கூகுள் குழந்தைகள்

இலைகள் கூட உறங்கும் இளம் காலை நேரம் என் ஜன்னலுக்கு வெளியே, இன்னும் இருள் பிரியவில்லை. எதிர் வீட்டு  வானொலியின் பண்பலை ‘இன்னும் உறங்குதியே’ எனப் பாவையின் பாடலை வீசி என்னை ஏளனம் செய்கிறது.

 

இதைத்தான் சில நிமிடங்களுக்கு முன் என்னை அலாரம் அடித்து எழுப்பிவிட்ட என் கைபேசியும் கேட்டது. கைபேசி என்ற ஒரு கருவி எத்தனை சாதனங்களை உள்வாங்கிக் கொண்டுவிட்டது என யோசிக்கத் துவங்கியது மனம் அலாரம், கைக்கடிகாரம், நாட்காட்டி, முகவரிப் புத்தகம், பேஜர் என்ற கையடக்கக் கருவி, டார்ச் விளக்கு, கேமிரா, டிரான்சிஸ்டர் வானொலிப் பெட்டி, டேப் ரிகார்டர், சிடி பிளேயர், கால்குலேட்டர்……  

 

மின்னணுத் தொழில்நுட்பம் ஓசைப்படாமல் ஒழித்துக் கட்டிவிட்ட சாதனங்களின் பட்டியல் இன்னும் பல இருக்கக் கூடும். உருவாக்கித் தந்தது என்ன?

 

கணினியின் மகவுகள். கைபேசியின் குழந்தைகள்.

 

ட்ரெவர் பெய்லிஸ், இன்று எல்லா வீடுகளுக்குள்ளும் விரைந்தோடி வந்து கொண்டிருக்கும் இன்வெர்ட்டரைக்  கண்டுபிடித்தவர் அவர்தான், இந்தக் குழந்தைகளுக்கு என்று இன்னொரு பெயர் வைக்கிறார்: “கூகுள் தலைமுறை” 

அத்தோடு நின்றுவிடவில்லை அவர்.  கூகுள் தலைமைறையை நினைத்தால் பயமாக உள்ளது என்றும் ஆதங்கப்படுகிறார்..

பிள்ளைகளுக்கு தற்போதெல்லாம் இணையதளங்கள் வாயிலாகவும், மொபைல் போன் வாயிலாகவும் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்இதனால், அவர்கள் இணையத்தில் கூகுளுக்கு அடிமையாகியுள்ளனர். எதையும் மனப்பாடம் செய்யவோ, நினைவில் வைத்துக் கொள்ளவோ இயலாத மூளைச் சாவடைந்தவர்களைப் போல் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். எனவே, மாணவர்களுக்கு கற்பித்தலை முந்தைய காலத்தைப் போல கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

நவீனச் சாதனங்கள் நம் நினைவகத்தைத் திருடிக் கொண்டுவிட்டன என்பது என்னவோ உண்மைதான். எந்தத் தொலைபேசி எண்ணும் என் நினைவில் இல்லை. கைபேசியில் பெயரைத் தேடி அழுத்தினால் பேசிவிட முடிகிறது. எவருக்கும் கடிதம் எழுதும் பழக்கம் காலாவதியாகிவிட்டதால் விலாசங்கள் நினைவில் நிற்பதில்லை.

எந்த மன்னன் எங்கு ஆண்டான், எந்தப் பொருள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது, எந்த நூலை எவர் எழுதினார் எல்லாவற்றிற்கும் கூகுள் இருக்கிறது.. ஜப்பானியப் பேரங்காடிகளின் சேல்ஸ்மேனைப் போல, எதைக் கேட்டாலும் எப்போது கேட்டாலும் தெரியாது, இல்லை என அது  சொன்னதில்லை. கேட்டதையெல்லாம் கொடுப்பதால், கணினிக் குழந்தைகள் அதனை ’கூகுளாண்டவர்’ எனக் கும்பிடுகிறார்கள் எனக்கென்னவோ அது புட்டியிலிருந்து புறப்பட்டு வந்த சிநேக பூதம் ஜீனியைப் போலிருக்கிறது.

என்றாலும்-

மூளைச்சாவடைந்தவர்களைப் போல ஓரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது என்ற வாதத்தை முற்றிலும் நிராகரிக்கிறேன். கல்வி என்பது நொடிப் பொழுதில் நினைவின் நிரலில் இருந்து உருவி உதறுவது அல்ல. மனித ஆற்றலை மனனம் செய்யும் ஆற்றலைக் கொண்டு மாத்திரம் மதிப்பிடுவது முறையானதல்ல.

எழுத்துருவில் இல்லாமல் ஒலிவடிவில் இருந்த வேத ஸ்லோகங்களை உச்சரிப்புப் பிறழாமல், உருப் போட்டு  ஒப்புவிக்கிறவர்களைத் தேர்வு செய்து கொள்வதில் துவங்கியதுதான் வருணாசிரமம். இன்றைக்கு வரை இந்தியாவில் இருந்துவரும் குழப்பங்களுக்கு இந்த ஜாதிப்பகுப்பும் ஒரு முக்கிய காரணம்.

மொழியின் எழிலை எடுத்துரைப்பதற்காக மட்டுமல்ல, மனப்பாடம் செய்து கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும் என்பதில் வந்ததுதான் எதுகை மோனைகள். ஆனால் அவை நாள்பட, நாள்பட, கவிதைகளைச் சொல்லடுக்குகளாக, வார்த்தைத் தொகுப்புகளாக மாற்றத் துவங்கிய விபரீதம் நிகழ்ந்தபோது வெடித்துக் கிளம்பியதுதான் புதுக்கவிதை. இலக்கணம் கைவிடப்பட்டது. என்றாலும் கவி மனம் காப்பாற்றப்பட்டது.

உடலுழைப்பு ஒரு காலத்தில் பெருமைக்குரிய வலிமையாகக் கருதப்பட்டது. உலக்கை கொண்டு நெல்லைக் குத்தி உமி நீக்கி உலைக்கு அரிசி கொண்டு வந்தாள் நம் பாட்டி. அம்மா காலத்தில் அதற்கு எந்திரம் வந்துவிட்டது.ஆனால் அரிசியை மாவாக்க அவள் ஆட்டுரலைச் சுழற்றிக் கொண்டிருந்தாள். புகையும் விறகடுப்போடு ஊதுகுழல் வழியே உயிர் மூச்சை அனுப்பிப் போராடிய நாட்கள் போய்ச் சேர்ந்தன. எரிவாயு உருளைகள் எங்கள் அன்னையரை அடுப்படியிலிருந்து விடுதலை செய்தன. அடுக்களையிலிருந்து வெளிவந்த பின் பெண்கள் இன்று என்னவெல்லாம் செய்கிறார்கள்!

ஏன் இந்தக் கூகுள் குழந்தைகள்தான் எதில் குறைந்து போனார்கள்? இளம் வயதில் ஒரே நேரத்தில் எத்தனை பணிகளைச் செய்கிறார்கள்? மனனம் செய்து மார்க் வாங்கிய தலைமுறையினரைவிடக் கடுமையான சவால்கள் அவர்கள் முன் நிற்கின்றன. தேர்வுகளைச் சொல்லவில்லை. வாழ்க்கை விடுத்திருக்கும் சவால்களைச் சொல்கிறேன். இன்று ஒருவர் வசதியாக வாழும் அளவிற்குப் பொருளீட்ட வேண்டும் என்றால் அவர்கள் பல திறன் கொண்டவர்களாக (Multi Tasking) பரிணமிக்க வேண்டும். அறிவு அல்ல, தகவல்தான் இன்று பலம் எவெரொருவர் அதிகத் தகவல்களை அறிந்திருக்கிறாரோ அவருக்கு வெற்றி பெறும் வாய்ப்பு மற்றவரை விட அதிகம். இந்த யதார்த்தம் இனிப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மைகளை ஒதுக்கிவிட முடியாது.

என்றாலும் இளைஞர்கள் மீதல்ல, இன்றையக் கல்வி மீது எனக்கொரு வருத்தம் உண்டு. அவர்களைத் தன்னைத் தாண்டி எதையும் சிந்திக்க இயலாத வண்ணம் அது அவர்களைச் சிறை வைத்து விட்டது. காசு பெற்றுத் தராத எதுவும் கவனிக்கத் தக்கதல்ல என்றொரு கருத்தியல் அவர்கள் மீது திணிக்கப்பட்டுவிட்டது. முப்பது வயது வரையிலும் கூட ஒருவன் பாரதியை படித்ததில்லை என்று சொல்வதைக் கேட்கும்போது இதயத்தை முள் ஒன்று கீறுகிறது

காசு சம்பாதிக்கும் கருவியாக மாத்திரம் இந்தக் கல்விமுறை இளைஞர்களை மாற்றிவிட்டதோ என்ற கவலை எனக்கு உண்டு. காசு சாம்பாதிப்பதைப் பற்றியதல்ல என் கவலை. இயந்திரங்களாக மாறிவிட்டார்களோ என்பதுதான் என் அச்சம். ஏனெனில் இயந்திரங்கள் அடிமைகள். மனிதர் ஏவ, மனிதர் களிக்க கடமையாற்றும் அடிமைகள்.

அடிமைகளுக்கு வலிமை உண்டு ஆனால் சுதந்திரம் கிடையாது

 

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these