பொறுப்புணர்வின் இலக்கணம்!

நான் பிறந்தது 1970ல். மாலன் 1950ல். எனக்கு முந்தைய தலைமுறை எழுத்தாளர்; எழுத்தாலும் எண்ணங்களாலும் என்னை ரொம்பவும் வசீகரித்தவர்; இதழியலும் படைப்பாளுமையும் இயல்பாக கைகோக்க முடியும் என்று நிரூபித்தவர்; சிந்தனைகளால் தலைமுறைகள் தாண்டிய பாய்ச்சல்காரர். அவர் எழுதிய சிறுகதைகளில் இருந்து மணியான பத்து கதைகள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைக்கு மாலன் சிறுகதைகளை வரலாற்றோடு வைத்துப் புரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். இக்கதைகள் எழுதப்பட்ட காலகட்டம், சூழ்நிலை போன்றவற்றை இக்கதைகளில் கிடைக்கும் குறிப்புகள் வழியே சீர்தூக்கிப் பார்க்க முடியும். பொதுவாகவே, எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எழுதியவர்களில் பெரும்பாலோருக்கு அரசியலும் சமூகப் பொறுப்புணர்வும் அடியாழத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். எழுபதுகள், பொருளாதார தேக்கம் நிறைந்த ஆண்டுகள். அன்றைக்கு எல்லா அம்சங்களிலும் அரசைச் சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருந்தது. வேலைவாய்ப்பு அதில் முக்கியமானது. வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் அரசேதான் நிறைவு செய்யவேண்டும் என்ற கருத்து ஆழமாக பதிந்திருந்த காலம். அதை முழுமையாக செய்ய இயலாத நிலை அரசுக்கு. விளைவு, மக்களிடையே வெறுப்பு, எரிச்சல், கோபம். அதன் தொடர்ச்சிதான், அரசை எதிர்த்து முழங்க வேண்டிய, சிறுமை கண்டு சீறவேண்டிய தேவையும், ஏற்றத்தாழ்வுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத மூர்க்கம் ஆகியவையும். அதன் உச்சம், எமர்ஜென்சிக்கு எதிரான மனோநிலை. இதேபோல், தமிழக அரசியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் திராவிட இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பெருமளவு வெளியே தெரிய வந்த ஆண்டுகளும் அவைதான்.

இந்தப் பின்னணியில், மாலனின் ”இதெல்லாம் யாருடைய தப்பு?”, “ஆயுதம்” போன்றவை மிகவும் கூர்மையானவை. அதில் எழுப்பப்படும் கேள்விகள், விசாரணைகள் முக்கியமானவை. ஆச்சர்யம் என்னவெனில், இன்னமும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை! அந்த வகையில், மாலனை தீர்க்கதரிசி எனலாம். மாறாதிருக்கும் சமூக சூழ்நிலைகளை என்னவென்று சொல்ல? “கடமை”, “அறம்” இரண்டும் தமிழக அரசியலின் வேறு முகங்களைக் காட்டுவன. தம் கருத்துகளைச் சொல்ல, விமர்சனங்களை முன்வைக்க கதைகளைக் கையாளும் காலத்தைச் சேர்ந்தவர் மாலன் என்பதை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. இன்றைக்கு அறவே ஒழிந்துவிட்ட போக்கு இது! கேள்வி கேட்பது, உரத்துப் பேசுவது என்பதெல்லாம் கதைகளுக்கு ஒவ்வாதவை; அவை ரொமாண்டிசம் என்று விலக்கப்படும் அவலமே இன்றைய இலக்கியப் பார்வை! ஆனால், மாலன் தலைமுறைக்காரர்கள் எல்லோருமே அசெளகரியமான கேள்விகளைக் கேட்பதை கடமையாக செய்திருக்கிறார்கள். அதனால்தான், இன்றும் அவர் கதைகள் படிக்கத் தூண்டுவனவாக இருக்கின்றன.

பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட ஏமாற்றங்களைப் பதிவு செய்யும் ஆரம்ப வித்து, தப்புக் கணக்கு கதை. தமிழகம் எங்கும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற, மாட்டுக் கொட்டகைகள் நடத்தப்படுகின்றன. உருப்போட்டு, உருப்போட்டு, மாணவர்கள் உருப்படாமலே போய்விடும் ஆபத்து! இதில் தர்க்கம், நியாயம், புத்திசாலித்தனம் எதற்கும் இடமில்லை. புத்தகத்தில் உள்ளதை அப்படியே கக்கும் மாணவனே முதல் மாணவன்!! ஜனனி போன்ற புத்திசாலித்தனமான குழந்தைகள் அபூர்வம். கேள்வியே கேட்கக்கூடாது என்று கருதும் பெற்றோரே பெரும்பாலோர்.

காதலும் கல்யாணமும் சுதந்திரமும் மாலன் கதைகளில் சித்திரிக்கப்படும் விதம், எண்பதுகளைச் சார்ந்தது. இன்றைய நகரத்துப் பெண்களைக் காதல் உடைத்துவிடுவதில்லை. ”மயிலிறகின் கனம்” ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் உடலையும் மனத்தையும் லகுவாக கடக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். ”எங்கள் வாழ்வில்” பாலி, ”இறகுகளும் பாறைகளும்” அருணா போன்றவர்கள் ஒரு காலகட்டத்தின் அடையாளங்கள். மேலும், இரண்டு கதைகளில், ”முகத்தில்  கை  இறங்கிற்று” என்று எழுதுகிறார் மாலன். இன்று அதெல்லாம் கதைகளில் கூட எழுத சாத்தியமில்லை என்பது ஒரு பெரும் நிம்மதி. சமூக வளர்ச்சியின் மாற்றங்கள். ”வித்வான்” எதிர்கால அறிவியல் சாத்தியம் என்ற அழகிய கற்பனை. “ராசி” நுட்பமான கதை. நிராகரிப்பின் வலியை உணர்ந்தவன், ஒரு கட்டத்தில் அங்கீகாரத்தைச் சந்திக்கும்போது ஏற்படும் தயக்கம், தடுமாற்றம், கச்சிதமாக வெளிப்பட்ட கதை.

வார்த்தைகளை மந்திரமென உருவேற்றும் சிரத்தை, கதைகளெங்கும். முடிவில், நறுக்கென்று ஓர் பஞ்ச்; கவிதை வாசனை தூக்கலான வரிகள்; வாசகனோடு நேரடியாக உரையாடும் பாங்கு; வடிவத்தைப் பற்றிய தீர்மானம் – மாலனை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அற்புத கலவை இது. தொழில்நுட்பமும் செய்நேர்த்தியும் படைப்பாளுமையும் பின்னிப் பிணைந்திருப்பது அழகு. அதைவிட அழகு, கதைகள் மூலம், சமூகப் பொறுப்புணர்வைத் தட்டி எழுப்புவது. ஆரோக்கியமான படைப்பின் முகவரி இது.

ஆர்.வெங்கடேஷ்,

03.12.12

rvrv30@gmail.com

(பொறுப்பாசிரியர்-கல்கி)

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *