சிறை மீட்ட காதல்

சிறை மீட்ட காதல்

 

கா

ல்கடுக்க பதினைந்து மணி நேரம் காத்திருந்தால், கண்ணாடிப் பெட்டிக்குள் ‘உறங்கி’க் கொண்டிருந்த அந்த முகத்தை 20 நொடிகள், வெறும் 20 நொடிகள் மட்டுமே பார்க்கலாம். என்றாலும் 20 லட்சம் பேர், அந்த நெடிய க்யூவில் நின்றிருந்தார்கள்.பனிக்கட்டியை உதிர்த்து விட்ட மாதிரி சில்லென்று மழை தூறிக் கொண்டிருந்தது.ஆனாலும் நெரிசல் குறையவில்லை. நெரிசலில் சிக்குண்டு 16 பேர் இறந்து போனார்கள்.4000 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு மேல் மருத்துவ மனைகளில் இடமில்லாததால், வெறுமனே முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல்.

இத்தனைக்கும் நாட்டில் ஒரு  டாக்சி கூட ஓடவில்லை. பஸ், ரயிலைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நாடு முழுக்கக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ’ஒரு குவளைத் தண்ணீர் கூட வாங்க முடியாது’ என நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் அர்னால்டோ கார்ட்டசி செய்தி அனுப்பிக் கொண்டிருந்தார்.

பூக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. அந்தப் பெண்ணின் உடல் வைக்கப்பட்ட கட்டிடத்தின் வெளியே 20 அடி உயரத்திற்குப் பூக்கள் குவிந்திருந்தன. அப்படியும் பூக்களுக்கு ஏக டிமாண்ட். நாட்டில் இருந்த பூக்கள் போதாமல் பக்கத்து நாடான சிலியிலிருந்து பூக்கள் தருவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

பெருமதிப்பிற்குரிய போப்பாண்டவர் அவர்களுக்கு, தொழிலாளர்களாகிய நாங்கள்  ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் உங்கள் தாள் பணிந்து வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்: அவரைப் புனிதர் என்று அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என வாடிகனுக்கு ஒரு லட்சம் தந்திகள் பறந்தன.

அந்த ‘அவர்’ ஒரு பெண். ஒரு நடிகை! தலைநகரில் அடியெடுத்து வைத்த போது அவரது வயது 16. கையில் இருந்தது வெறும் 30 ரூபாய்!

*

பி

யூனஸ் ஏரிஸில் நுழைந்த போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது எவாவிற்கு. பியூனஸ் ஏரிஸ் நாட்டின் தலைநகர் மட்டுமல்ல. அர்ஜென்டினாவின் கலைநகரும் அதுதான். அந்த 1930ல், 25 நாடகக் கம்பெனிகள், 9 வானொலி நிலையங்கள், மூன்று பெரிய திரைப்பட நிறுவனங்கள். அவை தவிர அழகான பூங்காக்கள், பிரம்மாண்டமான கடைகள், விடிகாலைவரை நிரம்பி வழியும் உணவகங்கள், புத்தகக் கடைகள், நடைபாதைப் பூக்கடைகள். பாலீஷ் செய்யப்பட்ட கருங்கல் அல்லது பளிங்கு முகப்புக் கொண்ட கட்டிடங்கள்.

நகரில் எல்லோர் வீட்டிற்குள்ளும் பணம் சுரக்கும் கிணறு இருப்பது போலத்தான் தோன்றியது. சரளமாக, தயக்கமின்றி எதற்கெடுத்தாலும் சரக் சரக் என்று நோட்டை எடுத்து வீசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் கையில் இருந்தது வெறும் 30 பெசோ (பணம்)

ஆனால் அதுவே அவருக்குப் பெரிய பணம். ஓர் அறை, கோழிகள், ஆடுகள், ஐந்து உடன்பிறப்புகள் இவர்களோடு பகிர்ந்து கொண்ட ஒரு முற்றம் கொண்ட  கிராமப்புற வீட்டிலிருந்து கிளம்பி வந்திருக்கும் அவருக்கு அது பெரிய பணம்தான். அப்பா கொஞ்சம் வசதியானவர்தான். ஆனால் அம்மா அவரது மனைவி இல்லை, ’துணைவி’. அவரது வசதியை ஊருக்கு அறிவிக்கும் ’தொடுப்பு’. அவருக்கு வேறு குடும்பம் இருந்தது. அதனால் அவரிடமிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது, சாப்பாட்டைத் தவிர.

ஆனால் எவாவிற்கு வேறு கனவுகள் இருந்தன. நட்சத்திரமாகி ஜொலிக்க வேண்டும், நாடு முழுக்கப் பேசப்பட வேண்டும் என்ற கனவு. அவர் சான்ஸ் கேட்டுப் போன நாடகக் கம்பெனிகளில் எல்லாம் அவளை ஏற இறங்கப் பார்த்தார்கள். அவர் உடையில் இன்னும் கிராமப்புறம் மிச்சமிருந்தது. மொழியில் பட்டிக்க்காட்டு பாஷை மணத்தது. தலையை இட வலமாக அசைத்தார்கள். உதட்டைப் பிதுக்கினார்கள்.

” இதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை. நீ பேசாம ஊருக்கே திரும்பிப் போயிடு!” என்றான் தலைநகரில் வங்கி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த தூரத்து உறவினன்.

“எல்லாம் எனக்குத் தெரியும். நீ உன் வாயை மூடிக்கிட்டுப் போ!” எனச் சீறினார் எவா.

ஆனால் அவர் மனதில் இருந்த உறுதி, உடலில் இல்லை. கிராமப்புற வறுமையில், பாதிப் பட்டினியில், வளர்ந்த உடலில் செழிப்பு எப்படி இருக்கும்?

வாடகை குறைந்த அறையைப் பகிர்ந்து கொண்ட, அவரைப் போலவே கிராமங்களிலிருந்து வந்திருந்த, அவரது தோழிகள் முன்னழகை மேம்படுத்திக் கொள்ள எளிய ஒப்பனைகளை எடுத்துச் சொன்னார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம் என்பது அவற்றில் ஒன்று. அதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, ஆபரேஷனுக்கு நாளும் குறித்த போது போலீசிடமிருந்து போன் வந்தது. அவரது தூரத்து உறவினன் வங்கியில் கையாடல் செய்து விட்டதாகவும், பணம் கட்டினால் விடுவித்து விடுவதாகவும் போலீஸ் சொன்னது. கையிலிருந்த பணத்தைக் கட்டி அவனை மீட்டார் எவா. ஆனால் அதன் பின் அவர் வாழ்நாள் முழுதும் பிளாஸ்டிக் சர்ஜரி எதையும் செய்து கொள்ளவில்லை.

தனது நட்சத்திரக் கனவைத் துரத்திக் கொண்டே, நாடகங்களில் சிறு சிறு வேஷங்களில் நடித்துக் கொண்டே, வானொலியிலும் முயற்சித்துக் கொண்டிருந்தார் எவா.உதிரி உதிரியாய் வாய்ப்புக்கள் தவிர உருப்படியாய் ஒன்றுமில்லை.

அப்போது ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த யுத்தம், அர்ஜெண்டைனாவிற்கு ஆதாயமாக இருந்தது.படைகளுக்கான மாமிசம் அர்ஜென்டைனா தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டு, ‘பாக்’ செய்யப்பட்டு போய்க் கொண்டிருந்தது. அதனால் அங்கு கம்பெனிகளில் பணம் புரண்டு கொண்டிருந்தது.

அதில் ஒரு தொழிலதிபரைத் தன் நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்யும் விளம்பரதாரராகப் பிடித்தார் எவா. விளம்பரம் வருகிறது என்றதும் வானொலி நிலையங்கள் அவருக்கு வாய்ப்பளிக்க முன் வந்தன. ‘உன்னை நான் சந்தித்தேன், காதல் பிறந்தது’ ‘காதல் ராஜ்யம்’ ‘காதலின் சத்தியங்கள்’ என ‘கவர்சியான’ தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரித்தார் எவா. எதுவும் எடுபடவில்லை. எல்லாம் தோல்வி. கடைசி முயற்சியாக, அதிகப் பணம் கொடுக்க வசதியில்லாமல் ஒரு கல்லூரி மாணவரைக் கொண்டு  சாதனை நிகழ்த்திய பெண்களின் வரலாறுகளை நாடகங்களாகத் தயாரித்தார். தானே கதாநாயகியாக அதில் நடித்தார். பட்டாசில் வைத்த நெருப்புப் போல அது பரபரவென்று பற்றிக் கொண்டது. சில வாரங்களுக்கு எனத் துவங்கிய நிகழ்ச்சி, ஒரு வருடத்திற்கு மேலாக ஒலிபரப்பாகியது. இரண்டு பிரபல வார இதழ்கள் அவரது படத்தை அட்டையில் வெளியிட்டுக் கட்டுரைகள் எழுதின. அவ்வளவுதான் எவா நாடு முழுக்கப் பிரபலமாகி விட்டார்.

அப்போதுதான் அவர் பெரோனை சந்தித்தார்.

ழகன்தான். ஆறடி உயரம். அழுந்த வாரப் பட்டக் கரும் தலைமுடி. ஓட்டப் பந்தய வீரனைப் போல கிண்ணென்ற உடம்பு. வாழ்வின் செழுமை கன்னங்களில் வண்ணம் சேர்த்திருந்தது. எந்தக் கூட்டத்திலும் கண்ணைக் கவரும் ஒரு கம்பீரம் அவரிடம். அவர் ஜான் பெரான். ராணுவத்தில் கர்னல்.

ராணுவத்தில் அவரை விட மூத்த அதிகாரிகள் இருந்தார்கள். உயர் பதவியில் இருந்தவர்களும் உண்டு. ஆனால் பெரோனின் செல்வாக்கு இளைஞர்களிடம்  வெகுவாகப் பரவிக் கிடந்தது. இரண்டு காரணங்கள். ஒன்று: வாக்கின் வசீகரம்.அவரிடம் இரண்டு நிமிடம் பேசிக் கொண்டிருந்தால் போதும், உங்களை அவரது உலகத்திற்குள் இழுத்து விடுவார்.ஸ்பானிஷ், ஜெர்மன்,ஆங்கிலம், பிரன்ஞ் என நான்கைந்து பாஷைகள் பேசுவார். சின்னக் ககதைகள் சொல்லிச் சிரிக்கச் செய்வார். இடையிடையே கவிதை வரிகள் இரண்டொன்று வந்து போகும். மற்றொன்று. லட்சியத்தின் நியாயம். ஊழலில் ஊறிக் கிடக்கும் தேசத்தை ஒரு ராணுவப் புரட்சியின் மூலம் மீட்டெடுத்துவிட முடியும் என ரகசியமாக சக அதிகாரிகளிடம் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.அதற்காக என்ற ஓர் அமைப்பை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

உறுத்தாமல் பரவும் விடிகாலை வெளிச்சத்தைப் போல பெரோனின் செல்வாக்கு விரிவடைந்து கொண்டிருந்தது. ஊரில் என்ன நடக்கிறது என்று உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த எல்லோருக்கும் அந்த ரகசியம் தெரியும் எவாவிற்கும்தான்.

கலை நிகழ்ச்சி ஒன்றைக் காண வந்திருந்த பெரோன் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். முக்கியஸ்தர்கள் உட்காரும் வரிசை அதுதானே. அவர் அருகில் பிரபல நட்சத்திரம். மேடையிலிருந்து வந்த அழைப்பை அடுத்து நட்சத்திரம் எழுந்து மேடைக்குப் போனார். டக் என்று காலியான அந்த இடத்தில் போய் அமர்ந்து கொண்டார் எவா. பெரோனைப் பார்த்து ஹலோ என்று புன்னகைத்தார். இளம் பெண் ஒருவர் புன்னகைக்கும் போது எதிரே இருப்பவர் சும்மா இருக்க முடியுமா? பெரோனும் புன்னகைத்தார். எவா மெல்லப் பேச்சுக் கொடுத்தார். அந்த அறிமுகம் ஆயுள் முழுதும் தொடரப் போகும் உறவின் முன்னுரையாக விரிந்தது.   

ரச் சேற்றில் இறைத்த விதைகள் எழுந்து நிற்பதைப் போல, பெரான் எதிர்பார்த்தபடியே ஒருநாள் புரட்சி வெடித்தது.ராணுவத்தினரின் கவச வண்டிகள் ஊருக்குள் உருண்டு வந்தபோது அதிகம் எதிர்ப்பில்லை. கப்பல் படை முகாம் ஒன்றில் மட்டும் கலவரம் நடந்து 100 பேர் பலியானார்கள். உலுக்காமலே உதிர்கிற கனி போல அதிகாரம் எளிதாகவே பெரோனின் கையில் விழுந்தது.

அடுத்த கணமே பெரோன் அதிபராகிவிடவில்லை. மூத்த அதிகாரி ஒருவரை ஜனாதிபதியாக அறிவித்துவிட்டு, “எனக்குத் தொழிலாளர் நலத் துறை கொடுங்கள் போதும்!” என்ற போது எல்லோரும் திகைத்தார்கள். ஏனெனில் அர்ஜென்டைனாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரைதான் அமைச்சர்களை நியமிக்க முடியும். அதனால் நிதி, ராணுவம், அயலுறவு, உள்துறை, சுகாதாரம் போன்ற சில ’முக்கிய’ துறைகளுக்கு மட்டுமே அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களின் கீழ் உள்ள பல பிரிவுகளில் ஒன்றாக தொழிலாளர் துறை இருந்தது. பெரோனின் கோரிக்கையை அதிபரால் மறுக்க முடியவில்லை. அதற்குக் காரணம் “தொழிலாளர் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாமல் சமூக நீதியை ஏற்படுத்த முடியாது” என்று பெரோனின் வாதம் அல்ல. ஆட்சியின் அடித்தளமான ராணுவ அதிகாரிகளின் சங்கம் அவர் கையில் இருந்ததுதான்.

பெரோன் அரசியலைக் கவனித்துக் கொள்ள, எவா அவரின் வலதுகரமாகச் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று தொழிற்சங்கங்களை உருவாக்கினார். எளிய மக்களின் வீடுகளுக்குள் எந்தத் தயக்கமும் இல்லாமல் சென்று உட்கார்ந்தார். ஒன்றாகச் சேர்ந்து உண்டார். உடல் மண்ணுக்கு, உயிர் பெரோனுக்கு என்ற ரீதியில் உணர்ச்சி பொங்கக் கூட்டங்களில் முழங்கினார். ஏழைக் குடும்பத்திலிருந்து உயர்ந்த பெண் என்பதால் எளிய மக்களுக்கு இயல்பாகவே அவர் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது.

அந்த ஈர்ப்புத்தான் பெரோனின் உயிரைக் காப்பாற்றியது. விடுமுறை தினத்தில், விடுதியொன்றில் ஈவாவுடன் தங்கியிருந்தார் பெரோன். இரவு. திடுதிடுவென்று இயந்திரத் துப்பாக்கிகளுடன் நுழைந்த கப்பல்படையினர், பெரோனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இரண்டு நாளில் நாடு முழுக்க வேலை நிறுத்தம் அறிவித்தன தொழிற்சங்கங்கள். தொழிலாளர்களும் பெண்களுமாக 3 லட்சத்து 50 ஆயிரம் வீதிகளில் குவிந்தனர். அன்றைய அர்ஜெண்டாவில் ஆண்கள் கோட் அணியாமல் பொது இடங்களுக்கு வந்தால் அது குற்றம். ஆனால் தொழிலாளர்கள் வீதிகளுக்கு வந்து கோட்டை மட்டுமல்ல, சட்டையையும் கழற்றி எறிந்தார்கள். பெ……ரான்…. பெ…..ரான்…. என்று கோரசாகக் கூச்சல் எழுப்பினார்கள். மக்களின் சீற்றத்தினால் தேசம் ஸ்தம்பித்தது. எல்லாம் எவாவின் ஏற்பாடு. அவருக்காக எதையும் செய்ய மக்கள் தயாராக இருந்தார்கள்.

வேறு வழியில்லாமல் அரசு பணிந்தது. பெரோன் கைது செய்யப்படவில்லை, பாதுகாப்பிற்காகத்தான் அவருடன் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் என்று அரசு அறிவித்தபோது மக்கள் கேலியாகக் கை கொட்டிச் சிரித்தார்கள். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெரோன் அரசு மாளிகையின் பால்கனியில் தோன்றி மக்களிடம் பேச முயன்றார். கூட்டம் எவா! எவா! என முழக்கமிட்டது. எவாவை அழைத்து, இடுப்பில் கைவைத்து உயர்த்திக் காட்டினார். அதன் பின்னரே கூட்டம் அமைதியாயிற்று. அப்போது எவா, பெரோனின் காதலிதான். திருமணம் ஆகியிருக்கவில்லை. ஆனால் விரைவிலேயே அவர் திருமதி. பெரோன் ஆனார்.

உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்ச கட்டமாக அரசு ராஜினாமா செய்து பதவியிலிருந்து இறங்கியது. அதையடுத்து நடந்த தேர்தலில் பெரோன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரோனின் அரசில் தொழிலாளர் நல அமைச்சராக எவா நியமிக்கப்பட்டார். ஏழை மக்களை ஈர்க்கும் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அர்ஜெண்டினாவில் மனித வளத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் அதிகம் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டார்கள். எந்தக் குடும்பத்திலும் ஏழாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு தானே ‘ஞானத் தாய்’ (God mother) என்று அறிவித்து ஏராளமான ஞானஸ்நான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் எவா.

த்தனையோ பேருக்கு ஞானத் தாயாக இருந்த எவாவிற்குக் குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. 1951ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தார். மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள். கருப்பையில் கான்சர் என்று கண்டுபிடித்தார்கள். ஆனால் எவா தனக்கு வந்திருப்பது காச நோய்தான் கான்சர் அல்ல என்று நம்பினார்.

” காச நோய்க்குள்ளான எத்தனையோ ஏழைப் பெண்களையும் குழந்தைகளையும் அணைத்து முத்தமிட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு ஏதும் நடக்காது என்று நினைத்திருந்தேன். ஏனெனில் நான் ஏழைக்களுக்காகத்தான் செய்தேன். அதற்குப் பரிசாக கடவுள் இதை எனக்கு அனுப்பியிருக்கிறார் என்றால் அவருக்கு நன்றி” இவை மரணப்படுக்கையில் இருந்த போது எவா சொன்ன வார்த்தைகள்.

இதைச் சொல்லும் போது கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. ஆனால் உதட்டில் புன்னகை மலர்ந்திருந்தது.        
பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *