காதலின்…

சொடக்குப்  போட்ட  விரல் போல மூளைத்தண்டில் ஒரு சிமிட்டல். சுளீர் என்று ஒரு மின்னல் பொறி. எப்படிப் பட்டென்று சொல்லி விட்டது இந்தப் பெண் ! வைத்த கண்ணை நகர்த்தாமல் வெளியில் வியப்புத் தெரியாமல் திரும்பத்திரும்ப அவளை பார்த்தேன்.

“ என்ன சார், பார்க்கறீங்க ? ”  என்றது  ஹேமா.

எங்கள்  ஆபீஸை  அழகு,  சுத்தம்  என்று கொஞ்ச முடியாது.  நெடுநெடு என்று நீளக் காரிடார்.  காரிடார்  முழுக்கக்  காகிதப்  பரவல்.  இடது  பக்கம் எனது அறை. எதிர்க்  கதவைத்  திறந்தால்  ஓவியர். இந்தப் பக்கம் என் உதவியாசிரியர்கள், சுந்தர்ராஜன்,  ஹேமலதா.

அந்த  ஆபீஸின்  உயிர்வயர்கள்  அவர்கள்.

“ என்ன  ராஜன்,  தொடர்கதை  வந்ததா ? ”

“ ஹேமா,  படத்துக்குப்  போன்  பண்ணு. ”

“ ஆஃப்டோன்  யார்  போயிருக்கா ?  கூப்பிடு  ராஜனை. ”

“ அந்த  சுஜாதா  கடிதம்  என்ன  ஆச்சு. ”

“  எத்தனை  இஞ்ச்  வெட்டணும், ராஜன் ? ”

“ இந்த பார். இன்னொரு வாட்டி சொல்ல மாட்டேன்.  எயிட்  பாயிண்ட்ல  கம்போஸ் பண்ணச்  சொல்லாதே. ”

நிமிஷத்துக்கு நூறு கொட்டு. மூச்சுக்கு இரண்டு கேள்வி. எதை எடுத்தாலும் அவர்களுக்கு ஒரு குரல். பத்திரிகை உத்தியோகம்,  பிரசவ சந்தோஷம்.  அத்தனை  வலி, அதற்கேற்ற  குழந்தை.  சிமிட்டாமல்,  சிணுங்காமல், சிறிதுகூட சலிக்காமல் வாரந்தோறும்  என்  வலிகளைப்  பகிர்ந்து கொண்ட குழந்தைகள் அவர்கள். எதிலே மச்சம்,  எங்கே  தேமல்,  இது  யார்  சாயல், இன்ன நிறம், தலை நிறைந்த சுருட்டை மயிரா, தடவிப் பார்க்கும் இரட்டை மண்டையா என்ற பிறந்த உள்ளிலேயே ஜாதகம் கணிக்கும்  தாதிக்  கிழங்கள்.

இரண்டு  பேரும்  கீரியும் பாம்பும் ;  கிளியும் பூனையும் ; எப்பப் பார்த்தாலும் எதிரும்  புதிரும் ;  இடைவிடாமல்  எதிலும்  விவாதம்.

“ இந்த  வார  லீடர்  வழவழா  கொழ  கொழ.  எழுதியது  ராஜனா  சார் ? ”

“ உன்னோட  டைரிப்  பக்கத்திற்கு  இது  ஒண்ணும்  குறைச்சலில்லை. ”

“ என்னய்ய சப் – எடிட்டர், இப்படி ஒரு டுபாகூர்  வேலை, இது என்ன பேட்டியா ? புராணமா ? ”

“ என்னம்மா,  விளக்கெண்ணெய்  எத்தனை  வரி  எடுத்துப் போட்டார்  எடிட்டர் சார் ? ”

“ சேதி தெரியுமா திருநாவுக்கரசு ? ”  இருந்த இடத்தில் இருந்தே ஆர்ட்டிஸ்டை விளிப்பான் சுந்தர்ராஜன். “ என் நாவல் ‘ புரட்சிப் பூக்கள் ’ புஸ்தகமா வருது. பரபரன்னு விளம்பரம்  பண்ணிப்  பாராட்டு  விழா  நடத்தணும்னு  எடிட்டரே  சொல்லிட்டாரு. ”

“ அட இருக்கட்டும், அரசு !  இன்னிக்குச்  சொல்றேன் கேட்டுக்க. அடுத்த தொடர்கதை  நான்தான்  எழுதப் போறேன். அவனவன் ஐய்யோ ஐய்யோன்னு அலறிக்கிட்டு  ஓடப்  போறான். ”

“ இப்பவே  உன்னைப்  படிக்கிறவன்  இதைத்தான் சொல்லிக் கதறுகிறான் ! இன்னும்  தொடர்  வேறையா ?  பாவம் ! ”

விஷமம் தளும்பும் இந்தச் சண்டை எனக்கு வேடிக்கை. எங்கள் ஆபீஸில் பொழுதுபோக்கு.  அவ்வப்போது, இரண்டு பேருக்கும் கொம்பு சீவிக் கோழிச்சண்டை மூட்டிச்  சிரிக்கும்  அது.

அன்றைக்குப் பெரிய அதிசயம். ஆபீஸ் மேஜையில் கவிழ்ந்து படுத்திருந்தான் சுந்தர்ராஜன்.  அறைக்குள்  நுழைந்த  அடுத்த  நிமிடம்  ராஜன்  எதிரே  வந்து  நின்றான்.

“ இந்தக்  காலியை  ஒரு  தரம்  பார்த்திருங்க  சார். ”

“ என்ன ராஜன், உடம்பு சரியில்லையா?”

“ லேசா  ஃபீவரிஷ்ஷா  இருக்கு  சார். ”

“ வீட்டுக்குப்  போயேன்ப்பா.  நான்  பார்த்துக்கறேன். ”

“ இல்ல சார். முதல் முப்பத்தி இரணடு முடிஞ்சது. அடுத்த பாரம் இன்னிக்கு ஆயிடும். பார்த்துட்டுப் போறேன். ”

ஐந்து நிமிஷத்தில் பரபரவென்று அறைக் கதவு திறந்தது. பரக்கப் பரக்க எதிரே ஹேமா.

“ என்ன ஹேமா ?  இத்தனை  பதற்றம் ? ”

“ அவர்கிட்ட நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க சார். ”

“ என்னம்மா ? ”

“ ராஜனைப் பார்த்தீங்களா சார் ? ”

“ இப்ப வந்தானே ? ”

“ அம்மை வார்த்திருக்க  சார்  அவருக்கு.  இரண்டு  நாளாய்  அனல் பறக்கிறது ஜுரம்.  வீட்டுக்குப்  போங்கன்னா  நகர  மாட்டேங்கிறார். ”

வேகமாய் வெளியில் வந்தேன். ராஜன் தலையை தொட்டு உயர்த்தினேன். கழுத்தடியில் புறங்கையை வைத்துப் பார்த்தேன். கனல் பொரியும் சூடு. கண்விழியில் சிவப்பு.  உற்றுப்  பார்த்தால்,  நெற்றிப்  பொட்டில்  சிறிதாய்  ஒரு  முத்து.

ஹேமா கிடுகிடுவென்று வாசலுக்குப் போய் ஆட்டோ ஒன்றை அழைத்து வந்து, கைத்தாங்கலாய்  ராஜனை  நடத்தி  அதிலே  அமர வைத்து, மடியில் தலையைக் கிடத்திக்  கொண்டு  மாம்பலத்திற்கு  வீட்டைப்  பார்க்கச்  செலுத்தச்  சொன்னாள்.

அந்த வாரம் முழுவதும் ஆபீஸில் அமைதி. அதன் வெறுமை. ஆர்ட்டிஸ்ட்டும் நானும் இருப்பதை வைத்து இதழை .நிரப்பினோம்  பேறு காலத்தில் ஆள் இல்லாமல் பிரசவ  நேரத்தில்  பெரிய  வேதனை.

அன்று மாலை ஆபீஸ் முடிந்து, ராஜனைப் பார்க்க வீட்டிற்குப் போனேன். உடன் ஒட்டிக் கொண்டு ஓவியர் வந்தார். அரிவாள் பிடியை திருகிக் கொண்டு வாசற்படியில் ஹேமலதா,  அருகில்  இரண்டு  இளநீர்.

“ என்ன  ஹேமா  எப்படி  இருக்கு. ”

“ ஸ்டாப், ஸ்டாப் ” என்று கூவிக் கொண்டு ஓடி வந்தாள். “ அப்படியே நுழைஞ்சிடாதீங்க  சார்.  செருப்பைக்  கழட்டிட்டு,  காலை  அலம்பிண்டு  வாங்க  சார். ”

அறைக்குள், கிழிந்த நாராய்க் கிடந்தான் சுந்தர்ராஜன். அருகில் இரண்டு கட்டு புஸ்தகம். அன்றைய பேப்பர். அம்மன் முத்திரை வாட ஆரம்பித்திருந்தது. என்னைக் கண்டதும்  எழுந்திருக்க  முயன்றான்.

“ படுங்க படுங்க, அசையப்படாது ” என்று ஆணையும் அதட்டலுமாக வந்தாள் ஹேமா.  எனக்குக்  காபி,  ராஜனுக்கு  இளநீர்.

“ எப்படி  இளைச்சிட்டார்  பார்த்தீங்களா ? ”

அவள்  விமர்சனத்தை  அலட்சியம்  செய்தான்  ராஜன்.

“ ஆபீஸ்  எப்படி  சார்  இருக்கு ?  இரண்டு பேரும்  எட்டிப்  பார்க்காம  இருக்கோம்”.

“ கவலைப்படாதே,  நான்  பார்த்துக்கறேன். ”

“ பார்த்தீங்களா ? ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது. உடம்பைக் கவனிச்சுண்டு போகலாம். ”

“ தலைக்குத்  தண்ணி  விட்டுண்டு,  வாப்பா  போறும். ”

“ சார், நீங்க எப்படி வேணா நினைச்சுக்குங்க. மூணு தண்ணியும் விட்டு முழுசா குணமாகிறவரைக்கும்  அவர்  வரமாட்டார். ”

“ ஸ்ஸு  என்று  அவளை அடக்கினான் ராஜன். புத்தகங்கள் மீது பார்வை மேய்ந்தது.

“ அட !  கா.நா.சு. புஸ்தகம்,  அருமையான  எழுத்து. ”

“ இப்ப ஒண்ணும் தொடக்கூடாது. ”  எட்ட  இருந்து  ஹேமா  கூவிற்று.

“ ஏமாத்த  முடியலை. கண் கொத்திப் பாம்பு மாதிரி கவனிச்சுக்கிட்டே நிக்கிறது சார். ”

இந்தக் கரிசனம், கார்வார், அக்கறை, அதட்டல் எல்லாவற்றையும் கண் அகலப் பார்த்துக்கொண்டே  இருந்தார்  ஓவியர்.  நானும்  தான்.

இரண்டு வாரத்தில் ராஜன் திரும்பிவிட்டான். ஹேமாவும். மறுபடியும் கோழிச்சண்டை  கேலி  கிண்டல்  நலுங்குப்  பாட்டு  மாதிரி  பரஸ்பர  நையாண்டி.

கைச்  செலவுக்குப்  பணமில்லை.  ஒரு  பத்துரூபா  இருந்தாக்  கொடு  ஹேமா. ”

“ இந்தா பாருங்க. இப்படியெல்லாம் கேட்டா கொடுக்க மாட்டேன். ஒழுங்கா முறையா,  அம்மா  தாயே !  மகாலட்சுமி !  பிச்சை  போடுன்னு  கேளுங்க  தர்றேன். ”

“ சரி,  மகாலெட்சுமி,  அன்னபூரணி,  அமிர்தவாகினி,  எட்செட்ரா,  எட்செட்ரா. ”

கைப்பையைத்  திறந்து  மேசையில்  கவிழ்த்தாள் ஹேமா. ஒரு பச்சை ஐந்து ரூபாய்  நோட்டு,  பத்து  பைசாவும்  நாலணாவுமாக  ஒரு  ஒண்ணரை  ரூபாய்  சில்லறை.

“ இந்த  நிமிடத்தில்  இதுதான்  அடியேன் ஆஸ்தி. கடன் கொடுக்க ஐவேஜு இல்லை,  ஸாரி ! ”

கலகலவென்று  சிரித்தாள்  ஹேமா.

“ கடன்காரி. ”  பல்லைக்  கடித்தான்  சுந்தர்ராஜன்.

“ என்ன உலகம்பா இது ? முழுசா முள்ளங்கிப் பத்தையா அறுவத்தைஞ்சு ரூபா கொடுத்து  ஒரு  கஃப்தான்  வாங்கி மாட்டிண்டு வந்திருக்கேன். இந்த ஆபீஸிலே ஒரு ஆம்பிளை எப்படி இருக்குன்னு வாயைத் திறக்கலையே ! ”  என்று அலுத்துக் கொண்டாள் ஹேமா.

“ எல்லாம்  ஒரு  கருணையினால்  தான். ”

“ என்னது ? ’‘

“ சோளக் கொல்லை பொம்மைக்கு சொக்காய் புதுசா மாட்டின மாதிரி இருக்கு. உன்கிட்ட  இதைச்  சொன்னால் ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுடுவே ?  அய்யோ பாவம், அழவிட  வேண்டாம்னு  அத்தனை  பேரும்  வாயைத்  தைச்சிண்டு  இருக்கோம். ”

“ ஏய் ”  என்று  பொய்  மிரட்டலாகக்  கூவினாள்  ஹேமா.

ஏதோ  ஒரு  சிறப்பிதழுக்கு  இரண்டு பேர் படமும் தேவைப்பட்டது. புகைப் படக்காரர்  பிரதிகளைக்  கொடுத்து  விட்டுப்  போனார்.

“ என்ன அரசு ?  எப்படி இருக்கு படம் ? ”  என்றான் சுந்தர்ராஜன்.  ஆவலாய்  தோள் வழி  எட்டிப்  பார்த்தாள்  ஹேமா.

“ எப்போ  டிஸ்சார்ஜ்  பண்ணினாங்களாம் ? ”

“ யாரை ? ”

“ படத்தைப் பார்த்தால் சாக்கோட்டை சானிடோரியத்தில் எடுத்த மாதிரி இருக்கு. எலும்பும் தோலும் எட்டு நாள் தாடியுமா, அதான் எப்போ டிஸ்சார்ஜ் பண்ணினாங்கன்னு கேட்டேன் .”

“ இது எப்படி சார் இருக்கு ? ”  என்று  ராஜனை  முடுக்கிவிட்டார்  ஓவியர்.

“ குணசீலம்  கோயில்லே  பிடிச்ச  மாதிரி  இருக்கு. ”

“ அது  எங்கே  இருக்கு  குணசீலம் ? ”

“ தஞ்சாவூர்  பக்கத்திலே, பார்த்ததில்லை ? பிரகாரம் முழுசும் வரிசையாய் தலையை விரிச்சுப் போட்டு ஆடிண்டு நிக்கும்ங்க. வேப்பலையை வைச்சுக்கிட்டு எதிரே உட்கார்ந்து இருப்பாங்க. ”

“ சரிதான், ஓய மாட்டீங்களா ?  எப்பப்  பாரு  நாத்தனார்  மதனி … சண்டைதான். ”

இந்தச் சண்டையில் விஷயம் இருக்கிறது என்பது ஓவியர் ஊகம். காதல் என்று அவரது கணிப்பு. “ அத்தனைச் சண்டை போடற பொண்ணு, அம்மையிலே கிடந்தப்போ விழுந்து  விழுந்து  கவனிச்சுதே,  விஷயம்  வேறெப்படி சார் ? ” என்பது அவரது கேள்வி.

இருந்திந்தாற்போல் செய்தி வந்தது. “ ஹேமாவின் அப்பா ரத்தமாய் வாந்தி எடுக்கிறார்.

விசித்து விசித்து அழுதது ஹேமா. இருதயத்தில் ஏதோ பிரச்சினை. ‘ ஏற்கனவே ஒருமுறை  ஓபன்ஹார்ட்  சர்ஜரி  நடந்திருக்கிறதாம்.  இப்போது  என்ன சிக்கலோ ? ’ என்று அழுது கலங்கிற்று. ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்தி சுந்தர்ராஜனை வீட்டில் கொண்டுவிட்டு  வரச்  சொன்னேன்.

“ அங்கே போனா அப்படியே கட்டையாய் சரிஞ்சிருக்கார் அவரு. இந்தப் பொண்ணு இத்தினி  பேசுது.  அங்கே  வந்து  விக்கி விக்கி அழுவுது. அதுக்கு கையும் ஓடலை. காலும் ஓடலை. சரின்னு அதே டாக்ஸியிலே அவரை எடுத்துக்கிட்டு ராயப்பேட்டை போனோம். அட்மிட் பண்ணிக்கிட்டாங்க. ஆனா பெட் கிடைக்கவில்லை. யார் யாரையோ பார்த்து, அங்கே இங்கே அலைஞ்சு கடைசியிலே வாங்கிட்டோம் ”  என்று அடுத்த நாள் வந்து தகவல் சொன்னான் சுந்தர்ராஜன். அன்றிலிருந்து அவனுக்கு அரை நேரம் ஆஸ்பத்திரி ட்யூட்டி. சாப்பாடு முடிந்து சாயங்காலம் ஏழு மணிக்குப் போய் விடுவான். ஹேமாவின்  அப்பா பக்கத்தில் ராத்தங்கல், காலைச் சமையலை முடித்துக் கொண்டு பத்து மணிக்கு வருவாள் ஹேமா. அவள் வந்ததும் இவன் கிளம்பி வீட்டிற்குப் போய் குளித்துச்  சாப்பிட்டுவிட்டு  ஆபீஸ்  வருவான்.

இந்த  ஒட்டுதலுக்கும்,  பிரியத்திற்கும்  என்னவென்றுதான்  பெயர் ? ”

ஒரு மாதம் ஓடிப்போயிற்று. நடுத்தர உயரமும் நரைத்த தலையுமாய் ஒருவர் வந்தார்.  பூஞ்சையான  உடல்,  புன்னகை  ததும்பும்  கண்கள்.

“  நான்  ஹேமாவோட  அப்பா. ”

“ அடேடே, வாங்கோ. ”

வெயில், விலைவாசி, காலம் மறந்து போன எழுத்தாளர்கள், கயவாளி அரசியல் என்று விருதாப் பேச்சாக ஒரு அரைமணி நேரம் பேசினார். சட்டென்று விஷயத்திற்குத் தாவினார்.

“ ஒரு உபகாரம் பண்ணனும் நீங்க … ”

“ சொல்லுங்கோ. ”

“ இந்த  ஆபீஸிலே  வேலை  பண்றானே  சுந்தர்ராஜன்னு  ஒரு  பையன். ”

“ ஆமாம்,  ரொம்ப  நல்ல  பையன். ”

“ அவன் மேலே ஹேமாவிற்கு ஒரு பிடிப்பு இருக்கிறார்போல் தோணறது. அது வெறும் லைக்கிங்கா லவ்வான்னு தெரியலை. பெத்த பொண்ணுகிட்ட இதப் பத்தி பேச கூச்சமா இருக்கு ; எங்க காலத்திலே இப்படியெல்லாம் வழக்கம் இல்லை. நீங்க ஹேமாகிட்ட  மெல்லப் பேச்சு  கொடுத்து  தெரிஞ்சுண்டு  சொன்னா  உபகாரமா  இருக்கும். இரண்டு பேருக்கும் பரஸ்பரம் பிடிச்சிருந்தா குறுக்கிலே நான் நிற்கிறதுக்கு இஷ்டப்படலை. கல்யாணம் பண்ணி வைச்சுடலாம். சுருக்கப் பண்ணிடனும்னு ஆசைப்படறேன். பாரம் குறையுமே, உடம்பு ரொம்பத் தள்ளல. இன்னிக்குத் தேதியிலே எனக்கு  அறுபது  வயது,  இன்னும்  எத்தினி  நாளோ ? ”

பெரியவரை  அனுப்பிவிட்டு ஹேமாவைக் கூப்பிட்டேன். கொஞ்சம் குழப்பம் தயக்கம்  எல்லாம்  சேர்ந்து  பேச்சு  இடற  ஆரம்பித்தன.

“ சுந்தர்ராஜனைப்  பற்றி  என்ன  நினைக்கிறே ? ”

“  ஏன்  சார் ?  குட் ஃபெலோ. ”

“ அப்புறம் …?”

“ம்  சுமாரா  எழுதறார்.  அப்புறம்  துருதுருன்னு  ஏதாவது  பண்ணின்டு ஆக்ட்டிவ்வா  இருக்கார்.  மைனஸ்  பாயிண்ட்  சுயபுராணம். ”

“ ஆர் யு  இன்  லவ்  வித்  ஹிம் ? ”

அரை  செகண்ட்  அமைதியாய்  இருந்தாள்  ஹேமா.  பின் கடகடவென்று சிரித்தாள்.

“ என்ன சார்,  நீங்களும்  இப்படிக் கேட்டுட்டீங்க. ஒரு பையனும் பொண்ணும் பரஸ்பரம் பிரியம் வைச்சா அது காதல்தானா ?  வொய்நாட் ப்ரண்ட்ஷிப் ? திருநாவுக்ரசும் ராஜனும் அன்னியோன்யமா பழகறாங்க. அதை என்னான்னு சொல்றீங்க ! பிரண்ட்ஷிப். நாங்க பார்க்கிறபோது மட்டும் அதுக்கு எங்கிருந்து வேற அர்த்தம் வருது ?  புரியலை. புடைவையில் இருக்கேங்கிற வித்தியாசத்தாலேயா? பொம்மனாட்டிங்கிற உடம்பி னாலேயா ? ஐ டோண்ட்  அண்டர்ஸ்டாண்ட். இந்த  ஆபீஸிலே  என் இடத்திலே இன்னொரு ஆம்பிளை இருந்திருந்தா இந்தக் குழப்பம் வருமா ? புரியலை. ஆனால் ஒண்ணு,  புரியறது  சார்.  நாங்க  பிரண்ட்ஸ். ஜஸ்ட் பிரண்ட்ஸ். ஆனா நல்ல சிநேகிதர்கள்.  காதலில்  பிரமைகள்  உண்டு.  பிம்பத்திற்காக  வாழ்கிற  பொய்கள் உண்டு.  பெரியவா  சின்னவா பேதம் உண்டு. இதில் இந்த இம்சைகள் எல்லாம் கிடையாது.  காதலைவிட ஸ்நேகம். உயர்ந்தது. ரொம்ப உயர்ந்தது. இதைப் புரிஞ்சுக்கிற வயது  உங்களுக்குப்  போயிடுத்து.  யு ஹாவ் பிகம் டூ ஓல்டு  டு பீல் இட்.  காதலை  விட ஸ்நேகம்  பெரிது. ”

சொடக்குப்  போட்ட  விரல் போல மூளைத்தண்டில் ஒரு சிமிட்டல். சுளீர் என்று ஒரு  மின்னல் பொறி. எப்படி பட்டென்று சொல்லிவிட்டது இந்தப் பெண் ! வைத்த கண்ணை நகர்த்தாமல் வெளியில் வியப்புத் தெரியாமல் திரும்பத் திரும்ப அவளைப் பார்த்தேன்.

( கல்கி )

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these