கூலி

 

“ என்னங்க  ஐயா !  வெறும்  தாளைக்  கொடுக்கறீங்க ? ”

கருப்பசாமியின்  குரல்  ஏமாற்றத்தில்  கனத்தது.

“ வெறுந்தாளாய்யா  இது ?  வெறுந்தாளா ?  கண்ணைத்  தொறந்துட்டு  பாரு ? ”

“ வேணாம்  சாமி !  ரூவாயாக்  கொடுத்துடுங்க. ”

“ ரூவாதாம்பா இது. உம் பேரு எழுதித் தொகை போட்டிருக்கில்லே ?  செக்குய்யா இது.  அரசாங்க  செக்.  சந்தேகம்னா  யார்கிட்டே  வேணா  காமிச்சுக்  கேட்டுக்க … ”

“ ரூவாதாம்பா இது. பக்கத்து பங்க்கில கொண்டு குடு. புத்தம் புது நோட்டா எண்ணிக் கொடுப்பாங்க.  ஆமாம் … நீ செக்கை கண்டியா, சிவலிங்கத்தைக் கண்டியா ! ”

“ அத்தினி தெரிஞ்சிருந்தா அத்துக் கூலி வேலைக்கு ஏஞ்சாமி வர்றேன். வேணாம் சாமி… ரூவாயாக் குடுத்துங்க. ”

“ இங்க பார்றா திருப்பித் திருப்பி … ”

“ அஞ்சு நாளா சீனிக்கிழங்கைத் தின்னுட்டு அரைச் சீவனாய்க் கிடக்கோமுங்க. இன்னிக்கு ரூவா போனாத்தான் அரிசியைப் பாக்கலாம். சம்பளம் வருது வருதுன்னு சொல்லி அம்புட்டுப் பேர்கிட்டேயும் கடனை வாங்கிப்பிட்டேங்க. வழில மறிப்பாங்க ஐயா. ரூபாயாக் குடுத்துடுங்க. ”

“ இந்த பாரு கருப்பசாமி !  நீ ஐயான்னாலும் ஆவாது. அம்மான்னாலும் ஆவாது. எங்க  வூட்டுப்  பணத்தை  எடுத்து  நான்  தாரை  வாக்கல.  இது  கவர்மெண்ட்  பணம். ”

“ சரிங்க ஐயா …  ரொக்கமா  குடுத்திடுங்க … ”

“ நீ சொல்லிப்பிட்டே. மஸ்டர்ரோல்ல ஊழல்னு பத்திரிகைக்காரன் கூசாம எழுதிப்பிட்டான். வம்பே வேணாம்னு, அம்பது ரூவாய்க்கு மேலே தம்பிடிக் காசுன்னாலும் செக்கிலதான் தரணும்னு கமிஷ்னர் உத்தரவு. முடிஞ்சா அங்கே போய்ச் சொல்லு. என்கிட்டே அழுவாதே ! ”

அப்ப எனக்கு அம்பது ரூவா போதுங்க ! ”

“ போதும்னாலும் சரி, வேணாம்னாலும் சரி. எங்கிட்டே சொல்லாதே. எட்டு நா வேலைக்கு வந்ததா மஸ்டர்ல என்ட்ரி இருக்கு. தினத்துக்கு ஏழு ரூவா. ஏழெட்டு அம்பத்தாறு கொடுக்கச் சொல்லி அரசாங்க உத்தரவு. அரை ரூவா குறைச்சுக் கொடுத்தாலும் எனக்கு வேலை போயிடும் ! ”

“ பில்லை எழுதி, அவனவன் கிட்ட பல்லை காமிச்சு, படாதபாடு பட்டு செக்கை எழுதி வாங்கிட்டு வந்து நீட்டினா, நீ நொட்டை சொல்றே !  ஏன் சொல்ல மாட்ட ?  குப்பை வார்ற வேலைக்கு ஐம்பது ரூவா கூலி குடுத்தா இதுவும் பேசச் சொல்லும், இன்னமும் பேசச் சொல்லும் ! ”

“ ஐயா, உங்களை ஒண்ணும் சொல்லலையே ஐயா, ரூவாயாக் கொடுத்துடுங்க  சாமி ! ”

“ இன்னொருவாட்டி ரூவான்னா, செருப்பு பிஞ்சு போகும் ராஸ்கல் ! வாயைப் பொத்திக்கிட்டு வாசலை பாத்து நடய்யா ! ”

*

‘ ஐயா –

எனக்கு இரண்டு மகன்கள். இருவரும் பாங்கில் வேலை செய்கிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட பாங்க். மூத்தவன் ஆபீஸர். அடுத்தவன் கிளார்க். ஆச்சரியம் என்னவென்றால்  குமாஸ்தாவுக்கு ஆபீஸரைவிடச் சம்பளம் அதிகம் ! ஆபீஸர் பையனுக்குச்  சம்பளம்  குறைவு  என்றபோதிலும்  பொறுப்பு ஜாஸ்தி. ‘ சாவி, சாவி ’  என்று காலையில் ஏழரை மணிக்கு மேல் அரை நிமிஷம் தாமதமானாலும் பதறிக் கொண்டு  கிளம்புகிறான்.  சாயங்காலம்  திரும்பிவர  எட்டு  மணி  ஆகிறது.

சினிமாவுக்குப் போவது என்பது அவன் ஆயுசுக்கு இல்லை என்று தோன்றுகிறது. போன வாரம், பள்ளிக் கூடத்தில் ‘ ஜுலியஸ் சீஸர் நாடகம். அவனது குழந்தைக்கு கிளியோபாட்ரா வேஷம். ஏகப்பட்ட செலவு செய்து விதவிதமாய் டிரஸ் தைத்தோம். நிஜமான  கிளியோபாட்ரா கூட இந்தக் குழந்தையைவிட அத்தனை அழகில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆபீசில் வேலையை முடித்துக்கொண்டு அவன் வந்தபோது  இங்கே  நன்றி  சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவன்  மனைவிக்கு  இதில் மனத்தாங்கல்.  குழந்தைக்குக்கூட  ஏமாற்றம்தான்.  ‘ நான் என்ன செய்யட்டும், என் வேலை அப்படி ’  என்று  நொந்து  கொள்கிறான்  பையன்.  அப்படி  என்ன  வேலை,  ஊர் உலகத்தில் இல்லாத வேலை என்றால், ஒரு அச்சிட்ட சர்க்குலரைக் கொண்டு வந்து காட்டுகிறான்.  பிராஞ்சில் ஏதேனும் தவறு நேர்ந்தால் அது அவனுடைய சொந்தப் பொறுப்பு  என்று  மிரட்டுகிறது  சர்க்குலர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் என்னடைய இன்னொரு பையனுக்கு பிரமோஷன்  வந்தது.  வேண்டாம்  என்று எழுதிக் கொடுத்துவிட்டான். ‘ பொறுப்பும் அதிகம். சம்பளமும் குறைவு. குழந்தைகள் படிப்பைக் கெடுத்துக் கொண்டு மூணு வருஷத்துக்கு ஒரு முறை, ஊர் ஊராய் மூட்டை கட்டுகிற நிர்ப்பந்தம். எனக்கென்ன பைத்தியமா ?  என்று  கேட்கிறான்.  அவனுடைய  முடிவு  சரியானது தான்  என்று எனக்குத்  தோன்றுகிறது.

உலகம்  முழுவதிலும், பதவி உயர்வு என்பதை  முன்னேறத்  தூண்டுவதற்கான  ஓர் உத்தியாகக்  கையாண்டு வருகிறார்கள். நம்முடைய பாங்க்குகள் எப்படி இயங்குகின்றன  பார்த்தீர்களா?’

*

“ பார்த்தீங்களா !  அப்பா  உங்க  லெட்டர்  இன்னிக்கு  பேப்பர்ல  வந்திருக்கு. ”

அப்பாவுக்குப்  பெருமை  முகத்தில்  புன்னகையாய்  நீண்டிருந்தது.

“ அப்பா,  நீங்க  யாருடைய  கட்சின்னே புரியலையே எனக்கு … !  என்றான் குமாஸ்தா.

“ இரண்டு பேரும் என்னடைய பிள்ளைகள். உங்களுக்கு நடுவில் நான் எப்படிடா கட்சி  எடுத்துக்  கொள்ள  முடியும் ”

கடிதத்தைப் பார்த்தா அப்படித் தெரியலையே ! சம்பளத்தைப் பற்றிச் சொல்றீங்க. ஆனா அவங்களுக்கு எங்களைவிட டி.ஏ. அதிகம் தெரியுமோ ?  எல்.எஃப்.,சி. கூடத் தெரியுமோ ?  டெபுடேஷன்ல  போனா  அலவன்ஸ்  அதிகம்  தெரியுமா  உங்களுக்கு ? ”

*

“ உங்களுக்கு  என்ன  வேணும் ? ”

கம்பி வலைக்குப் பின்னிருந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்த காஷியர், சந்தேகத்தோடு நிமிர்ந்து கேட்டார்.

“ ரூவா  வேணும்  சார் ! ”

“ என்னய்யா, செக்கா ?  உங்களுக்கெல்லாம் நேரம் காலம் கிடையாதா ? இதென்ன, வட்டிக்  கடைன்னு  நினைச்சுக்கிட்டியா ?

“ ஆபீசில சொன்னாங்கய்யா. இந்தத் தாளை உங்கக்கிட்ட குடுத்தா ரூவா கொடுப்பீங்கன்னு … ”

“ அது சரி, மூணு மணிக்கு வந்தா எப்படி ?  பன்னிரண்டு மணிக்கே கணக்கு முடிச்சாச்சு. ”

“ அரை  அவர்  முன்னாடிதான்  இந்தத்  தாளைத்  தந்தாங்க  ஐயா. ”

“ அது  உங்க ஆபீஸ்  விவகாரம்.  அதற்கு  என்னை  என்ன  பண்ணச்  சொல்றே ? ”

“ ரூவா வேணும் சாமி ! ”

“ கேஷ் க்ளோஸ் பண்ணியாச்சு. காலைலே வா ! ”

“ அவர்கிட்டே இருக்கு சாமி…” – கருப்புசாமியின் கை காஷியரை நோக்கி உயர்ந்தது.

“ என்னது ? ”

“ ரூபா  அவர்கிட்டே  இருக்கு  சாமி ! ”

“ அவர்கிட்டே  இருந்தா அள்ளிக் கொடுத்திட முடியுமா ?  நல்லா  இருக்கே  நியாயம் ? ”

*

“ நியாயமாகச் சொல்லுங்கள் பாங்க்காரர்களின் சம்பளம் குறைவுன்னா சொகிறீர்கள் ? ”  – பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டே பத்திரிகை ஆசிரியர் கேள்வி கேட்டார்.

“ எங்கள் ஆபீசர்களுடைய  சம்பள  விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டு  பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன…”

“ ஆபீசர், குமாஸ்தா என்று பிரிக்க வேண்டாம். அது உங்கள் ஆபீசுக்குள் இயங்கும் கற்பனை  ரேகை.  பொது  மக்களுக்கு  நீங்கள்  எல்லாரும்  ஒன்றுதான்  பாங்க்மென். ”

“ பாங்க் வேலையென்றால் சம்பளம் அதிகம் என்பது பலருடைய அபிப்ராயம். ஆனால், அது தவறானது. ”

“ எப்படிச்  சொல்கிறீர்கள் ? ”

மேசை  மீது  பளபளவென்று ஒரு புத்தகம் விழுந்தது. அயல்நாட்டு ஆர்ட் காகிதத்தில்  அச்சிடப்பட்ட  புத்தகம்.

“ இது  ஒரு  பெட்ரோல்  கம்பெனியின்  அதிகாரபூர்வமான  ஆண்டறிக்கை. ”

“ சரி. ”

“ இதைச் சற்று பாருங்கள். ”

பெயர்,  படிப்பு,  அனுபவம்,  சம்பளம்  என்றமைந்த  அட்டவணை விரிந்தது.

“ இவர் இந்த நிறுவனத்தின் கடைநிலை ஊழியர், காபி, டீ வாங்கி வருகிற, காகிதங்களை ஒரு மேஜையிலிருந்து மற்றொன்றுக்கு எடுத்துச் செல்கிற, பொறுப்புகள் ஏதும் இல்லாத கடைநிலை ஊழியர். படிப்பு :  எட்டாம் வகுப்பு. சம்பளம் மூவாயிரம். எம்.எஸ்ஸி., படித்துவிட்டு பாங்க்கில் சேர்கிற எங்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?”

“ ஒட்டகத்தையும் குதிரையையும் எப்படி ஒப்பிட முடியும் ?

ஒட்டகமும் குதிரையும் பொதி சுமக்கப் பிறந்தவை. வண்டி இழுக்கப் பயின்றவை. ஏன் ஒப்பிடக் கூடாது ? ”

“ ஸோ, வேலைக்குத் தகுந்தபடி ஊதியம் இருக்க வேண்டும் என்பதா உங்கள் அபிப்ராயம் ?  ’‘

“ ஆம் நிச்சயமாக. ”

“ உங்களைப் போன்றே உங்கள் அலுவலகத்தில் அல்லது அதற்கு வெளியில் உழைக்கிற இன்னொரு கூலிக்காரன் அதிகமாகப் பெறுகிற அம்பது நூறு ரூபாய்கள் உங்களை உறுத்துகின்றன. ஆனால் நண்பரே, வாழ்க்கை முழுதும் உழைத்தாலும் ஒரு பாங்க் ஊழியனோ, கல்லூரி புரொபசரோ, அரசாங்க குமாஸ்தாவே சம்பாதிக்க முடியாத பணத்தை, நாற்பது நாளில், அதிக பட்சம் ஆறு மாதத்தில் ஒரு சினிமா நடிகன் சம்பாதித்து விடுகிற நம் சமூக முரண்பாடுகள் உங்களுக்கு ஒரு போதும் கவலை தருவதில்லை. பியூன்களுக்கும் குமாஸ்தாக்களுக்கும் கூடுதல் சம்பளம் என்று கோபித்து எழுகிற உங்கள் குரல்கள், இந்த அவலம் குறித்து முணுமுணுப்பது கூட இல்லை. வங்கித் தொழிலில் எத்தனை எழுத்தாளர்கள் ! கவிஞர்கள் ! தொழிற்சங்க சிம்மங்கள் ! எவரேனும் எப்போதேனும் இது குறித்துப் பேசவோ, எழுதவோ செய்ததுண்டோ.”

“எங்களைவிட மற்றவர்கள் அதிகம் சம்பாதிப்பது குறித்து எங்களுக்கு எவ்விதக் கோபமும் இல்லை. எங்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை என்பதுதான் எங்கள் குறை. ”

“ ஆம் !  உங்களுக்கு உங்களைத் தவிர வேறு ஏது கவலை ?  கல்வி, உழைப்பு, தகுதி, சமூக அவசியம் என்று எந்த எடைக்கற்கள் கொண்டு அளந்தாலும் முறையானதாக சிலரின் சம்பாத்தியமும் அது சமூகத்தில் விளைவிக்கக் கூடிய, விளைவித்திருக்கிற ஒழுக்கக் கேடும் உங்கள் பிரச்சினை இல்லைதான் ”

“ சினிமாத் தொழிலில் எத்தனை ரிஸ்க் ? அதற்காக அந்த நடிகன் அதிகம் பணம் கேட்பது எப்படித் தவறாகும் ? ”

“ போனா பிடித்து எழுதுகிற உங்கள் தொழிலில் ஆபத்துக்கள் மிகுந்துவிட்டதாக நீங்களே கூச்சலிடுகிறீர்கள். உழுது, விதைத்து ?  பூச்சி மருந்து வைத்து, புஷ்டிக்கு உரம் போட்டு, பெற்ற பிள்ளை போல் வளர்க்கின்ற  பயிர்,  கதிர் பிடிக்கிற தருணத்தில், அடுத்த ஊர் காவிரி, அரசியல் காரணமாய் வராமல் போனால், அத்தனையும் பொய்யாகப் போகிற ரிஸ்க் ஏழை விவசாயிக்கும் உண்டு. ”

“  சினிமா நடிகன் பெறுவது சம்பளமா  என்ன ?  அது சன்மானம்  அல்லவா ? ”

“ சன்மானம் என ஒன்றினைப் பெறுகிற தகுதியும் கௌரவமும் கலைஞனுக்கே உண்டு. சினிமா என்பது ஒரு போதும் கலை அல்ல. தொழில். இண்டஸ்ட்ரி என்றே எப்போதும் அதற்குள்ளிருப்பவர்களாலும் அரசாங்கத்தாலும் அழைக்கப்படுகிற தொழில். ”

“ எங்கேயும் யாருக்கும் சும்மா வருவதில்லை பணம்.”

பணம் மாத்திரமல்ல… சந்தோஷமும் கௌரவமும் புகழும் அதிகாரமும் எவருக்கும் எப்போதும் சும்மா வரக்கூடாது என்பதுதான் எல்லாக் காலத்துக்கும், எல்லா அமைப்புக்கும் முறையானது. ஒருவன் தன்னடைய உழைப்பினால்தான் சமூகத்துக்கு என்ன அளிக்கிறானோ அதற்குப் பிரதியாக, அதற்குத் தகுந்த அளவில், பணமும் கௌரவமும் அதிகாரமும் அவன் பெறுவதுதான் சரியான நியாயம். ”

“ அதற்கென்ன  இப்போtது ? ”

“ சமூகத்தின் அடிப்படைகளைத் தருவதற்காக உழைப்பவன் இந்த அமைப்பில் மிகக் குறைவாகவே அவற்றைப் பெறுகிறான். நம்முடைய விவசாயிகள் பாதி நாள் பசித்திருக்கிறார்கள். நெசவாளிகள் ஏழைகளாகவும், ஆசிரியர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள். எவருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லாமல், வெறுமனே கிச்சுக் கிச்சு மூட்டி கேளிக்கை ஊட்டுகிற சினிமாக்காரன் லட்சங்களில் சம்பளம் பெறுகிறான். இந்த விசித்திரங்கள் குறித்து வெள்ளை காலர்களான நீங்கள் முணுமுணுப்பது கூட இல்லை என்பதுதான் என் கவலையே. ”

“ நீங்கள் பிரச்சினையைத் திசைத் திருப்புகிறீர்கள். ”

“ இல்லை இன்னொரு கோணத்தில் உங்கள் பிரச்சினையைப் பார்க்க சொல்கிறேன்.”

உங்களுடைய மூன்றாவதுகண் திறக்கட்டும் என்றுதான் கோருகிறேன். ”

*

“திறக்க மாட்டாங்களா சாமி ? ”

“ ஐயா, இன்னிக்கு ஆபீசருங்க எல்லாம் ஸ்டிரைக்குங்கிறது ஞாபகம் இல்லாம சொல்லிட்டேன். ”

“ இன்னிக்கு ரூவா கிடைக்காதா சாமி ? ”

“ ம்ஹும். சான்ஸே இல்லை. நீ நாளைக்கு… இரு இரு… நாளைக்கு வேண்டாம். நாளைக்கு எங்க ஸ்டிரைக். நாளைன்னிக்கு,  ஓ !  நாளன்னிக்கு ஒண்ணாந் தேதியில்ல ?  மே தினம். நீ பேசாம போயிட்டு இரண்டு நாள் கழிச்சு வா. ”

“ இன்னும் இரண்டு நாளா! ஐயா, அவங்க தாளு கொடுத்தே இரண்டு நாளாச்சுய்யா. இது எங்க வாரக் கூலிய்யா. ”

“ பாவந்தான் !  ஆனா நாங்க என்ன பண்ண முடியும் சொல்லு ?  நாங்களும் உன்னை மாதிரிக் கூலிக்காரங்கதான். நீ படிக்காத வாரக் கூலி. நாங்க படிச்ச மாசக் கூலி.”

“ என்னப்பா அங்க அரட்டை! தலைக்குத் தலை பேசிட்டு நின்னா எப்ப ஆரம்பிக்கிறது ? ”

“ நி குரல் குடும்மா. தானே சேர்ந்துக்குவாங்க. ”

“ ஜிந்தாபாத்! ஜிந்தாபாத் ! ”

தொழிலாளர் ஒற்றுமை ஜிந்தாபாத் ! ”

( ஆனந்த விகடன் )

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these