உண்மை ஒருநாள் வெல்லும் !

உண்மை ஒருநாள் வெல்லும் !

‘’பத்திரிகைகளும் காவல்துறையும் அரசியல் கட்சிகளும் செய்த பொய் பிரச்சாரத்திற்கு அப்பாவி கேரள மக்கள் இரையாகிவிட்டனர். உங்களிடம் கேரள மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன்.. கேரள எழுத்தாளர்கள் அறிவுஜீவிகள் சார்பாக மன்னிப்புக்கேட்கிறேன்.. பத்திரிகைகள் சார்பாக மன்னிப்புக்கேட்கிறேன்.. எங்களை மன்னித்துவிடுங்கள் நம்பிசார்’’

மலையாள இலக்கிய உலகின் மிகமுக்கிய எழுத்தாளரான பால்சக்காரியா பேசிய வார்த்தைகள்தான் நீங்கள் மேலே படித்தவை. அக்டோபர் 7ம் தேதி திருவனந்தபுரத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள்,எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் எனப் பலரும் அடுத்தடுத்து ஒரு தனிமனிதரிடம் மன்னிப்புக் கேட்டனர். அவர்கள் மன்னிப்பை வேண்டியது நம்பி நாராயணன் என்ற தமிழரிடம்.

யார் இந்த நம்பி நாராயணன்?

அரசியல்வாதிகளின் கோஷ்டிப் பூசல்கள், அதிகாரிகளின் ஈகோ மோதல்கள், வல்லரசு நாடுகளுக்கிடையேயான வணிக யுத்தம், ஊடகங்களின் வன்மம் இவைகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட ஓர் அப்பாவி இந்தியனும் அவரது குடும்பமும் எத்தகைய துயரங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கு ஓர் உதாரணம் நம்பி நாராயணனின் வாழ்க்கை  

யார் இந்த நம்பி நாராயணன்?

து விண்வெளித் துறையில் இந்தியா அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்கள். அந்தத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களில் முக்கியமான இருவர் தமிழர்கள். இன்று இந்தியா அந்தத் துறையில் அடைந்திருக்கும் வானளாவிய வெற்றிக்கு அடித்தளம் அமைத்த பேராசிரியர் சதீஷ் தாவன் நேரடியாக அவர்களுக்குப் பயிற்சி அளித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த இரண்டு தமிழர்களில் ஒருவர் அப்துல் கலாம். இன்னொருவர் நம்பி நாராயணன். கலாம் திடப் பொருள்களை எரிபொருளாகக் கொண்டு ராக்கெட்களை செலுத்துவது குறித்து ஆராய்ந்து கொண்டிருந்த போது, நம்பி திரவ எரிபொருட்களைப் பயன்படுத்தும் ராக்கெட் என்ஜின்களை உருவாக்குவதில் இறங்கியிருந்தார்.

அவர் தனது குழுவினருடன் சேர்ந்து உருவாக்கிய என்ஜின்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.(அவர் அந்த என்ஜின்களுக்கு விக்ரம் சாராபாய் நினைவாக விகாஸ் என்று பெயர் வைத்தார்) 2008ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில் கூட இந்த ‘விகாஸ்’ பயன்படுத்தப்பட்டிருக்கிறது

உலக அளவில் இந்தியா தலைநிமிரக் காரணமாக இருந்த இந்த விஞ்ஞானி வார்த்தைகளால் எளிதில் விவரிக்க முடியாத அவமானங்களையும் மனவேதனையையும் சந்திக்க நேர்ந்தது.காரணம்? அவர் மீது புனையப்பட்ட ஒரு பொய் வழக்கு.

ஏன் அந்தப் பொய் வழக்கு? அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு சர்வதேச சதி, கேரள அரசியலில் நிலவிய கோஷ்டிப்பூசல், காவல்துறை அதிகாரி ஒருவர் மீது ஒரு பத்திரிகைக்கு இருந்த வன்மம், அதிகாரிகளுக்கிடையேயான ஈகோ மோதல்கள் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்

அண்ணன் அமெரிக்கா

விண்வெளி என்பது விஞ்ஞான சாதனைகளுக்கும் விளையாட்டுகளுக்குமான இடம் மட்டுமல்ல. அதற்குப் பின்னே. .தொலைத் தொடர்பு, தொலைக்காட்சி, கைபேசி என்ற துறைகளைச் சார்ந்த ஒரு பெரிய வணிகம் இருக்கிறது. 70களில் கிடுகிடுவென வளர்ச்சி காணத் துவங்கியிருந்த இந்தத் துறைகளைச் சார்ந்த இந்த வணிகமும் விரைவாக வளர்ச்சி காணும் வாய்ப்புக்களைக் கொண்டிருந்தது. 1970ல் 7700 கோடி டாலர்கள், 2000ல் 12000 கோடி டாலர்கள், 2010ல் 30000 கோடி டாலர்கள் என வளர்ந்து கொண்டிருந்த்து அந்த வணிக வாய்ப்பு.

ஆனால் இந்த வாய்ப்பு பூமியிலிருந்து 36000 கீ.மீ. உயரத்தில் இருந்தது. புவியோடு இணைந்த சுற்று வட்டப் பாதை (Geo synchronous orbit) என்பது அந்தத் தொலைவில் இருந்தது.அதை எட்ட ராக்கெட்களுக்கு சக்தி வாய்ந்த என்ஜின்கள் தேவை. அதைக் கைவசம் வைத்திருந்த ஐந்து நாடுகள், –அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் – இந்த விண்வெளிச் சந்தையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. அடுத்தவர் யாரும் நுழைந்துவிடாதபடி அந்தச் சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

இந்தியா இந்தச் சந்தையில் அடியெடுத்து வைக்க ஆசைப்பட்டது. இதற்குத் தேவை கிரையோஜெனிக் என்ஜின்கள் (கிரையோஜெனிக் என்ஜின் என்பது வாயுக்களை திரவமாக்கி அவற்றைக் குளிர்ந்த நிலையில், மைனஸ் 150 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் வைத்திருந்து அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துபவை) அந்த க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை வாங்க இந்தியா சர்வதேச அளவில் டெண்டர் கோரியது. அமெரிக்கா 950 கோடிக்கும், பிரான்ஸ் 650 கோடிக்கும் ரஷ்யா 235 கோடிக்கும் அந்த தொழில்நுட்பத்தைக் கொடுக்க முன்வந்தன. இந்தியா ரஷ்யாவோடு ஒப்பந்தம் போட்டது. இதனால் எரிச்சலடைந்த அமெரிக்கா ரஷ்யாவின் கையை முறுக்கத் தொடங்கியது. அது சோவியத் யூனியன் உடைந்து 15 நாடுகளாகச் சிதறியிருந்த நேரம். (1992) அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (சீனியர்) ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ஸ்டினுக்கு நீங்கள் இந்தியாவிற்குக் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை விற்றால் உங்களை ஒதுக்கி வைப்போம் என மிரட்டி கடிதம் எழுதினார். மிரட்டலுக்குப் பணிந்த ரஷ்யா தொழில்நுட்பத்தைக் கொடுக்காமல் பின்வாங்கியது.

இந்தியா திடுக்கிட்டது.தொழில்நுட்பம் கிடைக்காவிட்டால் பரவாயில்லை, முதலில் நான்கு என்ஜின்களை அரசின் மூலமாக இல்லாமல் ஒரு தனி நிறுவனம் மூலம் வாங்குவோம் பின் அந்த நிறுவனம் அது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் (இஸ்ரோ)திற்கு கொடுக்கட்டும் என திட்டமிட்டது இந்தியா, அதே நேரம் அந்தத் தொழில்நுட்பத்தில் தானே தேர்ச்சியடையும் நோக்கத்தில். இஸ்ரோவில் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்திற்கென ஒரு தனிப் பிரிவைத் துவக்கியது. ஏற்கனவே விகாஸ் என்ஜினை வெற்றிகரமாகத் தயாரித்துக் கொடுத்திருந்த நம்பி நாராயணனை அந்தத் திட்ட இயக்குநராக நியமித்தது.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த, இந்தியா விண்வெளித்துறையில் வளர்ச்சியடைவதை விரும்பாத, அமெரிக்கா இந்தியாவின் கிரையோஜெனிக் திட்டத்தை முடக்க சதி வலையைப் பின்ன ஆரம்பித்தது.

ஈகோ யுத்தம்

எந்த நிறுவனத்தைப் பயன்படுத்தி என்ஜின்களைப் பெறலாம் என்பதைத் தீர்மானிக்கப் பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. குழுவில் இஸ்ரோவின் விஞ்ஞானிகளும், மத்திய அரசின் விண்வெளித்துறையச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தார்கள். இந்த வாய்ப்பைப் பெற MTAR, KELTEC என்ற இரண்டு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி. MTAR நிறுவனத்தை சேர்ந்த ரவீந்திர ரெட்டி, விண்வெளித் துறையால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஆண்ட்ரிக்ஸ் காப்பரேஷன் என்ற பொதுத்துறை நிறுவனத்திலும் இயக்குநராக இருந்ததால், அவரது நிறுவனத்திற்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரிகளின் நிர்பந்தித்துக் கொண்டிருந்தார்கள். இஸ்ரோவின் விஞ்ஞானி சசிக்குமாருக்கு இது எரிச்சலாக இருந்தது. இந்தக் கருத்து வேறுபாடுகளால் கமிட்டி முடிவெடுக்காமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தது. சீக்கீரமாக முடிவெடுங்கள் என்று இஸ்ரோ தலைவரின் கடிதம் வந்ததையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் விண்வெளித் துறையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிக்கும் சசிக்குமாருக்குமிடையே பகிரங்கமாக மோதல் வெடித்தது. ஒரு கட்ட்த்தில் “ உனக்கு டெக்னாலஜியைப் பற்றி என்ன தெரியும்?” என்று ஐஏஎஸ் அதிகாரியிடம் சீறினார்  சசிக்குமார். “நீ டெக்னாலஜியில பெரிய கொம்பனா இருக்கலாம், ஆனா உனக்கு முடிவு எடுக்கத் தெரியுமா? அது தெரியாததுனாலதானே இந்த புராஜெக்ட் இப்படி இழுத்துக்கிட்டு கிடக்கு” என்று பதிலுக்குக் குரலை உயர்த்தினார் ஐஏஎஸ் அதிகாரி.

கடைசியில் KELTEC கிடம் வேலையை ஒப்படைப்பது என முடிவாயிற்று. ஈகோ அடிபட்ட ஐஏஎஸ் அதிகாரி, பழிவாங்க சரியான சமயத்திற்காகக்  காத்திருந்தார்.

*

அறைக் கதவைத் தட்டும் சப்தம் கேட்டுக் கதவைத் திறந்தார் மரியம் ரஷீதா. கதவுக்கு வெளியில் இன்ஸ்பெக்டர் விஜயன் நின்று கொண்டிருந்தார்.

 “நீங்கள் அளித்த விண்ணப்பம் தொடர்பாக ஒரு சிறு விசாரணை நட்த்த வேண்டியிருக்கிறது. அது ஒரு ஃபார்மலிட்டி” என்றார் இன்ஸ்பெக்டர் விஜயன்

“வாருங்கள்” என்று உள்ளே அழைத்தார் ரஷீதா.

மரியம் ரஷீதா மாலத்தீவைச் சேர்ந்தவர். மாலத் தீவைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியா வர விசா தேவையில்லை. ஆறு மாத இடைவெளியில், ஒவ்வொருமுறையும் மூன்று மாதங்கள் தங்கலாம். அதற்கு மேல் தங்க வேண்டுமானால் காவல்துறையின் அனுமதி பெற வேண்டும். தன் குடும்ப நண்பர் ஒருவரின் மகளின் சிகிச்சைக்கு உதவ வந்திருந்த ரஷீதாவின் மூன்று மாதக் கெடு முடிய இன்னும் ஒரு மாதம் இருந்தது.அதற்கு மேலும் தங்க வேண்டியிருக்கும் என்பதால் முன் கூட்டியே ரஷீதா விண்ணப்பித்திருந்தார்.

“ உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் விஜயன்

“குடும்பம்? நான் விவாகரத்தானவள்” என்றார் ரஷீதா

புருவத்தை உயர்த்தி ஒருமுறை அவரை ஏறிட்டுப் பார்த்தவர் எழுந்து நடந்து கொண்டே கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். பேசிக் கொண்டே ரஷீதாவை மெல்ல நெருங்கி, அவரது தோளில் கை வைத்தார். திடுக்கிட்ட ரஷீதா திரும்பிப் பார்க்கும் நேரத்தில் கையை மெல்லக் கீழிறக்கினார்.

”வெளிய போ!” எனச் சீறினார் ரஷீதா. “ நான் ஐஜிக்கிட்ட உன்னைப் பற்றிப் புகார் செய்தால் என்னாகும் தெரியுமா?” என்றார் கோபம் பொங்க.

அது மிரட்டலுக்காகச் சொன்ன வார்த்தை இல்லை என்பது விஜயனுக்குத் தெரியும். ஏனெனில் தன் தங்கும் காலத்தை நீட்டிக்க ரஷீதா தனது நண்பர் இஸ்ரோ சசிக்குமார் மூலம் ஐஜி ஸ்ரீவஸ்தவாவைத்தான் முதலில்  அணுகியிருந்தார். அவர் சொல்லித்தான் விஜயனை இரு தினங்களுக்கு முன் சந்தித்து தன் விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு வந்திருந்தார்.

மனதில் கறுவிக் கொண்டே அறையை விட்டு வெளியேறினார் விஜயன். ரஷீதா ஐஜியை சந்தித்து முறையிடுவதற்கு முன் அவரை மடக்கிவிட வேண்டும் என நினைத்தார். ஹோட்டலில் இருந்த போனில் இருந்து அவர் யாரோடெல்லாம் பேசியிருக்கிறார் எனப் பார்த்தார். ஒரு நம்பருக்கு சில முறைகள் பேசியிருப்பதைக்  கண்டு அந்த நம்பர் யாருடையது என ஆராய்ந்தார். அது இஸ்ரோ சசிக்குமாருடையது. அயல் நாட்டுப் பெண். இந்திய விஞ்ஞானி. எப்படி முடிச்சுப் போடுவது என்று யோசித்தார்.

விஞ்ஞானியிடம் ராணுவ ரகசியங்களை வாங்க வந்த பாகிஸ்தான் உளவாளி, கைது என்று சில பத்திரிகைகளுக்கு செய்தியை கசிய விட்டார். உண்மையில் ரஷீதா அப்போது கைது செய்யப்பட்டிருக்கவில்லை

பழி தீர்த்துக் கொண்ட பத்திரிகை ஆசிரியர்

முதலில் வார இதழாகத் துவங்கிய கேரள கெளமுதி 1940ல் நாளிதழாக மலர்ந்தது. அதன் உரிமையாளர் சுகுமாரனுக்கு நான்கு மகன்கள். மூத்தவர் எம்.எஸ்.மணி அதன் ஆசிரியர். மற்றொரு மகன் மதுசூதனன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். சுகுமாரன் மறைவுக்குப்பின் இருவரிடையே ஏற்பட்ட பூசல் நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறின. 1990ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி கேரள உயர்நீதிமன்றம் மதுசூதனனை பத்திரிகை ஆசிரியர், நிர்வாக இயக்குநர் ஆகிய இரண்டு பொறுப்புகளிலும் நியமித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதன் பின்னும் அவரால் அலுவலகத்திற்குள் நுழைய முடியவில்லை. எனவே மார்ச் 22ம் தேதி உயர்நீதிமன்றத்தின் ஆணையின் பேரில் ஒரு போலீஸ் படை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துத் திறந்து கொண்டு உள்ளே சென்று, ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்திருந்த மணியை அகற்றிவிட்டு மதுசூதனனை அங்கே அமர்த்தியது.

அந்தப் போலீஸ் படைக்கு அப்போது தலைமை தாங்கிச் சென்றவர் ராமன் ஸ்ரீவஸ்தவா. அவர் அப்போது மாநகர காவல்துறை ஆணையர்.

பின்னர் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச்; மதுசூதனனைப் பதவிகளில் அமர்த்தி ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. மணி மீண்டும் ஆசிரியரானார். மதுசூதனன் உச்ச நீதிமன்றத்திற்குப் போனார். இதற்கிடையில் ஸ்ரீவத்சவா ஐஜியாகப் பதவி உயர்வு பெற்றார்.

தான் ஆசிரியர் நாற்காலியிலிருந்து ஸ்ரீவத்சவாவால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட அந்த நாளை மணி மறக்கவே இல்லை. விஜயன் வெளியிட்ட உளவாளி செய்தி வந்ததும் அந்த உளவாளிக் கும்பலின் தலைவரே ஸ்ரீவத்சவாதான் என்று அடுத்தடுத்துப் பரபரப்பாகத் தன் பத்திரிகையில் செய்திகள் வெளியிட்டார்.

வியாபாரப் போட்டியில் இருந்த மற்ற பத்திரிகைகள், அவரது கற்பனையை மிஞ்சும் வண்ணம் தங்கள் கற்பனையை அவிழ்த்து விட்டன. ஸ்ரீவஸ்தவாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரைப் “பாதுகாத்த” கேரள முதலமைச்சர் கருணாகரன் பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ்காரர்களே குரலெழுப்பினர்.. சொந்தக் கட்சிக்காரர்களே குரல் எழுப்பக் காரணம் உட்கட்சிப் பூசல்.

ஐ.பி என்று அழைக்கப்படும் மத்திய உளவுத் துறை களம் இறங்கியது. 

நரசிம்மராவ் காரணமா?

”உளவு வழக்குப்பின் ஒரு சதி இருக்குமானால் அதில் (முன்னாள் பிரதமர்) நரசிம்மராவிற்கு ஒரு பங்கு இருந்திருக்கும்” என்கிறார் கருணாகரனின் மகன் முரளிதரன். திருவனந்தபுரத்தில் அக்டோபர் 7ம் தேதி நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் முன் பகிரங்கமாக இதை அவர் தெரிவித்தார், ” தனது அரசியல் எதிரிகள் மீது குறிவைத்து அவர்கள் மீது பொய்வழக்குப் போடுவது நரசிம்மராவின் வழக்கம்” என்ற முரளிதரன், மத்தியில் தனக்குப் போட்டியாக வரக்கூடியவர் எனக் கருதுபவர்களோடு கணக்குத் தீர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த ராவ் தன் தந்தை விஷயத்திலும் அப்படி நடந்து கொண்டார் என்கிறார். ராவ் கொடுத்த நெருக்கடியால் கருணாகரன் தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

ப்படி சர்வதேச அரசியல், இந்திய அரசியல், மாநில அரசியல், அதிகாரிகளுக்கிடையேயான அரசியல், பத்திரிகைக் குடும்ப அரசியல், என்ற அரசியல் புயல்களிடையே அகப்பட்டுக் கொண்ட தோணியானார் நம்பி நாராயணன். அவர் சிக்கவைக்கப்பட்டதற்குக் காரணம் அவர் கிரையோஜெனிக் திட்டத்தின் இயக்குநராக இருந்ததுதான். இந்தப் பொய் வழக்கில் கிரையோஜெனிக் திட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்த பலரும் தொடர்புபடுத்தப்பட்டனர். கடைசியில் அமெரிக்கா நினைத்ததுதான் நடந்தது.

நம்பி கைது செய்யப்பட்டதையடுத்து கிரையோஜெனிக் திட்டம் தடுமாறியது. விஞ்ஞானிகள் மனச் சோர்வடைந்தனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகப்போகிறது. நாம் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. நாமே தயாரித்த கிரையோஜெனிக் என்ஜினைப் பயன்படுத்தி முதன் முதலாக மே 2010ல் நாம் அனுப்பிய GSLV D3 பரிதாபகரமாகத் தோலிவியைத் தழுவியது. அதற்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே 13ம் தேதி நாம் இன்னொரு கிரையோஜெனிக் என்ஜினைத் தயாரித்து  GSLV D5ஐ அனுப்பி வெள்ளோட்டம் பார்த்தோம். அந்த என்ஜின் 200 செகண்ட்கள் மட்டும் வேலை செய்தது.

ந்தப் பொய்வழக்கை எதிர்கொண்டபோது நம்பி சந்தித்த கொடுமைகள் ஏராளாம். நாட்டின் ரகசியங்களை எதிரிக்கு விற்ற கைக்கூலி என சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது/ அவர் குடும்பத்தினர் வெளியே செல்லும் போதெல்லாம், அவர்கள் காதுபட, ஏளனப் பேச்சுக்களையும், குத்தல் மொழிகளையும் மக்கள் பேசினர். அவர்களால் கோயிலுக்குக் கூடப் போக முடியவில்லை. இதனால் நம்பியின் மனைவி பெரும் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளானர்.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது மூஞ்சியில் குத்து விழுந்தது. முகத்தில் காரி உமிழ்ந்தார்கள். லாக்கப்பில் அவரை நிர்வாணப்படுத்தி சித்தரவதை செய்தார்கள்.

இருவாரங்களுக்கு முன் புதிய தலைமுறை நம்பி நாராயணனைத் திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேசியது. அப்போது அவர் பகிர்ந்து கொண்ட ஒரு சம்பவம்:

கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தேன். நாற்காலியில் அமர்ந்தபடி காவலரிடம் தண்ணீர் கேட்டேன். அவரோ ஏன்டா நீ தேசத்துரோகி உளவாளிதான.. எதுக்குடா உனக்கெல்லாம் சேர் எழுந்து நில்லடா.. என்றார். எழுந்து நின்றேன். தண்ணீர் தர மறுத்தார். அந்த நேரத்தில் மனதுக்குள் ஒரு வைராக்கியம்… அப்படியே உறுதியாக நின்றேன்.

அந்த நேரத்தில் அங்கே வந்த ஒரு முதிர்ந்த அனுபவமுள்ள ஒரு ரா (RAW) அதிகாரி என்னை அமரச்சொன்னார்.. மறுத்தேன். தண்ணீர் கொடுத்தார் குடிக்க மறுத்தேன்.. கிட்டத்தட்ட 30 மணிநேரத்துக்கும் மேலாக நின்றபடியே தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தேன்.. ஒருகட்டத்தில் மயங்கி விழுந்ததால்மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.

இதற்கு பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. டி.ஆர். கார்த்திகேயன் போன்ற இந்தியாவின் டாப்-12 சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக ஒவ்வொருவராக என்னை விசாரித்து அறிக்கை சமர்பித்தனர். எல்லா அறிக்கையுமே என்னை நிரபராதி என்றே சொன்னது. இந்த வழக்கு பொய்யானது என உறுதி செய்தது.’’ என்றார்.

சிபிஐ விசாரணை முடிந்து வழக்கு சிஜிஎம் (CHIEF JUDICIAL MAJISTRATE) வசம் சென்றது. அங்கே இது பொய்வழக்கு, கைதுசெய்யப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமாகி அனைவரும் விடுதலையானார்கள். ஆனால் காவல்துறையை சேர்ந்த விஜயன்,சிபி மேத்யூ போன்றோர் வழக்கை உயர்நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றனர். அங்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் கேரள அரசு இந்த வழக்கை மீண்டும் கேரள காவல்துறை மறுவிசாரணை செய்யும் என உத்தரவிட்டபோது. நம்பிநாராயணன் கடும்கோபத்துடன் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார். அங்கும் இது பொய்யான வழக்கு என்று உறுதி செய்யப்பட்டது. கேரள அரசையும் கடுமையாக விமர்சித்தது நீதிமன்றம்.

நம்பி நாராயணனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு கேரள அரசு எனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாகக் கொடுக்க வேண்டும் என்றுதேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உடனடியாக பத்துலட்சம்கொடுக்கும்படிஅண்மையில் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொய்வழக்குப் புனைந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருணாகரனின் மகன் கேரள முதல்வர் முரளிதரன் ஓமன் சாண்டிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்காக இயக்கம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்.

ண்மை என்பக்கம்தான் இருக்குனு எனக்கு தெரியும். இன்னைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்கிற நம்பிக்கை இருந்தது. ராக்கெட் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இருந்தவன் நான்… எந்த உதவியும் இல்லாமல் தன்னந்தனியாக போராடி அதில் வெற்றிபெற்றவன்.. போராட்டகுணம் எனக்கு இயல்பிலேயே உண்டு.. என் பக்கம் இருந்த நியாயமும் உண்மையும்தான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. உண்மையின் பலமும் இறைவனின் அருளும்தான் என்னை இன்று தலைநிமிரச் செய்திருக்கிறது’’ என்று அழுத்தமான குரலில் புதிய தலைமுறையிடம் சொன்னார் நம்பி.

அரசியல் போட்டிகளிலும், ஈகோ யுத்தங்களிலும், இடையில் சிக்கிக் கொண்டு துன்புறும் அப்பாவி இந்தியர்கள் நம்பியைப் போல பலர் இருக்கலாம். இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நம்பியைப் போன்ற மன உறுதியும் தளராத நம்பிக்கையும் இருக்குமா? அப்படி இல்லாதவர்களின் நிலை என்ன? நாம் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?

-அதிஷா உதவியுடன்

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *