சின்ன வீடுகள்

4

சின்ன வீடுகள்

             கொட்டுகிற பனிக்கு நடுவில், அனல் காற்று வீசுகிற அதிசயத்தைக் கேட்டிருக்கிறாயா ?

இங்கே அதுதான் நடக்கிறது. வடமேற்கே சியாட்டிலில் ஆரம்பித்து இங்கே தென் கிழக்கே கெயின்ஸ்வில் வரைக்கும் குளிர் முதுகைச் சொடுக்குகிறது. தரை, சுவர், படுக்கை, மேஜை, புத்தகம் என்று எதைத் தொட்டாலும் ஜில்லிட்டுக் கிடக்கிறது. வெளியேவிடும் மூச்சு புகையாய், ஆவியாய் அலைந்து நெளிகிறது.

அத்தனைக்கும் நடுவில் ஒரு அனல்.

இது அரசியல் அனல். எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும், எந்த ஸ்டேஷனைத் திருகினாலும் இரண்டே விஷயங்கள்தான்.

ஒன்று பொம்பளைங்க சமாச்சாரம். இன்னொன்று, பண விவகாரம்.

ஒன்று கிளிண்டனுடைய ‘சின்ன வீடு‘ களைப் பற்றியது. இன்னொன்று அவரது மனைவி ஹிலாரியினுடைய சின்ன வீட்டைப் பற்றியது.

ஜனாதிபதியாக ஆவதற்கு முன்னால் கிளிண்டன், கவர்னராக இருந்தார் என்பது உனக்குத் தெரியும்தானே? இங்கே கவர்னர் என்றால் சென்னாரெட்டி, பீஷ்மா, பர்னாலா வகையறா மாதிரி அலங்கார நாற்காலி அல்ல. (இங்கே கவர்னர் என்றால் ஜெயலலிதா மாதிரி – அதாவது மாநில முதல்வர் மாதிரி, அதிகார நாற்காலி) அப்போது அவருக்கு மெய்க்காப்பாளர்களாக இருந்த இரண்டு பேர் பத்திரிகைப் பேட்டி ஒன்றில் ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்தார்கள்.

அவர்கள் சொன்ன கிசுகிசு ; கிளிண்டன் எடுத்திருப்பது இராமாவதாரம் அல்ல, கிருஷ்ணாவதாரம்தான். அதாவது பொம்பளைங்க விஷயத்தில் சபல சித்தர்.

காலையில், ஜாகிங் போகிறேன் என்று சின்ன வீடுகளுக்கு விசிட் போவார். திரும்பும்போது சந்தேகம் வராமல் இருக்க, முகம் கழுத்து, உடம்பெல்லாம் தண்ணீரைத் தெளித்துக் கொண்டு -  வேர்த்துக் கொட்டுகிறது என்பதற்கு அடையாளம்  -  வீடு திரும்புவார்.

பல சமயம், காருக்குள்ளேயே மன்மத லீலைகள் நடந்ததுண்டு. அந்த மாதிரி சமயங்களில் பெண்களுடைய மேக்கப் சமாச்சாரங்கள் சட்டையில் அப்பிக் கொண்டுவிடுவதும் உண்டு. அப்போதெல்லாம் நாங்கள்தான் அதைத் துடைத்து விடுவது.

வெளியில் மேய்ந்துவிட்டு, இரவு லேட்டாக வீடு திரும்பி, பூனை மாதிரி சத்தம் போடாமல் நுழைவதுண்டு. அப்படியும், பல சமயங்களில் அவர் வீட்டம்மா விழித்துக் கொண்டிருந்து அவரை ஒரு பிடி பிடிப்பதுண்டு. அந்தச் சமயங்களில் அந்தம்மா திட்டுகிற திட்டுக்களைக் காது கொடுத்துக் கேட்க முடியாது.

மெய்க்காப்பாளர்கள் சொல்வதெல்லாம் நிஜம் என்று நிரூபணமாக வில்லை. அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர்கள் கொடுக்கவில்லை. அவர்கள் மெய்க்காப்பாளர்கள் – அதாவது நிழல் போல் எப்போதும் கூடவே இருந்தவர்கள் -  என்பதால் இதில் ஏதாவது மெல்ல அவல் கிடைக்குமா என்று பத்திரிகைகள் ஆராய்கின்றன.

‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ என்ற பத்திரிகையின் நிருபர்களுக்கு ஒரு துப்பு கிடைத்தது. கவர்னராக இருந்தபோது, கிளிண்டனுடைய டெலிபோன் பில்களையெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள். அவர் இரண்டு வருட காலத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணோடு 59 முறை பேசியிருப்பது தெரியவந்தது. அதில் ஒரு கால், ஒரு ஹோட்டல் ரூமில் இருந்து போட்டது. பேசிய நேரம் மயக்கம் போட்டு விடாதே, 94 நிமிடம். அதாவது ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலே!

‘நியூயார்க் டெய்லி நியூஸ்’ என்ற பத்திரிகை இந்த 94 நிமிடப் பெண்மணியைத் தேடிப் பிடித்தது. “தப்பா ஒண்ணும் நடக்கலீங்க” என்று அந்தப் பெண்மணி சத்தியம் செய்கிறார். “சொந்தப் பிரச்சினை ஒன்றில் மாட்டிக்கிட்டு தவிச்சுக்கிட்டு இருந்தேன். அது விஷயமா யோசனை சொல்வதற்காகக் கூப்பிடுவார்” என்கிறார் அவர்.

ஜட்ஜ் மனைவி ஒருவரோடு தொடர்பு உண்டு என்று இன்னொரு செய்தி வெளியாயிற்று. ஜனாதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் புறப்பட்ட கிளிண்டனை வழியனுப்ப வந்த அவரை ஏர் போர்ட்டில் பார்த்து ஹிலாரி கடுப்பாகி, அவரை அடித்துத் துரத்தச் சொன்னதாகவும் அது சத்தியம் செய்தது. ‘டைம்’ பத்திரிகை அந்த திருமதி நீதிபதியிடம் தொடர்பு கொண்டு விசாரித்தது.

“அபத்தம். நாங்கள் நண்பர்கள்தான். ஆனால் அதுவெறும் தொழில் ரீதியான நட்பு” என்கிறார் அந்த அம்மாள்.

ஒவ்வொரு பத்திரிகையும் தங்களுக்குத் தோன்றியவர்களையெல்லாம் போன் செய்து விசாரிக்க மௌனமோ, மறுப்போ பதிலாக வந்து கொண்டிருக்கும் வேளையில், ஒரு பெண்மணி தானாக முன்வந்து ஒரு குண்டைப் போட்டிருக்கிறார்.

அவர் பெயர் ஜென்னிஃபர் பிளவர்ஸ். நைட்கிளப் பாடகி. ‘பென்ட் ஹவுஸ்’ பத்திரிகையில் அவரது படங்கள் வெளியானது உண்டு. (அந்தப் பத்திரிகையில் படம் வெளிவர வேண்டுமென்றால் ஒரே கண்டிஷன்தான் ! உடம்பில் துணை இருக்கக் கூடாது ! )

அவர் ஒரு புத்தகம் எழுதி வருகிறார். தனக்கும் கிளிண்டனுக்கும் இடையில் நீண்ட நாட்களாக இருந்த காதல் பற்றி, “என் வாயை மூட முயற்சிக்கிறார்கள்” என்று வெள்ளை மாளிகை அதிகாரிகளைக் குற்றம் சாட்டுகிறார். “நான் ஒண்ணும் அன்னை தெரஸா இல்லிங்க. யாரையும் பழி வாங்குவது என் நோக்கம் இல்லை. ஆனால் நான் என் தரப்பைச் சொல்லணுமில்லே?” என்கிறார். “ஒரு ஆம்பளைக்குப் பக்கத்தில் உரசின மாதிரி நின்னுக்கிட்டுப் பேசினா, உடனே அந்தப் பொம்பளையைச் சபலக் கேஸ்னு முத்திரை குத்திடறாங்க. அதையே ஒரு ஆம்பளை செய்தா பெரிய ஆளுனு தட்டிக் கொடுக்கறாங்க, என்னங்க நியாயம்? என்று நீதி கேட்கிறார், இந்தக் கண்ணகி.

குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகளைக் கேட்டால் “சொல்வதற்கு ஒன்றுமில்லை – No Comments” என்று மறுக்கிறார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் இந்தப் பதிலில் திருப்தி அடைந்து சும்மா இருந்து விடுவார்களா? கிளிண்டனையே நேராகக் கேட்டுவிட்டார்கள். சுற்றி வளைத்து பூசி மொழுகி என்று நாசூக் எல்லாம் பார்க்காமல், கண்ண மூச்சி ஆடாமல், நேரடியாகவே பட்டென்று கேட்டு விட்டார்கள்.

“மெய்க்காவலர்கள் சொல்வதெல்லாம் மெய்தானா?”

கிளிண்டன் எப்போதுமே எதையும் அடித்துப் பேசுவார். அழுத்தந் திருத்தமாகச் சொல்பவர். வக்கணைகள், வாதங்கள், ஆதாரங்கள், புள்ளி விவரங்கள் எல்லாம் அடுத்தடுத்து விழும். அவருக்கு எல்லா விஷயத்திலும்  – செவ்வாய்க்கிரகத்து ஆராய்ச்சியில் இருந்து அவரது செல்லப்பூனை சாக்ஸ் வரைக்கும் – சொல்வதற்கு ஒரு கருத்து இருக்கும். எல்லாம் பளார் பளார் அல்லது படார், படார் ரகங்கள்தான். மென்று முழுங்குகிற பேச்சே கிடையாது. அப்படிப்பட்டவர்,

இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்லியிருக்க வேண்டும்? அவர்கள் சொல்வது அண்டப்புளுகு என்று ஒரே போடாக ஓங்கிப் போட்டிருக்க வேண்டாமோ? அதுதான் நடக்கவில்லை. எதிர்பாராத இந்த நேரடிக் கேள்வியைக் கண்டு ஒரு கணம் திகைத்துப் போய்விட்டார்.

“அது, அது… ம்… ம்… வந்து வந்து நாங்கள் அதாவது நான், நான்… சட்… அவர்கள் சொல்வதெல்லாம் கட்டுக்கதை” என்று ஒரு பதிலைச் சொன்னார். பத்திரிகைக்காரர்களுக்குச் சந்தேகம் போகவில்லை. மாறாக வலுப்பட்டது.

பத்திரிகைக்காரர்களுக்குத்தான் சந்தேகம் எல்லாம் பொதுமக்கள் யாரும் அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. இங்கே நாலைந்து பேரிடம் பேசிப் பார்த்தேன். “உங்க ஊர்ல எப்படி? என்று ஒரு புரபசர் எதிர்க்கேள்வி போட்டார். ஜவாஹர்லால் நேருவில் இருந்து “முற்றும் துறந்த முனிவனும் அல்ல” என்று அறிவித்த அண்ணா வரை ஒரு நீண்ட பட்டியல் என் நினைவில் ஓடியது. நான் ஒன்றும் பேசவில்லை. “கிளிண்டனைக் கென்னடியாக்குவது என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். கென்னடியையும், மர்லின் மன்றோவையும் பற்றிய கிசுகிசுக்கள் நிறையப் படித்தாயிற்று. இப்போது, கிளிண்டனுக்கு மன்மத வேஷம் கட்டுகிறார்கள்” என்றார், இன்னொருவர் கசப்பாக.

“எல்லாம் தெரிந்துதானய்யா ஓட்டுப் போட்டோம். என் மணவாழ்க்கையில் பூசல்கள் இருந்ததுண்டு என்று அவரே பிரச்சாரத்தின்போது சொன்னதுதானே? இவர்கள் எல்லாம் அரிச்சந்திரன் என்று நினைத்துக்கொண்டு இருப்பதற்கு நாங்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?” என்றார் இன்னொருவர்.

கிளிண்டன் அரிச்சந்திரனோ இல்லையோ மெய்க்காவலர்கள் அரிச்சந்திரன்கள்  -  அதாவது மனைவியைப் துன்பப்படுத்துகிற விஷயத்தில்  – என்று நிரூபிக்க சில பத்திரிகைகள் முயற்சிக்கின்றன. மனைவியை உதைத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் (இங்கே அது குற்றம்) இந்த இரண்டு மெய்க் காவலர்களில் ஒருவர் சில காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த விவரத்தை ஒரு பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது. இருவரும் தத்தம் மனைவிமார்களை எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள் என்று இன்னொரு பத்திரிகை தகவல் தருகிறது.

ஆனால் மனைவியால் அடிவாங்கிக் கொண்டிருப்பவர் கிளிண்டன்தான். அடி என்றால் நிஜமான அடி அல்ல. நற்பெயருக்கு விழுகிற அடியைச் சொல்கிறேன். செக்ஸ் விவகாரத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத மக்கள் பண விவகாரத்தில் படுகோபமாக இருக்கிறார்கள்.

‘கிளிண்டன் கவர்னராக இருந்த அர்க்கன்சா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வீட்டு மனைகள் விற்பதற்காக 1979ல் – ஒரு கம்பெனி துவக்கப்பட்டது. ‘ஒயிட் வாட்டர் (White Water)’ என்பது அதன் பெயர். பளிங்கு நீரோடை ஒன்றின் அருகில் மனைகள் அமைந்திருந்ததால் அந்தப் பெயர். பணக்காரர்கள் விடுமுறைக் காலத்தில் வந்து ஓய்வெடுப்பதற்காக சின்னச் சின்ன வீடுகள் கட்டி விற்பதாகத் திட்டம். இதில் பங்குதாரர்கள்  ஹிலாரி கிளிண்டன், கிளிண்டன், அவர்களது நண்பர் மெக்டன்ளஸ், அவரது மனைவி சூசன்.

இந்த மெக்டக்ளஸ் இன்னும் ஒரு நிறுவனம் நடத்தி வந்தார். மாடிசன் கியாரண்டி என்ற அந்த நிறுவனம், பாங்க் போன்று, டெபாசிட்டுகள் சேகரிக்கும், கடன்கள் கொடுக்கும் ஒரு நிதி நிறுவனம். அமெரிக்காவில் இதுபோன்ற நிதி நிறுனங்களை மாநில அரசுகள் கண்காணிக்கின்றன. அவற்றின் டெபாசிட்டு களுக்கு மத்திய அரசு பொறுப்பு. அதாவது அந்த நிதி நிறுவனம் மூழ்கிப் போனால் டெபாசிட்டர்களுக்கு மத்திய அரசு நஷ்ட ஈடு வழங்கிவிடும்.

அர்க்கன்சாவில் இருந்த, அதாவது (கவர்னர்) கிளிண்டன் அரசின் மேற்பார்வையின் கீழ் இருந்த இந்த நிதி நிறுவனம் 1989ல் மூழ்கிப் போயிற்று. அதற்கு நஷ்டஈடாக மக்களின் வரிப்பணத்தில் இருந்து 47 கோடி டாலர், மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டி வந்தது.

வங்கிப் பணம் வேறு எங்கேயோ திசை திருப்பி விடப்பட்டுவிட்டது ; அதனால்தான் அது மூழ்கிப் போய்விட்டது என்று சந்தேகப்பட்ட மத்திய அரசு, வங்கியின் விவகாரங்களை ஆராய ரிசலூஷன் ட்ரஸ்ட் கம்பெனி (Resolution Trust Company – சுருக்கமாக RTC) என்ற அமைப்பை ஏறப்டுத்தியது. RTC கொடுத்துள்ள அறிக்கையில் கிளிண்டன் தம்பதிகளின் பெயர் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. எதற்காக? அதுதான் தெரியவில்லை (அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை). மெக்டக்ளஸ் செய்த ஊழல்களுக்கு ஒரு சாட்சியாகத்தான் அவர்கள் பெயர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஒரு சிலர் சொல்கிறார்கள். திருப்பி விடப்பட்ட பணத்தின் மூலம் பலன் அடைந்தவர்கள் என்ற முறையில் அவர்கள் பெயர் இடம் பெற்றிருப்பதாக ஒரு சிலர் சொல்கிறார்கள். கிளிண்டன் கவர்னர் தேர்தலுக்குப் போட்டியிட்டபோது செலகவுக்குப் பணம் திருப்பி விடப்பட்டிருக்கலாம் என்பது பலரது கணிப்பு.

இது நெருப்பு இல்லாமல் புகையும் Dry Ice அல்ல. இப்படி சந்தேகப்பட ஒரு காரணம் இருக்கிறது.

கிளிண்டனுக்குத் தேர்தல் நிதி திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தவர் மெக்டக்ளஸ். அது மட்டுமல்ல. தனது தேர்தல் செலவுகளுக்காக தன் சொந்தப் பணத்தில் இருந்து கிளிண்டன் 50 ஆயிரம் டாலர் கடனாகக் கொடுத்திருந்தார் (அமெரிக்காவில் தேர்தல் செலவுகளுக்கு வரம்பு உண்டு. அதனால்தான் இங்கு இது சகஜம்) அந்தக் கடனை அடைக்க ஆயிரம் டாலர் நிதி உதவி செய்தார் மெக்டக்ளஸ். அதாவது தனது தேர்தல் செலவுக்குத் தனக்குத் தானே கடன் கொடுத்துக் கொண்டார். அந்தக் ‘கடனை’ அடைக்க மெக்டக்ளஸ் வங்கி டெபாசிட்டர்களின் பணத்தை எடுத்துக் கொடுத்தார் !

அதுமட்டுமல்ல, இப்போது வங்கி மூழ்கி அந்தப் பணம் அரசாங்கத்தால் ஈடு செய்யப்பட்டு விட்டதால், சுற்றி வளைத்துப் பார்த்தால் கிளிண்டனின் தேர்தல் செலவிற்குப் பணம் கொடுத்தது அரசாங்கம்தான் என்றாகிறது !

என்ன இன்னும் கதாநாயகியைக் காணோம் என்கிறாயா? இரு, இரு இதோ வந்துவிட்டார்.

மெக்டக்ளஸோடு சேர்ந்து கிளிண்டன் தம்பதிகள் ஆரம்பித்த நிறுவனத்தால் மனைகளை விற்க முடியவில்லை. அழகழகான பிரசுரங்கள் அச்சடித்து விநியோகிப்பதன் மூலம் மட்டும் மனைகளை விற்றுவிட முடியாது, மனைகள் விற்க வேண்டுமானால் அதில் ஒரு மாதிரி வீடு கட்டி, நாலு பேருக்குச் சுற்றிக் காண்பிக்க வேண்டுமென பங்குதாரர்கள், அதாவது கிளிண்டன் தம்பதிகள், மெக்டக்ளஸ் தம்பதிகள் தீர்மானித்தார்கள்.

ஒரு மனையில், ஹிலாரி ஒரு மூன்று பெட்ரூம் வீடு கட்டினார். அதற்கு 1980ல், 30 ஆயிரம் டாலர் கடன் கொடுத்தது மெக்டக்ளஸின் நிதி நிறுவனம்.

மெக்டக்ளஸின் நிதி நிறுவனம் மூழ்கிக் கொண்டிருந்த நேரத்தில், அதற்கு மூலதனம் திரட்ட ஒரு முயற்சி நடந்தது. அதற்கு வங்கியை மாநில அரசின் சார்பில் மேற்பார்வையிடும் அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த அனுமதி மனுவைத் தாக்கல் செய்து, அதற்காக வக்கீல் என்ற முறையில் ஆஜராகி வாதாடியவர் ஹிலாரி. அதில் என்ன தவறு என்கிறாயா? அந்த அதிகாரி கிளிண்டனால் நியமிக்கப்பட்டவர். ஹிலாரி, கிளிண்டனின் மனைவி.

அதனால்? இதை எப்படித் தப்பு என்று சொல்ல முடியும்? என்று நீ கேட்டால், தலைமைத் தேர்தல் கமிஷனருக்க சுப்ரமண்யம் சுவாமியின் மனைவி வக்கீல் என்பதனால், சுப்ரமண்யம் சுவாமியின் மனுவைத் தலைமைத் தேர்தல் கமிஷனர் விசாரிக்கக்கூடாது என்று வாதிட்டவர்கள்தான் உனக்கு விளக்கம் சொல்ல வேண்டும்.

‘பளிங்கு நீரோடை’ தொடர்பான இன்னொரு குழப்பம் ; மெக்டக்ளஸின் மனைவி சூசனுக்கு, மத்திய  அரசால் நடத்தப்படும் வங்கி ஒன்று மூன்று லட்சம் டாலர் கடன் கொடுத்தது. அந்தப் பணம்தான் பளிங்கு நீரோடையில் முதலீடு செய்யப்பட்டது. பணம் கொடுத்தவர், கிளிண்டன் நிர்பந்தம் செய்ததால்தான் கொடுத்தேன் என்கிறார் இப்போது. கடன் ‘சமூக பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்’ களுக்கான பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. கவர்னரே பங்குதாரராக உள்ள நிறுவனத்தில் கடன் பெறுபவரும் ஒரு பங்குதாரர். அவரது கணவரோ, ஒரு வங்கி, ஒரு ரியல் எஸ்டேட் இரண்டிற்கும் அதிபர். ஆனால் கடன் பெறும் மனைவியோ சமூக, பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியவர் !

கிளிண்டன் தம்பதிகள் எல்லாக் குற்றச் சாட்டுகளையும் மறுக்கிறார்கள்: “வியாபாரத்தையெல்லாம் மெக்டக்ளஸ்தான் கவனித்து வந்தார். நாங்கள் வெறும் ஸ்லீப்பிங் பார்ட்னர்ஸ். அதனால் தில்லுமுல்லு ஏதாவது நடந்திருந்தால் அதில் எங்களுக்கு நேரடிப் பங்கில்லை” என்று சொல்கிறார்கள்.

ஆனால், ஹிலாரி பேரில் பவர் ஆஃப் அட்டார்னி (அதிகாரப்பத்திரம்) இருந்தது, செய்த முதலீடு பாதிக்குக் குறைவாக இருந்த போதிலும் நிறுவனத்தில் பாதி உரிமை கொடுக்கப்பட்டது ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி, மற்றவர்கள் இந்த வாதத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

விசாரணை நடந்தால் விவரங்கள் வெளியே வரலாம். விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரின. கிளிண்டன் பிடி கொடுக்காமல் நழுவி வந்தார். சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி வந்தார். அவரது கட்சியில் இருப்பவர்களே விசாரணை கோரி, பகிரங்கமாக அறிக்கை விட்டார்கள். ஐரோப்பாவிற்குச் சுற்றுப் பயணம் போயிருந்தபோது அங்கிருந்து போன் பண்ணி, விசாரணைக்கு பச்சைக்கொடி காண்பித்து விட்டார் கிளிண்டன்.

கிளிண்டனின் ‘சின்ன விடு’, ஹிலாரி கட்டிய சின்ன வீடு இவற்றைப் பற்றிப் பேசும்போது, அமெரிக்காவில் வீடு இல்லாதவர்களைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்லத் தோன்றுகிறது. அமெரிக்காவில் விடு இல்லாதவர்கள், அரசாங்கப்புள்ளி விவரத்தில்படி, இருபது லட்சம் பேர். கடும் பனிக்காலத்திலும் போர்வைமேல் போர்வை போர்த்திக் கொண்டு துணிப்பந்தாக ‘கையது கொண்டு மெய்யது போர்த்தி காலது கொண்டு மேலது தழுவி’ தெருவில் படுத்து உறங்குகிறவர்களை பெரிய நகரத்தின் வீதிகளில் பார்க்க முடியும். குழந்தை குட்டியோடு நின்று, “வீடில்லை வேலையில்லை, சோறு கொடுத்தால் போதும், வேலை செய்கிறேன்” என்று போர்டு வைத்துக் கொண்டு நிற்பவர்களைப் பார்க்க முடியும்.

பணக்கார தேசமானாலும் சரி, ஏழை தேசமானாலும் சரி, எல்லோருக்கும் வீடு பேறு கிடைத்து விடுகிறதா?

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *