தப்புக் கணக்கு

தாத்தா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருந்தாள் ஜனனி.

தாத்தாவிடம் கேட்பதற்கு அவளிடம் ஒரு கேள்வி இருந்தது. முக்கியமான கேள்வி. கேட்டே ஆக வேண்டிய கேள்வி. தன்னுடைய கணக்கு சரியா, தவறா?

ஜனனி மீண்டும் ஒருமுறை அந்தப் பரிட்சைப் பேப்பரை எடுத்துப் பார்த்தாள். கணக்கின் குறுக்கே ஒரு சிவப்புக் கோடு போட்டிருந்தது. மார்ஜினில் ஒரு பெரிய பூஜ்யம் போட்டிருந்தது. ஜீரோ போட்டால் தப்பு என்று ஜனனியின் நான்கு வயது மூளைக்குத் தெரியும். ஆனால் ஏழு இண்ட்டு இரண்டு, பதினாலு எப்படித் தப்பு? அதுதான் அவளுக்குப் புரியவில்லை.

ஜனனிக்குப் போன மாதம்தான் நான்கு வயது முடிந்தது. நான்கு  வயதுக்கு நல்ல மூளை என்றுதான் சொல்ல வேண்டும். அரை நிமிஷம் சும்மாயிராது ஏதாவது விஷமம் செய்து கொண்டிருக்கும் கை. எதையாவது கேட்டுக் கொண்டிருக்கும் வாய். கடல் ஏன் நீலம்? மரம் ஏன் பச்சை? ஜிகினா பேப்பர் எங்கிருந்து வருகிறது? மழையில் நனையும் மாட்டிற்கு சளி பிடிக்குமா? கம்ப்யூட்டருக்கு எப்படி எல்லாம் தெரியும்? கடவுள் என்பவர் கம்ப்யூட்டரா?
ஜனனியின் கேள்விகளுக்கு பதில் சொல்வது தேன் கூட்டில் கல் வீசுவது போல. ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் அத்தோடு ஓயாது. சரம்சரமாய் கேள்வி கிளம்பும். அது எதையாவது ஆரம்பித்தால், ‘கொஞ்சம் சும்மாயிரேன்மா என்பார் அப்பா. இப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா’ என்பார் அம்மா.
ஆனால் தாத்தா பதில் சொல்லுவார். சலித்துக் கொள்ளாமல் சொல்வார். சளைக்காமல் சொல்வார். அந்த நிமிடங்களில் அவரே குழந்தையாகிவிட்டது போன்ற குதூகலத்துடன் சொல்வார். கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்வி கேட்காமலே பதிலைக் கண்டுபிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தார். வித்தியாசமாக யோசி, விடை கிடைக்கும் என்று சொல்லித் தந்தார். வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் எல்லாம் எப்படி வித்தியாசமாகத் தெரியும் என்று கற்றுக் கொடுத்தார். கால்குலேட்டரில் 7-ஐ தட்டி தலைகீழாகப் பிடித்து ட என்பார். 3-ஐத் தட்டி E  என்பார். ஜீரோவை ஓ என்பார் 1-யை ஒன்று என்பார்.
தாத்தாவைக் கேட்டால் தெரியும். அந்தக் கணக்கு எப்படித் தப்பு?

பரிட்சைப் பேப்பரைப் பார்த்ததும் தாத்தா படபடத்தார். ஜீரோவா, என்னடி இது? என்னடி கேட்டிருந்தாங்க? கொஸ்டின் பேப்பரைக் கொண்டா பார்க்கலாம். கேள்வித் தாளை வாங்கி உரக்கவே படித்தார்.
‘ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள்
இரண்டு வாரத்திற்கு எத்தனை நாட்கள்?’
ஜனனியின் விடைத்தாளைப் பிரித்து பார்த்தார். ஜனனி 7 x 2 என்று எழுதியிருந்தது.
கணக்கின் குறுக்கே டீச்சரின் சிவப்புகோடு. பக்கத்து மார்ஜினில் பெரிதாய் பூஜ்யம்.
“ தப்பா தாத்தா? எப்படித் தப்பு? ”
“ அதாண்டி எனக்குப் புரியலை?”

தாத்தா மறுநாள் ஆபீஸிற்கு லீவு போட்டார். ஜனனியுடன் பள்ளிக்கு வந்தார். கணக்கு டீச்சரைத் தனியே சந்தித்துக் கையோடு கொண்டு வந்திருந்த பரிட்சைத் தாளைப் பிரித்துக் காண்பித்தார்.
“ இதிலே என்ன தப்பு மேடம்? ”
“ தப்புதான் ”
“ அதான் எப்படி…”
டீச்சர் கையை உயர்த்திப் பேச்சை நிறுத்தினாள்.
“ சொல்றேன். இதே கணக்கை கிளாஸ்ல ஒர்க் பண்ணி காண்பிச்சிருக்கோம்.”
“ என்னென்னு ?”
“ ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள். அப்படியானால் இரு வாரத்திற்கு  2 x 7 = 14. ”
“ சரி. 7 x 2 = 14 என்று குழந்தை எழுதினால் அது தப்பா ?”
“ தப்பதான். வகுப்பில் எப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறோமோ அப்படித்தான் எழுதணும். 2 x 7 = 14 என்று சொல்லிக் கொடுத்திருக்கும்போது 7 x 2 = 14 என்று எழுதியது தவறுதான்.”
“டீச்சர் இது அநியாயம்!” என்று இரைந்தார் தாத்தா.
“ நான் பிரின்சிபல்கிட்டே புகார் செய்வேன்.”
“ப்ளீஸ், டூ இட் ” என்றார் டீச்சர் அலட்சியமாக.
பிரின்சிபல் அணிந்து கொண்டிருந்த கண்ணாடியைக் கழற்றிவிட்டு கிட்டப் பார்வைக்கு அணிந்து கொள்ளும் கண்ணாடியை அணிந்து கொண்டு, கேள்வித்தாள், விடை எழுதின பேப்பர் இரண்டையும் மாறி மாறிப் பார்த்தார். தாத்தா சொன்னதை முழுவதும் காது கொடுத்துக் கேட்டார். “கொஞ்சம் இருங்க, விசாரிக்கிறேன்” என்றார்.
ஜனனியின் கணக்கு டீச்சருக்கு அழைப்புப் போயிற்று. அழைப்பை எதிர்பார்த்திருந்தாலோ என்னவோ, டீச்சர் வகுப்புக் கணக்கு நோட்டுடன் வந்தார்.
“ என்னம்மா, இது? என்றார் பிரின்சிபல்.
“ சார், நாம் வகுப்பில் இந்தக் கணக்கைப் போட்டுக் காட்டியிருக்கிறோம்.”
பிரின்சிபல் மேஜை மீது நோட்டை விரித்துப் போட்டார் டீச்சர்.
“ ஆனால் இந்த ஸ்டூடண்ட் அதைப் போலப் பரீட்சையில் எழுதவில்லை.”
“ அதனால் 7  x 2 =14 என்பது தவறாகி விடுமா ? என்றார் தாத்தா ஆத்திரமாக.
“அப்படியில்லை சார். இது ஒரு மாணவர் வகுப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதைக் கண்டறிதற்காகக் கொடுக்கப்பட்ட கணக்கு” என்றார் டீச்சர்.
‘’ ஐ ’ ஆம் சாரி சார். உங்கள் பேத்தி வகுப்பில் போதுமான அளவு கவனம் செலுத்துவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. நீங்கள் கொஞ்சம் கண்டித்து வையுங்கள்” என்றார் பிரின்சிபல்.
நாற்காலியை விருட்டென்று பின்னால் தள்ளிக் கொண்டு எழுந்தார் தாத்தா.
ள்ளிக் கல்வி அலுவலரைப் பார்க்க இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. காரிடாரில் போட்டிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கட்டுக் கட்டாக காகிதங்கள்  கையெழுத்திற்காக அவரது அறைக்குள் போய் வந்து  கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தா. வேலையெல்லாம் முடித்துவிட்டு வெளியே கிளம்பும்முன் உள்ளே அழைத்தார் அதிகாரி.
“ அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. ஐந்து நிமிடத்தில், சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிங்க சார்” என்றார் ஆரம்பிக்கும்போதே.
நடந்ததை அவசர அவசரமாகச் சொல்ல ஆரம்பித்தார் தாத்தா. பாதியிலேயே இடைமறித்த அதிகாரி.
“ இந்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி யெல்லாம் எங்க ஆளுகைக்குள் வராது சார்” என்றார்.
“ அது இருக்கட்டும் சார். ஆனா இது அநியாயம்னு உங்களுக்குத் தோணலையா?
“ எது ?”
சரியான விடை எழுதினாலும் சைபர் போடறது?”
“ உங்க குழந்தை எழுதினது முற்றிலும் தப்புனு சொல்ல முடியாது. பார்ஷியலி கரெக்ட்.”
தாத்தா அரை நிமிடம் யோசித்தார்.
“ இது பார்ஷியலி கரெக்ட்னு எனக்கு நீங்க ஒரு கடிதம் எழுதித் தர முடியுமா?”
“ எதை, ஏழு இரண்டு பதினாலுங்கறதையா ?”

“ம்”
“ அப்படியில்லை சார். முதல்ல இது ஆவுட் ஆஃப் மை ஜுரிஸ்டிஷன். என் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம். இரண்டாவது, முடிவுகள் மாத்திரமல்ல, வழிகளும் சரியாய் இருக்கணும்னு காந்திஜியே சொல்லியிருக்கிறார் இல்லையா?

ந்திரி வரை இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டுமா என்று தாத்தாவால் தீர்மானிக்க முடியவில்லை. அவ்வளவு உயர்மட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால், ஜனனியின் அப்பாவுடனும், அம்மாவுடனும் பேசிவிடுவது நல்லது என்று தோன்றியது. இவ்வளவு தூரம் போராடியதற்கே, அவர்கள் என்னைக் கேட்காமல் ஏன் செய்தாய் என்று கோபப்படலாம். இதனுடைய நல்லது கெட்டது எங்கள் குழந்தை மீதுதானே விடியும் என்று சண்டைக்கு வரலாம். ஆனால் குழந்தைக்கு அப்பட்டமாக ஒரு அநியாயம் நடக்கும்போது, அதைப் பார்த்துக் கொண்டு ஒதுங்கிக் போகிற அளவிற்கு இன்னும் உணர்ச்சிகள் மழுங்கிப் போய்விடவில்லை. எனவே ராத்திரி சாப்பாட்டு மேஜையில் விஷயத்தை மெல்லப் போட்டு உடைத்தார்.
“ அவ டீச்சர் சொல்றது தப்பாயிருக்கலாம்பா, ஆனா அவங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே பரீட்சையிலே எழுதறத்துக்கு இவளுக்கு என்ன கேடு? என்றார் அப்பா.
“ சரி, எழுதல்ல, அது தப்பா?”
“ ஏன் அவ எழுதல்ல?” என்றாள் அம்மா.
“ அவளையே கூப்பிட்டு கேளு.”
“ ஜனனி, ” என்று அதட்டலாக அழைத்தார் அப்பா.
“ யெஸ் டாடி ” என்று ஓடி வந்தது குழந்தை.
“ ஒரு வாரத்திற்கு ஏழு நாள். இரண்டு வாரத்திற்கு எத்தனை நாள்?”
டீச்சர் கொடுத்த கணக்கை அப்பா ஏன் கேட்கிறார் என்று புரியாது திகைத்த ஜனனி, “பதினாலு” என்றது சற்றுத் தயங்கி.
“ எப்படி ”
“ ஏழு இண்ட்டு இரண்டு இஸ் ஈக்வல்டு பதினாலு.”
“ ஏழு இண்ட்டு இரண்டு எப்படி? ஒரு வாரத்திற்கு ஏழு நாள், அப்போ இரண்டு இன்ட்டு ஏழுதானே?
“ இல்லே தாத்தா, ஒரு வாரத்தில ஒரு சண்டே, ஒரு மண்டே, ஒரு ட்யூஸ்டே. இப்படி ஏழு நாள்.இரண்டு வாரத்திலே, இரண்டு சண்டே, இரண்டு மண்டே…” என்று விரல் விட்டது ஜனனி.
“ ஸோ, ஏழு நாள், ஒவ்வொன்றும் இரண்டு தடவை அதான் ஏழு இண்ட்டு இரண்டு.”
“ கிரேட் ” என்று கூவினார் தாத்தா.“ இது வித்தியாசமான சிந்தனை. மொத்த கிளாஸும் டீச்சர் போட்டுக் கொடுத்த பாதையிலே குதிரைக்கு பட்டை கட்டின மாதிரி போறச்சே, மூளையை உபயோகித்து  நீ கணக்குப் போட்டிருக்க பாரு. இது கிரியேட்டிவிட்டி! இது புத்திசாலித்தனம்!  என்று உற்சாகத்தில் பூரித்தார் தாத்தா.
“ சந்தோஷப்படாதீங்கப்பா. இது கவலைப்பட வேண்டிய விஷயம்.”

“ என்னடா சொல்றே?”

“ இது பெண் குழந்தை. ஞாபகம் வைச்சுக்குங்க. சொல்லிக் கொடுத்த மாதிரியில்லாம வேறு மாதிரி யோசிக்கிற குழந்தை, பின்னால பெரியவளானா நிறைய கேள்வி கேப்பா. இதுநாள் வரைக்கும் நடைமுறையில இருக்கிற சம்பிரதாயங்கள். நம்பிக்கைகள் இதையெல்லாம் கேள்வி கேட்பாள். வித்தியாசமா சிந்திக்கறதினாலேயே காயம் படுவா. ஊரோடு உலகத்தோட, ஒத்து வாழாம இருந்தா அவளுக்கும் அவஸ்த்தை. மற்றவர்களுக்கும் இம்சை.”
“ அதனால?”
“ ஏய், டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறாளோ அப்படியே கணக்குப் போடு. அதிகப் பிரசங்கித்தனமெல்லாம் பண்ணாதே” என்று சொல்லிக்கொண்டே எழுந்தார் அப்பா.
ஜனனியை வைத்த கண் வாங்காமல் அரை விநாடி பார்த்த தாத்தா, தாவி அவளை அணைத்துக் கொண்டார்.
அவர் இமையில் ஈரம் பளபளத்தது.

( தாய் )
இந்தக் கதையக் காண: 

 

https://www.youtube.com/watch?v=TNBG2tCY4qI&list=PLuSFaCG0A5AKWygN3j2dbrazK7mS0XaEW&index=1

About the Author

2 thoughts on “தப்புக் கணக்கு

  1. Great story sir.But the indentation looks clumsy and the story is repeated twice.If you could look into it will be easy for the readers.And out education today is capable of creating only sophisticated coolies 🙂

  2. A great story line. Malan has shown two different worlds in a Short story.. He does not need so many words to create two different worlds. How to be a child’s intellectual development- Malan has pointed out this and how we are spoiling this development – he has pointed out this also. Such a great intellectual like Balu Mahendra, the greatest tamil cinema director and a great intellectual is inspired by this story. It is inevitable that Balu Mahendra made it a short film. Hats off Malan sir !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these