ஆயுதம்

“ ஆயுதம் செய்வோம் – நல்ல

காகிதம் செய்வோம் ”   -  மகாகவி

“ அண்டா குண்டா அடகு வெச்சு

அம்மா தாலியை அறுத்து வெச்சு

எம்.ஏ., பி.ஏ., படித்து விட்டு

சும்மாதானே இருக்கிறோம் … ”

“  வேலை கொடு ! வேலை கொடு !

வேலை கொடுக்க வழியிலாட்டா

வேளா வேளைக்குச் சோறு கொடு ! ”

“  அ , சர்த்தான் … ” என்று அலுத்துக் கொண்டு இக்னிஷனை அணைத்தாள் இந்து.

“ என்ன ? ”

“  ஏதோ, இன்னும் ஒரு ஊர்வலம் … ”

இந்துவின் பதிலில்  இருந்த  அலட்சியம் ஆச்சரியமாக இருந்தது அனந்தராமனுக்கு.  இந்து  ஒரு  பத்திரிகை ஆசிரியை. தன்னை ஒரு பரம்பரை ஜர்னலிஸ்ட்  என்று  அடிக்கடி  அவள்  பெருமையோடு  சொல்லிக்  கொள்வது  வழக்கம்.

உண்மைதான். காலங்காலமாகப் படிப்பு, எழுத்து என்று திளைத்த குடும்பம். ‘தி ஒபீனியன்’ என்று கம்பீரமாய்ப் பெயர் சூட்டி, நூறு வருடங்களுக்கு முன் முதலாய் ஒரு செய்திப் பத்திரிகை துவங்கிய குடும்பம் அது. தலைமுறை தலைமுறையாய்ப் புரண்ட செய்தித்தாள் உருளைகள் அந்தக் குடும்பத்திற்கு ஒரு வாசக சாம்ராஜ்யத்தை வாக்களித்திருந்தன.

ஆவலும் குறுகுறுப்பும் உந்தித் தள்ள எட்டிப் பார்த்தான் அனந்த். எறும்புச் சாரியாய் இளைஞர்கள். எல்லோர் முகத்திலும் கோபம். எண்ணிக்கையில் வெகு சொல்பம். ஐநூறு பேர் இருந்தால் அதிகம். இரண்டிரண்டு பேராய் அணி வகுத்ததால், அதிநீளமாய்த் தோன்றிய வரிசை. ஐம்பது பேருக்கு ஒரு போலீஸ். அலை அலையாய் அட்டை கைகள். அட்டைகளில் கவிதை வரிகள். அனல் தெறிக்கும் புதுக் கவிதைகள்.

‘ கோவிலுக்குப்  போவது மட்டுமல்ல, எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சுக்குப் போவதும் மூட நம்பிக்கைதான் . ”

‘ உத்யோகம் புருஷ லட்சணம். எனவே வேலை கொடு அல்லது சேலை கொடு. ”

‘ விருப்பத்திற்கேற்ற படிப்பு.

படிப்புக் கேற்ற வேலை . ”

“  இந்து ஐ ஆம் சர்ப்ரைஸ்ட் ! ”

“ என்ன ? ”

“ கண்ணெதிரே கனலாய், கவிதையாய் ஒரு செய்தி நிகழும்போது கையைக் கட்டிக் கொண்டு, காதை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்க ஒரு ஜர்னலிஸ்ட்டுக்கு முடியுமா ? ”

இந்து சிரித்தாள் !  “ இது இங்கு புதிதில்லை அனந்த் . ”

“ இந்தக் குமுறல், இந்தக் கோபம், இந்தக் கவிதைகளில் செய்தி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது இந்து . ”

இந்து உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தோளை உயர்த்திக் குலுக்கினாள் :

“ ஜர்னலிஸத்தின் பால பாடம் தெரியுமா உனக்கு ? யானை விழுந்தால்தான் செய்தி, நடந்தால் அல்ல. ஆர்ப்பாட்டம் இந்த தேசத்தின் பழைய உத்தி. ”

“  எனக்குப்  புரியவில்லை. ”

“ உனக்குப் புரியாது அனந்த். இன்றைக்குத்தான் வந்து இறங்கியிருக்கிறாய். நீ ஹார்வர்டில் படித்திருக்கலாம். அணு ஆயுதங்கள் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கலாம் ; அரசாங்க அழைப்பில் இங்கு வந்திருக்கலாம். ஆனால், இங்கு நீ ஒரு அரிச்சுவடி ஆசாமி. யூ ஆர் ஏ  நாவிஸ். கண்ணால் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியவை இங்கு ஏராளம் இருக்கிறது . ”

பின்னால் வந்த கார்கள் பொறுமையின்றிப் பிளிற ஆரம்பித்தன. கேமராவைக் கையில்  எடுத்துக் கொண்டு காரிலிருந்து அனந்த் இறங்கினான். விடுவிடுவென்று முன்னே  நகர்ந்தான்.

“ வேண்டாம் அனந்த் , வேண்டாம். ”  –  பதறியபடி கத்திக் கொண்டு படக்கென்று கதவைத் திறந்து இறங்கினாள் இந்து. இதற்குள் தலைக்குமேல் கேமராவை உயர்த்தி ஃபோகஸ் செய்து சுட்டான் அனந்த். கடைசி ஃபிரேம். ‘ கிளிக் ’ செய்த கையோடு கடகடவென்று ரோலை கழற்றினான். இத்தனை நாள் கேமரா பழக்கத்தில் கடைசி ஷாட் முடிந்தவுடன் ஃபிலிமை அகற்றுவது என்பது அனிச்சைச் செயலாகப் படிந்திருந்தது.

எதிர்பாராத கணத்தில் அது நிகழ்ந்தது. கேமராவின் கண்ணைப் பார்த்து கல்லொன்று பறந்து வந்தது. கேமரா நகர்ந்திருக்கவே, காரில் இறங்கியது. ஊர்வலத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் திடுதிடுவென்று ஓடி வந்தார்கள். அனந்தை வளைத்துக்கொண்டு கேமராவைப் பிடுங்கினார்கள். இளைஞர்கள் பின்னால் இரண்டு போலீஸ்காரர்கள்.  பிடுங்கின கையிலிருந்து கேமராவைப் பறித்தார்கள். இரண்டு கைகளும் அடித்துக் கொண்டன.  சொடக்குப்  போடும் நேரத்தில் ஒரு சின்ன அமளி பற்றிக் கொண்டது. பரபரவென்று இரண்டு தரப்பிலும் வலு சேர்ந்தது. கைகள் ஓங்கின. ஓங்கின கைகள் உக்கிரமாய் இறங்கின. சாதாரணமாய்த் துவங்கிய அமளி சட்டென்று யுத்தமாய் மாறியது. எங்கிருந்தோ ஒரு கைக்குண்டு இளைஞர்கள் மத்தியில் எழும்பிப் பறந்தது.  கைக்குண்டிற்குக்  காக்கிச்  சட்டைகள்  கண்ணீர்க்  குண்டால்  பதில் சொல்லின.

கேமரா பந்தாடப்படுவதைப் பார்த்துத் திகைத்துப் போனான் அனந்த். நிமிஷ நேரத்தில் தன் கண்ணெதிரே பற்றிக் கொண்ட தீயை நிஜம் என்று நம்ப முடியாமலும் பொய்  என்று  தள்ள  முடியாமலும்  பிரமித்து  நின்றான்.

இந்த  திடீர் ஆவேசம் எதன் வெளிப்பாடு ? இந்தக் கோபம் எவர் மீதில் ? பரபரவென்று கையைப் பற்றி இழுத்துப் போய் காரில் அமர்த்தி, இந்து, விர்ரென்று வெகு வேகமாய்க் காரைக் கிளப்பினாள்.

ன்புள்ள ஐயா,

‘ இந்த தேசத்தைப் புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை . ”

- அனந்த் முதல் வரியை எழுதிவிட்டு யோசித்தான்.

அப்பா  அவனை  எட்டு  வருடங்களுக்கு  முன்னால்  அமெரிக்காவிற்குப் படிக்க அனுப்பினார்.  அப்பா ஒரு காந்தி பக்தர். கடைசி வரைக்கும் கதர் மட்டும்தான் உடுத்தியவர். அதிகாலையில் எழுந்து அம்பர் சர்க்கா சுழற்றுவார். அப்பாவின் அந்தஸ்துக்கும் ஆஸ்திக்கும் நூல் நூற்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அது அவருக்கு ஓர் அடையாளம். தான் செய்த தியாகங்களின் நினைவுச் சின்னம். அப்பா, சுதந்திரத்துக்காக ஜெயிலுக்குப் போனவர். சிறையில் உதை வாங்கி இடக்காலில் சுவாதீனம் இழந்தவர்.

இருந்தாலும், அவர் மகனைப் படிக்க அக்கரைக்குத்தான் அனுப்பினார். அதுவும்  கடை வைத்துச் சேகரித்த கறுப்புப் பணத்தில். எந்த அரசாங்கம் வேண்டி சிறைக்குப் போனாரோ அந்த அரசாங்கத்தை ஏமாற்றுகிற குற்றம், அவரை உறுத்தவில்லை. வருமானத்தை மறைப்பதும், வரியை ஏய்ப்பதும் தவறு என்று தோன்றவில்லை. வியாபாரத்தில் எல்லாம் சரி என்று தீர்மானமாக நம்பினார். ஒருவேளை வருமானவரி பற்றி  காந்தி  உபதேசம்  செய்துவிட்டுப் போயிருந்தால் கடைப்பிடித்திருப்பாரோ, என்னவோ … ? ”

“ இந்த தேசத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா அணு ஆயுதங்கள் செய்யவேண்டுமென்று நவீன சிந்தனைகள் கொண்டிருக்கிற ஒரு அரசியல் கட்சி, மரத்துப்போன பசுக்களைப் பராமரிக்க வேண்டுமென்ற மனு தர்மத்தையும் அதே பிடிவாதத்துடன் பேசுகிறது. காக்காய் சோறு வைக்காமல் சாப்பிடுவது பாவம் என்று நம்புகிற தேசத்தில்தான் பட்டினியால் சாகிறவர்களும் இருக்கிறார்கள். இந்த முரண்பாட்டின்  மற்றொரு  முகம்தான்  நேற்று  நடந்த ஊர்வலம். வேலையின்மை வெறும் வயிற்றுப் பிரச்சினை மட்டுமல்ல, எதிர்காலம் பற்றிய பயங்களும், நிச்சயமின்மையும்தான் அதன் பின்னிருக்கும் வேதனை. அந்தப் புழுக்கத்தில் எப்படி இத்தனை கவிதைகளும், கோஷங்களும் சாத்தியமாகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு அல்ப விஷயத்திற்காக ஊர்வலம் வன்முறையில் முடிந்தது. வன்முறையும் கவிதையைப் போல ஒரு ரொமான்டிக்கான விஷயம். இதில் இத்தனை பேருக்கு ஈடுபாடு இருப்பது ஆச்சரியம் தருகிறது. ஒரு வேளை இந்த தேசம் தீர்வுகளைவிடக் கனவுகளையே அதிகம் வேண்டுகிறது போலும். இந்த தேசத்தை இன்னமும்  புரிந்து கொள்ள  முடியவில்லை.

தொழில்கள் பெருகியிருக்கின்றன. அரசாங்கத்தின் வேர்கள் கிராமங்களுக்கும் பரவியிருக்கின்றன என்று விளம்பரப்படுத்தப்படுகிற இந்த தேசத்தில்தான் வேலையின்மையும் பரவியிருக்கிறது. விசாரித்தால் பிரச்சினை வேலையில்லை என்பதல்ல; இவர்கள் வேலைக்கு லாயக்கில்லாதவர்கள் என்பதுதான் – என்று சொல்கிறார்கள். இந்த இளைஞர்கள் வேலைக்கு லாயக்கற்றுப் போனதற்குக் காரணம் நமது கல்விமுறை. இதைத் தீர்மானிப்பதில்  இளைஞர்களுக்கு  எந்தப்  பங்கும் கிடையாது. முழுக்க முழுக்க பெரியவர்கள் செய்த ஒரு தவறுக்கு ஒரு தலைமுறை மொத்தமும் பலியாவது துரதிர்ஷ்டம். அந்தப் பெரிய தலைமுறை இவர்களிடத்தில் அனுதாபம் கொள்வதற்குப் பதிலாக லாயக்கில்லை என்று சொல்லிப் பழி வாங்க நினைப்பது எத்தனை பரிதாபத்திற்குரிய விஷயம் ! இந்த தேசத்தை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை . ”

இந்தக் கடிதத்தை மடக்கிச் சுவரில் போட்டு,  ‘ அன்புள்ள ஆசிரியருக்கு ’  என்று எழுதி மறுநாள் காலை இந்துவிடம் கொடுத்தான். கண் இமைக்காமல் கடிதம் முழுக்கப் படித்தாள்.

“ கிரேட் !  நேற்று நீ ஒரு அரிச்சுவடி என்று சொன்னது உன்னைக் குதறியிருக்கும் என்று நினைத்து வருத்தப்பட்டேன். அதற்கு அவசியமில்லை என்று இப்போது தோன்றுகிறது . ”

“ பிறகு … ? ”

“ முதல் பக்க நட்சத்திரக் கட்டுரையாகப்  பெட்டி கட்டிப் பிரசுரமாகும். ”

“ நன்றி ! ”

“ இத்தனை  பிரமாதமாக எழுதுகிறாய், எங்கள் பத்திரிகையில்  சேர்ந்துவிட்டேன் ! ”

“ அத்தனை பொட்டையா நான் ? ”

“ நீ  அடிவயிற்றில் குத்துகிறாய் அனந்த் . ”

“ ஒரு ஜோக் தெரியுமா உனக்கு ?  ஒரு சமயம் அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து கைவினைப் பொருட்கள் எக்ஸிபிஷன் வந்தது. நான் என் நண்பர்களுடன் போயிருந்தேன். ஒரு  சின்ன குன்றிமணி. சட்டைப் பித்தானில் பாதி அளவுதான் இருக்கும். அதற்கொரு மூடி. திறந்தால்  உள்ளே  குட்டி குட்டியாய் தந்தத்தில் பதினாறு யானைகள். இத்தினியூண்டு குன்றி மணியைக் குடைந்து அதற்குள் யானையையும் செதுக்கிப் போட்டவன் எத்தனை பெரிய கலைஞன் என்று எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைத்தார்கள். விற்பனைப் பெண் சொன்னாள்:  அதைவிட இதில் ஒரு ஆச்சரியமுண்டு. இதைச் செய்த கலைஞன் பார்வையற்றவன்!  எல்லோருக்கும் தாங்கமுடியாத பிரமிப்பு. நான் வெளியில் வந்ததும் சொன்னேன்.  இதைச் செய்த அந்தப் பார்வையற்ற கலைஞன் இந்தியாவில் ஒரு ஜர்னலிஸ்டாக இருப்பான் என்று. ஏனென்று எல்லோரும் கொக்கி போட்டார்கள். அவர்கள்தான் அற்புதமான கலைஞர்கள். கண்ணில் ஒற்றிக் கொள்கிற மாதிரி அலாதியான திறமை. ஆனால் திருஷ்டிதான் கிடையாது. எந்த விஷயத்திலும் சொந்தமான  பார்வை  கிடையாது. ”

“ என்ன,  அப்படி  ஒரேடியாய்  வாருகிறாய்,  என்ன  செய்துவிட்டோம் அப்படி ? ”

“ எமர்ஜென்ஸி காலத்து பேப்பர்களை எடுத்துப் பார், தெரியும் . ”

“ என்னவென்று … ? ”

“ எமர்ஜென்ஸி என்பது ஒரு அரசியல் பிரச்சினை. பொலிடிக்கல் கிரைஸிஸ் ; ஆனால் எல்லா பத்திரிகைகளும் அதை ஒரு சமூகச் சிக்கலாக வர்ணித்துக் கொண்டிருந்தன”

“ அப்போது  நிலைமை  வேறு …  சென்ஸார்  இருந்தது  இங்கே . ”

“ ஸோ ,  வாட்  ? ”

“ உன்னோடு  பேச  எனக்கு  ஆகாது  அனந்த் . ”

அலறி அலறிக் கூப்பிட்டது டெலிபோன். அலுத்துக் கொண்டு டார்க் ரூமிலிருந்து வெளியில் வந்தான் அனந்த்.  கூப்பிட்டது  இந்து.  குரலில்  ஆர்வம்  தெறித்தது.

“ அன்றைக்கு  ஊர்வலத்தில்  எடுத்த  படங்களைக்  கழுவியாச்சா  அனந்த் ? ”

“ இல்லை.  இப்போதுதான்  உட்கார்ந்திருக்கிறேன் . அப்படியென்ன  அவசரம்  இந்து? ”

“ ஒரு ஸ்கூப். இப்பதான் தெரிய வந்தது. போலீஸ் கமிஷ்னர் போன் செய்தார். அந்த ஊர்வலத்தைப் பின்னின்று நடத்தியது சில தீவிரவாதிகள் ; தேடப்பட்டு வருகிற இளைஞர்கள், உன் புகைப்படத்தில் அந்த முகங்கள் இருக்கலாம். இருந்தால் … ஓ ! அது வெகு சூடான விஷயம். முதலில் கொடுப்பது  ‘ ஒபீனியன் ’  ஆகத்தான்  இருக்கும் . ”

“ தீவிரவாதிகள் … ? ”

“ ஆமாம், நிலச்சுவான்தார்களைக் கொல்கிற தீவிர இளைஞர்கள். சமூக விரோதிகள்.  நேரில்  நிறையச்  சொல்லுகிறேன்.  கொஞ்சம் சீக்கிரம் பிரிண்ட் போடேன். ”

“ புகைப்படம்  அவசியம்  வேண்டுமா ?  யோசிக்கணும்  இந்து . ”

“ என்ன  அனந்த் ? ”

“ இந்த தீவிர இளைஞர்கள் பற்றி நான் கேள்விப் பட்டிருப்பது வேறுவிதம். கே.ஏ.அப்பாஸ்  படித்திருக்கிறாயா ? ”

“ ப்ளீஸ்  ஹெல்ப் !  டோண்ட்  ஆர்க்யூ  அனந்த் ! ”  –  இந்து  வைத்துவிட்டாள்.

அனந்துக்கு  ஆத்திரமாக வந்தது. கட்டளையிட்ட மாதிரி இந்து பேசியது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ‘ இவள் யார் என்னை ஏவ ?  நோ,  இந்தப் படத்தை நான் உனக்குத்  தரமாட்டேன் . ’

அரை மணி கழித்து அடுத்து ஒரு அழைப்பு. “ போலீஸ் கமிஷ்னர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். ஊர்வலத்தில் எடுத்த புகைப்படங்களுடன் கொஞ்சம் வந்து போக முடியுமா ? ”

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் காக்கி ட்ரௌசரும், கை வைத்த பனியனுமாக வாசல்  கதவில் காவல்துறை வந்து வணக்கம் சொன்னது. “ போகலாமா ? ” – ஒரு புகைப்படம்  இத்தனை  புழுதி  கிளப்புகிற  ஆவல்  தாங்காமல்  புறப்பட்டான்  அவன்.

கமிஷ்னர் கை குலுக்கி வரவேற்றார். கனிவாகச் சிரித்தார்; “கங்கிராஜுலேஷன்ஸ்! ”

“ நன்றி.  எதற்கு ? ”

“ உங்கள் கட்டுரையைப் படித்தேன். அற்புதமாக இருந்தது. யாரோ பழகிய கை என்று நினைத்தேன். அணு விஞ்ஞானி என்று தெரிந்ததும் அசந்து போனேன். அரசாங்க அழைப்பில்  வந்திருக்கிறீர்களாமே ? ”

“ ஆமாம்,  இத்தனை  விவரம்  எப்படித்  தெரிந்தது ? ”

காலரை லேசாக உயர்த்திக் கொண்டு கண் சிமிட்டினார் கமிஷ்னர். “ நான் போலீஸ்காரன்.  இதுகூட  முடியவில்லை  என்றால்  எப்படி ? – சிரித்தார்.

“ ஓ ! ”

“ ஒரு உதவி செய்யவேண்டும் நீங்கள் ”  என்று ஆரம்பித்தார். “ அந்த ஊர்வலத்தை ஒரு பொருட்டாக மதித்துப் படம் எடுத்தவர் நீங்கள்தான். அது ஏதோ வேலையில்லாதவர்கள் ஊர்வலம் என்று அசட்டையாக இருந்து விட்டோம். ஆனால் அதில் சில கொலைகார்கள் கலந்து கொண்டிருந்ததாக இப்போது தகவல். உங்கள் படம் அவர்களைக்  கண்டுபிடிக்க  உதவி  செய்யும்.

“ கொலைகாரர்கள் …  தீவிரவாதிகள் என்றாளே  இந்து . ”

“அது அரசியல் வார்த்தை. சட்டத்தின் பார்வையில் அவர்கள் கொலைகாரர்கள்தான்.”

“ அவர்களைப்  பற்றி  நான்  கேள்விப்பட்டிருப்பது  வேறுவிதம். ”

“ அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று யாரும் மறுக்க முடியாது . ”

“ அதுதான் யோசிக்க வேண்டிய விஷயம் . ”

மாலை ஏழரை மணி இருக்கும். இருண்ட நிறமும் ஏழு நாள் தாடியுமாக ஒரு பையன். நெடுநெடுவென்று உயரம், சாதாரண கைத்தறிச் சட்டை, கையில் ஒரு பொட்டலம்.

“ அனந்தராமன் … ? ”

“ ஆமாம்,  நீங்கள் … ? ”

“ உங்கள் விசிறி என்று வைத்துக் கொள்ளுங்கள் . ”

“ உள்ளே  வாருங்களேன் . ”

“ அந்தரங்கமாகப் பேச விரும்புகிறேன். இடைஞ்சல் … ”

“ இருக்காது,  நான்  தனியன் . ”

உள்ளே வந்தான். நாற்காலி முனையில் தயங்கி உட்கார்ந்தான். “ உங்கள் கட்டுரை படித்தேன். வெகுநாட்களுக்குப் பின் மனசாட்சி உள்ள எழுத்து . ”

“ ம் ? ’‘

“ எனக்கு அந்தப் படம் வேண்டும். படம் கொடுத்தால் பதிலுக்கு ஒன்று தர எங்களால் முடியும் . ”

“ என்ன ? ”

“ இதோ, உங்களுடைய கேமரா . ”

“ காட் … !  கேமரா ?  இது  எப்படிக்  கிடைத்தது  உங்களுக்கு ? ”

“ நான் ஊர்வலத்தில் ஒருவனாக வந்திருந்தேன் . ”

“ படித்தவர் மாதிரி இருக்கிறீர்கள். அழகாக ஆங்கிலம் பேசுகிறீர்கள். இப்படி ரௌடி மாதிரி நேரடியாக வன்முறையில் இறங்க வெட்கமாக இல்லை ? ”

அமைதியாகச் சிரித்தான் விசிறி .

“ இல்லை. நாங்கள் மேற்கொண்டிருப்பது ஒரு யுத்தம். யுத்தத்தில் வன்முறை தவிர்க்க முடியாதது . ”

“ யுத்தம் … ?  தயவு செய்து உங்கள் காலித்தனத்தைப் புனிதப்படுத்திப் பேசாதீர்கள். ”

“ எது யுத்தம், எது கலவரம்,  எது குழாயடிச் சண்டை என்பதைத் தீர்மானிப்பது உங்கள் அனுபவமும் ஈடுபாடுமே. இந்த தேசத்தின் முதல் சுதந்திரப் போரை அப்போது ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களின் சரித்திரம் கலகம் – ‘ சிப்பாய் ம்யூட்டினி ’ – என்றுதான் குறித்தது. வியட்நாமின் யுத்தத்தை, கம்யூனிஸ்டுகளின் குழப்பம் என்றுதான் அமெரிக்கா சொன்னது. பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை வன்முறை என்றுதான் முதலாளித்துவம் சொல்லும் என்பது லெனின் வாசகம் . ”

“ பெரிய  பெயர்களைச்  சொல்லி  என்னைப்  பயமுறுத்த  முடியாது . ”

“ என்னை முழுதும் பேச விடுங்கள். வன்முறை என்பது ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு ரத்தம் வர விளாறுவது மட்டும்தான் என்பது அல்ல. அது வெறும் உடம்பின் வயலன்ஸ். நம் எல்லோருக்குள்ளும் வன்முறையான நிமிஷங்கள் உண்டு – மென்ட்டல் வயலன்ஸ். முக்கியமாக அமைதியைப் போதிக்கும் உங்களிடம். நீங்கள் ஆயுதங்களை ஆராய்ச்சிக்குத் தேர்ந்தது, அதன் அடையாளம். காந்தி கூட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்  குருஷேத்திர  யுத்தம்  படிந்திருக்கிறது  என்கிறார். ”

“ ஸோ ? ”

“ இது குருஷேத்திரம். பெண்கள் பகிரங்கமாக மார்க்கெட்டில் விற்கப்படுகிறார்கள். விவசாயி தான் விளைத்த பொருட்களிலிருந்து அந்நியப்படுகிறான். கவைக்கு உதவாத கல்வி. முறைகேடான வழிகளில் வெளிப்படையாகப் பணம் திரட்டும் அரசியல்வாதிகள். ஆதாரங்களோடு அது நிரூபிக்கப்பட்டும் அவர்கள் அசையாமல் தொடர்கின்ற அரசியல். ‘லஞ்சம் என்பது உலகம் முழுவதும்’ என்று வேதாந்தம் பேசுகிற தேசத் தலைமை. உயிரோடு எரிக்கப்படுகிற ஹரிஜனங்கள். எது நடந்தாலும் வேடிக்கை பார்க்கிற பத்திரிகைகள் …  என்று எத்தனை கௌரவர்கள் !  இங்கு வில்லைப் போட்டுவிட்டு வேதம் கேட்க எங்களுக்கு ஆசை இல்லை. எங்களுக்கு வேண்டியது ஆயுதங்கள் . ”

“ உங்கள் நோக்கங்கள் உயர்வாக இருக்கலாம். வழி முறைகள் அதைக் கொச்சைப்படுத்தி விடுகின்றன . ”

“ எங்கள் முடிவுகள் வழிமுறையை நியாயப்படுத்தும். அது போகட்டும். படத்தைக் கொண்டு வருகிறீர்களா ? ”

“ ஸாரி ,  நான்  அதைக்  கொடுக்க  இயலாது . ”

விசிறி ஒரு நிமிடம் யோசித்தான். “ நீங்கள் ஒத்துழைக்காவிட்டாலும் உளவு சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன் . ”

“ அப்படியென்றால் ? ”

“ படத்தைப் பகிரங்கப்படுத்தவோ, போலீஸுக்குக் கொடுக்கவோ மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ”

“ யோசிக்கிறேன் . ”

யோசனை புரட்டி எடுத்தது. விசிறியின் விவாதம் வெகு நேரம் நெஞ்சில் சுழன்றது. அரசியல் தீவிரம் என்கிறாள் இந்து ; கொலைகாரர்கள் என்கிறது சட்டம் ; யுத்தம் என்கிறான்  விசிறி, எது நிஜம் ?  எது சரி ?  எல்லாமுமேவா ? இல்லை, எல்லாம் பொய்யா ? பிரமையா ?  இந்தத் தேசத்திற்கு என்னவாயிற்று ? எதிர்க்கட்சிகள் சொல்லுகிற லஞ்சம் எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அல்லவோ ஆளுங்கட்சிகள் சொல்லுகிற ஒழுங்கீனமும் ? சூரியன் அஸ்தமிக்காத ஒரு மகாப்பெரிய ஏகாதிபத்தியத்தை வெறும் கைராட்டையை வைத்துக்கொண்டு விரட்டிக் காண்பிக்க எப்படி காந்தியால் முடிந்தது ?  அவருக்குப்பின் அது எப்படி அடியோடு மாறிப் போயிற்று ?  தேச பக்தனாக இருந்த அப்பா, பின்னால் வெறும் வியாபாரியாக மட்டும் மாறிப் போகவில்லையா ?

ஒரு வேளை காந்தி ஒரு விதிவிலக்கோ? விதியை  மெய்ப்பிக்க வந்த விதிவிலக்கா ?  ஒவ்வொருவர் வாழ்விலும்  போதுமான வன்முறை இருப்பதுதான் நிஜமோ ? ஆயுதம் இங்கு அவசியமாகிப் போனதோ? தாக்க மட்டுமல்ல, பாதுகாக்கவும் தானே ஆயுதம் !  இந்த தேசத்திற்கு நான் வந்தது அப்படி ஒரு ஆயுதம் செய்து கொடுக்க அல்லவோ !  இந்த தேசத்தின் எதிரிகள் யார் ?  இங்கிருப்பவர்கள் அல்லாமல் வேறு யார்? இத்தனை நெடிய சரித்திரமும், இத்தனை பெரிய ஜனத்தொகையும் கொண்ட தேசத்தை வெளியிலிருந்து வரும் விதேசிகள் குடை சாய்க்க முடியுமோ ? இங்கிருக்கிற கௌரவர்கள் அல்லாமல் வேறு யாருக்கும் அது சாத்தியமோ ? அப்படியானால் அவசியம் தானோ குருஷேத்திரம் ?  அவசியம்தானோ ஆயுதம் ?

குழப்பமாக இருந்தது, தலை விண்ணென்று தெறித்தது. ஏதாவது செய்து சற்று இளைப்பாறினால் தேவலை என்று தோன்றியது. சற்று நேரம் உலாத்தினான். சிகரெட் பிடித்தான். எழுந்து சென்று டி.வி.யைப் போட்டான்.

“ ஆ !  பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் ! ”  –  கோஷ்டியாகக் குரல் எழுந்து நிமிர வைத்தது. முதல் வரிசையில் உயரப்படி யுவதிகள். வெள்ளைச் சேலை உடுத்திய விணை இல்லா சரஸ்வதிகள். பின்னால் பெஞ்சின் மீது இளைஞர்கள். பிசிறில்லாத குரல்கள். சலனமில்லாத முகங்கள். ஒரு ஓரத்தில் மீசை முறுக்கின பாரதி. காட்சி மங்கி, இசை எம்.பி. ஸ்ரீனுவாசன் என்று பெயர் வந்தது.

பாட்டைக் கேட்கக் கேட்கப் பரவசமாயிருந்தது. கண்ணெதிரே கையை நகர்த்தி காலை வீசி மார்ச் போவது போல் உடம்பு பரந்தது.  வெதுவெதுவென்று  உஷ்ணமாய் உடல் சூடேறியது. ‘ ஆயுதம் ’  என்று  குரல் உச்சத்தில் போய் நின்றது. ஒரு சின்ன, ரொம்பச் சின்ன பாஸ், அமைதி, பட்டென்று மறுபடி ‘ காகிதம் ’  என்று உச்சம். ‘ செய்வோம் செய்வோம் ’  என்று இரண்டுமுறை பிரகடனம் போல் அழுத்தம் திருத்தமாய் அத்தனை குரல்களும் சபதமொலித்தன.  சடாரென்று அந்த நிமிஷத்தில் கவிதையின் முழு அர்த்தமும்  புரிந்தது.  ஆயுதம்னா கத்தி கபடாவா ? காகிதம்னா வழவழவென்று வெள்ளைக் காகிதமா ?  பாரதி சொல்லுக்கு, எழுதுவது நம் ஆயுதம். (Writing is our weapon)  என்றல்லவா அர்த்தம் ?  சுரண்டறவன் வயிற்றில் சொருகுகிற கத்தி மாதிரி, நியூஸ் பேப்பர் வந்து விழ வேண்டும். நசுக்கி வைத்திருக்கிறவர்கள் மேல், ஆட்டம்பாம் போல் எழுச்சியூட்டும் கட்டுரை வந்து விழ வேண்டும். மெஷின் கன்னில் சுடுவது மாதிரி படபடவென்று கவிதை தெறித்துக் கொண்டு வர வேண்டும் என்றல்லவா அர்த்தம் ! அர்த்தம் புரிந்து போனதில் மனசு பொங்கிற்று. தாள முடியாத சந்தோஷமாய்ப் புரண்டு தவித்தது.  விடுவிடுவென்று  எழுந்து  போய்  இந்துவுக்கு  போனைச்  சுழற்றினாள்.

“ என்ன  அனந்த் ,  இந்த  நேரத்தில் … ? ”

“ என் பத்திரிகையில் சேரும்படி நீட்டிய உன் அழைப்பிற்கு இன்னும் உயிர் இருக்கிறதா இந்து ? ”

“ என்ன  அதற்கு  திடீரென்று ? ”

“ ஐ ’  ம்  ஜாய்னிங் யுவர் எடிட்டோரியல் ! ”

“ ஆனால், மைண்ட் யூ… அணுகுண்டு செய்வதற்காக இந்த தேசத்திற்கு வந்திருக்கிறவன் நீ . ”

“ அதை விட்டு விலகுகிறேன். இப்போது நான் செய்ய வேண்டிய ஆயுதம் எது என்று எனக்குப் புரிந்து விட்டது . ”

“ வெல்கம் !  ஆனால்  ஜர்னலிஸ்ட்டுகளை  அந்த  திட்டுத்  திட்டுனாய்  அன்றைக்கு. ”

“ எப்படி இருக்கிறீர்கள் என்று சொன்னேன். எப்படி இருக்க வேண்டும் என்று இந்த நிமிஷம் புரிந்து போயிற்று . ”

“ கடவுள் வந்து சொன்னாரா ? ”

“ இல்லை,  கவிஞன். ”

“ எனிவே வெல்கம், என்ன எழுதப் போகிறாய் ? ”

“ நாளை முதல் ஒரு தொடர் கட்டுரை. ”

“ என்னது ! ”

“ பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார் . ”

“ என்னது ! ”

“ ஆம், தே கால் திஸ் ஆஸ் இண்டியா ! ”

“ வாழ்த்துக்கள் ! ”

போனை வைத்துவிட்டுச் சற்று நேரம் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். திடுமென நினைப்பு வந்தவனாகப் படத்தைத்தேடி எடுத்துக் கிழித்துக் காற்றில் வீசினான். குப்பை பறந்து அடங்குவதைப் பார்க்க மனசுக்கு ஆனந்தமாக இருந்தது.

( ஆனந்த விகடன் )

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *