ஏன் இந்தக் கோபம்?

என் ஜன்னலுக்கு வெளியே பெரிதாய்ப் பூத்துக் கிடக்கிறது அந்த மாக்கோலம். எண்ணிப் புள்ளி வைத்து இழையெடுத்துப் போட்ட கோலத்தில் ஹேப்பி பொங்கல் எனத் தமிழர் திருநாளுக்கு ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்த்து என்னை முறுவலிக்கச் செய்கிறது.. மொழியா முக்கியம்? வாழ்த்துக்குப் பின் உள்ள உணர்வல்லவா உன்னதம். என்று ஆசிர்வசிப்பது போல் அதன் மேல் உதிர்ந்து கிடந்தது ஒரு போகன் வில்லாப் பூ

இந்த போகன்வில்லா இன்னொரு அதிசயம். ஆங்கிலத்தைப் போல ஐரோப்பியர்கள் கொண்டு வந்து போட்ட கொடை. தென்னமரிக்காவில் பிரெசில், பெரு, அர்ஜென்டைனா எனப் பரவி பிரன்ச்காரர்களால் ஐரோப்பாவிற்கு வந்த இந்தப் பூங்கொடியின் பெயர் கூட மனிதப் பெயர்தான். ஆம் போகன்வில்லா என்பது தாவரத்தின் பெயரல்ல, ஓர் மனிதனின் பெயர். இந்தத் தாவரத்தைக் ”கண்டுபிடித்த” பிலிபெர்ட் காமெர்சான் என்ற பிரன்ச்சுக்காரன் அதற்குத் தான் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் தலைவனான லூயி அண்டெனி தே போகன்வில்லா என்பவனின் பெயரை அந்தச் செடிக்கு வைத்தான். அதற்குப் பின்னால் ஒரு காதல் கதை படர்ந்து கிடக்கிறது. கப்பலில் பெண்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில், ஆண் உடை அணிவித்துத் தன் காதலியை கடத்திச் செல்ல கப்பல் தலைவன் அனுமதித்ததால் அவனுடைய பெயரை அந்தத் தாவரத்திற்கு வைத்தான் பிலிபெர்ட்.

காதல் என்பது மலர் மட்டுமா, முள்ளுமல்லவா? மனதைக் கவரும் அந்த மலருக்குப் பின் மறைந்து கிடக்கிறது முள்.

காதலில் மட்டுமா, வாழ்விலும் படர்ந்து நிற்கிறது முள்

என் அருமைத் தோழியும், உலகறிந்த ஓர் எழுத்தாளருமான அம்பையின் பதிவொன்றை முகநூலில் எடுத்துப் போட்டிருந்தார் நண்பர் ஒருவர். ”மும்பையில் பெண்கள் பெட்டியில் பத்துப் பனிரெண்டு வயது வரை சிறுவர்கள்ஏறலாம். இரண்டு வாரங்கள் முன்பு நான் பெட்டியில் ஏறியபோது ஒரு சிறுவன்பத்து வயதிருக்கும் இரண்டு கால்களையும் கிட்டத்தட்டப் பாதி உடம்பையும்வெளியே நீட்டியபடி வாயில் அருகே உட்கார்ந்திருந்தான். மாணவன் இல்லை.வண்டியில் எதையாவது விற்க வரும் பையனும் இல்லை.ஸ்டேஷன்களில் அங்கிங்குஅலையும் சிறுவர்களில் ஒருவன் போலும். சரியாக உட்காரச் சொல்லி அதட்டினேன்.மறுத்தான். விழுந்துவிடுவாய் பையா, பிடிவாதம் பிடிக்காதேஎன்றுவற்புறுத்தி உள்ளே வந்து உட்காரச் செய்தேன். தமிழ்ப் பையன் போல் தெரியவே, “ஏன் இப்படிச் செய்கிறாய் தம்பி?” என்று திட்டினேன். முறைத்தான். அடுத்தஸ்டேஷனில் இறங்கினான். நான் சன்னலோர இருக்கையில் இருந்தேன். வண்டிகிளம்பியதும் சட்டென்று முன்னால் வந்து என் முகத்தில் காறித் துப்பினான்.ஓடிவிட்டான். அருகிலிருந்தவர்கள் தந்த பேப்பரால் முகத்தைத் துடைத்துக்கொண்டேன். உங்களுக்கு ஏன் இந்த வேலை எல்லாம்? அவன் விழுந்து தொலையட்டுமே?” என்றார்கள் எல்லோரும். எனக்கு அவனிடம் கோபமே வரவில்லை. இவ்வளவு கோபமும்ஆத்திரமும் உள்ள அவன் எதிர்காலம் என்னவாகும், அவனைச் சுற்றியுள்ளவர்கள்வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கவலைப்பட்டேன். மும்பாயில் இப்படி எத்தனைசிறுவர்கள்!!” என்று எழுதுகிறார் அம்பை.

மும்பையில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க இப்படிப்பட்ட சிறுவர்கள் இருக்கிறார்கள். பழத்தை எடுத்துப் பார்த்துவிட்டு விலை கேட்டு மருண்டு வாங்காமல் போன பெண்ணின் மீது தண்ணீர் பாட்டிலைப் பல்லால் கடித்துக் கிழித்துப் பீச்சியடித்த இன்னொரு சிறுவனைப் பற்றி நண்பர் ஒருவர் நேற்றுச் சொன்னார்.

சிறுவர்களிடம் மட்டுமல்ல, சமூகத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள் பலரிடம் ஏதோ ஒரு கோபம் புகைந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் சீற்றமாகவும் பல நேரங்களில் வெறுப்பாகவும், வன்முறையாகவும் அது வெளிப்படுகிறது. தில்லிப் பாலியல் சம்பவம் உள்பட, பரவலாக நடைபெறும் பலாத்காரங்கள் கூட அப்படி ஒரு வெளிப்பாடோ என நான் யோசித்திருக்கிறேன்.

கல்வி கைக்கெட்டாமல் போன கசப்பா? வறுமை என்ற முள்ளா? தன்னைப் புறக்கணித்து விட்டுச் சமூகம் விரைந்தோடிச் செல்கிறதென்ற வெறுப்பா? என்னை உரமாகப் புதைத்து அதில் எழுந்த விருட்சத்தின் கனிகள் இவர்களது பணம், படிப்பு பகட்டு என்ற தன்னிரக்கமா? என்ன கோபம் இவர்களுக்கு?

என்னவாக இருந்தாலும் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கோபம். நாம் கவலை கொள்ள வேண்டிய கோபம். தீர்வுகளைத் தேடச் சொல்லும் கோபம்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்று எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார் வள்ளுவன்.. கொண்டவனை மட்டுமல்ல, சுற்றியிருப்பவர்களையும் எரித்துவிடும் நெருப்பு கோபம்.

இந்த தேசம் எரிவதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும்.   

புதிய தலைமுறை – ஜனவரி 17 2013

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *