இலவசத்தின் விலை என்ன?

 

“வாங்க நண்பர்களே, எங்கிருந்து வருகிறீர்கள்?” என் குரலைக் கேட்டு யார் வந்திருக்கிறார்கள் என வாசலைப் பார்த்தார் மனைவி. நான் என் ஜன்னலுக்கு வெளியே இருந்த மரத்தை நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருந்த எறும்புகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். ஜன்னல் விளிம்பில் சிந்தியிருந்த ரொட்டித் துண்டின் துணுக்குகளை, மரத்தடியில் கடும் உழைப்பால் உருவாக்கியிருந்த புற்றை நோக்கி இழுத்துப் போய்க் கொண்டிருந்தன. தனது உணவு களவு போகிறது என்று காக்கைகள் நினைத்தனவோ என்னவோ, அவை இரைச்சலிட்டுக் கொண்டிருந்தன. இவை எதையும் பொருட்படுத்தாமல் வண்ணத்துப் பூச்சியொன்று முகத்திற்கு நேரே பறந்து மலர் ஒன்றில் போய் அமர்ந்தது.

ஒவ்வொரு உயிரினமும் அந்த அதிகாலைப் பொழுதிலேயே உழைக்கத் துவங்கிவிட்டன. அவைகளுக்கு இலவசம் என்ற ஒன்றைப் பற்றி ஒரு போதும் தெரிந்திருக்காது.

உயிரினங்களில் மனிதனைத் தவிர வேறு எதுவும் இலவசங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதில்லை. பிச்சை எடுப்பதில்லை. இரவல் வாங்குவதில்லை. சிறிதோ பெரிதோ அவை உழைப்பின் மூலம் உண்பதையே தங்கள் ‘கலாசாரமாக’க் கொண்டிருக்கின்றன.

ஏற்பது இகழ்ச்சி என்ற ஆரம்பப்பள்ளிப் பாடம் இன்று அர்த்தமிழந்துவிட்டது. இலவசங்களைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் பெருமை கொள்கிற சமூகத்தில் நாம் வாழ்கிறோம். ஏழைகள் இருக்கிறவரை இலவசங்கள் இருக்கும் என்று ஒரு தத்துவம் இன்று முன் மொழியப்படுகிறது.

இந்த வாதம் எத்தனை சொத்தையானது என்பதை இலவசமாகக் கொடுக்கப்படும் பொருட்களைப் பார்த்தால் புரிந்து போகும். வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி எப்படி வறுமையைப் போக்கும் என்பது எனக்கு இன்றுவரை புரியாத ரகசியம். ரொட்டியைத் தின்பது போல பசித்தவர்கள் அந்தப் பெட்டியைத் தின்ன முடியாது. பசியைப் போக்க அந்தப் பெட்டிகளால் முடியாது. பசியை மறக்கடிக்க வேண்டுமானால் அவை பயன்படும்- கஞ்சாவைப் போல.

அரவை இயந்திரங்கள் அலுப்பைப் போக்கலாம். ஆனால் வறுமையை விரட்டிவிடாது. அவற்றில் இட்டு அரைக்கும் பொருட்களின் விலை ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டிருக்க
இயந்திரங்களால் என்ன பயன்?

வறுமையைப் போக்குவதுதான் நோக்கம் என்றால் தேர்தல் வரை காத்திருப்பானேன்? நீ எனக்கு வாக்களித்தால் நான் உனக்கு இதைத் தருவேன் என்ற ஆசைகாட்டல்தான் இதன் பின் ஒளிந்து நிற்கும் உண்மை. ’ஆசைகாட்டல்’ என்பது அவை நாகரீகம் கருதிச்  சொல்லப்படும் ஒரு ஜிகினாச் சொல். உண்மையை உரித்துப் பார்த்தால் இது ஒரு வகை லஞ்சம். ஆசைகாட்டியோ, மிரட்டியோ, வாக்கு சேகரிப்பதை சட்டம் அனுமதிக்கவில்லை. ஓட்டுப் போடப் பணம் வாங்கினாலோ, கொடுத்தாலோ அது குற்றம் எனச் சொல்லும் சட்டம்,இன்று எனக்கு ஓட்டுப் போடு, நாளைக்கு நான் உனக்குப் பொருளாகத் தருகிறேன் என்பதை மட்டும் அனுமதிப்பது ஏன்?

இந்த இலவசங்கள் எதன் பொருட்டுத் தரப்படுகின்றன என்பதைப் போலவே எங்கிருந்து இவற்றிற்குப் பணம் வருகின்றன என்பதை நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கும். இலவசங்களுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே சாராயம் விற்றுச் சம்பாதிக்கிறது அரசாங்கம். அந்த விற்பனையின் வேகம் வீட்டுக்கொரு ’குடிமகனை’ உருவாக்கி வைத்திருக்கிறது.பள்ளிப் பிள்ளைகள் கூட விட்டு வைக்கவில்லை.

உங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கும் டிவி, ஓடப் போகும் கிரைண்டர், பாவப் பணத்திலே உங்களுக்குக் கிடைத்த பங்கு.அது அது எங்கோ ஒரு குடும்பத்தை அழித்ததில் கிடைத்த சொகுசு. அந்தக் குடும்பம் உங்களுடையதாக இருக்கலாம். உங்கள் வீட்டுப் பிள்ளையின், உயிரை உறிஞ்சி,  அவனை ஒன்றுக்கும் உதவாவதவனாக ஆக்கிவிட்டு, இழந்த உழைப்பிற்கும், உடல் வலிமைக்கும் ஈடாக உங்களுக்கு உங்களை  சோம்பேறியாக்கும் ஆடம்பர சாதனங்கள் அளிக்கப்படுகின்றன.

இந்த சொகுசுப் பொருட்கள், இன்றைய வாழ்க்கைக்குத் தரமான கல்வியை விட, தடையற்ற மின்சாரத்தை விட, சுத்தமான குடிநீரைவிட, சுகாதாரமான மருத்துவமனைகளை விட அவசியம் என அரசியல் கட்சிகள் கருதுமானால், இந்தப் பொருட்களை ஏன் தங்கள் கட்சிப்பணத்திலிருந்து வாங்கித் தரக்கூடாது? அரசியல் கட்சிகள் எதுவும் ஏழைகளாக இல்லை என்கிற யதார்த்தம் சின்னப் பிள்ளைக்கும் சொல்லாமல் புரியும்.

வறுமையை எது வெல்லும்?

தமிழகப் பள்ளிகளில் ஆறாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளால் மூன்றாம் வகுப்புப் புத்தகத்தைக் கூடப் படிக்க முடியவில்லை என மத்திய மனிதவளத் துறையின் அசார் அறிக்கை சொல்கிறது. அரசுப் பணத்தைப் பள்ளிகளில் முதலீடு செய்து தரமான கல்வியைத் தர முற்பட்டால், அந்தக் கல்வி வறுமையை வெல்லும்.

தினம் தினம் எதிர்கொள்ளும் மின் தடையால் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. அரசுப் பணத்தை மின் திட்டங்களில் முதலீடு செய்தால், மின் உற்பத்தி பெருகி தொழில்கள் செழிக்கும் தொழில்கள் இயங்கினால் வேலைகள் பெருகும்.வேலைகள் பெருகினால் வறுமை வீழும்

விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதால் விவசாயம் நலிந்து வருகிறது. விவசாயிக்கு நல்ல விலை கிடைப்பதற்கும், ஆனால் அந்த நல்ல விலை நுகர்வோரைக் கிள்ளாமல் இருப்பதற்கும், இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை மானியமாகக் கொடுத்தால் வேளாண்மை வளர்ந்து செழிக்கும், வறுமை வீழும்.

மாசுபடிந்த ஆறுகளை சுத்தப்படுத்தவும், மழை கொணர காடு வளர்க்கவும், குளங்கள் வெட்டி நிலத்தடி நீரை நிலைபெறவும் செய்தால் சுற்றுச் சூழல் மேன்மை கொள்ளும். அந்தச் சூழல் நம்மைக் காக்கும்.

இலவசங்களால் வறுமையை வெல்ல முடியாது. தேர்தல்களில் வேண்டுமானால் ஜெயிக்கலாம்

நீங்கள் இந்த தேசத்தை நேசிப்பவராக இருந்தால், ஏழைகள் மீது கருணை கொண்டவராக இருந்தால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் என்றால் இலவசங்களை அள்ளிக் கொடுப்பதாகச் சொல்லி வாக்குக் கேட்டு வருபவர்களை நிராகரியுங்கள். முற்றாக இலவசத்தை புறக்கணிக்கும் சமுதாயமே லஞ்சத்தை ஒழிக்க விரும்பும் சமுதாயமாக மாறும். லஞ்சம் இல்லாத சமூகமே சம வாய்ப்பை உறுதி செய்யும்.

என் அருமை இளைய சமுதாயம் எதற்காகவும் கை ஏந்தக் கூடாது.

.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these