காதல் வெள்ளம்

காதல் வெள்ளம்

மாலன்

“காதலா?”

அரசரின் நிதிப் பொறுப்பாளர் கண்ணில் குறும்பு மிளிர்ந்தது.

“ம்?” என்ன சொல்கிறீர்கள், புரியவில்லையே என்பதுபோல் அவரைப் பார்த்தார், அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞர். இருபத்தி மூன்று மிஞ்சிப் போனால் இருபத்தி ஐந்து வயது இருக்கலாம்.கெட்டிக்காரன் எனச் சொல்லும் களையான முகம்.

“இல்லை இந்தச் சின்ன வயதில் இந்தியாவிற்குப் போக இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்களே, அங்கே ஏதாவது….” என்று நமட்டுச் சிரிப்புச் சிரித்தார் அதிகாரி.

”இல்லை இல்லை “ என்று அவசரமாக மறுத்தார் ஜோசப் துய்ப்ளே என்ற அந்த இளைஞர். இந்தியாவை எனக்குப் பிடிக்கும். ஆனால் இப்போது நான் அங்கு போவது அதனால் அல்ல. என்னை பாண்டிச்சேரியில் கம்பெனியின் நிர்வாகக் குழுவின் முதல் உறுப்பினராக நியமித்திருக்கிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளப் போயாக வேண்டும்.”

“இத்தனை சின்ன வயதிலா அந்தப் பெரிய பொறுப்பில் நியமித்திருக்கிறார்கள்?”என்று ஆச்சரியப்பட்ட அதிகாரி சட்டென்று எழுந்து நின்று தொப்பியைக் கழற்றி வணங்கினார். ”நல்வாழ்த்துக்கள் மான்ஸ்யூர். இத்தனை சின்ன வயதில் உங்களை அந்தப் பொறுப்பில் நியமித்திருகிறார்கள் என்றால் உங்களுக்கு ஏற்கனவே நல்ல அனுபவம் இருந்திருக்க வேண்டும்” என்றார்.

“அப்படியெல்லாம் ஒன்றும் பெரிய அனுபவம் இல்லை” என்றார் துய்ப்ளே.

“ இந்தியப் பொருட்கள் நேர்த்தியானவை, அங்குள்ள பெண்கள் மாதிரி… என்று கண்ணடித்தவர், ”ஆனால் இந்திய வியாபாரிகள் தந்திரசாலிகள், அங்குள்ள பெண்கள் மாதிரி” என்று சொல்லிய அதிகாரி தனது நகைச்சுவையை தானே ரசித்து உரக்கச் சிரித்தார்.

“அந்த வியாபாரிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்பா சொல்லியிருக்கிறார்”

“அப்பா?”

“பிரான்ஸ்வா துய்ப்ளே.”

அதிகாரி எழுந்து மீண்டும் வணங்கினார். துய்ப்ளேயின் அப்பாஃபெர்மர் ஜெனரல், அதாவது பிரான்ஸ் அரசரின் சார்பாக குடியானவர்களிடம் வரி வசூல் செய்யும் அதிகாரம் பெற்றவர். கிட்டத்தட்ட நம்மூர் ஜமீந்தார் மாதிரி.

“கவலைப்படாதீர்கள், தந்திரத்தை தந்திரத்தால் வெல்லலாம்” என்றார் அதிகாரி எழுந்து வரும் போது.

பிற்காலத்தில் அவருக்குப் பெரிதும் பயன்படக்கூடிய அந்த ஆலோசனையைத் துய்ப்ளே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்குப் பணம் சேர்ப்பது லட்சியம் இல்லை. பணம் சேர்ப்பது அப்பாவின் லட்சியம். இந்தியாவிலிருந்து புகையிலை வாங்கி விற்று அவர் நன்றாகவே சம்பாதித்திருந்தார். துய்ப்ளேயின் லட்சியம் வரலாற்றில் இடம் பிடிப்பது. அறிவியல் கற்று அதன் மூலம் எதையாவது கண்டுபிடிப்பதுதான் அதற்கான வழி என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் அப்பா கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்து கப்பலேற்றி அனுப்புகிறார்.வியாபாரி ஆகியெல்லாம் வரலாற்றில் இடம் பிடிக்க முடியாது என நினைத்தார் துய்ப்ளே. ஆனால் இந்திய தேவி அவருக்கு வேறு ஒரு பரிசு தரக் காத்திருந்தாள்.

கை நெசவில் உருவான பருத்தி, பட்டு, மஸ்லின் துணிகள், கைவினைப் பொருட்கள்,ஆகியவற்றை வாங்கி அவற்றை பிரான்சிலும் ஐரோப்பாவிலும் விற்பதற்காக பிரன்ஞ்ச் அரசின் ஆதரவோடு நிறுவப்பட்ட பிரன்ஞ்ச் கிழக்கிந்தியக் கம்பெனியில் அதிகார வரிசை மிக முக்கியம். ஏனென்றால் மொத்தப் பாண்டிச்சேரியும் அதன் அதிகாரத்தின் கீழ் இருந்தது. பாண்டிச்சேரி தவிர வங்காளத்தில் இருந்த சந்திரநகரிலும் அவர்களுக்கு ஒரு அமைப்பு இருந்தது.

ஒரு கவர்னர், அவருக்குக் கீழ் 6 கவுன்சிலர்கள் என்று நிர்வாக அமைப்பு. அந்த கவுன்சிலர்களின் அதிகாரம் படிப்படியாகக் குறைந்து கொண்டு வரும். முதலாவது கவுன்சிலர் அதிகாரம் மிக்கவர். ஆறாவது கவுன்சிலருக்கு அதிகாரம் குறைவு.அதனால் வயதில் குறைந்தவர்களை அந்தப் பதவியில் நியமிப்பது வழக்கம்.

ஆனால் 23 வயது துய்ப்ளே கவர்னருக்கு அடுத்த நிலையில் முதல் கவுன்சிலராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பிரான்சில் கப்பலேறிய பின் கவர்னர் இறந்து விட்டதால் இடைக்கால நிர்வாகத்தை கவுன்சிலர்களில் மூத்தவரான லெனார் கவனித்துக் கொண்டிருந்தார். இப்போது துய்ப்ளே முதல் கவுன்சிலராகப் பொறுப்பேற்றுக் கொண்டால் அதிகாரம் துய்ப்ளே கைக்குப் போய்விடும். அவருக்கு அதில் பயங்கர எரிச்சல். சின்னப் பயல்களை நம்பி அதிகாரத்தைக் கொடுக்கச் சொல்கிறார்களே அங்கே பாரிசில் இருப்பவர்களுக்கு இங்கே என்ன நடக்குதுனு தெரியுமா?” என்று பொருமிக் கொண்டிருந்தார். சின்னப் பயல்கள் என அவர் பொருமுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவருக்கு  நெருக்கமான, மூன்றாவது கவுன்சிலராக இருந்த டூமா, பதவி நீக்கம் செய்யப்பட்டு, கவுன்சிலின் ஆறாவது உறுப்பினராக டெபுடி மெர்ச்சண்ட்டாக இருந்த ஜாக் வின்சென்ட்டை நியமித்திருந்தது. வின்சென்ட்டுக்கு அப்போது வயது 33. வின்சென்ட்டிற்கு வியாபாரத்தில் டூமா அளவிற்குத் திறமை கிடையாது.

வின்சென்ட்டிற்குத் திறமை இல்லையே தவிர ஆசை இருந்தது. வாழ்க்கையில் பெரிய பணக்காரனாகிவிட வேண்டும் என்ற ஆசை.கம்பெனிக்குச் சரக்குப் பிடித்துக் கொடுப்பதோடு தனியாகவும் வியாபாரம் செய்து வந்தார். ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை.காரணம் வின்சென்ட்டிற்கு ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் கிடையாது.பணமும் ஒரு பிரச்சினை. துய்ப்ளேயைத் தனது பிசினசில் பார்ட்னராகச் சேர்த்துக் கொண்டார் வின்சென்ட்.

ஜேனை முதல் முதலில் அங்குதான் சந்தித்தார் துய்ப்ளே

ரில் வின்சென்ட்டைத் தெரியாதவர்கள் இருக்கலாம். ஆனால் ஜேனைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. அதுவும் மேல்தட்டு மக்களின் பார்ட்டிகளில் போதையில் இருக்கும் ஆண்கள் வம்பளக்கும் பெயர்களில் அவருடையதும் ஒன்று. காரணம் அவர்தான் பாண்டிச்சேரியிலேயே மிக அழகான பெண். பதின்நான்கு வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் பார்த்தவுடனே கண்ணை ஈர்க்கும் கம்பீரம் ததும்பும் அழகு. சரியான அளவுகளில் சந்தனப் பளிங்கில் செதுக்கப்பட்ட சிற்பம் போலிருந்தார்.

ஆனால் வம்பளப்பிற்கு அந்த அழகு மாத்திரம் காரணமல்ல.ஜேன் ஒரு கலப்பினப் பெண். அவளது அப்பா ஆல்பர்ட் பிரன்ஞ்ச்காரர்தான். ஆனால் அம்மா எலிசபெத் ரோசா   கலப்பினப் பெண். அதாவது அம்மாவின் அம்மா தமிழ்ப் பெண். தாய் வழிப் பாட்டன் போர்த்துக்கீசியன்.

பெண்கள் வட்டாரத்திலும் பேச்சுப் பொருளாகத்தானிருந்தார் ஜேன். பதின்மூன்று வயது ஜேனை வயதில் அவரை விட இரண்டு மடங்கு பெரியவரான 32 வயது வின்சென்ட் மணம் புரிந்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அது பெரிய விஷயமல்ல. ஆனால் ஆண்டுக்கொரு குழந்தையை பிரசவித்துக் கொண்டிருந்தார் ஜேன்.வெட்டி அரட்டைக்கு இந்த ஒரு விஷயம் போதாதா?
துய்ப்ளேயும் வின்சென்ட்டும் அநேகமாக தினம் சந்தித்தார்கள். ஜேனைப் பார்ப்பதற்காக அல்ல. கம்பெனியிலேயே இளம் கவுன்சிலர்கள் என்பதாலும், பிசினஸ் பார்ட்னர்ஸ் என்பதாலும் அவர்களுக்குள் பேசிக் கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருந்தன. துய்ப்ளேயின் துணிச்சலிருந்து வின்சென்ட்டும், வின்சென்ட்டின் அனுபவத்திலிருந்து துய்ப்ளேயும் கற்றுக் கொள்ளும் தருணங்களாக அவை அமைந்தன. மிகச் சில மாதங்களில் துய்ப்ளே அந்தக் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் போல் ஆகி விட்டார். வீட்டின் முன்புறத்தில் இருந்த தூணுக்குப் பின் ஜேனின் குழந்தைகள் அவரோடு கண்ணாமூச்சி ஆடின. வாசல் வராந்தாவில் பிரம்பு நாற்காலியில் சாய்ந்திருந்த போது அவர் மீது ஏறி விளையாடின.

ஒரு நாள் இரவுச் சாப்பாட்டிற்குப் பின், “பிசினஸ் எப்படிப் போகிறது?” என்று பேச்சை ஆரம்பித்தார்.

“ஜெயித்து விட முடியும் எனத் தோன்றுகிறது. ஆனால் என் இலக்கு அது அல்ல” என்றார் துய்ப்ளே.

”பின்னே?”

”வந்தோம் தின்றோம் செத்தோம் என்பதா வாழ்க்கை? எனக்கு வேண்டியது வரலாற்றில் ஒரு இடம். குறைந்தது ஒரு வரி”

”ஓ!அதற்கு நீ ஃபிரான்சிற்கு அரசாரக வேண்டும் முடியுமா?” எனக் கிண்டலாகச் சிரித்தாள் ஜேன்.

“வரலாறு அரசர்களுக்கு மட்டும்தான் சொந்தமா?”

துய்ப்ளேயின் குரலில் தொனித்த உறுதியும், முகத்தில் தெரிந்த தீவிரமும் ஒரு நிமிடம் ஜேனைத் திகைக்க வைத்தன.பிரமிக்கவும் வைத்தன. லட்சியங்கள் நிறைந்த மனிதன் என்ற பிரமிப்பு. ஆனால் அவள் வாழ்க்கையை பிராக்டிகலாக அணுகுகிற ஒரு சாதாரணப் பெண்.

“வரலாற்றில் நீ இடம் தேடும் முன் நீ கம்பனியில் உன் இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்”

என்ன என்பதைப் போல் பார்த்தார் துய்ப்ளே.

“சின்னப் பையனுக்குப் பெரிய பதவியா எனக் கம்பெனியில் உன் மீது பலர் புகைந்து கொண்டிருக்கிறார்கள் என எனக்குத் தெரியும் ஜோ”

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்? வயதாகாதது என் தப்பா?”

”உலகில் எல்லா விஷயங்களும் நியாயத்தின் அடிப்படையில் தீர்மானமாவதில்லை. உலக வாழ்க்கையில் எந்த அளவிற்கு நியாயத்திற்கு இடமிருக்கிறதோ அந்த அளவிற்கு தந்திரத்திற்குத் தேவையும் இருக்கிறது”

“புரியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?”

ஜேன் கொடுத்த யோசனை துய்ப்ளேவிற்கு மிகவும் கை கொடுத்தது. 2500 பவுண்டுகளாக இருந்த தனது சம்பளத்தை 1800 பவுண்டுகளாகக் குறைத்துக் கொண்டார். இது மற்ற கவுன்சிலர்களை முதலில் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரையும் விட அனுபவம் குறைவான தனக்கு சம்பளம் குறைவாகத்தானிருக்க வேண்டும் என்று அதற்கு அவர் சொன்ன காரணம் அவர் மேல் மதிப்பை ஏற்படுத்தியது.சின்னப் பையன் என்ற எண்ணம் மறைந்து நியாயமான மனிதன் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

ஜேனுக்கும் துய்ப்ளேவிற்கும் இடையே இருந்தது ப்ரியம்தானா? இல்லை காதலா? இருவருக்குமே அது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் அவரது சகோதரர் எத்தனையோ முறை வற்புறுத்தியும், நண்பர்கள் சிபாரிசு செய்தும் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அவர்களிடையே இருந்தது நட்பா காதலா என்பதைப் புரிய வைத்தது கங்கையில் வந்த ஒரு வெள்ளம்.

பாண்டிச்சேரிக்கு வந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு 1730ல் சந்திரநகருக்கு மாற்றப்பட்டார் துய்ப்ளே. வணிகத்தை மேம்படுத்த வேண்டும் எனக் காரணம் சொன்னது கம்பெனி. பத்தாண்டுக்கு முன் உதவாக்கரை என்று சொல்லப்பட்ட துய்ப்ளே இப்போது வணிகத்தை மேம்படுத்தப் பொருத்தமானவனாக மாறியிருப்பது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. ”இதில் நிச்சயம் ஜேனுக்கு ஒரு பங்குண்டு” என்றது அவன் மனம்

கல்கத்தாவிலிருந்து வடக்கே 19 மைல் தொலைவில் அமைந்திருந்தது சந்திரநகர். கங்கையின் உப நதியான ஹூப்லியின் கரையில் அமைந்த்திருந்த நகரம். நகரம் என்றுதான் பெயரே ஒழிய அது ஏழு சதுர மைல் பரப்பளவில் அமைந்திருந்த ஒரு கிராமம். பாண்டிச்சேரியோ 190 சதுர மைல்.

இதை இன்னொரு பாண்டிச்சேரி ஆக்கிவிட வேண்டும் என நினைத்தார் துய்ப்ளே. செங்கலால் கட்டப்பட்ட நவீன வீடுகள் உருவாகின. (சந்திரநகரில் 11 வருடங்கள் இருந்தார் துய்ப்ளே. அந்த 11 ஆண்டுகளில் அங்கு 2000 வீடுகள் கட்டப்பட்டன) அவற்றில் அதி நவீனமானது துய்ப்ளே தனக்குக் கட்டிக்கொண்ட வீடு. ஹூப்ளி நதிக்கரையில் நதியையொட்டி பிரன்ச்காரர்கள் ஸ்டைலில் உயரமான தூண்கள் கொண்ட வராந்தா, வெளிப்புறம் அமைந்த பெரிய பெரிய ஜன்னல்கள், செதில் செதிலாக அமைந்த ஜன்னல் கதவு என பிரஞ்சுக்காரர்கள் பாணியில் அமைந்த மாளிகை அது.

ஜன்னல்கள் பெரிதாக அமைந்திருந்தன. ஆனால் இரண்டு நாள்களாகவே புழுக்கம் அதிகமாக இருந்தது. வானம் கறுத்து இறுக்கமாக இருந்தது. இலை கூட அசங்காத இறுக்கம்

விடிந்தால் கிரகப்பிரவேசம். பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் துய்ப்ளே. ஆடுகளும் கோழிகளும் வந்துவிட்டன. காலையில் புதிதாகப் பிடித்த ஆற்று மீன்கள் வரும். விருந்தாளிகள் வேறு இடங்களில் தங்கியிருந்தார்கள்.

சந்திரநகருக்கு வந்த சில நாள்களிலேயே வின்சென்ட்டையும் ஜேனையும் அவர்களது குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுவிட்டார் துய்ப்ளே. ஆனால் கிரகபிரவேசம் நடைபெற்ற காலத்தில் பிரான்சிற்குப் போயிருந்தார் வின்சென்ட்

விருந்திற்கான வேலைகளை மேற்பார்வையிட்டு முடித்து விட்டு வியர்வை தாங்காமல் ஆடைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு அரைநிர்வாணமாய்த் தூங்கப் போனார் துய்ப்ளே. நள்ளிரவு யாரோ படுக்கையறைக் கதவைத் தட்டுவது கேட்டது. தட்டவில்லை இடி இடியென இடித்துக் கொண்டிருக்கிறார்கள். வேலைக்காரர்களின் பதற்றம் நிறைந்த குரலும் சேர்ந்து கதவை இடித்தது.

துய்ப்ளே கதவைத் திறந்தார். ”மான்ஸ்யூர்! ஆற்றைப் பாருங்கள்” என்றார் மூத்த வேலைக்காரர் அந்தோனி. ஜன்னலைத் திறந்து பார்த்தார் துய்ப்ளே. மழைக்காலத்து மண் வாசனை வீசியது . சரம் சரமாக மழை இறங்கிக் கொண்டிருந்தது. ஹூப்லியைப் பார்த்தார் ஆறு பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தது. ஆற்றின் கரையிலிருந்து சாதரணமாக ஒரு ஆள் உயரத்திற்குக் கீழே ஆறு ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் கரையை மீறிக் கொண்டு சீற்றத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது ஆறு.

துய்ப்ளேவிற்கு காத்திருக்கும் ஆபத்து புரிந்தது. ”பலகைகளையும் கயிறுகளையும் கொண்டு வாருங்கள்!” என்று கூச்சலிட்டான். ”பலகை கிடைக்கவில்லை என்றால் ஒரு கட்டிலை உடையுங்கள்”  என்றான். கட்டிலை உடைத்து அதில் கொசுவலை மாட்டுவதற்காக இருந்த கம்பங்களையும் உடைத்து ஒரு கட்டுமரம் தயாரனது. அதில் ஏறிப் புறப்பட்டான்.

வேலைக்காரர்கள் நினைத்தது போல் துரை தப்பிப்பித்துப்  போகவில்லை. அந்த வெள்ளத்தில் மிக லாவகமாகக் கட்டுமரத்தைச் செலுத்திக்கொண்டு ஆற்றோரமாகச் சற்றுத் தள்ளியிருந்த இன்னொரு பங்களாவிற்குப் போனான். அது ஜேன் தங்கியிருந்த பங்களா.

வீட்டின் மொட்டையில் நடுங்கிக் கொண்டு நின்றிருந்தார் ஜேன். குழந்தைகள் அவர் ஸ்கர்ட்டைப் பிடித்துக் கொண்டு  காலைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தன. மாடியேறிப் போன துய்ப்ளே ஒரு கையில் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு இன்னொருகையை ஜேனின் இடுப்பில் கொடுத்துத் தூக்கிக் கொண்டார். ஜேனின் உடலில் பெரும்பகுதி அவர் மீது படிந்திருந்தது. அவர்கள் பழக ஆரம்பித்த இந்தப் பதினேழு வருடங்களில் அவர்களது உடல்கள் தொட்டுக் கொள்வது இதுதான் முதல் முறை.

ஜேனின் வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அதுதான் நட்பு காதலாக மாறிய தருணம் என்கிறார்கள். உடலின் நெருக்கத்தால் அல்ல. கொட்டும் மழையில்,பொங்கும் வெள்ளத்தில், உயிரைத் துரும்பாக மதித்து ஒரு கட்டுமரத்தில் தன்னைக் காக்க ஓடி வந்த நெருக்கத்தை வேறு என்ன பெயர் சொல்லியழைப்பது? பத்திரமான இடத்தில் ஜேனை இறக்கிவிட்டதும் அவர் துய்ப்ளேவே எதிர்பாரத ஒரு காரியம் செய்தார். அவரின் கன்னத்தில் ஆழமாக ஒரு முத்தம் பதித்தார்.

வின்சென்ட் இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு,ஜேனும் துய்ப்ளேயும் மணம் செய்து கொண்டார்கள். அப்போது ஜேனுக்கு வயது 33. அதற்குள் 11 குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தார். எத்தனையோ வசதியான பெண்களில் ஒருவரை மணந்து கொள்ள வாய்ப்பும் வயதும் இருந்தும் யாரையும் மணக்காமல் 11 முறை பிரசவம் கண்ட ஒரு பெண்ணை, அவளது 33 வயதில் மணந்து கொண்ட துய்ப்ளேயின் செயல் காதல் உடல்களைக் கடந்தது என்பதற்கு ஒரு சாட்சி.

ஜேனை மணந்து கொண்ட வெகு சீக்கிரமே துய்ப்ளே பாண்டிச்சேரிக்கு கவர்னராக, நாடு முழுக்க உள்ள பிரஞ்ச்சுக் குடியேற்றங்கள் முழுமையிலும் அதிகாரம் செலுத்தும் உரிமையுள்ளவராகத் திரும்பினார். எந்தப் பாண்டிச்சேரி ஜேனைப் பற்றி வம்பளந்ததோ அங்கேயே அவளை ராணி மாதிரி வைத்திருந்தார்.

தமிழ் ரத்தம் ஓடிய அந்தப் பெண்ணும் ராணி மாதிரியே அரசாங்க விஷயத்தில் ஈடுபாடு காட்டி –குறிப்பாக நவாப்களுடனான அரசியல் விஷயங்களில் ராஜதந்திரங்களைக் கடைப்பிடித்து- துய்ப்ளே இந்தியாவில் பிரஞ்ச் ஆட்சியை நிறுவ உதவினார். இஸ்லாமியப் பெண்கள் அவரை ஜான் பேகம் என மரியாதையாக அழைத்தார்கள்.

ஒருமுறை பிரிட்டீஷ்காரர்கள் வசமிருந்த சென்னையைக் கூடக் கைப்பற்றியது துய்ப்ளேயின் ராணுவம். வரலாற்றில் இடம் பெறும் துய்ப்ளேயின் வரலாற்றில் இடம் பெறும் கனவு மெய்யாயிற்று

னால் அந்த துய்ப்ளே பிரன்ஞ் அரசின் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி அவமானங்களைச் சந்தித்து. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு நொடித்துப் போய் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்தார். போர்க்களங்களில் எதிரிகளை ஓட ஓட விரட்டிய ஒரு வீரன் கடன்காரர்களைச் சந்திக்கத் திராணியற்று வீட்டுக்குள் பதுங்கிக் கிடந்த்தைப் பார்க்கச் சகிக்காமல் மனம் உடைந்து போனார் ஜேன்.

அவர் இறப்பதற்கு முன்னால் தன்னுடைய பெட்டியின் ரகசிய அறையைத் திறந்து ஒரு பொக்கிஷத்தை எடுத்துக் கொடுத்தார். அது நடுவில் பெரிய மரகதமும் சுற்றிலும் முத்துக்களும் கொண்ட ஒரு பதக்கம். அவளது அம்மா உனக்குப் பின் குழந்தைகளுக்கு என்று சொல்லிக் கொடுத்த குடும்பச் சொத்து. தனது 11 குழந்தைகளில் எவருக்கும் கொடுக்காத அதை குழந்தையைப் போல் நேசித்த கணவனின் கையில் வைத்து தன் உள்ளங்கையால் மூடினார் ஜேன்.அவரது கண்களும் கடைசி முறையாக மூடிக் கொண்டன.

ஆனால் அந்த மரகதப் பதக்கத்தால் துய்ப்ளேயைக் கடனிலிருந்து காப்பாற்ற முடியவில்லை

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *