”தமிழ்க் கணினி பற்றிய அறிவைப் பரப்பும் சமூகப் பொறுப்பு பத்திரிகையாளர்களிடமே இருக்கிறது”

மைக்ரோசாஃப்ட்டின் பாஷா இணையதளத்திற்கு அளித்த பேட்டி

 

திரு. மாலன் V நாராயணன் தமிழின் முக்கிய எழுத்தாளரும், ஆசிரியரும் ஆவார். தமிழில் யூனிகோட் குறியீடைப் பயன்படுத்தி வெளிவரும் முதல் இணைய இதழ் “திசைகள்” ஆசிரியர்.

இந்திய மொழிக் கணினி மேம்பாட்டில் தீவிரமான ஈடுபாடு கொண்டுள்ள மாலன் உலகளாவிய இணையத் தமிழ் அமைப்பான “உத்தமம்” (INFITT) வளர்ச்சியிலும், மைக்ரோசாப்ட் ஆபிஸ் தமிழ் மேம்பாட்டிலும் பங்கெடுத்து வருகிறார். தற்சமயம், சன் தொலைக்காட்சி செய்தி சானல் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் தமது அனுபவங்களையும், இந்திய மொழிகளில் கணினி எதிர்காலம் குறித்தும் நமக்கு விரிவாகப் பதில் அளிக்கிறார்.
ஒரு பத்திரிகையாளராக வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது எது என்பது பற்றியும், உங்கள் குழந்தைப் பருவம் குறித்தும் கூறுங்கள்?

மாலன்: தமிழ் நாட்டின் மிகப் புராதன நகரமான, சங்கத் தமிழ் வளர்த்த மதுரை நகரம்தான் நான் வளர்ந்தது; கி.பி எட்டாம் நூற்றாண்டில் தமிழ் புலவர்களும், அறிஞர்களும் அமர்ந்து தமிழ் வளர்ச்சி குறித்தும், இலக்கியம் குறித்தும் பேசி, விவாதிப்பதற்காக, அன்றைய அரசர்களால் அமைக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் இம் மதுரையில்தான் செயல்பட்டது. மகாகவி பாரதியார் தமிழ் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய பள்ளி மதுரையில்தான் உள்ளது. பல ஆண்டுகள் கழித்து இதே பள்ளியில் நானும் பயில நேர்ந்தது. தமிழையும், இலக்கியத்தையும் பாரம்பரியமாகக் கொண்ட ஒரு வம்சத்தில் நான் வளர்ந்தேன். கல்வி, அறிவு இவற்றையே சொத்தாக மதிக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தேன். மூத்த வங்கி அதிகாரியான எனது தந்தை ஒரு சிறந்த வாசகராக இருந்தார். எனது தாயும் தமிழ் கவிதைகள் மீதும் கவி பாரதி மீதும் பற்று கொண்டவர். சாப்பாட்டு மேசை விவாதங்கள் பல நேரங்களில் புத்தகங்கள், கதைகள், எழுத்தாளர்கள் பற்றியே சுழலும். அந்தச் சிறுவயதிலேயே, எழுத்தும், எழுத்தாளர்களும் வீடுகளில் மதிக்கப்படுகிறார்கள் என்று எண்ணினேன். 13 வயதிலேயே எனது விரல்கள் கவிதை எழுத முயற்சித்தது. ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன்.

ஒரு நாள் வகுப்பில், கையெழுத்துப் பத்திரிகைக்காக ஒரு கவிதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஆசிரியரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன். அதற்காக ஆசிரியர் என்னைத் திட்டுவார் என்று நான் எதிர்பார்த்ததற்கு மாறாக, பாராட்டுகள் கிடைத்தன. அப்போதுதான் ஒரு எழுத்தாளனாக வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால், எனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். எனக்கு மருத்துவத்தில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, மருந்தியல் பட்டப் படிப்பில் சேர்ந்தேன். வீட்டில் இருந்து விடுதி அறைக்கு எனது எழுத்து தொடர்ந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்குபோதே இலக்கிய இதழ்களில் எனது கவிதைகளும், கதைகளும் பிரசுரமாகி எனக்கு இலக்கியவாதி என்ற அங்கீகாரம் கிடைத்தது. ஆனால், ஒரு பத்திரிகையாளனாக ஆகவேண்டும் என்ற எனது குழந்தைப் பருவ ஆசை எனது 30 ஆவது வயதில்தான் நிறைவேறியது.
ஒரு எழுத்தாளராகவும், ஒரு பத்திரிகையாளராகவும் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளீர்கள். இந்திய மொழிக் கணினியில் ஆர்வம் ஏற்பட்டது எப்போது?
மாலன்: புளோரிடா பலகலைகழகத்தில் நான் முதுகலை இதழியல் படித்துக் கொண்டிருந்தபோது, எனது ப்ராஜக்ட்டிற்காக மின் சஞ்சிகை ஒன்றை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது மேய்வான்கள் எல்லாம் பிரபலமாக வில்லை; தேசிய ஆய்வு நிலையத்திலிருந்து ‘மொசைக்’ போன்ற மென்பொருள்களை இரவலாகப் பெற்று எனது ப்ராஜக்டை முடித்தேன். அப்போது எனது சிந்தனை என்னவென்றால், ஆங்கிலத்தில் மின் சஞ்சிகை உருவாக்கவே இவ்வளவு சிரமம் என்றால் தமிழில் இது போன்ற ஒரு முயற்சி எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பதுதான். சிங்கப்பூரில் இருந்த எனது நண்பர் டாக்டர் நா. கோவிந்தசாமியிடம் எனது எண்ணத்தை பகிர்ந்து கொண்டேன்.

அவர் அப்போதுதான் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இனையத்தில் தமிழ் யதார்த்தமாகி விட்டது. ஆனால் ஏராளமான தடைகளைக் கடந்துள்ளது. எழுத்துரு தரப்படுத்தல் இல்லாததே காரணம். குறியீடு வாதப்பிரதி வாதங்களில் எனக்கு ஆர்வம் கிடையாது. ஏனெனில், அது இணையத்தின் அடிப்படைத் தத்துவத்திற்கே விரோதமானது. தகவலின் உலகாளாவிய வாய்ப்புகள் என்பதுதானே இணையம்! எனவே, நான் காத்திருந்தேன். யூனிகோட் வருகையின் மூலம் எனது நம்பிக்கை நிறைவேறியது. எனவே, மீண்டும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினேன். தமிழில் யூனிகோட் குறியீடைப் பயன்படுத்தி முதல் இணைய இதழைத் தொடங்கினேன். தமிழ் மொழிக் கணினியுடனான எனது நெடிய உறவின் தொடக்கம் இதுதான்.

உத்தமம் (INFITT) உடன் உங்கள் தொடர்பு எப்போது ஏற்பட்டது?
மாலன்: அதன் உலகளாவிய பார்வைதான், INFITT இடம் என்னை ஈர்த்தது. தமிழ் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பாக உலகின் பல பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை, பல பிரதேசங்களில் இருந்தும் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரே உலக அமைப்பு “உத்தமம்”தான். தமிழ் கணினியின் முன்னோடித் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பும் இதுதான்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் தமிழ் வாலிடேட்டராகவும், தகவல் தொழில்நுட்ப கலைச் சொல் தொகுப்பு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தீர்கள். இதேபோல கலைச் சொற்களை உருவாக்க உத்தமம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?
மாலன்: சி.ஜி.டபிள்யு முயற்சிகளுக்கு வெகுகாலம் முன்பே, தமிழ் தகவல் தொழில்நுட்பக் கலைச்சொற்கநத்த் தரப்படுத்தும் முயற்சியிலும், அவற்றைத் தொகுக்கும் பணியிலும் “உத்தமம்” ஈடுபட்டது. இதற்கான பணிக்குழு 2000 ஜூலை 23 அன்று அமைக்கப் பட்டது. அண்ணா பலகலைக்கழக முன்னாள் துணை-வேந்தர் உள்ளிட்ட பல நாடுகளின் தமிழறிஞர்களும், தகவல் தொழில்நுட்ப நிபுணர்களும் இப் பணிக்குழுவில் இடம்பெற்றனர்.

உங்கள் குறிக்கோள்களை அடையும் வழியில் பனிக்குழு சந்தித்த சவால்கள் எவை?

மாலன்: தமிழ்- வரலாற்றில் தொன்மையும், பயன்பாட்டில் நவீனமும் கொண்ட மொழி. பல நூற்றாண்டுகளைக் கண்டு, காலத்தால் வளர்ந்த மொழி. தமிழ் நாகரீகத்திற்கு (அதன் பெருமைமிக்க கோயில்கள் தவிர) மேலும் பல தொழிற்பெருமைகள் உண்; அவை தமிழ் செவ்விலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே, உரிய சொல்லை உருவாக்குவதும் கண்டுபிடிப்பதும் அவ்வளவு கடினமல்ல. உண்மையில், ஒரு பொருளுக்கு பல விளக்கங்களும், சொற்களும் தமிழில் உள்ளன. அதுதான் உண்மையில் பெரிய சவால்- பூஜ்யம் என்பது தொழில்நுட்ப ரீதியாக சரியாகவும், சாதாரணப் பயன்பாட்டில் இன்னும் நெருக்கமாக இல்லாமலும் இருக்கும். சுருக்கமாக, இங்கு இல்லாமையால் பிரச்சனையல்ல; ஏராளமாக இருப்பதே!
புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து வரவேற்பு எப்படி இருந்தது?
மாலன்: மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்றார்கள். சிலர் மிகுந்த உற்சாகத்துடன் இத்திட்டத்தில் பங்கேற்றார்கள். தங்களது சொந்த தொழில்நுட்பத் துறைகளில் தமது தாய் மொழி நுழைவதைக் காண சந்தோசமடைந்தார்கள். இது, நாம் வெளிநாடுகளில் பணியாற்றும்போது நமது நம்மைக் காண நேரில் வருவது போல இனிமையானது.
உத்தமத்தின் அதிகாரப் பூர்வ இதழ் மின்மஞ்சரியின் ஆசிரியராகவும் உள்ளீர்கள். தமிழ் மொழிக் கணினி பரவுவதில் மின்மஞ்சரியின் பங்கு என்ன?
மாலன்: தமிழ் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு தொழிநுட்ப அம்சங்களைப் பரிமாரிக் கொள்வதற்கும், அவற்றை விவாதிக்கவும் ஒரு தளத்தை ஏற்படுத்துவதே மின்மஞ்சரியின் அடிப்படை நோக்கம். அது ஒரு இரு-மொழி இதழ்; ஆனால் தமிழில் எழுதுவதை வரவேற்கிறது. நடைமுறையில், தொழில் விற்பன்னர்கள் தங்கள் வெளிப்பாட்டு மொழியாகத் தமிழை பயன்படுத்துவதைமஞ்சரி ஊக்குவிக்கிறது. பின்னர், மின்மஞ்சரி பிரசுரித்த கட்டுரைகள் அனைத்தும் புத்தகமாக வரும்போது, தமிழ் கணினியின் பல்வேறு முயற்சிகள் எதிர்காலக் கணினிச் சமுதாயத்திற்கு பாடமாக அமையும்.
தமிழ் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான முக்கியப் பகுதிகளை “உத்தமம்” எவ்வாறு அடையாளம் காண்கிறது? எதிர்காலத் திட்டங்கள் என்ன?
மாலன்: “உத்தமம் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தொழில்விற்பன்னர்களும், மேம்பாட்டாளர்களும் ஆவர்.எந்த ஒரு உறுப்பினரும் நிர்வாக இயக்குனருக்கோ அல்லது உத்தமம் பொதுக்குழுவிற்கோ தமது பரிந்துறைகளை அஞ்சல் செய்யலாம்; அல்லது பனிக் குழு/ விவாதக் குழுவிற்கு கோரிக்கை விடுக்கலாம். அப்பரிந்துறைகளை நிர்வாகக் குழு பரிசீலனை செய்து அது தொடர்பான பணிக்குழு அல்லது விவாதக் குழுவை அமைக்கும். அக் குழு தமது இறுதி அறிக்கையை நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கும். நிர்வாகக்குழு தனது ஆலோசனைகளையும் இணைத்து பொதுக்குழு முன் சமப்பிக்கும்.

ஆரம்பக் கட்டங்களில், உத்தமம், குறியீடு, தரப்படுத்தல், இணையம் போண்ற அம்சங்களில் விரிவாகக் கவனம் செலுத்தியது. சமீபகாலங்களில், செல்பேசி, பிடிஏ போன்ற நவீன ஊடகங்களில் தமிழைப் பயன்படுத்துவது பற்றியும், குரல் அறிதல், லினக்ஸ், திறந்த வெளிஆதாரங்கள் போன்ற புதிய விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.
ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில், தமிழ் மொழிக் கணினி வளர்ச்சியில் பத்திரிகையாளர்கள் எந்த வகையில் பங்காற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்?
மாலன்: ஒவ்வொரு பத்திரிகையாளனும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் பயன்படுத்தும் இரண்டே இரண்டு முக்கியக் கருவிகள் மொழியும், தொழில்நுட்பமும் ஆகும். இதனால் இந்த இரு கருவிகள் பற்றி இவர்களே நன்றாக அறியமுடியும். இவர்களில் பெரும்பாலானவர்கள் தம் தொழில் நிமித்தம் பொது மக்களோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். இதனால், தமிழ் மொழிக் கணினி பற்றிய தகவல்களை மக்களிடம் பரப்பும் வாய்ப்பு இவர்களுக்கே இருக்கிறது. தமிழ் மொழிக் கணினி அறிவு பற்றிய தகவல்களைப் பரப்பும் சமூகப் பொறுப்பும், பெரும் பங்கும் பத்திரிகையாளர்களிட்மே இருக்கிறது என்பதே எனது கருத்து.
பிராந்திய மொழி கணினி வளர வேண்டுமானால், அந்தந்த அரசுகள் “உத்தமம்” போன்ற அமைப்புகளை ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
மாலன்: என்னைப் பொறுத்தவரை, இந்திய மொழிக் கணினியை வளர்க்க அடிமட்ட அளவில் அமைப்புகளை உருவாக்கிப் பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். இப் பிரச்சனை பற்றி பேச முழுமையான புதிய சமுதாயம் ஒன்று அங்கே இருக்கிறது. ஆனால், “உத்தமம்” என்பது தொழில்முறையாளர்களைக் கொண்ட மையப்படுத்தப்பட்ட உலகளாவிய அமைப்பு ஆகும். மாநில அலவில் இதை நடைமுறைப்படுத்துவது தற்போது இல்லை. இருந்தபோதும், ஒரு நாள் பிராந்திய அளவில் நாம் அமைப்புகளைக் கொண்டிருப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே, ஐரோப்பா பிரிவு, வட அமெரிக்கா பிரிவு, இலங்கை பிரிவுகள் உள்ளன. விரைவில் மாணவர் பிரிவு உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
“உத்தமம்” போன்ற அமைப்புகளை ஆதரிப்பதில் அரசுகள் எவ்வாறு பங்காற்ற முடியும்?
மாலன்: “உத்தமம்” மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே பல அரசுகள் பரந்த அளவில் ஆதரித்து வருகின்றன. “உத்தமம்” செயலகத்திற்கு சிங்கப்பூர் அரசு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஆதரவு அளித்து வருகிறது. 2000ஆம் ஆண்டு நடந்த இணைய மாநாட்டை ஆதரித்தது. 1999, 2003 இணைய மாநாடுகளை தமிழ் நாடு அரசு நடத்தியது. 2001 மாநாட்டை மலேசிய அரசில் இடம் பெற்ற தமிழர்கள் ஆதரித்தனர். இந்த அரசுகள் நிதி உதவிகள் வழங்கியதோடு மட்டுமல்லாமல், தமது பிரதிநிதி¸ளையும், நிபுணர்களையும் அனுப்பிப்பங்கேற்கச்செய்தது. இருந்தபோதும், இன்னும் உதவிகள் தேவை. உள்கட்டமைப்பு, மனிதவளம் போண்ற உதவிகளை மாநாடுகளின் போது அரசுகள் செய்ய வேண்டும்.
இந்திய மொழிக் கணினியை பரப்புவதில் அச்சு ஊடகங்களும் தொலைக்கட்சியும் எவ்வாறு பங்காற்றமுடியும் என்று நினைக்கிறீர்கள்?


மாலன்: மாநில மொழிக் கணினி பரவலின் பெரும் பங்கு விரிந்து பரந்த இந்த ஊடகங்கள் கைகளில்தான் உள்ளது. தமது சொந்த மொழியிலேயே கணினியைக் கையாள முடியும் என்ற தகவல் இன்னமும் பெரும்பாலான மக்களுக்குச் சென்றடையவில்லை. இத் தகவல் கடைக்கோடிக்கும் சென்றடையும்போது அவர்களிடம் பெருமளவில் உற்சாகமும்,ஆர்வமும் கொந்தளிக்கும். இந்த இடத்தில் எனது சொந்த அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

திசைகள் 2003 ஜூலை இதழில் யூனிகோட் பயன்படுத்தி தமிழில் ப்ளோக்கிங் (blogging) உருவாக்க முடியும் என ஒரு கட்டுரை எழுதப்பட்டது. அப்போது தமிழில் மொத்தம் 10 ப்ளோக்கர்கள் கூட கிடையாது.

ஆனால், இரண்டே ஆண்டுகளில் இப்போது தமிழில் 500 ப்ளோக்கர்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் திசைகள் கட்டுரையே தமக்கு உத்வேகம் அளித்ததாக அங்கீகரித்துள்ளனர். ஒரு தனிப்பட்ட பத்திரிக்கை மட்டுமே இவ்வளவு முடியும் என்றால், அகன்று விரிந்து பரவியுள்ள அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சியும் மிகப் பிரமாண்டமான பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
இந்திய மொழிக் கணினி பரவலில் மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது; பாஷாஇந்தியா இணையத் தளம் உருவாக்கியுள்ளது; பன்மொழிப் பயன்பாடுகளை கணினியில் சாத்தியப்படுத்தும் பல்வேறு பொறிகளையும், மென்பொருள்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய நிறுவனங்களின் பங்கு என்னவாக இருக்கும்?
மாலன்: பாஷா இந்தியா திட்டம் புதிய வழியைத் திறந்து விட்டுள்ளது. ஆங்கிலம் அறிந்தால்தான் கணினி பற்றி அறிய முடியும் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். தமது தாய் மொழியில் கணினியைக் கையாள்வது எல்லாக் கணினிகளிலும் சாத்தியமில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், மைக்ரோசாப்ட் பயனாளர்கள் வருகை உறுதியாகவும் நம்பிக்கையாகவும் இக்கனவினை சாத்தியமாக்கி உள்ளது. இந்திய நிறுவனங்கள் இப் பாதையிலேயே செல்ல வேண்டும். பேச்சு – பிரதி செயலாக்கம், பொறி மொழிபெயர்ப்பு, மின் வணிகம், மின் – கல்வி, தொலை மருத்துவம், மின் – ஆளுமைக்கான தகவல் தரவு நிர்வாகம் போன்ற புதிய தொழிநுட்பங்களை இந்திய மொழிக் கணினியை நோக்கி திருப்ப வேண்டிய தேவை இந்திய நிறுவனங்களுக்கு இருக்கிறது.
ஒரு எழுத்தாளர் என்ற முறையில், இந்திய மொழிக் கணினியை அடிமட்டம் வரை பரவச்செய்ய இலக்கியங்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
மாலன்: ஒரு மொழியின் பொது அடையாளம் இலக்கியம்தான். மாநில மொழிக் கணினி மூலம் இலக்கியம் சாதாரண மக்களைச் சென்றடையும் போது, தொழில்நுட்பத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒரு இலக்கியப் படைப்பின் தசமப் பதிப்பு எழுத்தை ஊக்குவிக்கிறது. ப்ளோக்குகள் இதை நிரூபித்துள்ளது.

எழுத்தாளனுக்கு இது ஒரு கவுரவமும், வாய்ப்பும் ஆகும். இன்று தொலை தூரக் கிராமங்களில் உள்ள வாசகர்கள் அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அல்லது தமக்கு விருப்பமான எழுத்தாளரின் நூல்களை வாங்குகிறார்கள். இப்போது, இணைய இணைப்பும் , இந்திய மொழிக் கணினி வசதியும் கொண்ட ஒரு மையத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! ஒரு வாசகர் தமக்கு விருப்பமான ஒரு எழுத்தாளரின் பெயர், அல்லது தாம் தேடும் நூலின் பெயரை தேடுபொறியில் உள்ளீடு செய்து தேடவும், அந்த நூலின் சில பக்கங்களை வாசிக்கவும் முடியும் அல்லவா!

இங்கிருந்து இந்திய மொழிக் கணினி புதிய அதிசயங்களை நிகழ்த்த உள்ளது.
நன்றி: http://bhashaindia.com/Patrons/SuccessStories/ta/pages/Maalan.aspx

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *