உங்கள் பயணத்தை உங்களிடமிருந்து துவக்குங்கள்

உங்கள் பயணத்தை

உங்களிடமிருந்து துவக்குங்கள்

 

எப்போது பார்த்தாலும் என் ஜன்னலுக்கு வெளியே சச்சரவிட்டுக் கொண்டிருக்கும் பறவைகளை இன்று காணோம். இந்தக் கோடையைத் தாங்கமுடியாமல் குடும்பத்தோடு அவை எங்கேயாவது குளிர் பிரதேசத்திற்குச் சுற்றுலா போய்விட்டனவோ என்னவோ? அல்லது நான் நேற்று கதைகளில் படித்த அந்த மெளன மடத்தில் போய்ச் சேர்ந்து விட்டனவோ என்னவோ?

அந்த மடத்தில் ஒரு விநோதமான சட்டம் இருந்தது. எல்லோரும் எப்போது பார்த்தாலும் சளசளவென்று பேசிக் கொண்டே இருக்கக் கூடாது. ஒருவர் ஒரு வருடத்தில் ஒரு முறைதான் பேசலாம். அதுவும் இரண்டு வார்த்தைகள்தான் பேசலாம்.

ஓர் ஆண்டு முழுதும் மெளனமாக இருந்த பின் அந்த இளம் துறவிக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று கேட்க எல்லோரும் ஆவலோடு காத்திருந்தர்கள். அவர் சொன்னார்:சாப்பாடு சரியில்லை  தலைவர் ஏதும் பதில் சொல்லவில்லை. புன்னகைத்துவிட்டு மெளனத்தில் ஆழ்ந்தார்.

அடுத்த ஆண்டும் அவரது பேசும் வாய்ப்பு வந்தது. சென்றமுறையைப் போல இந்த முறை மற்றவர்கள் அவ்வளவு ஆவலாகக் காத்திருக்கவில்லை. ஆனாலும் அவர் சொல்வதைக் கேட்க விரும்பினார்கள். துறவி எழுந்தார்: “கொசுக்கடி தாளவில்லைஎன்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

மூன்றாவது ஆண்டு அவரது வாய்ப்பு வந்த போதும் எல்லோரும் அவரைப் பொருட்படுத்தாமல் உட்கார்ந்திருந்தார்கள். வழக்கம் போல எதைப்பற்றியாவது குறை சொல்லப்போகிறார். புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறார் என்று நினைத்தார்கள். அவர் சொன்ன வார்த்தைகள் அங்கு சில நொடிகளுக்கு ஒரு சிறிய சலனததை ஏற்படுத்தின. சில நொடிகள்தான். அதன் பின் அமைதி திரும்பிவிட்டது. அவர் சொன்ன வார்த்தைகள்: “ மடத்திலிருந்து வெளியேறுகிறேன்

மடத்தின் தலைவர் புன்னகை மாறாமல் சொன்னார். அவரும் இரண்டு வார்த்தைகள்தான் சொன்னார்: நான் எதிர்பார்த்தேன்

இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு இளம் துறவியை அழைத்துக் கொண்டு தன் அலுவலகத்திற்குப் போனார். அவரை அமரச் சொல்லிவிட்டு ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ எழுதித் துறவியிடம் கொடுத்தார்.

“ நண்பரே.இந்த மடத்தில் வார்த்தைகளைத் துறக்கச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. இறைக்க இறைக்கச் சுரக்கிற கிணற்றைப் போல வார்த்தைகள் பேசப் பேச பெருகும். பேசுவதற்காக வார்த்தைகள் என்பது போய் வார்த்தைகளுக்காகப் பேச்சு என்று வளர்ந்து விடும். தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வார்த்தைகள் என்பதற்குப் பதில் வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ளத் தகவல்களை மனம் தேட ஆரம்பித்துவிடும். அப்போது அது வெளி உலகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் உலகம் இருக்கிறது. மனதை அதை நோக்கித் திருப்ப வேண்டுமானால் வார்த்தைகளைத் துறக்கப் பழக வேண்டும். நீங்கள் வெளி உலகைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். அதனால் உங்களைப் பற்றிச் சிந்திக்க மறந்து விட்டீர்கள்! உங்கள் பயணத்தை உங்களிடமிருந்து துவக்குங்கள். கடவுள் துணை நிற்பார்! 

நான் சந்நியாசி அல்ல. பத்திரிகைக்காரன் மெளனித்துவிடுவதை விடப் பெரிய பாதகம் வேறொன்றில்லை. ஆனால் அந்த சந்நியாசி சொல்வதில் ஒன்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். அதைத்தான் நானும் என் இளம் நண்பர்களுக்கும் பரிந்துரைக்கிறேன். அது “உங்கள் பயணத்தை உங்களிடமிருந்து துவங்குங்கள்

பிளஸ் 2 விற்குப் பின் என்ன படிப்பது என்பதை முடிவு செய்வது என் இளம் நண்பர்களுக்கு எப்போதும் பெரும் சவாலாகவே இருக்கிறது. இன்னும் நான்காண்டுகளுக்குப் பிறகு ஐடி துறையில் வாய்ப்புக்கள் எப்படி இருக்கும்? கடந்த ஆண்டு இந்தக் கேள்வியை என்னிடம் கேட்ட மாணவர்களும் பெற்றோர்களும் ஏராளம்.கம்யூட்டர் சயின்ஸ் நல்லதா, ஐடி நல்லதா?எனக்குக் கணக்கு அவ்வளவாக வராது, ஆனால் இலக்கியம் பிடிக்கும், வரலாறு பிடிக்கும். அப்பா பொறியியல் படிக்கச் சொல்கிறார். கதைப் புஸ்தகம் படிப்பதெல்லாம் ஒரு படிப்பா, பிழைக்கிற் வழியைப் பாருடா! என்கிறார். என்ன செய்ய?என்னாலும் முடியும் என்பதை எல்லோருக்கும் மெய்ப்பிக்க வேண்டும் என்பதற்காக வெறியோடு படித்தேன். கணிதம் உயிரியல் இரண்டிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறேன். மெடிக்கலுக்குப் போடு என்கிறார் அப்பா. மெடிக்கல் படித்தால் வெறும் டிகிரியோடு நிறுத்த முடியாது. மேலே படித்து பிராக்டீஸ் ஆரம்பித்து நாலு காசு பார்க்க நிறைய வருடங்களாகும். ஆனால் பொறியியல் படித்தால் கடைசி வருடத்திலேயே பிளேஸ்மெண்டில் வேலை கிடைத்துவிடும். நான் டாக்டருக்குப் படித்து முன்னேறி வருவதற்குள் என் கூடப்படித்தவர்கள் நிறைய சம்பாதித்து செட்டில் ஆகி விடுவார்கள். அது அப்பாவிற்கு புரிய மாட்டேன் என்கிறது. நீங்கள் சொல்லுங்களேன். நான் இந்த எலிகளின் பந்தயத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை. வித்தியாசமாகப் படிக்க நினைக்கிறேன் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? 

ஆண்டுதோறும் என் இளம் நண்பர்களிடமிருந்தும், அவர்களது பெற்றோர்களிடமிருந்தும் நான் எதிர் கொள்ளும் கேள்விகள் இவை. இவற்றுக்குத் திட்டவட்டமான விடைகள் கிடையாது. மற்றவர்களின் மதிப்பைப் பெற வேண்டும், மற்றவர்களைப் போல இருக்க வேண்டும், மற்றவர்களை விட உயர்வாக இருக்க வேண்டும், மற்றவர்களை விடத் தாழ்ந்துவிடக் கூடாது, மற்றவர்களைப் போல இருக்கக் கூடாது என மற்றவர்களை முன்னிறுத்தி முடிவெடுக்கும் நேரங்களில் நம்மை நாமே தொலைத்துவிடும் துயரம் நேர்ந்துவிடும்.

வெற்றி – இந்தச் சொல்லை நீங்கள் பணம் சம்பாதிப்பது, புகழ் ஈட்டுவது, சாதனைகள் செய்வது என எப்படி மொழிபெயர்த்துக் கொண்டாலும் சரி- என்பதை அடைவதற்கான ஃபார்முலா ஒன்றுதான். ஆர்வம், திறமை, உழைப்பு இந்த மூன்றும் ஒரு நேர் கோட்டில் சங்கமிக்கும் போது விளைகிற கனிதான் வெற்றி. வெறும் ஆர்வம், வெறும் திறமை, வெறும் உழைப்பு என்று ஒன்றைவிட்டு ஒன்று தனித்திருந்தால் வெற்றி நிச்சயமில்லை விதையும் நிலமும் நீரும் தனித்திருந்தால் பயிர் விளைவதில்லை

ஆர்வம் இல்லாத ஒன்றில் திறமையை வளர்த்துக் கொள்வது கடினம். ஆர்வம் இருந்தாலும் உழைப்பு இல்லாமல் திறமையை வளர்த்துக் கொள்வதும் கடினம்.

எனவே உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை அடித்தளமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கனவு மாளிகை அதில் கால் கொண்டு நிற்கட்டும். உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை எப்படிக் கண்டு கொள்வது? உங்களுக்கு எதில் திறமை இருக்கிறதோ அதில் ஆர்வம் இருக்கிறது. உங்கள் வாழ்வில் கடந்து போகும் ஓராயிரம் ஒளிப்புள்ளிகளில் ஏதோ ஒன்றின் பால் நீங்கள் கவரப்படுகிறீர்கள், காரணம் அது கவனத்தை ஈர்த்தது என்பதல்ல, உள்ளத்தைத் தொட்டது என்பதால்.

சில தாவரங்கள் தண்ணீரில் வளரும். அவற்றுக்கு மண்ணின் அணைப்புத் தேவையில்லை. எழுத்து இசை, ஓவியம், போன்ற கலைத் தாவரங்கள் செழிக்க வகுப்பறைக் கல்வி என்பது அத்தனை அவசியம் அல்ல. அவை உள்ளத்தின் ஒளியில் குளித்து உயிர்ப்பவை. உங்கள் ஆர்வம் அந்தத் துறைகளில் இருந்தாலும் அவற்றையே பட்ட வகுப்பிற்கான பாடமாகத் தேர்ந்து கொண்டு படிக்க வேண்டுமென்பதில்லை. அவற்றை வகுப்பறைக்கு வெளியே வைத்து செழுமைப்படுத்தலாம்.  எழுத்து இசை, ஓவியம் இவற்றில் இதயம் விழுந்து கிடக்குமானால், வயிற்றுக்காக ஒரு பட்டத்தை- முடிந்தால் ஒரு தொழில் படிப்பை- சம்பாதித்து வைத்துக் கொள்ளுங்கள். அது கழுத்தில் கிடைக்கும் நகை போல அவசரத்திற்குக் கை கொடுக்கும்.

ஏதோ ஒரு நிர்பந்தத்தால் உங்களுக்கு ஆர்வம் இல்லாத படிப்பொன்றில் ‘மாட்டிக் கொள்ள’ நேர்ந்தால் மனம் கலங்காதீர்கள்.அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு என்னால் இதுவும் முடியும் என சாதித்துக்காட்டுங்கள். உங்கள் ஆர்வம் அதனால் மூளிப்பட்டு முடங்கிவிடாது. உண்மையான ஆர்வம் ஒரு விளக்குப் போல அதை விழுங்கி விட முடியாது. சில காலம் மூடி வேண்டுமானால் வைக்கலாம். ஒரு நாள் மூடி அகலும். சுடர் பொலியும். நம்பிக்கையோடு காலம் கனியக் காத்திருங்கள்

உங்கள் பயணம் உங்களிடமிருந்து துவங்கட்டும். உள்ளங்கையில் உங்களை ஏந்திக் கொண்டாட எதிர்காலம் காத்திருக்கிறது.  

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these