாத வெட்டிப் பசங்களின் ஆட்சிதான் நடக்கும்என்றாள் வனீசா.

      “இப்ப மட்டும் என்ன வாழுது?என்றான் கேரி.

      “ஏதாவது தப்பாப் போனால் யாரைக் குறை சொல்வது? இப்போது என்றால்,  கிளிண்டனை, பாராளுமன்றத்தை, அரசியல் கட்சிகளை வெளுத்து வாங்கலாம். உண்மையைச் சொன்னால் பத்திரிகையாளர்களுக்கெல்லாம் வேலை போய்விடும்என்றான் ஸ்டீவ் பிரௌன்.

      அவரவர் கவலை அவரவர்களுக்கு.

 

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these