ஆளுக்கொரு துப்பாக்கி

                                                                                    2

 
ஒரு கதை கேட்க உனக்கு நேரம் இருக்கிறதா ?  நிஜமான கதை.

எல்லோரையும் போல கனவுகளோடுதான். அவன் அமெரிக்கா வந்தான். அவனது தேசம் ஜமைக்கா. அங்கே சற்று வசதியான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன். அப்பா அங்கே ஒரு பெரிய பிசினஸ்மேன். ஊரிலேயே மிகச் சிறந்த பள்ளியில் போய் படித்தான். அந்த தேசத்து பிரதமர் படித்த பள்ளிக்கூடம் அது என்றால் பார்த்துக் கொள்ளேன்.

88 – ல் அப்பா ஒரு கார் விபத்தில் இறந்து போனார். நாலு வருடம் கழித்து அம்மா கான்சரில் செத்துப்போனாள். அப்போது அவனுக்கு வயது 24. அவன் அமெரிக்காவிற்குப் புறப்பட்டு வந்தான். அவனது தேசத்தில் கிடைத்த வசதியான வாழ்க்கை அவனுக்கு அங்கே ஒருபோதும் கிடைக்கவில்லை.

ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஜமைக்காவில் வந்து குடியேறி, அமெரிக்க பிரஜை ஆகிவிட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டான். அவனுக்கும் பிரஜா உரிமை கிடைத்தது. நியூயார்க் பக்கத்தில் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் குடியேறினார்கள். அங்கேயே ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தான்.

நன்றாகப் படித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். கல்லூரியில் சிறந்த மாணவர்களை, ஒவ்வொரு செமிஸ்டரின்போதும் பட்டியலிட்டு விளம்பரப்படுத்து வார்கள். அதற்கு ‘ டீன்ஸ் லிஸ்ட் ’ என்று பெயர். அதில் இடம் பெறுவது ஒரு கௌரவம். அதில் அவனது பெயர் மூன்று முறை இடம்பெற்றது.

ஆனால் நாலு வருடத்தில் எல்லாம் தலைகீழானது. 1988-ல் விவாகரத்துக் கேட்டு மனைவி வழக்குப் போட்டாள். அவர்களது ஒரே குழந்தையும் அவளோடு போயிற்று. வேலைக்குப் போன இடத்தில் கீழே விழுந்து முதுகில் அடிபட்டது. அதனால் வேலை போயிற்று. நஷ்டஈடு எதுவும் தரமுடியாது என்று கம்பெனி கையை விரித்துவிட்டது. அவன் வழக்குப் போட்டான். 26,250  டாலர் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பாகியது.

அவனுக்கு திருப்தி இல்லை. கறுப்பன் என்பதால் தனக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக அவன் நினைத்தான். நியூயார்க் மாநில தொழிலாளர் நஷ்டஈடு ஆணையத்திடம் முறையீடு செய்தான். ஆணையம் அவனை பரிசோதிக்க டாக்டர்களை அனுப்பியது. அவர்களைப் பார்த்ததும் அவனுக்கு மீதமிருந்த கொஞ்ச நஞ்சம் நம்பிக்கையும் போய்விட்டது. அவர்கள் வெள்ளையர்கள். தனக்கு நீதி கிடைக்காது என்ற எண்ணம் எப்படியோ அவன் மனத்தில் வேரூன்றி விட்டது.

போனதெல்லாம் போகட்டும், மறுபடியும் புதிதாக வாழ்க்கையை ஆரம்பிப்போம் என்று கல்லூரிக்குப் படிக்கப் போனான். போன இடத்தில் பேராசிரியர்களோடு மோதல் ஏற்பட்டது. ஒரு நாள் வகுப்பு நடந்து கொண்டி ருக்கும்போது “வெள்ளைக்காரர்கள் எல்லோரையும் கொல்ல வேண்டும் ” என்று கூச்சல் போட்டான். அவனைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்தார்கள். அதற்குப் பிறகு எல்லோருடனும் சண்டை. எலக்ட்ரிக் டிரெயினில் இடம் கொடுக்காதவர்களோடு, முன்னாள் மனைவியோடு, சமாதானம் செய்யவந்த போலீஸ்காரர்களோடு என்று யாரைப் பார்த்தாலும் சண்டை.

இந்த நியூயார்க் நகரமே வேண்டாம் என்று வேலை தேடி கலிபோர்னியாவிற்குப் போனான். வேலை கிடைக்கவில்லை. ஒரு துப்பாக்கி வாங்கிக் கொண்டு திரும்பினான்.

டிசம்பர் ஏழாம் தேதி மாலை 5.33. எலக்ட்ரிக் டிரெயின், வேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவர்களையும், கிறிஸ்துமஸ் ஷாப்பிங் முடித்துவிட்டுத் திரும்பி கொண்டிருந்தவர்களையும் சுமந்து கொண்டு புறப்பட்டது. அவன் அந்த ரயிலில் ஏறினான். வண்டி நியூயார்க் எல்லை தாண்டக் காத்திருந்தான். பின் –

பையில் இருந்த துப்பாக்கியை எடுத்தான். இடது, வலது என்று எல்லாத் திசைகளிலும் கண் மண் தெரியாமல் சரமாரியாகச் சுட்டான். ஐந்து பேர் செத்து வீழ்ந்தார்கள். 23 பேருக்கு ரத்தக்காயம்.

குண்டுகள் தீர்ந்துவிட்டன. அவன் இரண்டாவது ரவுண்டு குண்டுகளை நிரப்ப முற்பட்ட நொடிநேர இடைவெளியில், இரண்டு பயணிகள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் மேல் பாய்ந்தார்கள். அவனை மடக்கி ஒரு இருக்கையில் அமர்த்தி அவனிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்தார்கள். அப்போது அவன் சொன்னான் : “ சே, தப்பு பண்ணிவிட்டேன் ”

எங்கே தப்பு நடந்தது? நன்கு படிக்கக்கூடிய மாணவனாக இருந்த அவன் ஏன் சமூக விரோதியாக மாறிப்போனான்?

ஓடும் ரயிலில் நடந்த இந்தப் படுகொலை ஓர் உதாரணம். தினம் செய்தித் தாளைப் பிரித்தால் எங்கேயாவது யாரையாவது சுட்டிருப்பார்கள். சில கொலைகள் படுகோரமானவை. பரீட்சை ஹாலில் ஆசிரியரைச் சுட்டு வீழ்த்திய மாணவன். மூன்று குழந்தைகளின் தாயை கடைத்தெருவில் சுட்டுக் கொன்ற 16 வயதுப் பையன், 12 வயது சிறுவனின் வாயில் துப்பாக்கியை நுழைத்து மூளை சிதற சுட்டுக் கொன்றவர்கள், பட்டியல் மிகப் பெரியது.

“ வீதியில், பள்ளியில், ஏன் சொந்த வீட்டில்கூட அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லை ” இதைச் சொன்னவர், வேறு யாருமில்லை. ஜனாதிபதி கிளிண்டன் ! ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜனாதிபதி வானொலியில் பேசுவது வழக்கம். நியூயார்க் ரயில் படுகொலை நடந்த வாரம், வானொலியில் பேசிய போது, கிளிண்டன் சொன்ன வார்த்தைகள் இவை.

இந்தப் பாதுகாப்பின்மைதான் பல விடை காண முடியாத கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்தக் கைத் துப்பாக்கிகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி ?

கைத் துப்பாக்கிகளைத் தடை செய்ய வேண்டும் என்று சிலர் கோருகிறார்கள். நடைமுறையில் அது சாத்தியமில்லை என்று வேறு சிலர் வாதிடுகிறார்கள். அமெரிக்காவில் தனி நபர்கள் வசம் 6.7 கோடி கைத் துப்பாக்கிகள் இருக்கின்றன. (எல்லா ரகத் துப்பாக்கிகளையும் சேர்த்தால் 20 கோடிக்கு மேல் இருக்கும்) “ எப்படித் தடை செய்ய முடியும். வீடு வீடாகப் புகுந்தா பார்க்க முடியும் ? ”  என்கிறார் போலீஸ் சார்ஜெண்ட் ராபின் குக்.

“ நீங்கள் எப்படித் தடை செய்தாலும் சமூக விரோதிகள் கள்ள மார்க்கெட்டில் வாங்கத்தான் போகிறார்கள். துப்பாக்கியைத் தடை செய்ய முயன்ற போதெல்லாம் அதன் விறபனைதான் அதிகரித்திருக்கிறது ” என்று நேஷனல் ரைபிள் அசோசியேஷனைச் சேர்ந்தவர்கள் வாதிடுகிறார்கள்.

அது என்னவோ உண்மைதான். மார்ட்டின் லூதர் கிங், ராபர்ட் கென்னடி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு 1968-ல் துப்பாக்கி வைத்திருப்பதை ஒழுங்குபடுத்த சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அந்த விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் துப்பாக்கி விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால், புதிதாய் ஒரு சட்டம் நிறைவேறியது. ஜிம் பிராடி என்று ஒருவர், ரீகன் ஜனாதிபதியாக இருந்தபோது, அவரிடம் செய்தித் துறையின் உதவியாளராக இருந்தார். 1981-ல் ரீகனைக் கொல்ல நடந்த முயற்சியின்போது, அந்தக் குண்டைத் தான் வாங்கிக் கொண்டு ஊனமடைந்தார்.

அவரது முயற்சியின் காரணமாக நிறைவேறியிருக்கும் பிராடி சட்டம், துப்பாக்கியை ஒருவருக்கு விற்பதற்கு முன் அவரது முன்கதைச் சுருக்கம் முற்றிலுமாக விசாரிக்கப்படவேண்டும். கேட்டவுடன் துப்பாக்கியை எடுத்துத் தரக்கூடாது. ஐந்து நாள் ஆறப்போட்ட பிறகுதான் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்கிறது.

இதனால் எல்லாம் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று தோன்ற வில்லை. நியூயார்க் ரயில் படுகொலையைச் செய்தவன் 15 நாள் காத்திருந்து முறையாகத்தான் துப்பாக்கியை வாங்கினான்.

பிராடி சட்டம் நிறைவேறப் போகிறது என்று தெரிந்ததும் காயலான் கடையில் கிடந்த துப்பாக்கிகளுக்கெல்லாம் உயிர் வந்துவிட்டன. “துப்பாக்கி வாங்க இதுதான் கடைசி சந்தர்ப்பம் ”  “ போனால் வராது பொழுது விடிந்தால் கிடைக்காது. இன்றே வாங்குங்கள் ” என்ற விளம்பரங்களுடன் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்தது.

சரி, சட்டம் போட்டுத் தடுக்க முடியவில்லை என்றால் வேறு என்னதான் வழி?

“ எல்லோருக்கும் துப்பாக்கி கொடுக்க வேண்டும். துப்பாக்கி வைத்திருக்கும் சமூக விரோதிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள அதுதான் சிறந்த வழி ”  என்கிறது ஒரு கோஷ்டி. பப்ளிக் இண்ட்ரஸ்ட் -  பொதுநலன் – என்று ஒரு பத்திரிகை வருகிறது. அதில் ‘ கோழைகளின் தேசம் ’ என்று ஒரு கட்டுரை. எழுதியவர் ஒரு வக்கீல். “ ஒவ்வொரு குடிமகனுக்கும் துப்பாக்கி கொடுக்க வேண்டும். நம்மிடம் துப்பாக்கி இல்லை என்பதால்தான் சமூக விரோதிகள் மிரட்டுகிறார்கள். நம்மிடமும் துப்பாக்கி இருக்கிறது என்று தெரிந்தால் வாலைச் சுருட்டிக் கொண்டிருப்பார்கள்” என்று வாதிடுகிறது அந்தக் கட்டுரை.

ஆயுதத்தால் ஆயுதத்தை ஒழிக்க முடியும் என்பது அபத்தம். ஆளுக்கு ஆள் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு அலைந்தால், அந்த தேசம் என்ன ஆகும்? ஆனால், அதுதான் வழி என்று பலர், குறிப்பாக பெண்கள் நம்புகிறார்கள் ஸ்மித் அன்ட் வெல்சம் என்பது புகழ்பெற்ற துப்பாக்கிக் கம்பெனி. பெண்களுக்கென்று தனி துப்பாக்கி தயாரிக்கிறார்கள். லேடி ஸ்மித் என்று பெயர். அதன் விற்பனை கடந்த வருடம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது.

“ இதெல்லாம் வெறுமனே பயத்தில் வாங்கி வைப்பது. தேவையான சமயத்தில் அதைப் பயன்படுத்த அவர்களுக்கு கைவராது என்கிறார் பார்பரா ஷா என்றொரு பெண்மணி.அதை மறுக்க முடியாது. கடந்த ஐந்து வருடங்களில் வெறும் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியே ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பதாயிரம் கொள்ளைகள் நடந்திருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்பு நாமெல்லாம் துப்பாக்கிக் கலாசாரம், துப்பாக்கி கலாசாரம் என்று கூச்சல் போட்டோமே, இதுதான் நிஜமான துப்பாக்கிக் கலாசாரம் !

இதன் வேர்கள், சிதறுண்ட குடும்பம், பிளவு கண்ட சமூகம், வேலை இன்மை, வறுமை, பாரபட்சம், நீதி கடைக்காது என்ற அவநம்பிக்கை இவற்றில் இருக்கின்றன. இது ஒரு ஒழுக்கப் பிரச்சினை, சமூக பிரச்சினை. இதை வெறுமனே சட்டம் போட்டுத் தடுத்துவிட முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை.

ஆனால், கிளிண்டன் இந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதுபோல்தான் தோன்றுகிறது. போன வருடம் (1993) நவம்பர் 21-ம் தேதி வீராவேசமாகக் கிளிண்டன் சொன்னார்; “ நாம் நமது நகரங்களை மீட்டாக வேண்டும். ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு குழந்தையாக ” (மீட்போம்) ( “ We have to take our communities back, Community by community, Block by block, Child by child ” )உறுதிமிக்க இந்த முழக்கத்தைக் கேட்கும் போது ஒரு நம்பிக்கை பிறக்கிறதா ?

ஆனால், பத்திரிகையாளர்கள் சிரிக்கிறார்கள். ஏன் ?

மூன்று வருடத்திற்கு முன்பு (செப்டம்பர் 5, 1990) புஷ்ஷும் இதையேதான் சொன்னார். அப்படியே அச்சசலாக இதையேதான் சொன்னார். எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் இதையேதான் சொன்னார், புஷ் சொன்னது இது: “Block by block, School by school, Child by child, we will take back the streets.”

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *