கூர்க்கத்திச்சொற்கள் – தி.ஜானகிராமன்

கூர்க்கத்திச்சொற்கள்

தி.ஜானகிராமன்

 

(மாலன் சிறுகதைகள் பற்றி தி.ஜானகிராமன்)

“காவி கட்டிக்கிறது அவ்வளவு சுலபமாஎன்ன? ”என்று ஒரு காவிச்சாமியார் மாலனையோ யாரையோ பார்த்து ஒரு கதையில் கேட்கிறார். தானே பதில் சொல்கிறார். என்னைக் கேட்டா வாழ்க்கையோட மூவ்மெண்ட்லே அது அது அதன் இடத்திற்குப் போய்சேர்ந்துண்டு இருக்கு… இதுதான் வாழ்க்கையோட டைனமிக்ஸ். இதை அடையாளம் கண்டு, புரிஞ்சுக்கிறதுதான் நம்பவேலை .புரிஞ்சுக்கிறது மட்டுமில்லை. அதோடு சம்பந்தம் வச்சுக்கணும் .நமக்கு எல்லாத்தோடயும் சம்பந்தம் இருக்கு, மனுஷாளோடு, இந்தச் சுவரோடு, கதவோடு, மரத்தோடு, பூவோடு, நட்சத்திரத்தோடு, எல்லாத்தோடும் சம்பந்தம் இருக்கு… தனிச்சுப்  போயிடறதுக்காகக் காவியைக் கட்டிண்டு கிளம்பக் கூடாது, இந்த தேசத்திலே காவியைக் கட்டிண்டவா எல்லாம் எல்லாத்தையும் உதறிட்டுக் கிளம்பினவா இல்லை, எல்லாத்தையும் இழுத்து அணைச்சுக்கக் கிளம்பினவாதான்… நீங்க இங்கிலீஷுல சொல்றேளே, “யுனிவர்சல்லவ்அதோட நிறந்தான் காவி… எல்லாஅகமும் நமக்குச் சொந்தம்… எல்லா வீடும் நம்மோடதாயிடுத்துன்னா, நாமஎதிலேர்ந்து அந்நியமாறது, எப்படி அநாதையாவோம், ம்?

 இப்படி யாரோ அநாதையென்று தன்னை நினைத்துக் கொண்டு எங்கிருந்தோ வந்து காலில் விழுந்த ஒரு வெள்ளைக்கார இளைஞனைப் பார்த்துச் சொல்கிறார் காவிச்சாமியார், அவனைப் போலவே மனசை அநாதையாக்கிக் கொண்டுவந்திருந்த ஒரு கிருஷ்ணமூர்த்தி இதைக் கேட்டுக் கொண்டிருந்தான், கண் விளிம்பில் ஜலம் கோர்த்துக் கொள்ள தடாலென்று காலில் விழுந்து வணங்கினான்.

 வாசிக்கும்போது நானும் கிருஷ்ணமூர்த்தியைப் போல ஒரு நாழிகை ஆடிப்போனேன். இது ‘சென்டிமென்ட்டாலட்டிஎன்று எள்ளப்படுகிற பேதைத்தனமல்ல. உண்மையை, அழகை, தரிசிக்கும்போதுஆளையேவேரோடு, ஆட்டுகிறஒளியாட்டம். நல்லசங்கீத்தைக்கேட்கும்போது, ஊழிக்கூத்தைப் பாரதியார் பார்க்கும்போது, நந்திதேவனை, கவசகுண்டலங்களைப் பிய்த்த்துக் கொடுத்த கர்ணனைப் பார்க்கும்போது ஏற்படும் தரிசனம்- ஒளி உதயம். மாலனின் எழுத்தில் பற்பல கட்டங்களில் இது கிடைக்கிறது .சிறுகதை பெரிய சமுத்ரம் – ஊடாடுகிறவர்கள் எத்தனை புதுமைகளையும் அதிசயங்களையும் காண்கிறார்கள், காண்பிக்கிறார்கள் என்று இந்தக் கதைகளைப் படித்தவுடன் தோன்றிற்று

.பிரபஞ்சத்தில் எதையும் அணைத்துக் கொள்கிற அன்புதான் பேருண்மை-இதுதான் அத்வைதம் – அத்வைதம் வறட்சித் தத்துவமல்ல என்று “கதவைத் திறக்கும் வெளிச்சம்போல, “ஈரம், “காதலின்,கல்லிற்குக்கீழும்பூக்கள், “சப்தங்கள்போன்ற கதைகள், வெவ்வேறு கோணத்திலிருந்து நமக்குக் கதவைத் திறக்கின்றன.

கலையை விஞ்ஞானமாக்கின கம்ப்யூட்டர், மனிதனுக்கு அடிமைப்பட ஆசைப்படுகிறது. இது மாலனின் ஆசை. உயிர்களிடத்து அன்பு கொண்ட கலைஞர்களும் விஞ்ஞானிகளும் அப்டித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். “வித்வான்என்னும் இந்தக் கதை ஒரு அற்புதமான செய்தி.சிறுகதையின் அடிவானத்தை எவ்வளவு தொலைவிற்கு ஒரு தேர்ந்த கலைஞன் தள்ளமுடியும் என்று மாலனை அறிமுகப்படுத்துகிறது.

 ஒரு தேர்ந்த கலைஞனின் இதயம் எப்படியெல்லாம் தன்கலைக்குப் போஷணைகள் தேடுகிறது என்பதையும் ஒரு இடத்தில் பார்க்கிறோம் .பாரதியாரின் “காகிதம் செய்வோம்வரியில் வழவழக் காகிதத்தைப் பார்க்காமல் “சுரண்டுகிறவன் வயிற்றில் செருகுகிற கத்தியாக கட்டுரையும் கவிதையும் தெறிக்க வேண்டும் என்றஎழுச்சியைப் பார்க்கிறார் மாலன்.

ஒரு மகாகவியை எப்படிஅணுகவேண்டும்? எப்படி ஒரு தூய கலைஞன் அணுகுவான்? மாலன் தோப்பன்சாமி மாதிரி வழிகாட்டுகிறார்.

 “முகங்கள்என்ற கதையைப் படியுங்கள். காலம்காலமாக ஆணுக்கு அடிபணிந்துவருகிற பெண்இனம் இந்த யுகத்தில் எப்படியெல்லாம் நொந்துபோகிறது, சுண்டுவிரலில் சுற்றி ஆட்டப்படுகிறது என்று வயிறு எரியப் புரிந்து கொள்வீர்கள்.

சிறுகதை சமுத்ரம் என்பதை மாலனின் கதைகள் நினைவுறுத்துகின்றன. கடலில் மூழ்குவோர் அர்த்தம், அனர்த்தம், அர்த்தமற்றவை, செத்தை, குப்பை, செலவம் என்று தத்தம் நோக்கத்திற்கு, திறமைக்குத் தக்கவாறு எடுக்கிறார்கள். மாலன் ஆழ்ந்து மூழ்கி, ஜீவதயை, பரிவு, அன்பு, மனிதனின் ஷேமம், இந்த பிரபஞ்சத்தில் அவன் அல்பாயுசில் போய்விடாமல் நிலைத்து நிற்கவேண்டும் என்ற ஆசை, தன்னில் பிறர்கள், பிறர்களில்தான் என்று அர்த்தங்களைக் கொண்டு வருகிறார். இரக்கப்பட்டும் எள்ளியும் பலசமயங்களில் கோபத்தோடும் வயிறு எரிந்தும் வெடுக்வெடுக்கென்ற கூர்க்கத்திச் சொற்களால் பேசுகிறார். இந்தக் காலத்தில் சொரணையுள்ளவர்கள் கோபப்படாமல், வயிறு எரியாமல் எப்படி இருக்க முடியும்? எப்படிக் கலைஞர்களாக முடியும்?

மாலனுக்கு இந்தக் கோபமும் சொல்லாட்சியும் புதியபார்வைகளும் நீடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வழி மறைத்திருக்குது மலை போல நிலையில் முகவுரை எழுதுபவன் வேறென்ன சொல்ல வேண்டும்?

 

(கல்லுக்குக் கீழும் பூக்கள் தொகுப்பின்முன்னுரை)

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *