மாலன் தரும் ஆக்ஸிஜன் – பிரபஞ்சன்

மாலன் தரும் ஆக்ஸிஜன்
பிரபஞ்சன்
“ நாங்கள் இன்று கைது செய்த மனிதனின் வீட்டு வாசலில் ஒரு கட்சிக் கொடி பறக்கிறது, அந்தக் கட்சியின் தேர்தல் சின்னம் கதவில். அவன் கடந்த வருடம் நடந்த கட்சித் தேர்தலில் தோற்றுப் போனவன்.எனினும், என்றேனும் ஒருநாள் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசை இப்போதும் அவன் நெஞ்சில் புகைகிறது.உங்கள் மாநில அரசியல் முற்றிலும் அழுகிப்போய் விட்டது என்பதன் அடையாளங்கள் இவை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.ஆனால்?”

“ ஆனால்? ”

“இது வெறும் அரசியல் சீரழிவு மாத்திரம்தானா?இந்த அரசியல் சீரழிவு ஒரு கலாசார நசிவின் தொடர்ச்சி இல்லையா?

“எனக்குத் தெரியவில்லை நந்து!”

“யோசி.யோசித்தால் விடைகள் கிடைக்கும்.”

(மாறுதல் வரும் – கதையில்)
உடனடியாக இது குறித்து யோசிக்க வேண்டிய ஒரு அவசரமானதும், அவசியமானதுமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
பொதியமலைக் காற்றில் விஷக் கிருமிகள் கலந்துவிட்டன. அந்த நச்சுக் காற்றைச் சுவாசித்து கொண்டிருப்பதால், நமது கலாசாரத்தின் சுவாசக் கேந்திரங்கள் அரிக்கப்பட்டு வருகின்றன, இந்த நோயின் ‘முதல்” எது  என்று நாம் அறிய அச்சுதர்களானோம் என்றால், நோயை நாம் நாடவும் மாட்டோம். நோய தணித்தல் என்பதும் நடவாது.

ஆத்திகம் என்பது ஏதோ ஒரு அருவருக்கத்தக்க தத்துவம் என்பது போலவும் முப்பதுகளின் தொடக்கத்தில் இங்கு ஒரு பொய்மைத் தத்துவம் பேசப்பட்டது.‘ ஆத்திகம் உயர்வு, அதனினும் உயர்வு நாத்திகம்’என்பது ஓர் நென்னெறி என்றே மேலோர் கூறி வந்தனர். நாத்திகனோ அல்லது ஆத்திகனோ, கொண்ட கொள்கையில் நேர்மை உள்ளவனே மேலோன் என்பது மறந்துபோய், இவன் அவனையும், அவன் இவனையும் இழித்துரைப்பதே சமவாதம் என்று அறிவுலகம் சில அறிவற்றவர்களால் கீழ் இறக்கப்பட்டது. எக்கருத்தையும் நேர்ந்து கொள்ளும் மனித சுதந்திரம் கேள்விக்குரியதாகியது.இராமன் போன்ற இதிகாச பாத்திரங்களைச் சரித்திரப் பாத்திரங்கள் என்று மயங்கிய கூட்டம், அவன் சிலைகளை அவமானப்படுத்திற்று.பிள்ளையார் சிலைகளை உடைத்தது, புராணங்களைக் கொளுத்திற்று. சீதையையும், மற்றுமுள்ள இதிகாசப் புராணப் பாத்திரங்களையும் விமர்சிக்கிறோம் என்ற பெயரில் பொதுச்சபைகளில் பேச ஒண்ணாத கீழ்மைப் பேச்சுகளைப் பேசிப் புளகித்தது, அதன் பயனாய் ‘பெண்’, ஆண்களின் சபையில் இரண்டாம் முறையாகத் துகிலுரியப்பட்டான். நாகரிகம், வங்கக் கடலுக்குள் இறங்கிவிட்டது.
பொது மேடைகளில் நின்று “ஆறு வயசுப் பெண், ‘வாருங்கள் மாமா, கதை சொல்ல’ என்றால் அதற்கு அர்த்தம் வேறு. பதினாறு வயசுப் பெண், ‘வாருங்கள் மாமா, கதை சொல்ல’ என்றால் அதற்கு அர்த்தம் வேறு. பதினாறு வயசுப் பருவக்குமரி அதே வார்த்தையைப் சொன்னால் அதன் அர்த்தம் வேறு” என்று பேசி, இந்தப் பேச்சுகளை அரசியல் தத்துவம் என்பதுபோல் புரியச் செய்துவிட்டவர்கள் இந்த நாட்டில் பேறரறிஞர்கள் எனப்பட்டனர். சாகசங்களும் பாடங்களும் நிறைந்த கிரேக்க ரோம சரித்திரங்களில், ராணிகள் கழுதைப் பாலில் குளித்த வர்ணனைகளை எழுதிக் குவித்தவர்களே இங்கு எழுத்து வேந்தர்களாகவும், சிந்தனைச் சிற்பிகளாகவும் அறியப்பட்டனர். காதலைப் படுக்கை அறைச் சமாசாரமாக மாற்றிக் கனவு விதைகளைக் காற்றில் தூவித் தமிழர்களை அரை மயக்கத்திலேயே வைத்தவர்கள் இங்கு புரட்சிக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆயினர். ஒரு கலாசார நசிவு இது என்பதை யாரால் மறுக்க முடியும்?
அடுத்த தலைமுறை, நசிவு கலாசாரவாதிகள் இன்னும் கூர்மை பெற்றனர். மக்களை ஏமாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றனர்,மக்கள், அந்த மனிதர்களின் மாண்பை எண்ணி மயங்கினர்.மிகப்பெரும் மிட்டா மிராசுதாரர்களின் வீடுகளில் விருந்துண்டு, தூங்கி, மாலையில் மேடை ஏறி சோஷலிஸம் பேசினர்.
தமிழைக் காப்பாற்ற என்று சொல்லி ஹிந்தியை அழித்தனர். தமிழையும் கற்காமல், தமிழைத் துறைதோறும் ஓம்பாமல், பிறமொழி ஞானத்தையும் துறந்து, அறிவுக் காற்று தம் வீட்டுக்குள் வந்து விடக்கூடாது என்று அடம்பிடித்து, தம் வீட்டு ஜன்னல் கதவுகளைச் சாத்திக்கொண்டு, கூட்டம் கூட்டி, கலைத்தரம் சிறிதும் அற்ற சிலைகளை நாடு முழுக்கச் சதுக்கப் பூதங்கள் போல் நிறுவி, அதனாலேயே தமிழ் வளரும் என்று மனப்பால் குடித்தனர்.

உண்மையில், இவர்கள் வளர் தமிழுக்குச் சம்பந்தம் இல்லாதவர்கள்.செங்கல்லுக்கும், சீம்பாலுக்கும் என்ன சம்பந்தம்?

கருத்துலகின் கசாப்புக்காரர்களாகிய இவர்கள், காலைப் பத்திரிகைகள், கிழமை, மாதப் பத்திரிகைகள்கூட நடத்தினர்.தமிழர்கள் தூங்கி எழுந்தது தொடங்கி, அவர்களின்

மூளைகளைச் சலவை செய்யத் தொடங்கினர்.காலை பத்து மணி தொடங்கி சினிமா காட்டி, சாதா சலவையை அர்ஜண்ட் சலவை ஆக்கினர்.மாலைகளில் வெளிச்ச மேடைகளில் ஏறி அமர்ந்து கொண்டு மக்களை இருட்டில் ஆழ்த்தினர்.
எல்லாம் முடிந்து இரவு படுக்கப்போகும் மக்கள், எதையாவது நல்லதாகச் சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காகக் கள்ளச்சாராயமும் நல்ல சாராயமும் கொடுத்து தாலாட்டினார்கள், அரை மயக்கத்தில் தமிழர் புரண்டு கொண்டிருக்கையில், வானொலி மூலம் ஒரு தலைவர் வந்து, ‘நடையா…இது நடையா’, ஒரு நாடகமன்றோ நடக்குது’ என்று பாடி, கிச்சு கிச்சு மூட்டி, கொஞ்ச நஞ்சம் மீதி இருந்த மூளைகளைச் சுத்தமாகக் கொள்ளை அடித்துச் சென்றார்.
இதுவே தமிழரின் அறுபது ஆண்டு கால வரலாறு

.

மாலன் சொல்கிற ‘கலாசாரச் சீரழிவின்’ ஒட்டு மொத்தச் சித்திரம் இதுதான்.இந்த நச்சுப் பொய்கைக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“ அவர் பெரிய எழுத்தாளர், தெரியுமா,”

“அப்படியா ? எத்தனைத் துப்பறியும் கதைகள், மாத நாவல்கள் எழுதியுள்ளார் ?எத்தனை சினிமாவுக்குக் கதை வசனம் எழுதியிருக்கிறார்?”

“அவர் சிறந்த கவிஞர்.”

“எத்தனைப் படங்களுக்குப் பாட்டு எழுதியிருக்கிறார்?”

“அவர் பெரிய அறிஞர்.”

“அண்ணாதுரை மாதிரி அடுக்கு மொழி பேசுவாரா?”

“அந்த அம்மாவுக்கு அந்தத் தலைமைப் பதவி தகுதியானதுதானா?”

“ஏன் இல்லை.அவர் இருபத்தியோரு படங்களில், எங்கள் தலைவருக்குக் கதாநாயகி ரோல் பண்ணியவராயிற்றே… அதற்கு மேலும் என்ன தகுதி வேண்டும்?”

“புதுமைப்பித்தன் தெரியுமா?

“பார்த்திருக்கிறேன்.எம்.ஜி.ஆர்.நடித்த படம்.”

“பாரதி படித்திருக்கிறீர்களா?”

“அவன் பார்ப்பான்.பார்ப்பானை நான் படிப்பதில்லை.”

தமிழக கலாசாரச் சூழல் இது.இந்த நச்சுச்சூழலில் இருந்து இளைய சமுதாயத்தை யார் காப்பது?இந்தச் சமுதாயத்தின்மேல் அக்கறை கொண்ட அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா, இது?இது கவலை தரும் ஸ்திதி அல்லவா?அறிவாளர்கள் இது குறித்து ஆய்வு நடத்தி, இதை மாற்றி அமைக்க முன் வர வேண்டாமா?

தமிழன், தமிழ் இளைஞனின் இன்றைய நிலை குறித்து மாலன் மிக அக்கறையோடும், தாயுள்ளத்தோடும் யோசித்துள்ளார்.
‘அருணாசலம், முப்பத்தைந்து வயது இளைஞன், பத்தாவது வரை படித்தவன்.நகருக்கு வெளியே ஒரு சிறு அச்சாபீஸில் டிரெடில்மேன்.போன வருடம், தன் அக்கம் பக்கத்து வீட்டு மனிதர்கள் விஷச்சாராயத்துக்குப் பலியானபோது, அதன் வேரைத் தேடிப் புறப்பட்டான்.இரண்டு மாதங்களுக்கு முன் கள்ளச்சாராய உற்பத்தி ஸ்தானத்தைக் கண்டுபிடித்தான்.போலீஸுக்குத் தகவல் சொல்லப்பட்டது.அவர்களிடமிருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லை.மாறாக, குண்டர்கள் வீடுதேடி வந்து மிரட்டிவிட்டுப் போனார்கள்.அருணாசலம், புகாரை வாபஸ் வாங்கவில்லை.மாறாக, கவர்னருக்குக் கடிதம் போட்டான்.போன வாரம் வழியில் மறித்து அடித்தார்கள்.இந்த வாரம் ஆளைக் காணோம்.

அருணாசலம் கொலை செய்யப்பட்டான்.
இது “மாறுதல் வரும்” கதைப்பகுதி மாத்திரம் அன்று, நடைமுறை, கள்ளச்சாராயம் காய்ச்சுகிறவனை சமூக நலம் கருதிப் போலீஸுக்குக் காட்டிக் கொடுப்பவனை அச்சாராய சாம்ராஜ்யம் சும்மா விட்டு வைப்பதில்லை என்பதே யதார்த்தம். போலீஸுக்குப் பிராது கொடுப்பவனின் பெயரும் முகவரியும் போலீஸாலே சாராயக்காரனுக்குத் தரப்படுகிறது என்பதே உண்மை.இங்கு கள்ளச்சாராயம் என்பது முத்தரப்புக் கூட்டுத் தொழில்.அரசு+போலீஸ்+கள்ளச்சாராய வியாபாரிகள் இம்மூவரும் பாகஸ்தராகப் பங்கு வைத்துச் செய்கிற தொழிலே கள்ளச்சாராயம்.
இன்று கள்ளச்சாராயம், அரசியலின் உள்வட்டமாய் இயங்குவதை யார் அறியார்?பேரணிகளுக்கான, ஊர்வலங்களுக்கான, பொதுக்கூட்டங்களுக்கான, தேர்தலுக்கானப் பணத்தை, அரசியல்வாதிகள் யாரிடமிருந்து பெறுகிறார்கள்?கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்துதானே?கட்சிகளுக்குக் கப்பம் கட்டுவதுபோல, இவர்கள் கட்சிகள் தம்பால் கரிசனம் காட்டும் என்பதுதானே?ஆகவே, இன்றைய அரசியல், மெத்தனால் மற்றும் பாட்டரிகள் மற்றும் அழுகிய பழத்தோல்களில் தானே இருக்கின்றன?

இந்த அரசியல்வாதிகளின் நகங்கள் முளைத்த கைகளில், ஒரு கோழிக்குஞ்சைப் போல் சிக்கியிருக்கும் நம் இளைஞர்கள் எதிர்காலம் என்னாவது?
நம் சமூகத்தில் புதிதாகத் தோன்றியிருக்கும் ‘இனவெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம்’ இன்றைய தினத்தில், சோப்பைப் போல, பவுடரைப் போல, ஸ்நோவைப் போல, டூத் பேஸ்ட்டைப்போல இன்னுமொரு ‘கன்ஸ்யூமர் புராடெக்ட்’.

இந்த விதப் பத்திரிகைகளில் என்னால் இரண்டுவிதப் போக்குகளைப் பார்க்க முடிகிறது.ஒன்று, மாலன் சொல்வது போல பத்திரிகையாளர்கள், போலீஸ்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்.எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ அங்கெல்லாம் (முடிந்தவரை) சென்று, துப்புத் துலக்கி உண்மைகளை நாட்டு மக்களுக்குச் சொல்வது ஒரு தொண்டு.

இந்த ரகப் பத்திரிகைகளில் இரண்டாம் வகையின் நிறம் மஞ்சள். நமக்கு வேண்டாத, தமக்குப் பயன்படாத, தமக்கு உதவாத, தம்மை மதிக்காத, அரசியல்வாதிகள், அதிகாரிகளை இழித்தும் பழித்தும் எழுதுவது, பத்தை நூறாய்ப் பெருக்கிச் செய்யும் காகித வியாபாரம். இந்த ரகப் பத்திரிகைகளின் ஆசிரியர் முதல் நிருபர் வரை, அத்தனை பேரும் பணம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு வாழ்பவர்கள், ஒரு ‘சீஸனில் பத்திரிகை விற்றால் இவர்கள் பத்திரிகை வியாபாரமும் செய்வார்கள். இவர்கள் யாரையும் காயப் -படுத்தத் தயங்காதவர்கள்.
இவர்கள் கையில் பத்திரிகை இருக்கிறது.எனினும் இவர்கள் பத்திரிகையாளர்கள் இல்லை.

இந்தப் பத்திரிகையாளர்களின் தோற்றத்துக்கு மாலன் ஒரு காரணம் சொல்கிறார்.

“இன்றைக்குப் படித்த நடுத்தர வர்க்கத்திற்குச் சிந்திக்க விருப்பம் இல்லை.அவர்கள் செயலின்மை என்ற வைரஸால் பீடிக்கப்பட்டு விட்டார்கள்.தே ஆர் சீஸ்ட் வித் இன் ஆக்ஷன்.அந்தக் குற்ற உணர்வின் விளைவு இன்றைக்கு இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம் கொடி கட்டிப் பறக்கிறது.கள்ளக்கடத்தல்காரன் தானம் பண்ணுவது போல, அதைப் பயன்படுத்திக்கொண்டு நாங்கள் பணம் பண்ண விரும்புகிறோம்.ஆனால் கீரைக் கடைக்குப் போட்டிக் கடை முளைத்த கதையாக எங்கள் சிறு உலகத்தில் ஒரு சின்ன ரொட்டித்துண்டைப் பிய்க்க ஏகப்பட்ட கைகள்.

“வித்தியாசமாக முயற்சித்தால் எங்களுக்குச் சற்றுப் பெரிய துண்டு கிடைக்கக்கூடும்.எனவே எங்களுக்குத் தேவை அறிவுஜீவிகள்.நிருபர்கள் அல்ல.”(‘ஏன்?’)

ஒரு நாட்டின் ஐந்தாவது எஸ்டேட்டாகச் செயல்பட வேண்டிய பத்திரிகைகள் எப்படி, எவ்வாறு, பண லாபம் ஒன்றையே கருதி இழிந்துவிட்டது என்பது மாலன் தன் கதைகளின் மூலம், தமிழ் கூறும் நல்லுலகம் முன் வைக்கிற இரண்டாவது கேள்வி.

வங்கி தேசிய மயம் என்பது, இந்தச் தேசத்தில் மட்டுமே ஏற்படக்கூடிய உற்பாதம்.வங்கிப் பணம் நலிந்த பிரிவினருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே நம் மூதாதையர் நோக்கமாயிருந்தது.

ஆனால் கழுதைக்கு மூக்கு வேர்ப்பதும் முட்டி இடிப்பதும் இயல்புதானே.போகப்போக, வங்கிகள் தங்கள் சுய முகத்தையே காட்டுகின்றன.பிரச்சினை வலுத்தது.இளைஞர்கள் தகராறு செய்கிறார்கள்.
மாலன் சொல்கிறார்.

“தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தங்களுக்கு ஒரு அடித்தளம் அமைய வங்கிப் பணம் வாரி விடப்படுகின்றன.வேலை கொடுக்க முடியாத அரசாங்கம் வீசுகிற ரொட்டித்துண்டு.உழைக்க விருப்பம் இல்லாதவர் வசம் சேர்க்கப்படும் செல்வம்.இவை கடன் அல்ல. ஓட்டுக்காகக் கொடுக்கப்படும் லஞ்சம்; ஒரு வகையான ஜீவனாம்சம்.”(‘ஏன்?’)
மாலன் மேலும் சொல்கிறார் :

“தேசியமயமாக்கப்பட்டதன் விளைவாக வங்கிகள் கிராமங்களைத் தொட்டுவிட்டன. ஆனால் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்கள் கிராம மக்களைச் சென்றடைந்து விட்டனவா?”

நம் பதில் ‘இல்லை’ என்பதுதான்.

அந்த நோக்கம், வங்கிகளைத் தேச உடைமையாக்கியவர்களுக்கே இல்லை என்பதுதான் விஷயம்.நம் தேசத்தில் அனைத்து மேம்பாடான திட்டங்களும், ஓட்டுப் பெட்டிகளையே குறி வைக்கின்றன என்பதுதான் நம் தலைமுறையின் துரதிருஷ்டம்.

குழந்தைகளுக்குச் சத்துணவு போடுவது குறித்து நமக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை.ஆனால் போட வேண்டியவன் அப்பனா அல்லது அரசியல்வாதியா என்பதே நம் ஆட்சேபம். குழந்தைகளுக்கு மூன்று வேளையும் சத்துணவு போடும் தகுதிகளை அப்பன்மார்களுக்கு ஏற்படுத்தித் தருவதே ஒரு ஆரோக்யமான அரசின் நோக்கமாகுமும், லடசியமுமாக இருக்க முடியும்.அப்பன் கைகளிலிருந்து சமூகப் பொறுப்பை அரசு தட்டிப் பறிப்பது அடிப்படை நாகரிகமோ, பண்பாடோ அற்ற காரியம் என்பதை ஏன் இந்த அரசியல்வாதிகள் உணர்வதில்லை?
இது, ஒரு கலாசாரம் அழுகிக் கொண்டிருப்பதன் சின்னம்! அழுகி நாற்றமெடுத்துக் கொண்டிருப்பதன் சின்னம்.
வங்கி தேசியமயமாக்கப்படுவதன் காரணங்களுக்கும் சத்துணவுத் திட்டங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? இரண்டும் இரட்டைப் பிள்ளைகள்!

ஆண்களும் பெண்களும் திருமணத்துக்கு முன்பு ஒரு மாதிரியாகவும் பின்னர் வேறு மாதிரியாகவும் பரிணாமம் பெறுவதை, தமிழில் மாலனைப் போல் செய்து காட்டியவர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து.
இத்தொகுதியிலும், காணாமல் போனவர் கள், கல்யாணம் என்றொரு ரசாயணம், காதலினால் அல்ல, எங்கள் வாழ்வும் முதலான கதைகள், உரத்து, மிக உரத்து யதார்த்தத்தைக் காதில் அறைந்து சொல்கின்றன.

இது அப்படித்தான் சொல்லப்பட வேண்டும்!
இங்கு, காதல் என்கிற உன்னத உணர்வும்கூட அழுக்கு பட்டுச் சேறாகி இருக்கிறது.நம் சினிமாவும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளும் இதை மழுங்கடித்ததில் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றன. இங்கு ஆண் பெண் உறவு, ஒன்று கனவு அல்லது சதைச் சமாச்சாரம், ‘செம்புலப் பெயர் நீர் போல’ மனம் ஒத்துக் காதலித்த மூதாதையர்களின் வாரிசுகள், இப்படியுமா கீழ் இறங்க முடியும் என நினைக்கையில் நெஞ்சம் பதைக்கிறது.
குழந்தைகளைக் குழந்தைகளாக நாம் வளர்ப்பதில்லை.அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் பிரித்து வளர்க்கிறோம்.ஒருவர் மூச்சுக் காற்று மற்றவர் மீது படலாகாது என்று சீனப் சுவர் எழுப்புகிறோம்.ஆணும் பெண்ணும் பேசினால்.அவர்கள் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது குறித்துத்தான் பேசுகிறார்கள் என்று நம் அழுக்கு மனம் நினைத்து அல்லல் அடைகிறது.

நம் ஒழுக்கக் கோட்பாடுகள் பெருமையின், சொத்தின், பொருளாதாரத்தின் அடிப்படையில் விளைந்தவை.அவை மனித மனங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆண்-பெண் புணர்ச்சி புனிதம் என்கிறோம்.அல்லது கீழ்மை என்கிறோம்.பெண், ஒரு பொத்தல் பாத்திரம் என்கிறோம்.நம் கலாச்சாரம் எவ்வளவு பொய்மையானது?
கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா, கோப்பெருந்தேவியா என சொற்சிலம்பம் ஆடுகிறோம்.உதவிக்கு வரும் அபலைப் பெண்களைக் கைப்பிடித்து இழுத்துக் கற்பழிக்க முயல்கிறோம்.

தமிழர் இருமுகக் கலாசாரம் கொண்டவர்கள். அவர்களிடம் சிந்தனை, செயல், நேர்மை என்பது இல்லை!

காதலின் பெயரால் பத்தாம் வகுப்பு மாணவன், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்குக் கடிதம் எழுதுகிற, காதல் கவிதை எழுதுகிற காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.காதலின் முகம் இங்கு விடுபட்டுப் போய் இருக்கிறது.இதற்குக் காரணம் நம் நசிவுக் கலாசாரவாதிகள்தாம்.

ஆகையினால், முதல் தொடுதலில், முதல் பேச்சில், முதல் கண் அசைப்பில் அவனோ அவளோ விழுந்து விடுகிறார்கள்.பொட்டலத்தை அவிழ்த்துப் பார்க்க ஆவலாய்த் துடிக்கிறார்கள்.அப்புறம் ஒருவருக்கொருவர் கசந்து போகிறார்கள்.முத்தம் கொடுத்துப் பசி ஆற முடிவதுண்டா?
யதார்த்த உலகம் அவர்களைப் பயமுறுத்துகிறது.அப்போது ஜாதி, மதம், சமயம், ஆண்மை, பெண்மை, கௌரவம், குலம் எல்லாம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்குகின்றன. கடைசியில்  காதல் கருகி விடுகிறது.

காதலைக் குறித்தும், ஆண் பெண் உறவைக் குறித்தும் மிகத் தெளிவான, மிக ஆழமான, மிகச் சரியான கருத்துக்களை மாலன் கொண்டிருக்கிறார். இளைய தலைமுறையினர் இவைகளைக் கற்றுக் கடைத் தேர்வாளர்களாக!

“உனக்குக் காதல் வேண்டாம்.உனக்கு மட்டுமில்லை.நம்ப தேசத்து ஏழை இளைஞர்களுக்குக் காதல், அரசியல், இலக்கியம், ரசிகர் மன்றம் எல்லாம் அதிகம். அவர்களால் தாங்க முடியாது…துரதிருஷ்டவசமாக நம் குழந்தைகளுக்கு உடம்பையும் மனசையும் பிரித்துப் புரிந்து கொள்கிற புத்தி வளரவில்லை.

ஆணும் பெண்ணும் ஸநேகமாக இருப்பதற்கு நான் எதிரி இல்லை.ஆனால் ஸ்நேகம் முத்தமிடாது. எதிரில் இருப்பவனை ‘இம்ப்ரஸ்‘ பண்ண வேண்டும் என்ற கனலை மனத்தில் சுமந்து திரியாது. ஏழைப்பையன் நீ! உனக்குக் காதல் வேண்டாம்.பணம் சம்பாதி.சபையில் நீ நுழைந்தால் மற்றவர் எழுந்து நிற்கிற மரியாதையைச் சம்பாதி.

பணம் பண்ணிய சினிமாக்காரர்கள், பத்திரிகைக்காரர்கள், கவிஞர்கள், காதல் பலூனை உன்னிடம் விற்பதற்குக் கடை விரிப்பார்கள்.ஒரு லட்சியத்தை ஸ்வீகரித்துக் கொண்டு உன்னைப் போன்ற இளைஞர் எழுந்துவிடக் கூடாது என்பது அவர்கள் ஆசை.நீ எழுந்தால் அவர்கள் புரண்டார்கள்.உனக்குப் பலூன் வேண்டாம்.ஆக்ஸிஜன் தருகிறேன்.”இத்தொகுதி முழுக்க மாலன், இளைய தலைமுறைக்குத் தந்திருப்பது நிறைய பிராணவாயுவைத்தான்.

இத்தொகுப்பில் இருக்கும் அத்தனைக் கதைகளும் இலக்கியத்தரம் வாய்ந்தவை.

எழுத்து இரு வகைப்படும்.ஏதேனும் சொல்ல வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் வருகிறபோது எழுத்தாகிற எழுத்து?இதற்குச் சமூக நோக்கம் உண்டு.

இரண்டாவது  வகை இப்போது தமிழில் வந்து கொண்டிருக்கிற பெருவாரிக் குப்பைகள்.

மாலன் எழுத்து முதல் வகை.

அவர் நடை சுருக்கமானது.நேரானது.ஆடம்பரம் அற்றது.அழகானது.தெளிவானது.ஆகவே இலக்கியத் தரமானது.தமிழ்நடை ஒரு இயக்கத்தால் ஆபாசமாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆபாசத்துக்கு அடுக்கு மொழி என்று பெயர்.ஜல்லி அரசியல்.ஜல்லி இலக்கியவாதிகள் பயன்படுத்தி நைந்த மொழி நடை அது.

நல்ல தமிழ் என்பது நேருக்கு நேர் பேசும், அரிதாரம் பூசாது, கேலி செய்யாது.இரண்டாவது அர்த்தம் கற்பிக்காது.சுற்றி வளைக்காது.மாலனின் தமிழ், நல்ல தமிழ் என்பதைப் படிக்க இருக்கும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

மாலன், இளைஞர்களைக் குறி வைத்து இந்தக் கதைகளை எழுதியிருக்கிறார்.ஏனெனில் அவர்களே நாளை, இன்றைய நம்பிக்கைகள் என்பதால்.மருந்து நோயுற்ற குழந்தைகளுக்குத் தான் தரப்படும் என்பதாலும் இவை இளைஞர்களைக் குறி வைக்கின்றன. இந்தக் குண்டுகள் சரியான நேரத்தில் எய்யப்பட்டுள்ளன இவை வெடிக்க வேண்டும்.எதிர் முகாமின் கூரைகள் சரியத்தக்க விதத்தில் இவை வெடிக்க வேண்டும்.காலம் காலமாய், சமூக அறிவாளர்கள் எழுதுவதும், அவைகளைச் சித்திரைக்கதை படிப்பதுபோல் எண்ணிப் படித்த�

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *