தமிழின் முதல் பிரெயிலி இதழ்:‘புதிய தலைமுறை’!

DSCF0347

ஈன்ற பொழுதின். . . . .

ஒரு வரலாற்றுச் சாதனை!

 தமிழின் முதல் பிரையிலி இதழ்: புதிய தலைமுறை !

கீதா மற்றும் எம்.செந்தில் குமார்

தமிழில் வாரம்தோறும் எத்தனையோ இதழ்கள் அச்சிடப்பட்டுச் சந்தைக்கு வருகின்றன. ஆனால்  அப்படி எத்தனை இதழ்கள் வந்தாலும் அவற்றால் பார்வையற்றவர்களுக்குப் பயனில்லை. ஏனெனில் அவர்களால் அதை வாசிக்க முடியாது,-அவை பிரெயிலி மொழியில் அச்சிடப்படாதவரை.

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த நாள்களிலும் நாம் பார்வையற்றவர்களுக்கு பத்திரிகைகள் மூலம் தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைத் தருவதில்லை. அதன் காரணமாக அவர்கள் மைய நீரோட்டத்தில் இணைந்து தங்கள் முழு ஆற்றலோடு சமூகத்திற்குரிய பங்களிப்பைச் செய்ய இயலாத நிலை இருந்து வருகிறது.

இந்தத் தடையை உடைத்தது புதிய தலைமுறை. மாற்றுத் திறனாளிகளின் நாளான டிசம்பர் 3ம் தேதி மதுரையில் இந்திய பார்வையற்றோர் சங்கக் கலையரங்கத்தில் தனது பிரெய்லிப் பதிப்பை வெளியிட்டது புதிய தலைமுறை. பிரயிலியில் வெளியாகும் முதல் தமிழ் இதழ் உங்கள் புதிய தலைமுறைதான்.

DSCF0381(1)

 

அந்தந்த மாதம் புதிய தலைமுறையில் வெளியாகும் சிற்ந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, மாதந்தோறும் வெளியாகும் இந்த இதழ்த் தொகுப்பு பள்ளிகள், கல்லூரிகள், பார்வையற்றோருக்குப் பணி புரியும் நிறுவனங்கள், நூலகங்கள் என 100 பேருக்கு வழங்கப்படும். இதன் இன்னொரு சிறப்பு அம்சம், புதிய தலைமுறைக் கல்வி இதழில் வெளிவரும் பிளஸ் 2 மாண்வர்களுக்கான மாதிரி வினாத்தாளும் பிரெயிலி முறையில் அச்சிடப்படுவதுதான். இதன் மூலம் பார்வைத் திறன் இழந்த மாணவர்கள், மற்ற் மாண்வர்களோடு சரிக்குச் சரி போட்டியிடும் சமவாய்ப்பை அளித்துள்ளது புதிய தலைமுறை

இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரெயிலிப் பதிப்பின் முதல் இதழை புதிய தலைமுறையின் ஆசிரியர் மாலன் வெளியிட, அரவிந் கண் மருத்துவமனையின் நிறுவன உறுப்பினர் டாக்டர். ஜி. நாச்சியார் பெற்றுக் கொண்டார். விழாவிலிருந்து:

ஜின்னா   (தலைவர் இந்தியப் பார்வையற்றோர் சங்கம் )

“வெகுஜனப் பத்திரிகையில் ஒன்றை பிரையிலி முறையில் வெளியிட முடிவு செய்தபோது, சுமார் 20 தமிழ் வார இதழ்களை தேர்வு செய்து, அவற்றில் எந்தப் பத்திரிகையை பிரைலியில் கொண்டு வரலாம் என்று கேட்டோம். சுமார் 90 சதவீதம் பேர் தேர்வு செய்த பத்திரிகை புதியதலைமுறை.

டாக்டர். .நாச்சியார்:  “நமக்கும் வெளி உலகிற்கும் உள்ள ஒரே தொடர்பு ஊடகங்கள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நேரடியாக அவற்றை அறிந்து கொள்ளும் அந்த வாய்ப்பு பார்வையற்றவர்களுக்கு இதுவரையிலும் இல்லாமல் இருந்தது.. தொழில்நுட்பத்தை சமூக உணர்வோடு பயன்படுத்தி அந்த வாய்ப்பை அளித்திருக்கிறது புதிய தலைமுறை.. அதை முதல் இதழிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன். என் அறையில் எப்போதும் அந்த இதழ் இருக்கும். இப்போது அந்த வாய்ப்பு சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது,”

டாக்டர் சி.ராமசுப்ரமணியம் (மதுரை மருத்துவக் கல்லூரி)

“வெறும் கவர்ச்சிப் படங்கள் சினிமாச் செய்திகள் எதிர்மறையான சிந்தனைகள் இவற்றை நம்பி வெலியாகும் பத்திரிகைகளால் மன நிலை பாதிக்கப்பட்டு என்னிடம் வருபவர் பலர்.  இந்த அம்சங்கள் எதுவும் இல்லாத பத்திரிகையை மாலன் கொண்டு வரப்போகிறார் என்றதும் இதற்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் அதனால் மனச் சேர்வடைந்து ‘டிப்ரஷன் ஏற்பட்டு மாலன் நம்மிடம் சிகிச்சைக்கு வரப் போகிறார் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அதைப் பொய்யாக்கி ஒர் புதிய வாசகப் பரப்பை உருவாக்குவதில் வெற்றி கண்ட அவர் இன்று இன்னொரு சாதனையை நிகழ்த்துகிறார்

மாலன்:: ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்ப்பது, ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய செய்திகளை, நம்பிக்கைகளை கொடுப்பது என்ற இரண்டு குறிக்கோள்களைக் கொண்டு புதியதலைமுறை செயல்படுகிறது. இந்த இரண்டுமே நம் தேசம் முன்னேறிச் செல்ல உதவும். மொத்த சமூகமும் ஒன்றிணைந்து முன்னேறினால்தான், முன்னேற்றம் நிலைத்ததாக நீடித்ததாக இருக்கும். அதற்கு சமூகத்தில் சமவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கான ஒரு முயற்சிதான் புதிய தலைஉறையின் பிரெயிலி பதிப்பு. இன்று புதிய தலைமுறை தனது சாதனை வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை அடைகிறது.. இதை சாத்தியமாக்கிய பெருமை முழுதும் நிர்வாக ஆசிரியர் சத்திய நாராயணனுக்கு உரியது

சுமார் 300 பார்வையற்ற மாணவர்கள, பார்வையற்ற அமைப்பைச் சேர்ந்த ஏராளமானவர்கள கலந்து கொண்ட நிகழ்ச்சியில்  பார்வையற்ற மாணவர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலும் நடந்தது..அப்போது ஒரு ஆசிரியர் கூறினார்: ஒரு ஆசிரியர் பாடப் புத்தகத்திற்கு வெளியிலிருந்து கூடுதலாக எவ்வளவு தகவல்கள் சொல்கிறாரோ அதைப் பொறுத்துத்தான் அவருக்கு மதிப்பு. அதே போல பார்வையற்ற ஒருவர் பார்வையுள்ளவர்களிடம் எவ்வளவு சமகால விஷயங்களைப் பேசுகிறாரோ அதைப் பொறுத்துதான் அவருக்கு மதிப்பு. இரண்டையும் புதிய தலைமுறையின் பிரெயிலி பதிப்பு சாத்தியமாக்கியிருக்கிறது. நன்றி.

எங்களை பிரமிக்க வைத்த ஒரு அம்சம்: விழாவில் நிர்வாக ஆசிரியரின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. வாசித்தவர்கள் பார்வைத் திறன் இழந்தவர்கள். பிரெயிலி இதழைப் பிரித்துக் கொண்டு விரல்களால் தடவித் தடவிச் செய்தியை தங்கு தடையில்லாமல் சரளமாகப் பேசுவது போல அவர்கள் வாசித்து நம்மை அசத்தி விட்டார்கள்!

படங்கள் எட்வர்டு இம்மானுவேல்

One thought on “தமிழின் முதல் பிரெயிலி இதழ்:‘புதிய தலைமுறை’!

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *