மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனி உண்டோ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வழக்கம் இனி உண்டோ?

                 

 மறுநாள் பள்ளிக்கூடம் திறக்கவிருந்தது. புதிய யூனிபார்ம் வாங்கிக் கொண்டு அவனும் அவனுடைய தம்பியும் அம்மாவும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். மதியம் இரண்டரை மணி இருக்கும்.தீடிரெனப் பொங்கிப் பெருகி வந்தது வெள்ளம். அம்மாவும் குழந்தைகளும் காரின் கூரை மீது ஏறி நின்று கொண்டார்கள். குபுகுபுவென வெள்ளம் பாய்ந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

 

அவனுக்கு- அவன் பெயர் ஜான் ரைஸ்- தண்ணீரைக் கண்டாலே பயம்.ஆனால் இப்போது அவனைச் சுற்றிலும் தண்ணீர். அதுவும் சீறிப் பாய்ந்து கொண்டு வரும் வெள்ளம். அந்தப் பதின்மூன்று வயதுச் சிறுவன் உள்ளம் நடுங்கிக் கொண்டுதான் இருந்திருக்கும்.

 

சில நிமிடங்களில் மீட்டுச் செல்ல உதவி வந்தது. அப்போது  ஜான்  “முதலில் என் தம்பியைக் காப்பாற்றுங்க! என்று அருகில் இருந்த 10 வயது பிளேக்கை காண்பித்தான். அவன் சொன்னபடியே தம்பியை கரை சேர்த்துவிட்டு ஜானை காப்பாற்ற வந்தார்கள். ஆனால் அவனையும் அவனது அம்மாவையும் சேர்த்துக் கட்டிய கயிறு பாதியில் அறுந்து போக வெள்ளம் அவர்களை அடித்துக் கொண்டு போயிற்று. ஒரு மரக் கிளையைப் பிடித்துத் தப்ப முயன்றார்கள். ஆனால் வேகம் அதிகமாக இருந்த வெள்ளம் அவர்களை அடித்துக் கொண்டு போயிற்று. அந்த ஊரில் வெள்ளத்திற்குப் பலியான 10 பேரில் அவர்கள் இருவர்.

 

உயிருக்கு ஆபத்துச் சூழ்ந்திருந்த நேரத்திலும், உள்ளம் அச்சத்தில் ஆழ்ந்திருந்த நேரத்திலும் தனக்கு வந்த உதவியை தம்பிக்காக விட்டுக் கொடுத்த அந்தப் பதின்மூன்று வயதுச் சிறுவன் ஜான் ரைஸை ஆஸ்திரேலியப் பத்திரிகைகள் “லிட்டில் ஹீரோ!எனக் கொண்டாடி எழுதிக் கொண்டிருக்கின்றன.

 

தியாகம் என்று சொல்லுங்கள், பாசம் என்று சொல்லுங்கள் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். பதின்மூன்று வயதில் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் இன்னொரு உயிரைக் காப்பாற்றிய அந்தச் செயலில் மனிதம் இருக்கிறது.

*

புல்மேடு

சொல்லே ஓர் ஓவியமாய் உள்ளத் திரையில் ஒரு சித்திரம் தீட்டுகிறது.வனத்தின் மடியில் வளர்ந்து நிற்கும் குன்றம்  என்பதால் அந்த இடம் அழகாகத்தானிருந்திருக்கும். ஆனால் அந்தப் புல்மேடு பொங்கல் நாளன்று புதைகுழியாய் மாறிப் போனது.

மகர ஜோதியைப் பார்க்கப் போன நூறு பேர் மரண இருளைத் தழுவிக் கொள்ள நேர்ந்த துயரம், இன்னும் சில வருடங்களுக்கு இதயத்தில் கசிந்து கொண்டிருக்கும்.

என்ன நடந்தது என்பதைச் செய்தியாளர்கள் சொல்லக் கேட்கையில் இந்த விபத்து அவசரத்திற்கும் பேராசைக்கும் பிறந்த் குழந்தை எனப் புரிகிறது.மாலை நேரத்தில் மலை மேல் எழுகிற ஜோதியை இந்த இடத்தில் இருந்தால் நன்றாகப் பார்க்கலாம் எனக் கேள்விப்பட்டு அங்கே மூன்று லட்சம் பேர் கூடியிருந்தார்கள்.அந்த இடமோ இருள் அடர்ந்த காடு. சரியான பாதைகள் இல்லை. இருந்த பாதைகளும் குறுகலானவை. அவற்றின் அகலமே பத்தடிதான் அவற்றையும் தற்காலிகமாக முளைத்திருந்த தேநீர் கடைகள் ஆக்ரமித்துக் கொண்டிருந்தன.

 

இரவு ஏழே கால் மணி இருக்கும். ஜோதி தெரிந்தது. கும்பிட்டுக் கோஷமிட்ட கூட்டம் அவ்வளவுதான் வந்த வேலை முடிந்தது என அவசரமாய்த் திரும்பியது.இரவோடு இரவாக இருக்கிற வண்டியைப் பிடித்து ஏறி குமுளிக்கோ, வண்டிப் பெரியாறுக்கோ போய்விட்டால் மறுநாள் ஊர் போய்ச் சேர்ந்து விடலாம் என்ற எண்ணமே எல்லோர் மனதிலும் மேலோங்கி நிற்கிறது.சரிந்து இறங்கும் பாதையில் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளிக் கொண்டு, விரைந்து இறங்குகிறது கூட்டம்.

காசு பார்க்க இதுதான் நேரம் எனக் காத்திருக்கும் ஆட்டோ ரிகஷாக்கள் 20-30 பேரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறது. பாரம் தாங்காத ஒரு ஆட்டோ பாதியில் குடை சாய்கிறது. இருக்கிற குறுகிய பாதையும் அடைத்துக் கொள்கிறது.

 

முட்டி மோதிக் கொண்டு வருகிறது மனித வெள்ளம். தடுக்கி விழுந்தவர் மேல் ஏறி மிதித்துக் கொண்டு கடந்து செல்கிறது காயத்திலும் தாகத்திலும் கெஞ்சும் மனிதக் குரல்களை அலட்சியப்படுத்தி முன்னேறுகிறது அவசரமும் சுயநலமும்.

*

இரண்டு காட்சிகள். இன்னொருவனுக்காகத் தன் உயிரை விட்டுக் கொடுத்த ஒருவன். உயிரைக் காத்துக் கொள்ள ஏறி மிதித்துக் கொண்ட ஒரு கூட்டம். நான்கு தினங்கள் இடைவெளியில் நடந்த இந்தக் காட்சிகளை நாளிதழ்கள் நம் முன் வைக்கின்றன. இடைவெளி நாட்களில் மட்டும்தானா?

 

மனிதர்களைப் புறந்தள்ளிவிட்டு கடவுளை மட்டும் கட்டிப் பிடித்துக் கொள்கிற காரியத்திற்குப் பெயர்தான்தான் பக்தியா? யோசித்துப் பார்த்தால், அது பக்தியில்லை, ஒருவகையில் நாத்திகம். ஏனென்றால் எல்லா உயிர்களிலும் நான் இருக்கிறேன் எனச் சொல்கிறானே இறைவன், பிற உயிரின் துயரைப் பொருட்படுத்தாதவர்கள் இறைவனை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்.

 

சக உயிர்களிடத்தில் பரிவை, சமூகத்தில் ஒழுங்கை, இயற்கையைப் பேணுகிற மனத்தை, எளியவருக்கு உதவுகிற கரத்தை எது எனக்குக் கொடுக்குமோ அதுதான் எனக்குக் கடவுள். அவற்றை நடைமுறைப்படுத்துவதுதான் பக்தி. மற்றதெல்லாம் வெறும் சடங்கு. சம்பிராதாயம். சாங்கியம்.  

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these