விஸ்வரூபச் சிக்கலின் விதைகள்

ஏனோ தெரியவில்லை, உறக்கம் பிடிக்கவில்லை. எழுந்து ஜன்னலைத் திறந்தேன். என் ஜன்னலுக்கு வெளியே இருளை விரித்துப் போட்டுக் கொண்டு ஈரக் காற்றால் கோதிக் கொண்டிருந்தது வானம்.விழிப்புற்ற வேளைகளில் எல்லாம் எனக்குப் புத்தகங்களே பெருந்துணையாக இருந்திருக்கின்றன. ஒழுங்கற்ற நூலகத்தில் புத்தகம் தேடுவது என்பது ஓர் சுவையான விளையாட்டு. கவிதை தேடப் போன கைகளில் தத்துவம் அகப்படும். வாழ்க்கைச் சரிதங்களை வாசிக்கத் தேடினால் இலக்கியம் எதிர்ப்படும். இலக்கியப் புத்தகங்களுக்குப் பின்னால் அரசியல் ஒளிந்திருக்கும் இன்றைக்கு எதையும் தேடப் போவதில்லை, எந்தப் புத்தகம் கையில் கிடைக்கிறதோ அதைப் புரட்டுவோம் என நினைத்தேன். பாரதியார் மாட்டிக் கொண்டார்.

”சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா?” என்று கிருஷ்ணனிடம் கேட்டான் அர்ஜுனன்.”இப்போதைக்கு சணடை நல்லது; எப்போதும் சமாதனம் நல்லது” என்றான் கிருஷ்ணன் என்று எழுதுகிறார் பாரதி.

இன்று ரொக்கம், நாளை கடன் என்ற ரீதியில் பாரதியாரின் கிருஷ்ணன் சொல்வதற்குக் காரணம் கருத்துக்களால் பிரிந்து கிடக்கும் உலகிற்கு சமாதானம் சிறந்தது. ஆனால் சண்டை தவிர்க்க முடியாதது, அதாவது அமைதி என்பது லட்சியம். பயங்கரவாதம் என்பது யதார்த்தம்.

இன்னும் ஒரு படி மேலே போய் யோசித்துப் பார்த்தால், சணடைகளுக்குக் காரணம், கருத்து மாறுபாடுகள் அல்ல. ஏன், கருத்துக்களே கூட அல்ல. அந்தக் கருத்துக்கள் அதிகாரம், குறிப்பாக அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற வேட்கைதான் சண்டைகளுக்குக் காரணம்.

ஒத்த கருத்துடையவர்களுக்கிடையே ஏற்படும் உரசல்களைப் பார்த்தால் இதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. சகமனிதனிடம் நேசம் பாராட்டச் சொல்லி மன்றாடுகின்றன.எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் எனத் திரும்பத் திரும்பச் சொல்கின்றன.

ஆனால் அன்பே சிவம் என்று போதித்தவர்கள் சமணர்களைக் கழுவேற்றினார்கள். சிறு பூச்சிகளுக்குக் கூட துன்பம் தரக்கூடாது என்று அறிவுறுத்திய சமணர்கள், சைவ நாயன்மாரை கல் தூணில் பூட்டிக் கடலில் வீசினார்கள்.அகிம்சை பேசும் பெளத்தர்கள் இலங்கையில் தமிழர்களைக் கொன்றார்கள். எல்லோரும் இன்புற்றிருக்கச் சொல்லும் இந்துக்கள் பாப்ரி மஸ்ஜித்தை இடித்தார்கள்.இஸ்லாத்தின் பெயரால் பாமியான் புத்த சிற்பங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.கான்ஸ்டைன்டன் காலம் வரை யூதர்கள் கிறிஸ்துவர்களைச் சித்தரவதை செய்தார்கள். உலகப் போரின் போது கிறிஸ்துவர்களால் யூதர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள்.சிலுவைப் போர்களில் இஸ்லாமும் கிறிஸ்துவமும் மோதிக் கொண்டன. எந்த மதத்தவருக்கும் எந்நேரமும் இலவசமாக உணவு கொடுக்கும் சீக்கியர்களின் பொற்கோவிலில் மத குருமார்கள் ஆயுதம் ஏந்தி நிற்க ரத்தம் பெருக்கெடுதோடியது.

எங்கே பிரச்சினை வந்தது?

மதம் மதமாக இருக்கும் வரை மனிதர்களை மென்மைப்படுத்தும் சாதனமாக இருக்கிறது. அரசியல் அதிகாரத்திற்கு ஆசைப்படும் போது அதுவே மனிதர்களை மிருகங்களாக மாற்றுகிறது. உலகெங்கிலும் மதம் சார்ந்த பயங்கரவாதத்தின் வேர்கள் அரசியல் அதிகாரம் என்ற விதைக்குள்ளிருந்து வெளிப்படுகின்றன.

’பயங்கரவாதம் என்பது ஓர் எதிர்வினை. முதல் கல்லை நாங்கள் எறிவதில்லை. எங்கள் மீது கற்கள் வீசப்படும் போது நாங்கள் களமிறங்க வேண்டியிருக்கிறது. நாங்கள் எந்த ஆயுதத்தை ஏந்துவது என்பதை நாங்களல்ல எங்களது எதிரி தீர்மானிக்கிறான்” என்று பயங்கரவாதிகள் வாதிடுகிறார்கள்.

நியாயம்தானே எனத்தான் தோன்றுகிறது. ஆனால் உற்றுப் பார்க்கும் போது இன்னொரு உண்மையும் வெளிப்படுகிறது. வன்முறை எங்கு வாழ்க்கை முறையாகிறது? எந்த அமைப்பில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லையோ அங்கெல்லாம் வன்முறை பயிராகிறது.

மாற்றுக் கருத்து என்பது என்ன? சமூகத்தின் பெரும்பான்மை அபிப்பிராயத்திலிருந்து முரண்பட்டு நிற்கும் கருத்துத்தான் மாற்றுக் கருத்து. அரச பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கே ஆளும் உரிமை என்ற நாட்டில் ஜனநாயகம் என்பது மாற்றுக் கருத்து. ஜாதிப் பெருமை பேசும் சமூகத்தில் கலப்புத் திருமணம் மாற்றுக் கருத்து. திருமணம் என்பது அடிமை வியாபாரத்திற்கான அமைப்பாக வடிவெடுக்கும் போது தனித்து வாழ்தல் என்பது மாற்றுக் கருத்து.

ஒரு கருத்து, பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் காலூன்றிக் கொள்வதில், வழிபாட்டுத் தலங்கள், நாடாளுமன்ற சட்ட மன்ற அமைப்புக்கள், நீதி மன்றங்கள், அரசியல் கட்சிகள், பள்ளிக்கூடங்கள், குடும்பம் என சமூகத்தின் பல அமைப்புக்கள் பங்களிப்புச் செய்கின்றன. ஆனால் மாற்றுக் கருத்துக்களின் ஊற்றுக் கண்களாகவே ஊடகங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஊடகம் என்றால் பத்திரிகைகள் மட்டுமல்ல, சினிமாக்களும்தான்.

இந்தியச் சமூகத்தில் பெரும்பான்மைக் கலாசாரத்திலிருந்து மாறுபட்டு வாழ்வது சிரமமானது. சமூக நிறுவனங்களின் புறக்கணிப்பையும், பொது மக்களின் ஏளனங்களையும் அவர்கள் எதிர் கொள்ள வேண்டிவரும். நாத்திகம், காதல், திருமணமின்றி சேர்ந்து வாழ்தல், திருமணமின்றி தனித்து வாழ்தல் என எத்தனையோ எடுத்துக்காட்டுக்களை வரலாறு நம் முன் நிறுத்துகிறது.

இந்த நெருக்கடிகளை எதிர்கொள்கிறவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது ஊடகங்களின் அடிப்படைக் கடமை. ஏனெனில் பெரும்பான்மையான மக்களைப் பாதுகாப்பதற்காக உருவானவை அரசும் அமைப்பும் (State, Establishment). மாற்றுக் கருத்துக்களை ஏந்தி நிற்க எழுந்தவை ஊடகங்கள்.

ஆனால் அரசியல் அமைப்பைப் போலவே நம் ஊடகங்களும் ஜனநாயகத் தன்மையை இழந்து வணிகமயமாகிவிட்டன என்பது ஓர் சமகாலத் துயரம். அரசியல் அதிகாரத்தாலும் பண பலத்தாலும் அவை திரிக்கப்பட்டு (Manipulate) வருகின்றன.

கருத்து, இன, மொழி, மதச் சிறுபான்மையோருக்கு பெரும்பான்மையோர் மீது ஏற்பட்டுள்ள அச்சததையும் அவநம்பிக்கையையும் களைய முனைவதற்கு பதில் அவை காசு பார்க்கும் ஆசையில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ளவர்களைத் திருப்தி செய்ய முனைகின்றன. இந்த முனைப்பில், முரண்பாட்டில் விஸ்வரூபம் எடுத்து நிற்பதுதான்  இன்றைய ஊடகச் சிக்கல்.

பாத்திரம் தவறும் போது ஓசை எழுவது இயல்பு.

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *