இலக்கியம் சோறு போடுமா?

ஜன்னலுக்கு வெளியே விழுந்து கிடந்த செய்தித்தாள், தமிழ்த் தாலாட்டுப் பாடலுக்கு இந்த ஆண்டு ஆஸ்கார் பரிசு கிடைக்க வாய்ப்பிருக்கிறது எனப் புன்னகை பூக்க செய்தி வெளியிட்டிருந்த்து. பையின் வாழ்க்கை என்ற படம் அந்தப் பாடலுடன் துவங்குகிறது, (படத்தைப் பற்றிய தகவல்களுக்குக் காண்க 6 டிசம்பர் 2012 தேதியிட்ட புதிய தலைமுறை இதழ்) அந்தப் பாடலைப் பாடிய பாம்பே ஜெயஸ்ரீக்கு அந்த விருது கிடைக்கலாம் எனச் சொன்னது செய்தி .

படம் சொல்கிற பை, Pi படேல் என்ற இந்தியச் சிறுவன் அந்தப் பட்த்தின் விளம்பரஙகளைப் பார்த்த போது எனக்கு வேறு ஒரு Pi நினைவுக்கு வந்தது..நான் பள்ளிக்கூட்த்தில் சந்தித்த பை. கணித வகுப்புகளில் வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிடச் சொல்லிக் கொடுத்த சூத்திரத்தில் சந்தித்த 22/7 என்கிற பை. அது ஒரு கிரேக்க எழுத்து என ஆசிரியர் சொன்னார். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து அதைப்பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் சொன்னார் ஆசிரியர் அன்று.

ஆனால் கணிதத்தில் கற்றதை இலக்கியத்தில் கண்டதும் இதயத்தில் ஆச்சரியங்கள் முளைத்தன. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே தமிழர்கள் ’பை’ யைக் கண்டறிந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதை கண்டவர் ஒரு பெண்!

காக்கைப் பாடினியார் என்றொரு புலவர் சங்க்காலத்து காக்கைப்பாடினியார் அல்ல. அவருக்குப் பின் வந்தவர். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் எழுதிய நூல் காக்கைப்பாடினியம். இலக்கண நூல். இந்த நூல் இப்போது நமக்கு முழுதாகக் கிடைக்கவில்லை. பல்வேறு நூல்களில் காட்டப்பட்டிருந்த மேற்கோள்களைத் திரட்டித் தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ஒர் நூலாகப் பதிப்பித்தார். அதில்  விட்டமோர் ஏழு செய்துதிகைவர நான்கு சேர்த்துசட்டென இரட்டி செயின்திகைப்பன சுற்றுத்தானே”என்றோர் சூத்திரம் வட்டத்தின் சுற்றளவைக் கண்டறியக் கற்றுக் கொடுக்கிறது. இதன் அர்த்தம், கணித மொழியில் சொன்னால் 2 x pi x r

வட்டத்தின் பரப்பளவைக்  கண்டறிய ‘பை’யைப் பயன்படுத்திய சூத்திரம் பின்னால் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த கணக்கதிகாரத்தில் கிடைக்கிறது

சுருக்கமாகச் சொன்னால் பையின் வாழ்க்கை –Life of Pi- தமிழர்களிடமிருந்துதான் துவங்குகிறது.

ஆழ்ந்து யோசித்தல் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கணிதமும் அளவுகளும் இல்லாமல் கல்லணையையோ, பெரிய கோயிலையோ எப்படித் தமிழன் கட்டியிருக்க முடியும்.? இன்னும் சொல்லப்போனால், இதில் ஆச்சரியம் என்று ஏதாவது இருக்குமானல் அது இலக்கியம் அறிவியல் பேசுகிறதே என்பதாகத்தான் இருக்க முடியும்.

இன்றும் –அதாவது  எங்கும் எதிலும் அறிவியல் தமிழர்கள் வாழ்வில் ஊடுருவி விட்ட இன்றும் தமிழில் அறிவியல் புனைகதைகள் – அவ்வளவாகத் தலை எடுக்கவில்லை. காதல் அனுபவம் இல்லாமலே காதல் கவிதைகள் எழுதவும், ஜென் பெளத்தம் தெரியாமலே ஹைக்கூ புனையவும் முற்படுகிற தமிழ் இளைஞர்கள் அன்றாடம் அறிவியலை நுகர்ந்து கொண்டிருக்கும் போதிலும் அறிவியல் புனைகதைகளில் புத்தியைச் செலுத்தவில்லை என்பதுதான் ஆச்சரியமே அன்றி அன்றைய இலக்கியம் அறிவியல் பேசுவது அதிசயமே அல்ல.

மலரையும். நிலவையும், கதிரையும், காற்றையும் உதாரணங்களாகச் சொல்கிற இலக்கிய உலகில், அறிவியலை உதாரணம் காட்டிப் பேசுகிறார் அன்றையப் புலவர் ஒருவர். அவர் பெயர் உருத்திரங்கண்ணனார்.

கடல் நீர் ஆவியாகி, மேகமாகி, மலையில் கவிந்து, மழையாக இறங்கி, நிலத்திலே ஓடி, மண் குடித்தது போக, மீந்தது கடலில் கலக்கிறது என்பது ஆரம்பப் பள்ளியில் நாம் படித்த பால பாடம். ஆனால் அன்றைய ஐரோப்பாவில் அதை அறியாமல், கடல் எப்படி உருவாகிறது என்பதைப் பற்றிய கற்பனைகள் உலவி வந்தன. பூமிக்ககடியில் பெரிய குகை வாயில்கள் இருக்கின்றன, அவற்றின் மூலமாக ஆறு குளம் ஊற்று கடல் எல்லாவற்றிற்கும் நீர் வருகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தார் பிளாட்டோ (கி.மு.ஆறாம் நூற்றாண்டு)

ஆனால் பண்டையத் தமிழர்களுக்கு நாம் இன்று பள்ளியில் படிக்கும் பாலபாடம் அன்றே தெரிந்திருந்த்து. பூம்புகார் கப்பல் துறையில் சரக்கு ஏற்றப்படுவதையும், இறக்கப்படுவதையும் பார்த்த கவிஞனுக்கு மழை மேகம் கடலில் இருந்து நீர் மொண்டு  தரையில் பெய்வதையும் தரை நீர் ஓடிக் கடலில் சேர்வதும் நினைவுக்கு வருகிறது. வான் முகந்த நீர் மலை பொழியவும், மழை பொழிந்த நீர் பரப்பவும், மாரி பெய்யும் பருவம் போல என்று வர்ணிக்கிறார் பட்டினபாலை படைத்த உருத்திரங்கண்ணனார்.

தமிழர்களுடைய மரபணுக்களில் அறிவியல் ஒளிந்து கொண்டிருக்கிறது. அது ஏன் மனோபாவத்தில் இல்லை என்பதுதான் ஆராய்ச்சிக்குரிய விஷயம். அறிவியல் மனோபாவத்தைத் துலக்க  இலக்கியம் ஏதேனும் உதவ முடியுமா என்பது நாம் அனைவரும் உட்கார்து பேச வேண்டிய ஒரு விஷயம்.

அதற்கு முன்னால் இலக்கியம் பற்றிய மிரட்சிகளையும் மிகைப்படுத்தல்களையும் விரட்ட நாம் ஏதாவது செய்தாக வேண்டும். மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்தால் இலக்கியத்தின் இனிப்பு உறைக்காது.யோசிப்பதற்கான ஓர் கருவியாக அதைக் கூர் தீட்டினால் ஒரு வேளை பலன் தரலாம்.

”எல்லாம் சரி, இலக்கியம் சோறு போடுமா?” எனக் கேட்கிறார்கள் சிலர். இலக்கியம் வயிற்றுக்குச் சோறு போடாது. அறிவுக்குப் பசி கொடுக்கும்

புதிய தலைமுறை – ஜனவரி 24 2013

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these