ஒளியும் இருளும்

இன்னும் என் ஜன்னலுக்கு வெளியே இன்றைய செய்தித்தாள் வந்து விழவில்லை. செய்திகள் சலிப்பேற்றும் போதெல்லாம் வாழ்க்கையை வாசிக்க நான் முகநூல் (face book) முன் வந்தமர்வது வழக்கம். அதுவும் என் ஜன்னலைப் போல அறியாத முகங்களை வாசிக்கவும் நேசிக்கவும் உதவும் ஓர் சாதனமாக இருக்கிறது.

தன்னுடைய படங்கள், தனக்குப் பிடித்த படங்கள், சத்தான மேற்கோள்கள், சாரமற்ற வெற்று அரட்டைகள், முறுவலிக்கச் செய்யும் துணுக்குகள், முகம் சுளிக்கச் செய்யும் ஆபாசங்கள், கை குலுக்கல்கள், கண் சிமிட்டல்கள் எனக் கலகலவென கல்யாண வீட்டைப் போல ஆகிவிட்டது முகநூல்.அந்த கலகலப்பிற்கு நடுவே யாராலும் கண்டு கொள்ளப்படாமல் (அபூர்வமாக) கசிந்து ஓடும் சங்கீதத்தைப் போல முகநூலிலும் அவ்வப்போது சிந்தனைக்குப் பொறி கொடுக்க சில விஷயங்கள் கிடைப்பதுண்டு.

அப்படி ஒன்று இன்று கிடைத்தது. உண்மையா பொய்யா என உறுதி செய்து கொள்ள இயலவில்லை. ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது.   தமிழக முதல்வராய் இருந்த போது ஒரு முறை திருச்சிக்குச் சென்ற காமராஜரை மாலை அணிவித்து வரவேற்கப் பலரும்மாலைகளுடன் காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் பள்ளி ஆசிரியர். அவர் ஆசிரியர் என்பதை அறிந்த காமராஜர், பசங்களுக்குப் பாடம் நடத்துவதை விட்டுவிட்டு  எனக்கு ஏன் மாலை போட வந்தீர்கள் எனக் கடிந்து கொண்டார் என்கிறது அந்தத் துணுக்கு.

இன்று வகுப்பறைக்கு வந்து பாடம் கற்பிப்பதைத் தவிர வேறு எத்தனை பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை அறிய நேர்ந்தால் காமராஜர் கண்ணீர் சிந்தியிருப்பார் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனால் இன்று அரசுப் பள்ளிகளில் வீழ்ந்து கிடக்கும் கல்வித் தரத்தையும், அதற்குக் காரணமான ஆசிரியர்களையும் காண நேர்ந்தால் அவர் ரெளத்திரம் பழகியிருப்பார் என்பது நிச்சயம்.

ஒன்றாம் வகுப்பில் இருக்கும் மாணவர்களில் 45% மாணவர்களால்தான் தங்கள் தாய் மொழியில் உள்ள எழுத்துக்களை அடையாளம் கண்டு  கொள்ள முடிகிறது, 2சதவீத மாணவர்களாலேயே இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தைப் படிக்க முடிகிறது என்று அதிர வைக்கிறது ஆண்டு தோறும் வெளியாகும் அசர் அறிக்கை. தமிழிலேயே இந்த நிலை என்றால் ஆங்கிலத்தைப் பற்றி அதிகம் கேட்க வேண்டாம். கணிதத்தின் நிலை இன்னும் மோசம்.ஐந்தாம் வகுப்பில் உள்ள 13 சதவீத மாணவர்களால்தான் வகுத்தல் கணக்கைப் போட முடிகிறது. தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிக்கும் திறன் குறைந்துள்ளதாகவும், கூறுகிறது ஆய்வு  .

இது ஏதோ அறிக்கை சொல்கிற புள்ளி விவரம் என்று அலட்சியப்படுத்தி விட முடிவதில்லை.குரல் வலை என்ற வலைப்பதிவில் ஒருவர் எழுதியுள்ள அனுபவத்தை ஆசிரியர் குரல் என்ற முகநூல் வழியே வாசிக்கும் போது இந்தப் புள்ளி விவரம் அத்தனை பொய்யானதல்ல என்றே தோன்றுகிறது.

நான் டியூசன் எடுக்கும் காலத்தில் எங்களிடம் ஒரு மாணவன் வந்தான், அவன் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய அப்பா என் அண்ணனிடம் இவன எப்படியாவது எட்டாவது பாஸ் பண்ண வெச்சிருங்கன்னு கெஞ்சிட்டுப் போனார். எங்களிடம் வந்தபொழுது அந்த பையனுக்கு தமிழ் எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரியாது. ஆங்கிலம் கேட்கவே வேண்டாம்.அதே சமயத்தில் எங்களிடம் அருகிலிருந்த சில மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்களும் இருந்தார்கள். அவர்களில் மூன்றாம் வகுப்பு மாணவன் இவனை விட நன்றாக தமிழும் ஆங்கிலமும் ஏன் ஹிந்தியும் கூட வாசித்தான்….இன்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகக் குறைவாகவே சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் அரசுப் பள்ளிகளை விட நன்றாக இருக்கிறது என்று ஒத்துக்கொண்டுதானாக வேண்டும்.” என்று எழுதுகிறார் வலைப்பதிவர்.

ஆசிரியர்களைப் பற்றி இப்படிப் பொத்தாம் பொதுவாக நாம் பேசிவிட முடியாது என்பதே புதிய தலைமுறையின் அனுபவம். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நரையன்குளம் ஒத்தப்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தங்களது சொந்தச் செலவில் வல்லுநர்களை நியமித்து ஆங்கிலம் பேசக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைப் பற்றி புதிய தலைமுறை தனது இதழில் பதிவு செய்திருக்கிறது. அவர்களைப் போன்ற எத்தனையோ ஆசிரியர்களை என் நினைவிலிருந்து சொல்ல முடியும். ஏனெனில் எங்கள் இதழின் பக்கங்களுக்குக் கனம் சேர்த்த பெரியவர்கள் அவர்கள்

எளிதாக ஆசிரியர்களை இரண்டு வகையாகப் பகுத்து விடலாம். நாளையத்  தலைமுறையை நாம் உருவாக்குகிறோம், கோவில் கட்டுவதற்காகக் கல்லுடைக்கிறோம் என அறிவிலே தெளிவும் அகத்திலோர் அன்பின் வெள்ளமும் கொண்ட ஆசிரியர்கள் ஒரு வகை. கூலிக்குக் கல்லுடைக்கிறோம் என்ற பார்வையை குறுக்கிக் கொண்ட ஆசிரியர்கள் மறுவகை.

ஆசிரியர் குரல் என்ற முகநூல்.ஒரு சம்பவத்தைப் பதிந்திருக்கிறது. “அந்த பள்ளியில் பல வருடங்களாக பணியில் இருந்தபோதும் ஒரு தலைமை ஆசிரியை தண்ணீர் வசதியின்றி அந்தப் பள்ளியின் கழிப்பறைகளைப் பயன்படுத்த வழியின்றி இருந்த போது குழாய்க் குறைபாடு என்று சொல்லி தட்டி கழித்துவந்திருக்கிறார். இத்தனைக்கும் அந்தப் பள்ளியில் பெரிய வயது வந்த பெண்பிள்ளைகள் கூட இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய செய்தி. அடுத்து அவருக்குப் பின் வந்த தலைமை ஆசிரியை வந்த 2 ம் நாளே உள்ளூர் இளைஞர்களை அழைத்து நீர்க்குழாய் பிரச்சினையை ஆராய்ந்தால் அது ஒரு சாதாரண திருகாணி இல்லாப் பிரச்சினையாக முடிந்து உடனே அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் தங்கள் பொறுப்பை உணர்ந்த மனிதர்கள் இருக்கும் எந்த இடமும்-பள்ளியோ, ஊடகமோ, அலுவலகமோ, இல்லமோ- ஒளிர்கிறது.சுயநலத்தை சுவாசமாக்க் கொண்ட எந்த இடமும் இருள்கிறது.

 புதிய தலைமுறை ஜனவரி 31 2013

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these