குழந்தைகளுக்கு ஆபத்து

5

குழந்தைகளுக்கு ஆபத்து

வீட்டு விலங்குகளையே குழந்தைபோலக் கொஞ்சுகிற தேசம், குழந்தைகளை எப்படிக் கொண்டாடும் என்று ஆர்வமும் ஆச்சரியமும் கலந்து கேள்வி எழுப்பியிருக்கிறாய்.

இதற்கு என் பதில் என்ன என்பது கிடக்கட்டும். குழந்தைகளின் நலனுக்காகவே முழுமூச்சாய்த் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டு வருகிறதே ஒரு நிறுவனம் – அதுதான் ‘யூனிக்செஃப்என்ற ஐ.நா. சபையின் குழந்தைகள் நல நிறுவனம் – அது என்ன சொல்கிறது தெரியுமா? “உலகிலேயே குழந்தைகளுக்கு ஆபத்து அதிகமான இடம், அமெரிக்கா” (Most risky place for Kids).

ஏனாம் ?

வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒரு வருடத்தில், 10 குழந்தைகள் கொல்லப்படுகின்றன என்று வைத்துக் கொண்டால், அதில் ஒன்பது குழந்தைகள் அமெரிக்காவில் கொல்லப்படுகின்றன என்கிறது யூனிசெஃப்.

கொல்லப்படுவது இருக்கட்டும். உயிரோடு இருப்பவர்கள் நிலைமை என்ன?

மற்ற எந்த வளர்ச்சி அடைந்த நாடுகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான அளவு குழந்தைகள் அமெரிக்காவில் வறுமையில் வாழ்கிறார்கள்.

அதுமட்டுமல்ல.

கடந்த 20 வருடங்களில், மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவிலோ அது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பள்ளிக்கூடத்திலெல்லாம் ஒவ்வொரு பரீட்சையிலும் எத்தனை மார்க் வாங்கினோம் என்பதை அப்பா அம்மாக்களுக்குச் சொல்வதற்கு ஓர் அட்டை கொடுப்பார்கள். அதை ‘புரோகிரஸ் ரிப்போர்ட்” (Progress Report) என்று சொல்வோமே, அதைப்போல, உலகில் உள்ள நாடுகளில் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைப் புள்ளி விவரங்களோடு சொல்லும் இந்த அறிக்கைக்கு ‘புரோகிரஸ் ஆஃப் நேஷன்ஸ்” – நாடுகளின் வளர்ச்சி – என்று யூனிசெஃப் பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறது.

அந்த அறிக்கையை நி பார்க்க வேண்டும். “ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அதன் ராணுவ பலத்தைக் கொண்டோ, பொருளாதார பலத்தைக் கொண்டோ கணக்கிடாமல், அதன் தலைநகரங்கள் பிரமிக்கத்தக்க விதத்தில் எப்படிப் பளிச்சென்று மின்னுகின்றன என்பதன் அடிப்படையில் கணக்கிடும் ஒரு காலம் வரும்என்று கனவு இழையோடும் வரிகளோடு துவங்குகிறது அந்த அறிக்கை.

“வளர்ச்சி அடையாத நாடுகள் என்று நம்மை எல்லாம் குறிப்படுகிறார்களே, அந்தப் பின்தங்கிய நாடுகளில், கடந்த 30 வருஷங்களில் தனி நபரின் நிஜமான வருமானம் (Real Income) இரண்டு மடங்காகியிருக்கின்றது. இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருக்கிறது. வாழ்நாள் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருக்கிறது. சத்துணவுக் குறைவு மூன்றில் ஒரு பங்காகக் குறைந்திருக்கிறது. அதாவது எல்லாம் 30 வருடத்திற்குள், ஒரு தலைமுறைக்குள், தலைகீழ் மாற்றம். பத்து வருஷத்திற்கு முன்னால், “பின்தங்கியநாடுகளில் 20 சதவீதம் குழந்தை களுக்குத்தான் தடுப்பூசி போடுவார்களாம். அது இப்போது 80 சதவீதமாக மாறிவிட்டது என்கிறது யூனிசெஃப்.

சரி, “முன்னேறியஅமெரிக்காவில் எப்படி? ‘வளர்ச்சிநேர் எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிறது என்கிறது யூனிசெஃப்.

இந்த நிலைமைக்கு ஒரு காரணத்தையும் சொல்கிறது அது. “பின்தங்கிய நாடுகளில் மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப் பணத்தைக்கொண்டு இந்த முன்னேற்றம் செயல்முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் அது நடக்கவில்லைஎன்பது யூனிசெஃப் சொல்லும் காரணம். பணம், மக்களுக்கு நல்வாழ்வைக் கொடுக்கவில்லை (Wealth failing to promote Welfare) என்பதற்கு அமெரிக்கா ஒரு உதாரணமாகத் திகழ்கிறது என்கிறது யூனிசெஃப்.

பத்து வருஷத்திற்கு முன்னால், யாராவது இப்படிச் சொல்லியிருந்தால், உடனே கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தியிருப்பார்கள். இப்போது -  அறிக்கை வெளியானது செப்டம்பர் 1993-ல் அதாவது சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு-யூனிசெஃப் சொல்கிறது! (அதற்கு அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ, தேர்தலில் நிற்கும் எண்ணம் நிச்சயம் கிடையாது!).

அறிக்கை கிடக்கட்டும் வாழ்க்கை என்ன சொல்கிறது? சமீபத்தில் நடந்த ஒன்றிரண்டு விஷயங்களைச் சொல்கிறேன். நீயே புரிந்துகொள்.

இது நடந்து ஒரு மாதம் இருக்கும். இங்கே, கெயின்ஸ்வில்லில், ஒரு எலிமெண்டரி ஸ்கூல், கவனி, ஒரு ஆரம்பப்பள்ளி, ஐந்தாம் வகுப்பு, பகல் பதினொரு மணி.

வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. திடீரென்று ஒரு பெரிய வெடிச் சத்தம். மின்னல் வேகத்தில், ஒரு துப்பாக்கிக் குண்டு, டெஸ்க்கை நொறுக்கித் தள்ளி விட்டு, தரையில் பாய்ந்து சென்று குத்திட்டு நிற்கிறது.

சுட்டவன் ஒரு பதினொரு வயதுச் சிறுவன். ஐந்தாம் வகுப்பு மாணவன். ஒரு சிறு பையனிடம், நிஜத்துப்பாக்கி எப்படி வந்தது? அதை ஏன் அவன் பள்ளிக்குக் கொண்டுவந்தான்? அதை வெளியில் எடுத்துச் சுடும் தைரியம் அவனுக்கு எப்படி வந்தது?

விசாரணை நடக்கிறது. விவரங்கள் சேகரித்த பிறகு வழக்குப் போடுவார்கள். பையனைப் பள்ளிக் கூடத்தைவிட்டு சீட்டுக் கிழித்து அனுப்பி வைப்பார்கள். சரி, அத்தோடு பிரச்சினை தீர்ந்துவிட்டதா? இப்படி ஒரு பையனை உருவாக்கிய அமைப்பிற்கு ஒரு தண்டனையும் கிடையாதா? இவன் ஒரு பையன்தானா?

பையனைக் கைது செய்த அடுத்து நாள், இதே ஊரில், இன்னொரு பள்ளியில் ஒரு சிறுமியின் புத்தகப் பையில் இருந்து 12 அங்குல நீளத்திற்கு ஒரு கத்தியைப் பிடித்தார்கள். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத இருவேறு சம்பவங்கள்.

இன்னொரு சம்பவம், பாம் பீச் என்ற பக்கத்து ஊரில் நடந்தது. வாடகை விஷயமாக டாக்சிக்காரருடன் தகராறு. பேச்சு முற்றியது. அந்த 13 வயதுப் பெண், பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, டிரைவரைச் சுட்டுவிட்டாள். டிரைவர் அதே இடத்தில், சுருண்டு விழுந்து செத்துப் போனார். இது நடந்தது பட்டப்பகலில். பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தொகை ஆறு டாலர். அதாவது அந்த டிரைவரின் உயிரின் விலை ஆறு டாலர்! இங்கு வயிறாரச் சாப்பிடும் ஒரு மதியச் சாப்பாட்டின் விலை !

எங்கேயோ ஒன்றிரண்டு பேர், துப்பாக்கி எடுத்துச் சுட்டால், உடனே ஊரே அப்படி என்று பழி சுமத்திவிடுவதா என்று நீ கேட்கலாம்.

இங்க பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளில் விடியோ காமிரா பொருத்தப் போகிறார்கள். எதற்கு? வன்முறையில் ஈடுபடும் மாணவர்களைக் ‘கையும் களவுமாகப் பிடிப்பதற்குத்தான்.

“பள்ளிக்கூடங்களில் ‘டிசிப்ளினைக் கட்டிக் காப்பாற்றுவது பெரும்பாடாக இருக்கிறது   என்கிறார் பலாட்கா உயர்நிலைப்பள்ளி பிரின்சிபால் ஜான்முர்ரே.

“தப்புப் பண்ணுகிறவர்கள் கூடக் குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுவார்கள். ஆனால், இந்த அப்பா, அம்மாக்கள் பண்ணுகிற அழிச்சாட்டியம் இருக்கிறதே. அப்பா ! “உங்க பையன், பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையனை பெல்ட்டால் விளாசிட்டான்மா, கண்டிச்சு வையுங்கஎன்று சொன்னால் “சே,சே! என் பையன் அப்படியெல்லாம் பண்ணமாட்டான். அவன் தங்கக் கம்பியாச்சேஎன்று அம்மாமார்கள் வாதிடுகிறார்கள். பையன் தங்கக் கம்பியா, தகரக்குவளையா என்று அவர்களுக்குக் காட்டுவதற்குத்தான் விடியோ காமிராஎன்கிறார் அவர்.

      முதலில் ஸ்கூல் பஸ்களில் விடியோ காமிரா பொருத்தி வெள்ளோட்டம் பார்த்தார்கள். இந்த முறை பலன் தரவே, வகுப்பறைக்கும் கொண்டு வந்து விட்டார்கள். தனியார் பள்ளிகளில் இந்த முறை எப்போதோ வந்துவிட்டது. அரச உதவி பெறும் பள்ளிகளுக்கு அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.

      “இனிமேல் கிளாசில், ஃப்ரீயாகப் பேசக்கூட முடியாது. சிறைதான்என்கிறார்கள் மாணவர்கள் ஜெர்ரி மெலோஷும், ராபின் ப்ளம்மரும்.

      விடியோ காமிராக்கள் கட்டுப்பாட்டைக் காப்பாற்றுமோ என்னவோ, மாணவர்கள் கெட்டுப் போனதற்கு டி.வி தான் காரணம் என்று வாதிடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தக் கோஷ்டியில் முக்கியமானது அமெரிக்கன் ஃபாமிலி அசோசியேஷன் என்ற அமைப்பு.

      “ஒரு வருஷத்தில் நாலு லட்சத்து ஆறாயிரம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் : 40 ஆயிரம் டீன் ஏஜ் பெண்கள் கருக்கலைப்பு செய்கிறார்கள். ஆரம்பப் பள்ளியைத் தாண்டும் முன் ஒரு மாணவன், எட்டாயிரம் கொலை களையும் பத்தாயிரம் வன்முறைச் சம்பவங்களையும் (டி.வி.யில்) பார்க்கிறான். மாணவர்கள் கெட்டுப்போனதற்கு டி.வி. தான் காரணம்என்று கணக்குப்போட்டு சொல்கிறது அமெரிக்கன் ஃபாமிலி அசோசியேஷன்.

      டி.வி.யில் வன்முறையை நிறுத்துவதற்கு அது என்னென்னவோ செய்து பார்த்துவிட்டது. அந்த அமைப்பில் 17 லட்சம் குடும்பங்கள் உறுப்பினர்களாக இருக்கின்றன. “வன்முறைக் காட்சிகள் வரும் டி.வி. நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களின் பொருட்களை எங்கள் உறுப்பினர் குடும்பங்கள் வாங்காதுஎன்று அது அறிவித்தது. அந்த நிகழ்ச்சிகளின்போது வந்து கொண்டிருந்த சோப்பு, ஷாம்பூ, பற்பசை விளம்பரங்கள் நின்றுவிட்டன. ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நின்றுவிடவில்லை. அந்த விளம்பரங்களுக்குப் பதில், சினிமா விளம்பரங்கள், லாட்டரி சீட்டு விளம்பரங்கள், விலை உயர்ந்த கார் விளம்பரங்கள் வந்தன !

      டி.வி.யில் வன்முறை பற்றி லட்சக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன (அடியேனுடைய ஒரு கட்டுரை உள்பட). ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்துவிட்டன. காங்கிரஸ் (பாராளுமன்றம்) கமிட்டி 27 முறை கூடி ‘விசாரணைநடத்திவிட்டது. ஆனால் வன்முறைக் காட்சிகள் மட்டும் குறையவில்லை.

      முழுக்க முழுக்க டி.வி. யை மட்டும் குறை சொல்வது சரியில்லை. விடியோ விளையாட்டுகளுக்கு (விடியோ கேம்கள்) ஒரு முக்கியப் பங்கு உண்டு. (Mortal Combat) (மரணமோதல்?) என்று ஒரு விடியோ கேம் அண்மையில் வந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது. அதில் கானோ என்று ஒரு ஹீரோ. நம்மூரில் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டுவிடுவேன் என்று மிரட்டுவதில்லையா? அதை இந்த ஹீரோ நிஜமாகவே செய்து காட்டுவான். வயிற்றைக் கிழித்து உள்ளே கையைவிட்டுக் குடலை எடுத்து….. இந்த கேமில் “மயிர் கூச்செறியச் செய்யும்ஒரு காட்சி முதுகுத் தண்டை உடைத்து எடுப்பது.

      விடியோ கேம் என்றால், திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்க்கலாம். டி.வி. நிகழ்ச்சி என்றால் ஒரு முறைதான் (டி.வி.க்குக் கணக்குப் போட்டு வைத்திருக்கும் அமெரிக்கன் ஃபாமிலி அசோசியேஷன் இதற்குக் கணக்கு வைத்திருப்பதாகத் தெரியவில்லை!)

      விடியோ கேமைப்போல வன்முறைக்கு வித்திடும் இன்னொரு பொருள். குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்கள், துப்பாக்கி எல்லாம் நம்மூரிலும் உண்டு. ஆனால் இங்கே கசாப்புகடை கத்திபோல, ஒரு விளையாட்டுச் சாமான் விற்பனை ஆகிறது. அதை எடுத்து ஒரு வீச்சு வீசினால் குலை நடுங்க வைக்கும் பயங்கரமான மனித அலறல் ஒன்று கேட்கும். பயப்பட வேண்டாம். இது சும்மா (எலக்ட்ரானிக்ஸ்) விளையாட்டுக்குத்தான் ! “பிசாசுப் பட்டாக் கத்தி” (Devils sickle) என்ற இந்த அலறும் கத்திக்குத் தயாரிப்பாளர்கள் செய்யும் விளம்பரம், “மென்மையானது, பத்திரமானது”, “கத்தியுண்டு, ரத்தமில்லை, சத்தமுண்டு”.

            விடியோ கேமோ, விளையாட்டுப் பொருளோ குழந்தைகள் போய் வாங்குவதில்லை. பெரியவர்கள் அப்பா – அம்மாக்கள்தான் வாங்குகிறார்கள். அவர்கள் குழந்தைகளைக் கண்டு கொள்வதில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு. இங்கே அப்பாவோ, அம்மாவோ ஒற்றை ஆளாகக் (Single Parent) குழந்தைகளை வளர்க்கிறவர்கள் உண்டு. அவர்களிடம் நிறைய அன்பு இருக்கும். நேரமிருக்காது. பணம் இருக்காது. விவாகரத்து செய்துவிட்டு, குழந்தையை எடுத்துக் கொண்டு போய் மறுமணம் செய்து கொள்கிறவர்கள் உண்டு. புதுத் தகப்பனால் பால் ரீதியாக வன்முறைக்கு (கற்பழிப்பிற்கு) ஆளாகிற குழந்தைகள் உண்டு. ஒரு குழந்தையே இன்னொரு குழந்தைக்கு டீன் ஏஜில் தாயாகி, அல்லது தந்தையாகி விடுவதும் உண்டு. அவர்களுக்கு அனுபவமோ, மனமுதிர்ச்சியோ போதாது. இதைத் தவிர வேலையின்மை, வீடின்மை, வறுமை, போதை மருந்துப் பழக்கம் என்று பெற்றோர்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள். அவற்றாலெல்லாம் பாதிக்கப் படுவது குழந்தைகள்தான்.

      எத்தனையோ காரணங்கள். ஆனால் அரசாங்கம் பெற்றோர்களையும் டி.வி.யையும்தான் குறைசொல்கிறது. கல்வி அமைச்சகம், இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓர் அறிக்கை வெளியிட்டது. பத்தாம் வகுப்பில் இருக்கும் மாணவர்களில் 25 சதவீதம் பேரால், எட்டாம் வகுப்புப் பாடத்தைக்கூட விளங்கிக் கொள்ள முடியவில்லை. மொழியறிவு மட்டுமல்ல, கணக்குப்போடும் ஆற்றலும் இல்லை என்று சொல்லும் அது, அதற்குக் காரணம் டி.வி. என்கிறது. நன்றாகப் படிக்கும் மாணவனுக்கும் சரியாகப் படிக்காத மாணவனுக்குமிடையே உள்ள வித்தியாசம் டி.வி… நன்றாகப் படிக்கும் மாணவன் மூன்றுமணி நேரத்திற்கும் குறைவாக டி.வி. பார்க்கிறான். சரியாகப் படிக்காத மாணவன் ஆறுமணி நேரத்திற்குமேல் டி.வி.பார்க்கிறான் என்று அது புள்ளி விவரம் தருகிறது. “பெற்றோர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சுலபமான ஒரு வேலைதான். டி.வி. ரிமோட் கண்ட்ரோல் சுவிட்சில், ஆஃப் என்று சுவிட்ச் இருக்கும் பாருங்கள், அதை உட்கார்ந்த இடத்திலிருந்தே அழுத்தினால் போதும்என்கிறார் கல்வித்துறைச் செயலர் டிக் ரெய்லி.

      செய்வார்களா?

      கஷ்டம்தான். ஏனெனில், 19,1 கோடி அமெரிக்கக் குடிமகன்களில் பாதிப்பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது ! (இதைச் சொல்வதும் கல்வி அமைச்சக அறிக்கைதான்) முன்னேறிய அமெரிக்காவைவிட, பின்தங்கிய அறிவொளி பெற்ற பாண்டிச்சேரி, புதுக்கோட்டை, சிவகெங்கை எல்லாம் பரவாயில்லை என்று தோன்றுகிறதோ?

 

 

 

 

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *