விளையாட்டு? அல்ல, வாழ்க்கை

“நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்களா? எத்தனை வாட்டி சொல்றது உங்களுக்கு?” என்று வாசற்பக்கம் பெரிய குரலில் யாரோ அதட்டும் சத்தம் கேட்டது. என்னைத்தானோ என்று எனக்கு சந்தேகம். திருத்த முடியாத அளவிற்கு என்ன செய்துவிட்டோம் என்ற கவலையோடு எட்டிப் பார்த்தால், எதிர்வீட்டுச் சிறுவனைப் பக்கத்து வீட்டுக்காரர் மிரட்டிக் கொண்டிருந்தார். அவர் கையில் பந்து. கனமான கிரிக்கெட் பந்தல்ல, சாதாரண ரப்பர் பந்து. தெருவில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சிறுவர்களில் எவனோ ஒருவன் விளாசிய விளாசலில் அவர் வீட்டு ஜன்னல் கண்ணாடியைப் பதம் பார்த்துவிட்டு விழுந்த பந்து அவர் கைக்கு வந்திருந்தது. பந்தைப் பொறுக்க வந்த சிறுவனுக்குத்தான் அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது.
“விடுங்க சார் சின்னப் பசங்க” என்று நான் அந்தச் சிறுவர்களுக்காக நான் பரிந்து கொண்டு போனேன்.  “ இல்லை நான் தெரியாமத்தான் கேட்கிறேன், எப்பப் பார்த்தாலும் என்ன விளையாட்டு? அன்னிக்கு என் கார் கண்ணாடி நொறுங்கியிருக்க வேண்டியது, எப்படியோ தப்பிச்சது. இன்னிக்கு வீட்டு ஜன்னல்!” என்று அவர் பொருமினார். என்றைக்காவது ஏதாவது  அரசியல் களேபரத்தில் கல்விழுந்து இவர் கார் கண்ணாடி உடைந்தால் அன்றைக்கு அந்த அரசியல் பொறுக்கிகளை எதிர்த்து இவர் ஏதேனும் ஒரு வார்த்தை பேசுவாரா அல்லது வாயை மூடிக் கொண்டு வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடிவருவாரா என எனக்குள் கேள்வி எழுந்தது.
பந்துக்குப் பந்து பதைப்பு, எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற திகைப்பு இதெல்லாம் இருந்தால்தான் கிரிக்கெட் என சில அலுவலக நண்பர்கள் அடித்துச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல, அது வாழ்க்கை எனச் சொல்லத் தோன்றுகிறது.
விளையாட்டாகச் சொல்லவில்லை. வேதாந்தமாகவும் சொல்லவில்லை. சற்று யோசித்துப் பாருங்கள், கிரிக்கெட் நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பட்டியல்:
1.நாம் முன்னேறுவதைத் தவிர்க்க நம்மைச்  சுற்றி எப்போதும் பத்துப் பேர் தயாராக இருப்பார்கள். ஆனால் அதையும் மீறி நாம் ஜெயித்தாக வேண்டும்.
2.எவ்வளவு நேரம் ஆடுகிறோம் என்பது முக்கியமல்ல. அதில் என்ன சாதித்தோம் என்பதுதான் முக்கியம்.
3.நாம் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரியலாம். ஆனால் அதன் பலன்கள் நமது அணிக்குத்தான் சேர வேண்டும். தனிநபர்களுக்கல்ல
4. வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது நாம் மட்டுமல்ல, களம், காலம், வானம், சூழல் இவை எல்லாமும்தான்.
5. எவரும் எல்லா நேரங்களிலும் ஜெயிக்க முடியாது.
6.முன்னோடிகள் வலுவான அடித்தளம் அமைத்துவிட்டால், பின்னால் வருபவர்களுக்கு அதிகம் பிரசினை இல்லை.
7. நமது பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நமது தவறுகள் உறுதியாகத் தெரியாது. எங்கோ தொலைவில் இருப்பவர் செய்யும் முடிவுதான் இறுதியானது. சான்று: மூன்றாவது அம்ப்பயர்.
8. வெளியே இருந்து விமர்சனம் செய்வது எளிது. வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு சத்தியம் தெரியாது. ஆனால் அதையும் காது கொடுத்துக் கேட்க நாலு பேர் இருப்பார்கள். சான்று தொலைக்காட்சி வர்ணனை
9.தாக்குதல் எல்லை மீறினால் அது எதிரிக்குச் சாதகமாகிவிடும். சான்று நோ பால்
10. இலக்கை எட்டும் வரை வெற்றி நிச்சயம் இல்லை. எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
11. நம்முடைய ஜோடியைத் தேர்ந்தெடுப்பது பெருமபாலும் நம்முடைய கையில் இல்லை. அது எங்கேயோ, எப்படியோ தீர்மானமாகும் விஷயம். ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அனுசரித்து ஆடினால்  பிரசினைகள் அதிகம் இருக்காது. நன்றாகவே தாக்குப் பிடிக்கலாம்.
இப்போது சொல்லுங்கள், கிரிக்கெட் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறதா இல்லையா?
வெள்ளைக்காரர்களின் விளையாட்டு என்று வசைக்கு உள்ளான கிரிக்கெட்டில் இன்று இந்தியத் துணைக் கண்டத்தின் கொடி ஒளிவீசிப் பறக்கிறது. பத்தாவது உலகக் கோப்பைப் போட்டிகளை, இந்தியாவும், இலங்கையும், வங்க தேசமும் இணைந்து நடத்தவிருக்கின்றன. பாகிஸ்தானும் கூட இதை நடத்துவதில் இணைந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கும் விருப்பம்தான். ஆனால்  அங்கு தலைவிரித்தாடும் பயங்கரவாதம்  அதற்கு அந்த வாய்ப்பை எட்டாக் கனியாக்கிவிட்ட்து. அதிலும் 2009ல் லாகூர் சென்ற இலங்கை அணி மீது நடந்த தாக்குதல்கள்zசர்வதேசக் கிரிக்கெட் சமூகத்தில் அதற்கு எதிரான உணர்வை வலுப்படுத்திவிட்டன.
நமக்கும் கூட இந்த வாய்ப்புக் கைநழுவிப் போகும் சூழ்நிலை இருந்தது. உலகக் கோப்பைப் போட்டியை நடத்த விரும்பும் நாடுகள் தங்களது விருப்பத்தை மார்ச் 1, 2006க்குள் தெரிவித்திருக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் போட்டியிட்டுத்தான் இந்த வாய்ப்பை வென்றெடுக்க முடியும். ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து முதலில் மனுச் செய்தன. கடைசி நிமிடம்வரை வேறு மனுக்கள் வரவில்லை. ஆனால் சற்றுத் தாமதாக, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் நான்கும் இணைந்து கூட்டாக மனுச் செய்தன. தாமதமாக வந்ததால் நமக்குக் கிடைக்காது என்றே நினைதேன். நம்முடைய வழக்கமான தாமதம் நம்மைக் கைவிட்டுவிடும் நிலை இருந்த போதிலும் நம்முடைய ஜனநாயகம் காப்பாற்றியது. யாருக்குக் கொடுப்பது என்று வாக்கெடுப்பு நடந்த போது, நம் நால்வர் அணிக்கு 7 ஓட்டுக்களும். ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிக்கு மூன்று  வாக்குகளும் கிடைத்தன. இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள நாலு நாடுகளோடு, தென்னாப்ரிக்காவும், ஜிம்பாவேயும் நமக்கு வாக்களித்தன. கடைசி நேரத்தில் கட்சி மாறி வாக்களித்து கவிழ்த்து விட்டார்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணியைக் கரித்துக் கொட்டின ஆஸ்திரேலியப் பத்திரிகைகள். 2007ல் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளுக்கு நிதி உதவி செய்கிறேன் என்ரு சொல்லி இந்தியா ‘காசு கொடுத்து ஓட்டை வாங்கி’ விட்டன என்று எழுதின. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, இந்த நாலு நாடுகள் கொண்ட தெற்காசியாவில் போட்டி நடத்தினால் 40 கோடி டாலர்கள் கூடுதலாக லாபம் கிடைக்கும் என்பதால் அதற்கு சாதகமாக முடிவு செய்தோம் என்று சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தந்தார்கள்.
கடைசியில் காசுதான் முடிவு செயதது. அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் கிரிக்கெட்டில் களத்தில் இறங்கும் முன்னரே, முதலில் காசைத்தானே பார்க்கிறார்கள். டாஸ் போடுவதைச் சொல்கிறேன். எனவே 12 வது பாடமாக இதையும் சேர்த்துக் கொள்ளலாம், எனக்கு ஆட்சேபணை இல்லை:
பல வாய்ப்புக்களைத் தீர்மானிப்பது நம்முடைய திறமையும் உழைப்பும் ம மட்டுமல்ல, காசும்தான்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these