வலுப்பெறும் வாரிசு அரசியல்

லகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவில் வாரிசு அரசியல் என்பது வலுப்பெற்று வருகிறது…இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

 

இந்தியா தன்னை ஒரு குடியரசாக அறிவித்துக் கொண்டு 62 ஆண்டுகள் ஆகின்றன. குடியரசுக்கும் முடியாட்சிக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் ஜனநாயகம்.முடியாட்சியில் தகுதி இருக்கிறதோ இல்லையோ, மன்னர் அல்லது அரசியின் குழந்தைகள் அடுத்தடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெறுவார்கள், அங்கு வாரிசு உரிமையின் அடிப்படையில் அதிகாரம்  என்பது அங்கீகரிக்கப்பட்ட ஓர் நடைமுறை.

 

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவில் வாரிசு அரசியல் என்பது வலுப்பெற்று வருகிறது.. மூன்று வாரங்களுக்கு முன்பு திமுக தலைவர், ஸ்டாலின் பெயரைக் கட்சித் தலைவர் பதவிக்கு வாய்ப்பு வரும் போது தானே முன் மொழிவேன் என்று அறிவித்திருந்தார். இந்த வாரம் காங்கிரசின் துணைத்தலைவர் பதவிக்கு – சோனியா காந்திக்கு அடுத்த நிலையில்- ராகுல் காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 

இவர்கள் இருவர் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் கட்சியின் முக்கியமான பொறுப்புகளிலோ அல்லது ஆட்சி அதிகாரத்திலோ இருந்து வருகிறார்கள். காஷ்மீரில் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா, உ.பி.யில் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், ஒடிசாவில் பிஜூ பட்நாயக்கின் மகன் நவீன் பட்நாயக் ஆகியோர் முதலமைச்சர்களாக இருக்கிறார்கள். தற்போதைய மகராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் செளகானின் தந்தை நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகியோரது அமைச்சரையில் அமைச்சராக இருந்தவர்..பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராக இருக்கிறார். கர்நாடகத்தில், முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் மகன் குமாரசாமியும், ஹரியானாவில் முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் செளதாலாவும், மகாராஷ்டிரத்தில் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் செளகானின் மகன் அசோக்ராவ் செளகானும் முதல்வராக இருந்தனர். பீகார்,லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி முதல்வராவதையும், தமிழ்நாடு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார் முதல்வராகப் பொறுப்பேற்றதையும் கண்டது.

 

மத்திய அமைச்சரவை, மத்தியில் உள்ள துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அது மிக நீண்டது. ஆட்சி அதிகாரம் கையில் இல்லாவிட்டாலும் கட்சியின் கடிவாளத்தைக் கையில் வைத்திருக்கும் வாரிசுகளும் கணிசமான அளவில் உண்டு. ராஜ சேகர் ரெட்டியின் மகன் ஜெகன், சரத் பவாரின் மகள் சுப்ரியா, பால் தாக்ரேயின் மகன் உத்தவ் தாக்ரே, டாக்டர் ராமதாசின் மகன் டாக்டர் அன்புமணி என நாடு முழுவதும் பல உதாரணங்கள் உண்டு.

 

என்ன காரணம்? ஏன் இந்திய அரசியல் கட்சிகள் வாரிசுகளை கட்சிக்குள் முதன்மைப்படுத்துகிறார்கள்? அதற்கு அரசியல் சமூக வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன

 

அரசியல்:

 

விடுதலை பெற்ற முதல் பத்தாண்டுகளுக்கு தேசியம் என்ற ஒரு கொள்கையை முன்னிறுத்தி மக்களைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அப்போதே அது தேசியம் என்ற கருத்தாக்கத்திற்கு மாற்றாக மொழி சார்ந்த, மாநிலம் சார்ந்த அடையாளங்களையும் உரிமைகளையும் முன்னிறுத்தி வாதிட்ட அரசியல் இருந்தது. இன்னொரு புறம் உலகு தழுவிய பார்வையோடு , பாட்டாளி வர்க்க நலன்களை முன்னிறுத்திய அரசியல் இயக்கங்கள் வலுவான சக்திகளாக விளங்கின.

 

இன்று இந்த மூன்று கருத்தியல்களும் அவற்றின் வசீகரத்தை இழந்து விட்டன. இந்தக் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் செய்தவர்கள், தேர்தல் வெற்றிக்காக செய்து கொண்ட சமரசங்கள், ஒரு தலைமுறையை, அந்தக் கட்சிகள் மீது மட்டுமல்ல, அந்தக் கொள்கைகள் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டன. இன்றிருப்பது கொள்கை அரசியல் அல்ல, தேர்தல் அரசியல். மத்திய அரசில் அமைச்சர்களாகப் பங்கு வகித்துக் கொண்டே, அதன் கொள்கைகளான சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, டீசல் விலையை நிர்ணயக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களிடம் விட்டுக் கொடுப்பது என்பவற்றை எதிர்த்து அறிக்கை விடும் அரசியலை வேறு எப்படிப் புரிந்து கொள்வது?

 

தேர்தல் அரசியலின் நோக்கம் வெற்றி. எத்தனை இடங்களைப் பெறுவது என்பது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் பேரம் பேசும் வல்லமை (Bargaining Power) தான் அவற்றின் உண்மையான பலம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

 

இந்தப் பேரம் பேசும் வல்லமையை அதிகரித்துக் கொள்ள அவை வாக்கு வங்கிகளை உருவாக்கி வைத்துள்ளன. ஜாதி, மதம், பகுதி, அல்லது தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையில்  இந்த வாக்கு வங்கிகள் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படுகின்றன. அவை கலைந்து விடாமல் காப்பாற்ற மேலும் அதிகப் பணம் தேவைப்படுகிறது

 

அதிகப் பணம் செலவிட்டு உருவாக்கப்படும் இந்தக் கட்சிகளின் பலன் தங்கள் குடும்பத்தாரிடமே இருக்க வேண்டும் எனக் கட்சியைத் துவக்குபவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள் எண்ணுவது மனித இயல்பு.

 

இன்னொரு புறம், இந்திய ஜனநாயகத்தில் தேர்தலில் போட்டியிடுவது, வெற்றி பெறுவது என்பது நாளுக்கு நாள் பணம் சார்ந்ததாக மாறி வருகிறது. இந்தப் பணத்தை சம்பாதிக்க நம் ஆட்சி அமைப்பில், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் உதவுகின்றன. அப்படி சம்பாதித்த பணம் தங்கள் கையை விட்டு, அல்லது குடும்பத்தைவிட்டுப் போவதை யார்தான் விரும்புவார்? சுருக்கமாகச் சொன்னால் அரசியல் கட்சிகள் சமூக அமைப்பு என்ற நிலையிலிருந்து  கார்ப்பரேட் கம்பெனிகள் என்ற நிலைக்கு மாறிவிட்டன. இதற்கு  நம் தேர்தல் முறை ஒரு முக்கிய காரணம்.

 

தேர்தல் முறை மட்டுமல்ல, மக்களாகிய நாமும் ஓர் காரணம். மக்கள் பங்கேற்பில்லாம;ல் ஏது ஜனநாயகம்? நம் மக்கள், வாக்களிக்கும் போது, ஒரு கட்சியின் கொள்கைகளையோ, பிரச்சினைகளில் அவற்றின் நிலைப்பாடுகளையோ கவனிப்பதில்லை. தலைவர்கள், அவர்களைப் பற்றி உருவாக்கப்பட்ட பிம்பங்கள் இவற்றை மனதில் கொண்டே வாக்களிக்கிறார்கள். அதாவது அவர்கள் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதில்லை. தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

 

இது ஏன் என்பதை வரலாற்று வெளிச்சத்தில் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படுகிற இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசைக்கும் ஆளும் கட்சி வரிசைக்குமிடையே, தரையில்  சிவப்பு வண்ணத்தில் ஒரு கோடு இருக்கும். அது மட்டுமல்ல, இரண்டு வரிசைகளுக்குமிடையிலான தூரம் இரண்டு வாள்களின் மொத்த நீளத்தை விடச் சில அங்குலங்கள் கூடுதலாக இருக்கும். என்ன காரணம்? முன்னொரு காலத்தில், ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்களுக்கிடையே நாடாளுமன்றத்திற்குள்ளாகவே கத்திச் சண்டை நடந்ததுண்டு. அதைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு,1972ல் கூட சோஷலிஸ்ட் கட்சியின் எம்.பி ஒருவர் உள்துறை அமைச்சரை மூக்கில் குத்திய சம்பவம் நடந்தது. 76ல் ஒரு எம்.பி, காவலரின் கையில் இருந்த செங்கோல் போன்ற ஒன்றைப் பறித்து எதிர்கட்சியினர் மீது வீசப்போனார்.

 

தொழிற் புரட்சி போன்ற புரட்சிகள் ஏற்பட்டு, நிலவுடமைச் சமூகம் அழிந்து தொழிற் சமூகம் உருவானதை அடுத்து இங்கிலாந்தில் ஜனநாயகம் என்ற கருத்தாக்கம் இயல்பாகவே மலர்ந்தது. அங்கேயே அது இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணம்

 

நமக்கோ, இந்கே நில உடமை அமைப்பு வலுவாக இருந்த காலகட்டத்திலேயே, பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது, ’இந்தா வைச்சுக்கோ’ எனக் கொடுத்து விட்டுப் போன பரிசு நம் தேர்தல் ஜனநாயகம். எப்படி நில உடமைச் சமூகத்திலிருந்த போது நமக்காக முடிவு எடுக்கும் அதிகாரத்தை ஒரு தனி நபரிடம் –தந்தை, வீட்டுக்குப் பெரியவர், கிராமத் தலைவர், ஜாதித் தலைவர், பெருந்தனக்காரர், நாட்டாமை இப்படி- விட்டு விடுவோமோ அதே போல நாம் ஜனநாயகத்தைப் பயன்படுத்தி நம் அதிகாரத்தையும்,உரிமைகளையும் ஒரு தனி நபர் வசம் ஒப்படைக்கிறோம். நாம் இன்னும் அந்த நில உடமைச் சமுதாய மனநிலையில் இருந்து விடுபடவில்லை. நகர் மயமாதலையடுத்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் துவங்கியிருக்கிறோம்

 

நமது இந்த மனப்பான்மையைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை வளர்த்தெடுத்து அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கிறார்கள்.

 

நாமோ தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகப் போவதில்லை. வாரிசுகள் வருவதால் நமக்கென்ன நஷ்டம், அது குறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? இப்படி ஒரு கேள்வி படித்த நடுத்தர மக்களிடமிருக்கிறது.

வாரிசு அரசியல் நாட்டிற்கு இரண்டு தீமைகளைச் செய்யும். ஒன்று ஆட்சி அதிகாரத்தை ஒரு குடும்பத்தின் கையிலேயே நீடித்திருக்கச் செய்யும். இது லஞ்சம் பெறுவதை வலுப்படுத்தும். அதையடுத்து அந்தக் குடும்பத்திடமே செல்வம் குவியும், அதிகாரமும் செல்வமும் ஒரு இடத்திலேயே குவிவது ஆபத்தானது.

இரண்டாவதாக அந்தக் குடும்பத்தினரை துதி பாடுவதே அரசியல் என்று ஒர் கலாசாரம் தலையெடுக்கும். துதிபாடிகளே ஆட்சியில் முன்னுரிமை பெறுவார்கள். தகுதி திறமை என்பது புறக்கணிக்கப்படும். அதனால் நிர்வாகம் சீர் கேடடையும். தனி நபர் புகழ்ச்சி என்பது மாற்றுக் கருத்து என்பதற்கு இடமில்லாமல் செய்து ஆணவத்தை வளர்க்கும்.

 

அதன் பின் சர்வாதிகாரம்தான்..

 ——————————————————————————————————————————————-

ரிப்போர்ட் கார்ட் :: ராகுல் காந்தி

பெயர்: ராகுல் காந்தி

பிறந்த தேதி: 19 ஜூன் 1970

வயது: 42

கல்வி:

ஃபுளோரிடாவில் (அமெரிக்கா) உள்ள ரோலின்ஸ் கல்லூரியில் பி.ஏ பட்டம்.கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரியில் எம்.பில்

சொத்து மதிப்பு: (31.3.2009 நிலவரம்)

அசையும் சொத்துக்கள்: 30.71 லட்சம்

அசையா சொத்துக்கள் 2 கோடியே 2 லட்சம்

திருமணம்:

இன்னும் திருமணமாகவில்லை. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, வெனிசுலா நாட்டில் கட்டிடக் கலைஞராக (ஆர்க்கிடெக்ட்) பணியாற்றும் வெரோனிகா கார்ட்டெல் தனது கேர்ள் பிரண்ட் என்று 2004ம் ஆண்டு ஒரு பேட்டியின்  போது தெரிவித்திருந்தார்

நாடாளுமன்ற செயல்பாடு

வருகைப் பதிவு: 41 சதவீதம் (தேசிய சராசரி 77%) அண்மையில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தில் வருகை 25%தான். விவாதத்தில் பங்கேற்றது:1 கேள்விகள்: 0 

அரசியலுக்கு வெளியே அனுபவம்:

மானிட்டர் குரூப் என்ற கன்சல்டிங் நிறுவனத்தில் சில காலம் பணியாற்றினார். பேக்அப்ஸ் என்ற அவுட் சோர்சிங் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார்

அரசியல் அனுபவம்:

2004ல் தந்தையின் அமேதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..2006ல் காங்.பொதுச் செயலாளர். 2009ல் மீண்டும் எம்.பி. 2012ல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்

அரசியலில் சாதனைகள்:

2009 நாடளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் அவரது யோசனையின்படி தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் அங்குள்ள 80 இடங்களில், 21 இடங்களைக் கைப்பற்றியது (அதற்கு முன் அது அங்கு 9 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது) ஆனால் 2012 சட்ட மன்றத் தேர்தலில் அந்த மேஜிக் எடுபடவில்லை. காங்கிரஸ் முன்பிருந்ததை விட 6 இடங்கள் மட்டுமே கூடுதலாகப் பெற்றது மொத்தமுள்ள 403 இடங்களில் 28 இடங்கள் மட்டுமே பெற்று 4, இடத்திற்கு வந்தது)

குற்ற வழக்குகள்: ஏதுமில்லை

சர்ச்சைகள்:

ஊழலை விசாரிக்கும் லோக்பால் நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சொன்னதற்காக அன்னா ஹசாரேவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். லோக்பால் மசோதா சட்டமாவது தாமதமாக ராகுல்காந்திதான் காரணம் என்று அன்னா குற்றம் சாட்டினார்

“ எல்லா நேரங்களிலும் தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை(“Terrorism is something that it is impossible to stop all the time.”) என்று மும்பை குண்டு வெடிப்பின் போது சொன்னது கடுமையாக விமர்சிக்கப்பட்டது  

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *