ஆகா என்று எழுந்தது பார்!

ஆகா என்று எழுந்தது பார்!

நசிகேதன்

முதலில் டுனீசியா. அடுத்து எகிப்து. சில வாரங்களுக்கு முன் அடக்குமுறை, குடும்ப ஆட்சி அரசுகளைத் தூக்கி எறிந்த மக்கள் எழுட்சி அருகில் உள்ள அரபு நாடுகளிலும் ஒரு பெரும் அலையாக வீசிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாக ஒரு சித்திரம் (19.2.11 சனிக்கிழமை நிலவரம்)

லிபியா:

ஏற்கனவே முணுமுணுப்பாக இருந்த அதிருப்தி சனிக்கிழமையன்று (19.2.11) லிபியாவின் பெரிய நகரமான பென்காஜியில் வன்முறையாக வெடித்தது. அதற்கு முந்திய தினம், பல்வேறு சிறுநகரங்களில் வெள்ளிக்கிழமை மதியத் தொழுகைக்காக மசூதிகளுக்கு வந்த மக்கள் தொழுகைக்குப் பின் அரசுக்கெதிரான கிளர்ச்சிகளில் இறங்கினார்கள். அல்ஃபாதீல் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமை புல்டோசர் கொண்டு தகர்த்தார்கள்.42 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் கடாஃபி பதவி விலக வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கை

அரசு இரும்புக்கரம் கொண்டு கிளர்ச்சிகளை அடக்கி வருகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. தனது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் 30 பேர் இறந்த நிலையில் வந்தார்கள், அவர்கள் தலையில் சுடப்பட்டு இறந்திருந்தார்கள் என ஒரு மருத்துவர் சொல்கிறார். மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு 85 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. 

ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. இணையத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரசினையின் வேர்:

1969ம் ஆண்டு  ஆட்சியைக் கவிழ்த்து விட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவ அதிகாரி கடாஃபி. உலகில் எண்ணை வளம் மிக்க நாடுகளில் ஒன்று லிபியா. அதனால் பணம் கொழிக்கும் நாடும் கூட. ஆனாலும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் திண்டாட்டமும் நிலவுகின்றது. ஊழல் காரணமாக மக்கள் நலத் திட்டங்கள் அடித்தளத்திற்கு சென்று சேர்வதில்லை. பல திட்டங்கள் லஞ்சம் பெறும் நோக்கில் தாமதப்படுத்தப்படுகின்றன. ஜனவரி முதலே சிறு சிறு பூசல்களும் சச்சரவுகளும் நடந்து வருகின்றன

பஹ்ரீன்

பிப்ரவரி 17ம் தேதி வியாழக்கிழமை அரசுக்கெதிராக முழக்கமிட்டவாறு முத்து ரவுண்டானாவில் கூடியவர்கள் மீது ராணுவம் தாக்கியதில் நான்கு பேர் இறந்து போனார்கள். ஆனால் அதன் பின்னும் சனிக்கிழமையன்று மக்கள் அதே இடத்தில் கூடினர். விசாரணை நடத்தி ராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பட்டத்து இளவரசர் சலமான் அறிவித்திருக்கிறார். கிளர்ச்சியார்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் அந்த அழைப்பை நிராகரித்து விட்டார்கள்

பிரசினையின் வேர்

18ம் நூற்றாண்டிலிருந்து ஆட்சி செய்துவரும் அரச குடும்பம் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனச் சிலர் கோருகிறார்கள். சிலர் அரசர் இருக்கலாம், ஆனால் இங்கிலாந்தைப் போல அவரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு, அதிக் அதிகாரம் கொண்ட ஒரு நாடாளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும் எனச் சொல்கிறார்கள். 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 70 சதவீதம் பேர் சிலர் ஷியா முஸ்லீம் பிரிவினர். (ஆட்சியாளர்கள் சன்னி முஸ்லீம்கள்.) அவர்கள் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், லஞ்சம் பெருகிவிட்டதாகவும் கூறுகிறார்கள். 2010ல் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டார்கள்

ஏமன்

சனிக்கிழமையன்று போராட்டத்தில் இறங்கிய சானா பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்ப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆறு பேர் காயமடைந்தார்கள். அன்னிய சக்திகள் நாட்டை சீர் குலைக்க முயற்சிப்பதாக அதிபர் அலி அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

பிரசினையின் வேர்

அரபு நாடுகளிலேயா மிகவும் ஏழை தேசம் இது. 32 ஆண்டுகளாக அதிபராக உள்ள அலி அப்துல்லா பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் கோருகிறார்கள். லஞ்சம், வறுமை, வேலையின்மை, அரசியல் சுதந்திரமின்மை ஆகியவை காரணம் எனச் சொல்கிறார்கள். ஆனால் அரசு ஆதரவுத் தரப்பு தண்ணீர்ப்பஞ்சம் காரணம் என்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அல்கய்தாவை முடக்க ஷியா முஸ்லீம்களை அமெரிக்கா தூண்டிவிட்டதையடுத்து ஒரு கிளர்ச்சி நடந்தது. இது அதன் தொடர்ச்சி என்கின்றன சில பத்திரிகைகள்

ஜோர்டான்

ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று போராட்டக்காரர்களுக்கும், அரசுக்கும் இடையே மோதல் முற்றி வன்முறை வெடித்தது.  

பிரசினையின் வேர்

உலகில் பொருளாதார மந்தம் ஏற்பட்டதையடுத்து ஜோர்டானின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. விலைவாசிகள் உயர்ந்தன. வேலை வாய்ப்புக்கள் சுருங்கின. பலர் வேலை இழந்தார்கள். அப்போது அரசுக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. அப்போதிருந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு அரசர் அப்துல்லா சீர் திருத்தங்களைப் பரிந்துரைக்க ஒர் புதிய குழுவை நியமித்தார். இப்போது முன்பிருந்த அளவு கொதிப்பு இல்லை என்றாலும் இயல்பு நிலை திரும்பவில்லை

இராக்

கடந்த காலப் போரில் கொல்லப்பட்டவர்களது குடும்பங்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை கொடுக்கக் கோரி பாக்தாத்தில் நகரில் மக்கள் திரண்டார்கள். தன்னாட்சி கொண்ட மாநிலமான குர்திஷ் பகுதியில் சனிக்கிழமையன்று அரசுக்கும் மக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. மக்கள் கற்களை வீசினார்கள்.  அரசு திருப்பிச் சுட்டது. ஒருவர் மரணம். 57 பேருக்குக் காயம்

பிரசினையின் வேர்

போரின் போது சிதைக்கப்பட்ட உள்கட்டமைப்பு இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. சாலைகள் சரியாக இல்லாததால் போக்குவரத்து இல்லை. உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அடிக்கடி நீண்ட நேரத்திற்கு மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் ஊழல் லஞ்சம் காரணம் என மக்கள் கருதுகிறார்கள்

குவைத்

குவைத் நகரின் வடபகுதியில் உள்ள சுலைபியாவில் சனிக்கிழமையன்று போராட்டக்காரர்களுக்கும் அரசுக்குமிடையே மோதல் நிகழ்ந்தது. இது போராட்டத்தின் இரண்டாம் நாள். இங்கு போராடுபவர்கள் அந்த நாட்டின் பிரஜைகள் அல்ல. நீண்ட காலமாக அங்கு தங்கியிருப்பவர்கள் தங்களுக்கு அதிக உரிமைகள் கொடுக்க வேண்டும் எனக் கேட்கிறார்கள் 

பிரசினையின் வேர்

குவைத்தில் பிரஜைகள் அல்லாத வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 1 லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் நாட்டின் அன்றாட வேலைகளை நடத்தவோ, நிர்வகிக்கவோ முடியாது. ஆனால் அவர்களுக்கு குடிமக்களுக்குள்ள உரிமைகள் இல்லை. இது நீண்டகாலப் பிரசினை

அல்ஜீரியா

ஒரு வாரமாக நடந்து வரும் கிளர்ச்சிகள் இந்த சனிக்கிழமையன்று உச்சம் பெற்றன. பாதுகாப்புப் படை தாக்கியதில் போராட்டத் தலைவர்  ஒருவர் மண்டை பிளந்த நிலையில் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார். 1992லிருந்து நடைமுறையில் உள்ள எமெர்ஜென்சியை விரைவில் விலக்கிக் கொள்ளவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது

பிரசினையின் வேர்

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேரை பலி கொண்ட நடந்த உள்நாட்டுப் போரையடுத்து 1992ல் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டனர். ஆனாலும் எமெர்ஜென்சி நீடிக்கிறது. அரசுடன் முரண்பாடு கொண்டவர்களை முடக்க அது பயன்படுத்தப்படுவதாக கிளர்ச்சியாளர்கள் சொல்கின்றனர்

சிரியா

அக்கம் பக்கம் முழுவதும் கிளர்ச்சிகள் நடந்துவருவதையடுத்து, மான்யங்களை விலக்கிக் கொள்ளப்போவதாக  அறிவித்திருந்த தனது முந்தைய அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சிரியன் அதிபர் அமெரிக்கப் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்திருக்கிறார். அவர் நீண்டகாலமாகப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். உள்ளூர் அளவில் தேர்தல்கள் நடத்தவும், பத்திரிகைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கத் தயாராகிவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பிரசினையின் வேர்

1963லிருந்து எமெர்ஜென்சி அமலில் இருக்கிறது. விலைவாசிகள் அதிகமாக இருப்பதால் வாழ்க்கைச் சூழல் கடினமாக இருக்கிறது.  

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *