முகங்கள்

ராஜி ஒரு காலில் செருப்பை மாட்டிக்கொண்டு இன்னொன்றைத் தேடினாள். மாடிப்படியின் அடி வளைவில் அது எங்கோ தலை குப்புற ஸ்ட்ராப்புகள் நசுங்கக் கவிழ்ந்து கிடந்தது.  ஒவ்வொரு  நாள்  கிளம்பும்போதும்  இந்தச்  செருப்புத்  தேடுவது ஒரு வேலை.  வீடு  நிறைய  ஆட்கள்  சிறைப்பட்டுக்  கிடந்தால்  இப்படித்தான்  தேடணும். எல்லார்க்கும்  இரண்டு  கால்கள்,  காலுக்கு  ஒரு  செருப்பு.  இவற்றின்  நடுவே பழசுகள். ஒவ்வொரு வாரும் பிய்ந்து பிய்ந்து தைத்து, இனி முடியாதென்று ஒதுக்கப்பட்ட  பழசுகள்…

“ ராஜி  கிளம்பியாச்சு … ”

பேப்பர்க்குள்ளிருந்து  அப்பாவின்  குரல் மட்டும் கேட்டது. முகம் வெளிப்பட வில்லை.  இந்த  முகங்களை  எதிலேயாவது,  எப்போதும்,  புதைத்துக்  கொண்டுதான் ஆக  வேண்டும். காலையில்  பேப்பரில்; தெருவில் போகும் போதில் குடையின்கீழ்; ஆபீஸ்  கணக்குப்  பேரேட்டில்;  திரும்பி  வந்து  ஸ்லோகப் புஸ்தகத்துக்குள்… உயரமும்,  வாட்டமும்  இருந்தும்  எங்கேயோ  முகத்தைப்  புதைத்துக் கொண்டு தூங்குகிற நெருப்புக் கோழிகள். பறவையோடும் சேராமல், மிருகமாயும் திரியாமல் நடுத்தரத்து  நெருப்புக்  கோழிகள்…

இந்த  முகத்திற்கு  எங்கே  மதிப்பிருந்திருக்கிறது ?

ராஜி படியிறங்கினாள்.  இந்தச்  செருப்பைக்  கூடப்  போகும்போது தைத்துக் கொண்டு போக வேண்டும். கட்டை விரலின் காதறுந்திருக்கிறது.  வழியில் ஒரு சக்கிலியனைப் பார்க்கும்வரை  நழுவிக்  கோணிக்கொள்ளும். இந்தக் கோணல்களுடனும், நழுவல்களுடனும் எல்லாவற்றையும் கடந்து போக வேண்டும்.

நேற்றைக்கு  அறுந்த போதே தைத்துக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் நேற்றுத் திரும்பி வரும்போது அவன் கூடவே நடந்து வந்தான். மனது என்னதான் நெருங்கி விட்டாலும், ஒருவன்கூட நடந்து வரும்போது காதறுந்த செருப்பை உதறி விட்டுச் சக்கிலியன் முன்போய் நிற்க முடிவதில்லை, எத்தனை பாவனைகள் வேண்டியிருக்கிறது !

பிம்பங்களை உடைத்துப் போட்டுவிடாத பாவனைகள். தனக்கு ஏற்றாற்போல் முகங்கள், தன்னைக் கவர்ச்சியாய், வசீகரமாய் நிறுத்தும் முகங்கள், பார்த்துப் பார்த்து சுயகிறக்கம் கொள்ளச் செய்யும் முகங்கள்…

தன்னை  அவன்  காலடியில்  கிடத்தியது  அவனின்  எந்த  முகம் ?

இவளிடமிருந்து  பதில்  வராததால்  பேப்பரைத்  தாழ்த்திக் கொண்டு வெளிப் பட்டது, அப்பாவின் முகம். பழைய காசுகளில் பொறித்திருப்பது மாதிரி, மழ மழவென்று வழுக்கையும், கூர்த்த மூக்குமாய் முகம்.  அது  நிச்சயமாய்  ஏதோ  ஒரு ராஜா முகமாய்த்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இது சாதாரண முகம். எதிரிப்படுவதெல்லாம்  தப்பிக் கொள்ள  ஒதுங்கி,  ஒதுங்கி,  தன்  முதல்  வடிவம்  இழந்து  முழுசும்  நசுங்கலாய்ப்  போய்விட்ட  மிடில்  கிளாஸ்  முகம்.

“ காலங்கார்த்தாலே  என்ன  பேப்பர்  வேண்டியிருக்கிறது, இவர்களுக்கு. உலகின் எந்த எண்ணெய்ப் பேரமும் இவாளைக் கேட்டுக் கொண்டு முடிவாகிறதில்லை. எந்த சமாதான உடன்படிக்கையின் ஷரத்தும் நிச்சயமாவதில்லை. எல்லாத்தையும் அலசிக் கிழிச்சிடப் போறாப்பல இப்படி ஒரு ஆயுதம் …  Hell with your elitism ! நெருப்புக் கோழிகள் … ’’

இவள் வெளியே வரப்போகும் நிமிஷத்தை எதிர்பார்த்து எதிர்த்த ஜன்னலில் நின்று கொண்டிருந்த ஸ்ரீதர், இவள் வாசல் கேட்டின் கொக்கியைப் போட்டபோது, ஸ்லாக்கை மாட்டிக்கொண்டு வெளியே வந்தான். எப்படித்தான் மூக்கில் வேர்க்குமோ, தினம் வீட்டைக்விட்டுக் கிளம்பும்போது சரியாக வாசலில் வந்து நிற்பான். காஷுவலாக, கைலி மீது சட்டையைப் போட்டுக்கொண்டு – உனக்காக ஒண்ணும் இல்லை, வேலையாய் போறேன் என்று தெரிவிக்கிற மாதிரி- பின்னாலேயே தெரு முனையில் இருக்கும் எலிமெண்டரி ஸ்கூல் வரைக்கும் வருவான். ஆனால் இயல்பான தன்மையை மீறி கண்களில் ஒரு Lust கூத்தாடும். வாயைத் திறந்து பேசுவதற்குத் துணிச்சல் கிடையாது. ஒரு நாள் கிட்டவந்து, ஒன்றும் பேசத் தோணாமல், மணி என்ன ஆகிறது என்று அசடு வழிந்துவிட்டுப் போனான். புடவையைப் பார்த்தால்போதும், இவன்களுக்குப் போதை.

வேண்டியிருக்கிறது எல்லார்க்கும் ஏதோ போதை. அப்பா மாதிரி அப்பாவிகளுக்குப் பேப்பர். அம்மாவிற்கு ‘உன்னை மாதிரி உண்டா…” எல்லோர்க்கும்தான். படிப்பில், காரியம் சாதிக்கும் சாமர்த்தியத்தில், ஈகோவில்… ஏதோ ஒன்றில்…

பஸ் ஸ்டாப் பெட்டிக் கடையினருகில் ஒரு செருப்புத் தைப்பவன் உட்கார்ந்திருந்தான்.  அநேகமாய்,  மழை  நாளாக  மட்டும் இல்லாவிட்டால், பகல் முழுதும்  உட்கார்ந்திருப்பான். இவன் இளைஞன். கொஞ்சநாள் வரை, இவனுக்கு முன்னால்  இருந்தவன்  ஒரு  முதுகிழவன்.  தலையில்  மயிர்  நரைத்து  அந்த  வயதிலும் அடைசலாய் இருக்கும். குதிகாலிட்டு உட்கார்ந்தானானால் கால் நீளமாய் மடிந்து  இருக்கும்.  கூன் விழுவதற்கு முந்தின வாலிபத்தில் அவன் உயரமாய் இருந்திருக்க வேண்டும்.  அந்த  ஸ்டாப்பில்  வந்து  நிற்பவர்களின் முகங்களைத் தெரியுமோ என்னவோ  அவனுக்கு.  பார்வை  எப்போதும் பாதங்களில் தங்கும். அவர்களின் முகங்களை  அங்கு கண்டுகொள்ள முடிந்தது. அவனால், செருப்பு டிசைன்களில்,  அவற்றின்  விலைகளில்,  பித்தவெடிப்பு  விழுந்த,  விழாத  பாதங்களில்…

இப்போதிருப்பவன் வம்பு பிடித்தவன். எவ்வளவு கூலி கொடுத்தாலும் மேலே கேட்காமல் இருப்பதில்லை. கிழவன் மாதிரி இவன் யாரையும் ‘ சாமி என்று கூப்பிட்டு இவள் கேட்டதில்லை. விடுதலையடைந்த தலைமுறை. சில சமயங்களில் கையில் கொடுத்த  காசையே  திருப்பிக் கொடுத்துவிட்டு  “ என்ன சார் இது ? என்று பஸ் ஸ்டாப்பில்  நிற்கும் எல்லாருக்கும் கேட்கும்படி – கேட்டுத் திரும்பிப் பார்க்கும்படி கேட்பான். இதற்குக் கூசிக்கொண்டே இப்போதெல்லாம் நிறையப்பேர் அவனிடம் செருப்பைக் கொடுப்பதில்லை. அவனும் அதைப் பற்றிக் கவலையே படாத மாதிரி, எப்போதும் ஒரு நூல் கண்டில் மெழுகைத் தேய்த்துக் கொண்டு இருப்பான். இருக்கக் கூடாதா, செருப்புத் தைப்பவனுக்கு ஈகோ ?

ராஜி செருப்பை அவனிடம் உதறினாள். செருப்பில்லாத ஒரு காலை எங்கே வைத்துக் கொள்வது என்று ஒரு கணம் தடுமாற்றமாய் இருந்தது. அதை நன்றாய்த் தரையில் ஊன்றிக் கொள்ளவும் கௌரவம் இடம் தரவில்லை. இதைவிட அழுக்கான, சொதசொதவென்று சகதியான, கொல்லைத் தாழ்வாரத்தில் ஒரு நாளைக்கு நூறு தரம், செருப்பில்லாமல் குறுக்கும்  நெடுக்கும் போய் வந்திருக்கிறாள். ஆனால் இவன் முன்னால்  செருப்பு  ஒரு Status Symbol.  இவனைக்  காட்டிலும், தான் மேலான வர்க்கத்தைச்  சேர்ந்த  பெண் …

அவன் பாதி தைத்துக் கொண்டிருக்கும்போதே இவள் செல்ல வேண்டிய பஸ் வந்தது.  இவளைப் பார்த்துவிட்டு, நிற்காமலேயே தயங்கி பின் வேகமாய் விலகிப் போனது. இந்த மாதிரி ஒற்றை டிக்கெட்டுகளை அவர்கள் லட்சியம் செய்வதில்லை. இப்போதெல்லாம்  ஒரு  கூட்டம்  வேண்டியிருக்கிறது  எதையும்  சாதித்துக் கொள்ள.

இவள் உள்ளே  நுழையும்போது, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு, வனஜா போர்டில்  முணுமுணுத்துக்  கொண்டிருந்தாள்.

“ என்ன மேடம்,  லேட், நீ எப்ப வந்து ரிலீவ்  பண்ணப்போறனு காத்திண்டிருக்கேன்.  இந்த  நைட் ட்யூட்டி என்னிக்கு முடியப் போறதுனு இருக்கு. என்னால்  முடியலைம்மா …

ராஜிக்கு லேசான எரிச்சல் முண்டது. எப்பப் பார்த்தாலும் இவகிட்ட இது ஒரு புலம்பல். என்னமோ, இவ மட்டும் உயிரைக் கொடுத்து வேலை செய்ற மாதிரியும், மற்றவர்கள் எல்லாம் சும்மா வந்து போய்க் கொண்டிருக்கிற மாதிரியும், தன் முக்கியத்துவத்தைக் தனக்குத்தானே, தனக்காகவும், பிறர்க்காகவும் ஸ்தாபித்துக் கொள்ளும் தவிப்பு.

ஹெட்செட்டை எடுத்துக் கொண்டு வந்தவாறே “முதல் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன்டி… என்று  ராஜி  ஆம்பித்தாள்.  இவள் பதிலை யார் கேட்டா என்கிற மாதிரி போய்க் கொண்டிருந்த ‘கால் முடிந்ததும் ‘கார்டைஉருவிப் போட்டுவிட்டு, ஹெட்செட்டைக்  கழற்றிக்  கொண்டு  எழுந்தாள்.  டிக்கெட்டுகளை  ஒரு தரம் சரிபார்த்துக் கொடுத்துவிட்டு நகர்ந்தாள். அவள் எழுந்திருக்கக் காத்திருந்து, ராஜி அந்த உயரச்  சுழல்  நாற்காலியில்  உட்கார்ந்தவாறு  ஒரு  அரை  வட்டம்  சுழன்றாள். போர்டில்  கண்  கண்ணாய்  விளக்குகள்  சிமிட்டிக் கொண்டிருந்தன.

நைவேத்தியம்  மாதிரி,  தினம்  முதல் ‘ கால்  அவனுக்குத்தான்.

இப்போது  அவன்  என்ன  செய்து  கொண்டிருப்பான்? இந்த விடிகாலைப் பொழுதில் அவன் ஆபிஸில் இருக்க மாட்டான். ஒருவேளை, புரூஃப்கள் தயாராகத் தாமதமாகியிருந்தால்,  இரவு  வந்து  உட்கார்ந்து  கொண்டிருக்கலாம்.

‘ கார்டை  எடுத்துச்  சொருகி  Ring Key களை  அழுத்தினாள்.  ஸ்பீக்  கீக்களை ஓபன் செய்துகொண்டு, அந்த பெரிய செய்திப் பத்திரிகையின் எண்களைச் சுழற்றினாள். நெடுநேரம்  மணி அடித்துக்  கொண்டு  இருந்த  பின்னர், எதிர் முனையில் குரல் கேட்டது.

அவன் தான்.

எப்படியும் ஏதோ என்று  மீந்து விடுகிறது.  இரண்டு  மூன்று  சட்டைகள் ;  அல்லது கனத்த ஒரு புத்தகம்; இல்லையென்றால் ஷுக்கள். மீண்டும் ஒரு தரம் பெட்டியில் இருந்ததை எல்லாம் எடுத்து வெளியில் வைத்தான் ரகுநாதன். வரும்போது ராஜி எப்படியோ எல்லாவற்றையும் அடைத்து வைத்திருந்தாள். எல்லாவற்றையும் அதனதன் இடத்தில்  வைப்பது  அவளுக்கு  எப்போதும்  முடிந்திருக்கிறது.

இந்த கோட் ஒன்று இடைஞ்சல், மடித்தால் பாதிப் பெட்டிக்கு வந்து விடுகிறது. எடுத்து  அணிந்துகோண்டே  போகலாம்  என்றால்  அதற்கேற்ற  பாண்ட்  கிடையாது.

கோட்டே அண்ணாவினுடையது.  அவன்  ஜானவாசத்திற்காக  அவன் மாமனாரிடம்  பணம்  வாங்கித்  தைத்துக் கொண்டது.  அந்த  கல்யாணத்திற்கப்புறம்  அவன் இந்த கோட்டைப் போட்டுக் கொண்டு இவன் பார்த்ததேயில்லை. அவனுடைய கல்யாணத்தைப் போலவே இந்த கோட்டையும் பாழடித்துக் கொண்டிருக்கிறான். கல்யாணம்  ஆகி  மன்னி  வீட்டிற்கு  வந்த  புதிதில்,  போட்டோ  எடுத்துக்  கொள்ள என்று  ஒருதரம் எடுத்துக் கொண்டு போனான். அப்போது கையில் எடுத்துக் கொண்டு போய் ஸ்டுடியோவில் மாட்டிக் கொண்டதுதான். கூடத்தில் அண்ணாந்து பார்க்கிற  உயரத்தில் அந்தப்படம் இப்போதும் மாட்டியிருக்கிறது. இப்போது அண்ணாவைப்  பார்க்கிறவர்கள், படத்தில் இருக்கிறவன் அவன்தான் என்று ஒப்புக்கொள்ள  முடியாத  முகங்களாய்த்தான் மாட்டியிருக்கிறது ;  இவன்கூட  கொழுகொழுவென்ற குழந்தை முகமும், இடுப்பில் அரை நாணுமாய் கை தட்டிச் சிரிக்கிறாற்போல் ஒரு படம் மாட்டியிருக்கிறது. அது  இவன்தான் என்று அம்மா சொல்லித்தான்  இவனுக்கே தெரியும். நம்முடைய நிஜமான, பழைய முகங்கள், அம்மாவின்  நினைவில்  மாத்திரம்  அப்படியே  தங்கி  விடுகின்றன.

முழங்காலைப் பெட்டியின் மூடிமேல் அழுத்திக்கொண்டு க்ளிப்பை போட்டான். பெட்டியின் மேல்புறம் சமதளமாய் இல்லாமல் உப்பிக்கொண்டு நின்றது. அப்படியும் பாட்டியின் அமுல் டப்பா தனியாய் நின்றது.  ‘அம்மாட்ட கொடுத்துடு என்று கூழ்வடாமோ வேறெதுவோ  தயாரித்து நிரப்பப்பட்ட அமுல் டப்பா. இதை ஒரு துணிப்பையில்  திணித்துக்  கொண்டு  போய்விடலாம். பொருத்தமில்லாத ஒரு கோட்டைக்  கையில்  தூக்கிக்  கொண்டு திரிவதைக் காட்டிலும் இது ஒன்றும் கேவலமாகி விடாது. பார்க்கப் போனால் இதுதான்  தன்  வர்க்கத்தின்  இயல்பான  சுமை :  சோற்று மூட்டை.

உண்மையில் நேற்று இன்டர்வியூக்குத் தன் பரிட்சை கிரேடுகளை தூக்கிக்கொண்டு போனதைக் காட்டிலும் எதுவும் அவமானமில்லை. இவனுடைய பர்ஸ்ட் க்ளாஸ் யோக்கியதையை அவர்கள் திறந்துகூடப் பார்க்கவில்லை. இந்த இரவல் கோட்டையும், பாண்டையும், காலை அழுத்திக் கொண்டு நிற்கும் ஷுவையும்கூடப் பார்க்கவில்லை.

அவர்கள் தேடிக் கொண்டிருப்பதெல்லாம் அவர்களுடைய சரக்குகளுக்குச் சாயம் பூசி, முகம் கட்டி விற்றுத் தரும் எந்திரங்கள். லட்சங்களில், ஆயிரங்களில் விதிக்கப்படும் குறியளவை எகிறியடித்துக் கொண்டு விற்றுவரும் எந்திரங்கள், பேசாமல் பாதிரியார் சொன்ன மாதிரி எம்.எஸ்ஸிக்கு விண்ணப்பித்திருக்கலாம். ஆனால் அதையும் படித்துவிட்டு என்ன செய்வது?  இந்த மாதிரி ஏதாவது ஒரு இன்டர்வியூக்குப் பொருத்தமில்லாத கோட்டும் பாண்டும் போட்டுக்கொண்டு போகலாம். அதற்கு மேலும் கொஞ்சம் படித்துவிட்டு ஃபெலோஷிப்களின் தயவில் நியூஸ் பேப்பர்களில் நைட்ரஜன் இருக்கிறது. உடம்புக்கு நல்லது என்று அழுத்தந்திருத்தமாக ஒரு தியரியை நிறுவி விடலாம். அதற்கப்புறம் இந்த சங்கிலி நியூஸ் பேப்பர்கள், தங்கள் சப்-எடிட்டர்களுக்குப் பக்கத்திலேயே இந்த டாக்டரேட்டுகளுக்கும் மேஜை போட்டுத் தரலாம். “எங்கள் நியூஸ் பேப்பர்களில் ஆராக்கியம் இருக்கிறதுஎன்று விளம்பரம் செய்து கொள்ளலாம் …

… விளம்பரம், அதுதான் இங்கு எல்லோருக்கும் சோறு போடுகிறது. இந்த தேசத்தில் தங்கள் இமேஜ்களை விற்றே பணம் எண்ணிவிட முடிகிறது. செய்திப் பத்திரிகைகள், டெலிவிஷன் செட்டுகள், சோப்பு கம்பெனிகள், தொழிற் சங்கங்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எல்லோரும், எல்லோருக்கும், நிறைய பேருக்குத் திருப்தியளிக்கக்கூடிய இமேஜாக இருந்தால், நிறையப்பணம்.

“ போய்ட்டு வரட்டுமா, பாட்டி…

தீர்க்காய்சா இருப்பா. விசாலம் குழந்தைகள், அப்பா எல்லோரையும் கேட்டேன்னு சொல்லு. லீவுக்கு குழந்தைகளை அனுப்பச் சொல்லு. என்னமோப்பா வந்துண்டு போயிண்டிருந்தாதானே… மனுஷாயெல்லாம் ரயிலா… பஸ்சா…

ரயில் தான்.

என்னமோ இன்னும் ராஜப்பாவைக் காணோம். எப்பவும் சாயங்காலம் சுருக்க வந்துருவான். அவன் வந்தா ரயிலடி வரை வந்து ஏத்தி விடுவான். சித்த இருந்து பாரேன்.

“ வேண்டாம் பாட்டி. நாழியாயிடுத்து நானே பார்த்துக்கிறேன்.

ஆனால் ராஜப்பா வந்திருந்தால் உதவியாய்த்தான் இருந்திருக்கும். ரயில் மூன்றாவது பிளாப்பாரத்திலோ என்னமோ நின்று கொண்டிருந்தது.

மேலே ப்ளான் கட்டை விரித்துப் போட்டான். பெட்டியையும் மேலே வைக்க முடியவில்லை. வைத்தால் படுத்துக் கொள்ள நீளம் போதாது. பாட்டியின் அமுல் டப்பாவைத் தான் வைத்துக் கொள்ள வேண்டும். செருப்பை மேலே தூக்கிப் போட்டு ஹெர்மன் ஹெஸ்சேயைப் பிரித்தான்.

எதிர் வரிசையில் மீசையில்லாத ஒரு மனிதனும் இரண்டு தாவணி போட்ட பெண்களும் ஒரு முழுப்பாவாடைப் பெண்ணும், அவர்களின் அம்மாக்காரியும் உட்கார்ந்திருந்தார்கள். அது அவன் குடும்பமாய்த்தான் இருக்க வேண்டும். இரண்டு பெண்களில் சின்னதாய் தெரிந்த பெண் இப்போதுதான் தாவணிபோட ஆரம்பித்து இருக்க வேண்டும். விலாவில் இடைவெளி தெரியாமல் அத்தனை நாள் பாவாடைக்குப் போட்டிருந்திருக்கக்கூடிய சட்டையையே ப்ளவ்சாக அணிந்திருந்தது. அந்தப் பெண்கள் எல்லாரிலும் களையான முகம் அவளுக்கு. அந்த மீசையில்லாத கணவன் – அப்பா. ரகமாய் சாமான்களைக் காலடியிலும் மடியிலும் பரத்தியிருந்தான். முகத்தில் ஒரு நாற்பது வயது தெரிந்தது.

இப்படி ஒரு உயரமான இடத்திலிருந்து அவர்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதில் ஒரு வக்கிரமான சந்தோஷம் இருந்தது.

உயரமான பால்கனியிலிருந்து  நாட்டு மக்களுக்கு  உரையாற்றுகிற பதினான்காம் லூயி அல்லது ஐந்தாம் ஜார்ஜ்.

“ என் அன்பார்ந்த குடிமக்களே ! உங்களின் நலன் கருதி இந்த தேசத்தின் பிரயாணி ரயில்களில், இன்று முதல் தட்டுமுட்டுச் சாமான்கள் ஏற்றப்படலாகாது என்று இந்த அரசாங்கம் கருதுகிறது. குடும்பத்திற்கு இரண்டு பெட்டிகள் மாத்திரமே அனுமதிக்கப்படும். பெட்டிகளைச் சுலபமாக மூடுவதற்கு ஏற்ப, இன்டர்வியூக்களுக்கு யாரும் கோட்டுகள் அணிந்து வருவதை இந்த அரசு தடை செய்கிறது. பெண்களுக்குத் தாவணி அணிவிக்கும் பருவங்களில் சில காலத்திற்குப் பழைய சட்டைகளையே அணிவிப்பது மறுக்கப்படுகிறது. தாவணி அணிவிப்பதற்கு அறுபது முழு நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்திற்கு மனுச் செய்து கொண்டால் ஒரு வகுப்புக்கு பதினேழு ரூபாய் முப்பத்தேழு காசுகள் அரசாங்க கஜானாவிலிருந்து…

டொட் !

ரயில் குலுங்கி பாட்டியின் அமுல் டப்பா – தன்வர்க்கத்தின் குறியீடான சோற்று மூட்டை தலையில் இடித்தது. அரை மயக்கமான தூக்கம் சிதறியது.

மீசையில்லாக் கணவன் எழுந்து விளக்கை அணைத்துவிடலாமா என்று கேட்டுவிட்டு விசையை அணைத்தான். இப்போது லேசான நீலஒளி மட்டும் பரவியிருந்தது எங்கும்.

வாசல் நிலைக்கு நேரே வந்து, பலகையை வைத்துக் கொண்டு, ஈஸ்வரனை அழைத்தபடி சரிந்தாள் அம்மா. பாவம், அவளுக்கு இன்னிக்கு ஏகப்பட்ட காரியம். விருந்தாளிகள் யாரேனும் எதிர்பாராமல் தலையைக் காட்டி இன்னொரு தரம் குக்கர் வைக்கிறது என்றாலே அவளுக்கு மலைப்பாய் இருக்கும். இன்னிக்கு பாயசம், வடை, கொழுக்கட்டைன்னு, உபரியாய் வரலெஷ்மி நோன்புக்கான வேலைகள் வேறு. இத்தனைக்கும் சரோ அரைத்து கரைத்துக் கொடுத்துவிட்டாள்.

“…ராஜி… கொஞ்சம் பாத்திரம் எல்லாம் ஒழிச்சுப் போட்டுடுடியம்மா… மூணு மணிக்கெல்லாம் செல்லம்மா வந்துடறேன்னு சொல்லியிருக்கா…

கொல்லைப்புறத்துக்  குப்பைத்  தொட்டியில்  இலைகளைப் போட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ராஜி அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

“ சரோ இந்தப் பாத்திரமெல்லாம் வந்து கொஞ்சம் ஒழிச்சுப் போட்டுப் போயேன்…

“ ஏண்டி உங்கிட்ட சொன்னா, உனக்கு ஒரு ஆளா ?

இல்லேம்மா… எனக்கு வெளியிலே போணும். கூட வேலை பார்த்த அகிலா-வாத்துக்கு வரேன்னு சொல்லியிருக்கிறேன்…

அவாள்லாம் வேலை பார்க்கிறவா. வெளியே ஆயிரம் ஜோலி வைச்சுண்டிருப்பா. நான்தான் ஒருத்தி கெடக்கேனே, அடுக்குள்ள கிடந்து உழல்றதுக்குனுகையிலிருந்த சினிமாப் பத்திரிகையை உதறிவிட்டு எழுந்தாள் சரோஜா.

சரோஜா பி.எஸ்ஸி முடித்து இரண்டு வருடமாகிறது. ஏதோ சர்வே என்று ஒரு ஆபிஸில், ஆறுமாதங்கள், இந்திய ஜனத்தொகையை டைப்ரைட்டரில் தட்டினாள். அவர்கள் ஊரை விட்டுக்  கிளம்பும்போது இவளை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அந்த ஆறுமாதம் அது ஒரு போதையாக இருந்தது. அண்ணாவிற்கு அப்புறம் ராஜிதான் முதலில் சம்பாதிக்க ஆரம்பித்தாள்.  S.S.L.C. யோடு போதும் என்று உதறிவிட்டு இந்த டெலிபோன் ஆபரேட்டர் வேலையில் சேர்ந்துவிட்டாள். அவளுக்கு அப்புறம். அவளுடைய சம்பாத்தியத்தில் இரண்டு வருஷம் படித்துவிட்டு, அதற்கப்புறமும் இரண்டு வருஷம் அந்தச் சம்பாத்தியத்தில் சாப்பிட்டுக் கொண்டும் இருந்ததில் அவளின் அக்கா முகம் விரிசல்விடத் தொடங்கியது. அவளிக் அக்கா முகம் விரிசல்விடத் தொடங்கியது. அதையெல்லாம் மீட்டுக்கொண்டு வந்தது இந்த சர்வே வேலை. ஆனால், தான் வேலைக்குப் போகிற பெருமை. சம்பாதித்துக் கொண்டு வருகிற பெருமை எல்லாம் விழுந்து நொறுங்கியது ஒரு நாள். பழைய புடைவை சொதசொதவென்று ஈரமாய் நனைந்துவிடத் தண்ணி எடுப்பதும், தோசை மாவை வழித்துப் போடுவதுமாய் முடிந்து போனது.

“ நான் என்னமோ சும்மா திரிஞ்சுண்டு இருக்கிற மாதிரி பேசறையே. நான்தானே எச்சலிட்டேன்…

ஏண்டி அடிச்சுக்கிறேள். என்னமோ இன்னிக்கு ஒரு நாள் சித்த இருந்து செஞ்சிட்டுப் போயிடுங்கடி. திடமா இருந்து செய்யறதுக்கு முடியாம உங்களையெல்லாம் கெஞ்ச வேண்டியிருக்கு. என்னமோ இப்படியே இழுத்துக்காம, பறிச்சுக்காம, மஞ்சளும் குங்குமமாய்ப் போய்ச் சேர்ந்துடணும் வரலஷ்மித் தாயே…

மாடியிலிருந்து திடுதிடுவென்று இறங்கி வந்தான் அண்ணா. “ என்ன இரைச்சல் இங்கே… எப்பப் பார்த்தாலும் நல்ல நாளுமா அதுவுமா என்ன அச்சானியமா புலம்பிண்டு இருக்கே நீ. லீவ் நாள்னாகூட ஒரு நிமிஷம் மனுஷனை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களே நீங்க…

திடுமென்று நிசப்தம் விழுந்தது அங்கே. அது, அவன்மீதுள்ள மரியாதையா? இரக்கமா, “நிம்மதியா இருக்கணுமா, உன் பெண்டாட்டிக்கிட்ட போய் இரேன்என்று முணுமுணுத்துக் கொண்டே சரோஜா சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

ராஜி அலமாரிக் கதவைத் திறந்து கொண்டு நின்றாள்.

அவளிடமிருந்து ஒரே பிங்க், கொடியில் கலைந்து கிடந்தது. பிங்க் அவனுக்கு ரொம்பப் பிடித்த நிறம், ஏதோ ஒரு விளம்பர போர்டைப் பார்த்துவிட்டுச் சொன்னபோது நழுவி விழுந்த தகவல்… “கட்டிண்டு போனவ மடிச்சு வைக்கணுமேன்னு அறிவே கிடையாது. இல்ல எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போனா என்ன. இரவல் வாங்கறதிலே என்ன கௌரவம்…

இப்போதும்கூட அந்த பிங்க்கை நீவிக் கட்டிக்கொண்டு போய் விடலாம். அது ரொம்பக் கசங்காது. ஒரு தீபாவளியின்போது சொல்லி வச்சு வாங்கின ஃபாரின் நைலக்ஸ். அப்போ சொல்லி வைச்சும் பச்சை கிடைக்கவில்லை. பச்சைதான் அவள் நிறம்.

இல்லை. இன்றைக்கு அந்த பிங்கைக் கட்டிக் கொண்டு போகப் போவதில்லை. அதுதான் முகமற்று அவனில் கரைந்து போய் விட்டதை நினைப்பூட்டும் நிறம். பூச்சுகள் நீர்த்துப்போய் நிஜம் தெரியும் நிறம். பூச்சுக்கள், அது தான்  வேண்டும் இப்போது, இப்போதைக்கேனும்.

கண்ணுக்குக் கீழே பவுடரை சரி செய்து கொண்டு கண்ணாடியை ஆணியில் மாட்டினாள். தனக்கே சுயக்கிறக்கம் கொடுக்கும், தன்னை வசீகரமாய்க் காண்பிக்கும் பூச்சுக்கள். வாசல் கதவின் கொக்கியைப் போட்டுத் திரும்பும்போது, எதிர்த்த ஜன்னல் ஸ்ரீதர், ஸ்லாக்கை மாட்டிக்கொள்ள உள்ளே திரும்புவது தெரிந்தது.

கதவு திறந்துதான் இருந்தது. திறந்து என்றால் முழுதும், விள்ள விரிய அல்ல. ராஜி கையை வைத்தும் நகர்ந்து கொண்டது.

ராஜி உள்ளே வந்து, அவன் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கக்கூடும் என்று நினைத்து நின்றாள். அவன் முதுகை வளைத்துக்கொண்டு அந்தக் கான்வாஸ் முன் குனிந்திருந்தான். அதில் வண்ணங்கள் குழம்பித் தெரிந்தன. ராஜி மீண்டும் நிலைக்கு வந்து விரல் முட்டியால் கதவைத் தட்டினாள்.

“யெஸ் ப்ளீஸ்…என்றான் இப்போதும் திரும்பாமலே.

அந்த அறை நீள வாக்கில் அமைந்திருந்தது. ஒரு மூலையில் படுக்கையும், பக்கத்தில் சின்ன மேஜை போட்டு ஓர் எலக்ட்ரிக் கெட்டிலும், படுக்கையின் மீது பத்திரிகைகளும் புத்தகங்களும் இறைந்து கிடந்தன. அந்தக் கெட்டிலுக்கு வயர்கள், கூடத்தின் நடுவிலிருந்த ஒரு பாயிண்டிலிருந்து அப்படியே சரிவாய் இறங்கியிருந்தது. அப்புறம் கதவு. கதவருகில் ஒரு கப்போர்ட். ஜன்னலில் இருந்து அந்த அறையை இரண்டாகப் பிரிப்பது மாதிரி ஒரு கொடி. அதற்கு அந்தப்புறம் ஸ்டாண்டின் மீது கேன்வாஸ்இ அவன்.

ராஜி கேன்வாஸ் முன் வந்து நின்றாள். புருவத்தை லேசாய் உயர்த்தி, அந்த உருவம் தான் எதிர்பாராததாக இருக்கவே, வியப்புற்று முழுதும் தலையை உயர்த்தினான்.

“ ஓ ! நீங்களா. நான் எதிர்பார்க்கவேயில்லை …

ராஜி ஒரு கணம் தடுமாறினாள். கண்கள் எதையாவது காண்பித்துக் கொடுத்திருக்குமோ ? பூச்சுக்களையும் தாண்டி நிறம் தெரிகிறதா ?

“ ரியலி ?

அவன் கண்களுக்குள் இமைக்காமல் பார்த்தாள். அவன் கூச்சமுற்றுப் பார்வையைத் தவிர்த்து வண்ணங்களைக் குழைக்க ஆரம்பித்தான். பின் மெதுவாய்த் தலை நிமிர்ந்து சிரித்தான். மனத்தை அடித்துக் கொண்டு போகிற சிரிப்பு.

“ நான் இன்னிக்கு இதை முடிச்சுடனும்.  Can you please wait for some time? ”

“ நான் நீங்க வரைவதைப் பார்த்துக் கொண்டிருக்கேனே ;

ஓ !    மீண்டும் இதழ்கள் விரிந்து சுருங்கின. “… அந்த மாதிரி யாராவது பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு வரைய முடிவதில்லை.சிரித்துக் கொண்டே படுக்கை மீது இறைந்து கிடந்த பத்திரிகைகளை எடுத்துக் கீழே போட்டான்.

“ உட்காருங்க ப்ளீஸ்.  Sorry for the junk ”, தோளைக் குலுக்கி கொண்டு, But I can’t help it …” என்றான்.

இந்த நிதானம் – இல்லை இது அலட்சியமா ? – அவளுக்கு எரிச்சலூட்டியது. இந்த எரிச்சல் எதன் மீது? அவனுக்காகத் தவித்துக் கொண்டிருக்கும் தன் நிஜ முகம் வெளிப்பட்டுப்  போவதன் மீதா இந்த எரிச்சல் ? ராஜி இயல்பாக இருக்க முயன்றாள். ‘போ, போயேன், உனக்கு உன் ஓவியம் தான் பெரிது என்று காண்பித்துக் கொண்டால்… நான் காலடியில் விழுவேன் என்று நினைப்பா… நான் நிதானமாய்த் தானிருக்கிறேன். ‘ Look, I’m sober.’

அவன்  இன்னும் canvas – ஐ விட்டு நகரவில்லை. பின்னணியை அழுந்தச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தான். ராஜி சுற்றிலும் கிடந்த பத்திரிகைகளைப் புரட்ட ஆரம்பித்தாள். ஓவியம் பற்றி, சினிமா பற்றி, இளைஞர்கள் பற்றிய பத்திரிகைகள். ராஜி சுலபமாய் பத்திரிகைகளை உதறினாள். எழுந்துபோய் அவன் முதுகைக் காட்டிக் கொண்டிருந்த கெட்டிலைத் திறந்தாள். முன்னமேயே ஒரு தரம் காய்ச்சப்பட்டிருந்த பால் இப்போது ஆடை தட்டிக் குளிர்ந்து கிடந்தது. ஒரு விரலால் அதை ஓதுக்கிவிட்டு ஸ்விட்சைப் போட்டாள். கொஞ்ச நேரத்தில் கெட்டில் முனகியது.

குப்பிக்குள் பிரஷ்ஷைப் போட்டுவிட்டு இவன் பின் கட்டுக்குப் போனான். திரும்பியபோது முகம் நனைந்திருந்தது. நாசியில் ஒரு நீர் முத்துத் திரண்டு உடைந்தது.

“ சாரி. உங்களை ரொம்ப நேரம்…

காபி

ஓ ! தாங்ஸ்…மீண்டும் மனத்தை அடித்துக் கொண்டு போகிற சிரிப்பு. “ நாம் வெளியில் ஏதாவது ரெஸ்டாரண்டுக்குப் போகலாம் என்று நினைத்திருந்தேன்…

நீங்க என்னை இப்படி ஒரு கெஸ்ட் மாதிரி நடத்த வேண்டாம். ப்ளீஸ்…

ராஜி உதட்டைக் கடித்துக் கொண்டாள். இப்படியொரு நெருக்கத்தைக் கேட்டுப் பெற்றிருக்க வேண்டாம். மீண்டும் ஒரு இடறல். “நோ ஃபார்மாலிட்டிஸ்…

அது அப்படியில்லை… உண்மையில் நான் மிகவும் பசியாயிருக்கிறேன். இப்போது …

ராஜி சிரிக்க முயன்றாள்.

அவன் உடை மாற்றிக் கொண்டு வந்தபோது ராஜி கேன்வாஸ் அருகே நின்றிருந்தாள்.

“ என்னது இது ?

இப்போது இதை வேறுவிதமாய்க் கேட்டிருக்கலாம் என்று தோன்றியது. நேரடியான இந்தக் கேள்வி, நவீன ஓவியங்கள் பற்றிய தனது அறியாமையைத் தொனித்திருக்கும். அவனுள் இருக்கும் தன் பிம்பத்தில் நேரும் ஒரு சறு கீறல்…

மனித உருவம் போன்று ஒன்று, பீடம் போன்ற ஒன்றில் மார்பை நிமிர்த்திக் கொண்டு ஆரோகணித்து இருந்தது. அப்படி உட்கார்ந்திருப்பதில் அழுத்தம் தெரிந்தது. கான்வாஸின் விளிம்புகள் வரை தோளிலிருந்து நேர்கோடாய் நீண்ட வலுவான் புஜங்கள். சுற்றிலும் என்னென்னவோ சிதறியிருந்தது. முகம் இருக்க வேண்டும் என்று தோன்றிய இடம் காலியாய் இருந்தது.

“ முகங்கள்…

என்னது !  இந்த ஓவியத்தில் முகமே இருக்கிற மாதிரி தெரியலை…

ஆமாம், அதுதான். இன்றைய மனிதனுக்கென்று ஒரு முகம் கிடையாது என்று சொல்கிறது இந்த ஓவியம்…

அதெப்படிச் சொல்கிறீர்கள்?

ஆமாம், இந்தப் படித்தில் அது இருக்கிற இடத்தில் ஒரு டெலிவிஷன், ஒரு ப்ரொஜக்டர், நியூஸ் பேப்பர், மைக்ரோஃபோன், இன்னும் என்னவெல்லாமோ இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன். மாஸ்மீடியாக்கள் மனிதனுடைய சுயத்தைச் சிதைத்து விட்டன. முகமற்றுப் போனான் மனிதன்…

இல்லை இது பிரமை. இந்த தேசத்தின் சுதந்திரத்திற்கான போராட்டம் முதலில் நியூஸ் பேப்பர் மூலம்தான் எழுதப்பட்டது. சுதந்திரம் என்பது ஒரு அடிப்படையான உணர்வு…

“Perhaps, இருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் வெகுஜனம் எதற்குப் போராடுகிறோம் என்பதை அறியாதிருந்தார்கள். ஒரு காலத்தில் தேசத்தைப் பிடித்துக் கொண்ட ஜுரம் அது. வெள்ளைகளின் நசுக்குதல் கிராமங்களில் உணரப்பட்டிருக்க வில்லை.

“ இல்லை. இல்லை. நம் கிராமங்களின் எளிய மனிதர்கள் நசுக்கப்பட்டிருந்தார்கள்.

ஆமாம், காலங்காலமாகப் பெருந்தனக்காரர்கள், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள், ஜாதி ஹிந்துக்கள், இப்படி யாராவது ஒருவரால், அநேகமாய் அவர்கள் இதற்கும் பழக்கப்பட்டுப் போயிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சுரண்ட, அந்தக் கோபம் இதில் திருப்பப்பட்டுத் தணிக்கப்பட்டு விட்டது…

அப்போது அவர்களுக்கு ஒரு முகம் இருந்தது, இந்தியன்.

அது முகம் இல்லை, பிம்பம். முதலில் பத்திரிகைகள் மூலம், தாங்களே மயங்கிப் போவது போல் ஒரு முகம் இவர்களுக்குக் கிடைத்தது. அதற்குப்பின், இவர்களுக்குத் தேவையான, திருப்திப்படுத்தும் முகங்களைப் பத்திரிகைகள், மாஸ்மீடியாக்கள் தயாரிக்கத் துவங்கிவிட்டன.

இந்தியன் என்பது ஒரு உணர்வு என்பதைக் கூட மறுத்துவிட முடியுமா?

இதோ, இதுதான் மாஸ்மீடியாக்கள் தயாரிக்கிற முகம். எனக்குத் தெரிந்து பாட்னாவில் வெள்ளம் என்றால் கோவில்பட்டியில் இருக்கிற இந்தியன் விதிர்த்துப் போய் விடுவதில்லை. இது வெறும் பிம்பம். தன் ஈகோவை ஊக்குவிக்க அணிந்து கொள்ளும் முகம்.

ராஜி சலிப்பாக உணரத் துவங்கினாள். ஒரு மாலைப் பொழுது இந்தியர்களின் முகங்களைப் பற்றி அலசுவதில் சூழ்ந்து போக வேண்டாம். இவன் மிகவும் நிமிர்ந்தவன். புடவையைப் பார்த்து ஒரு விவாதத்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இவன் ரத்தத்தில் ஹீமோகுளோபின்களாக நீந்தும் ஈகோ. எழுந்து கதவுக்கருகிலிருந்த கப்போர்ட் அருகில் போய் நின்றாள். மீண்டும் கான்வாஸை உறுத்துப் பார்த்தாள்.

“ இந்தப் படத்தின் உருவம் ஆணா, பெண்ணா என்று கூடப் புலப்படவில்லை…

ஆமாம். இப்போது மாஸ்மீடியாக்கள் இந்த பேதத்தைக் கூட முறியடித்துவிட்டன. இந்தியாவில் கூட உடைகளின் ‘ஒரு பால்வந்து விட்டது. ஆனால்…’‘

இதுகூட மாஸ்மீடியாக்கள் தயாரித்திருக்கிற அபிப்ராயம்தான் என்று தெரியுமா உங்களுக்கு…?’‘

ஆனால்…அவன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். “ பெண்களுடன் என் அனுபவம், அநேகமாய் இல்லை என்றே சொல்லலாம்…

ராஜி திரும்பிப் பார்த்தாள். ஆழம் பார்க்கிறானா? தூண்டில் புழுவா? வெள்ளைக் கொடியா? நிதானித்தாள். இதோ இருக்கிறது. இவனுக்குத் தெரியாத இடம், ஜெயிக்க.

“ஆனால்… இந்தியப் பெண்கள் விடுதலையடைய விரும்புவதில்லை என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். காலம் காலமாக ஆண்கள் அவர்களுக்கு உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தை அணிந்து கொள்வதே அவர்களுக்கு சந்தோஷமாயிருக்கிறது. ஹா ஹா, முட்டாள்களை ஜெயித்துவிட்ட சந்தோஷம்…

இவன் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு தோளைக் குலுக்கினான். ‘அப்படியா, தெரியாதேஎன்ற பாவனையில். தொங்கவிட்டிருந்த சட்டைகளில் பணத்தைத் தேடினான். இவள் இரண்டு காபித் தம்பளர்களையும் கழுவ எடுத்துக் கொண்டு போனாள்.

“ இதையெல்லாம் நீங்க ஏன் செய்யறீங்க?

அதான் சொன்னேனே, நோ ஃபார்மாலிட்டிஸ்…

ரெஸ்டாரெண்ட் மேஜையில் காத்திருந்தபோது சொன்னாள்.

“ நான் ஸ்வீட் ஆர்டர் செய்யவிருக்கிறேன்,  To celebrate…”

எதை ?

உங்களை ஜெயிக்க முடிந்ததே இன்னிக்கு.

என்னை? ஹா ஹா, முட்டாள்களை ஜெயிக்கிற சந்தோஷம்?

லேசாய் கேலி இழைந்த இந்தச் சிரிப்பைப் புரிந்து கொள்ள, அவன் கண்களுக்குள் பார்க்க விரும்பினாள். ஆனால் ரெஸ்ட்ரெண்டின் இருள் நிழலிட்டிருந்தது. பரிமாறுபவன் வந்தபோது அவன் சொன்னான்.

எனக்கு சப்பாத்தி மட்டும்.

“ இவ என்ன நினைச்சுண்டிருக்கானு தெரியணும் இப்ப. அண்ணாவின் கூச்சல் வாசல் வரை கேட்டது.  நடையில்  செருப்பை கழட்டிக் கொண்டிருந்த ரகுநாதன் முகத்தைச் சுளித்தான்.

வரவர  இவன் கூச்சல்  அதிகமாய்ப் போச்சு, இந்த வீட்டில் பலஹீனம். கைநழுவிப் போகும்  அதிகாரத்தின்  குரல்  கூச்சல்.

இந்த பலஹீனம்தான் மன்னியைத் திரும்ப அவள் வீட்டிற்குத் துரத்தியது. அவள் சம்பாத்தியம், மகனில்லாத அவள் அப்பாவின் கல்யாணக் கடனைக் கரைப்பதற்குப் போய்ச் சேராமல், இவர்கள் சட்டைப்பைக்கு வந்து சேர்ந்திருந்தால், அவளை இந்தக் கூட்டிற்குள் சேர்த்துக் கொண்டிருப்பார்கள்.

இவன் ஈகோ பழுது பார்க்கப்பட்டிருக்கும். சத்தம் குறைந்திருக்கும். ஆனால் அவள் பல்லைக் கடித்துக் கொண்டு பிறந்த வீட்டில் மௌனமாய் இருந்தாள்;  வேலையை கெட்டியாய் பிடித்துக் கொண்டு, இந்த மெட்ராஸிலேயே…  இந்த மௌனம், இந்தப் பிடிவாதம் எல்லாம் அண்ணாவின் முகத்தில் அறைந்திருக்க வேண்டும்.  Dame with males supremacy!

கூடத்தில் அம்மா தலைக்குப் பற்றுப் போட்டுக் கொண்டிருந்தாள்.  இது  இவளுக்கு ஒரு பாவனையாகப் போய்விட்டது. சண்டை வலுக்கிற மாதிரி இருந்தால் இதில் இரக்கத்தை சம்பாதித்துக்கொள்ள சுலபமாக முடியும். சரோ அடுக்குள் நிலையில் சாய்ந்துகொண்டு ஒரு வாரப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தாள். சண்டையை வேடிக்கை பார்க்கப் போகிற ஸ்வாரஸ்யத்தைக் காட்டிக் கொடுத்துவிடாத போர்வையாய் பத்திரிகை. ஜன்னல் விளிம்பில் அமர்ந்து அன்றைக்கு வந்திருந்த கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தாள் ராஜி.

“ என்ன பண்ணிட்டான்னு இப்படிக் கத்ற இப்போ?

பாத்திரத்தில் போன பத்தைக் கரண்டியில் வழித்து எடுத்துக்கொண்டே அம்மாதான் பேசினாள்.

“ என்ன பண்ணிட்டாளா ? புஸ்தகம்  புஸ்தகம்னு நன்னா ஊச் சத்திண்டு இருக்கா… அன்னிக்கு பஸ்ல வர்றச்சே பார்த்தேன், மவுண்ட் ரோட்ல, அலைஞ்சுண்டு இருந்தா. இங்கே லஸ்ல கிடைக்காத புஸ்தகமா?

ரகு காலை அலம்பிக்கொண்டு லுங்கியைச் சரி செய்து கொண்டு வந்தான். ஈரப் பூக்களாய்  நெடுக பாதம் பதிந்திருந்தது.

“ அவ புஸ்தகம் படிச்சா, அது உன்னை என்ன பண்றது?

ரகுவின்  குரலில் தொனித்த கோபத்தைக் கண்டு ராஜி மெதுவாகச் சிரித்தாள். இது பராட்டா,  இல்லை நையாண்டியா?

“ வாடாப்பா, ஊரையெல்லாம் அளந்து கொட்டியாச்சா, ஆத்துக்கு வேலைன்னு ஒரு காரியம் கை அசக்கிடாதே. திங்ற சோத்துக்கு தண்டமில்லாம, இருக்கிறவாளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிண்டு வா…

அவன்தான் வேலையத்தவன். இருக்கிறவாளையெல்லாம் அனுப்பி வைக்கறதுக்கு நீ தான் என்ன பண்ணியிருக்க? சரோவுக்கு என்ன வயசுன்னு தெரியுமோ… இருபத்தியேழு…

ராஜியின் இந்தக் கேள்வி நச்சென்று மூஞ்சியில் அறைந்தது.

அண்ணா மட்டுமில்லை. யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அம்மா பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு ஏறிட்டுப் பார்த்தாள். சரோ பத்திரிகையிலிருந்து கண்ணை உயர்த்திச் சட்டென்று தாழ்த்தினாள்.

எல்லாப் போர்வைகளையும் உரித்து எறிந்துவிடுவது, எல்லாப் பூச்சுகளையும் கரைத்து விடுவது என்கிற மாதிரி ராஜி கையை மார்பில் கட்டிக் கொண்டு தலை நிமிர்ந்தாள். அருவருப்பூட்டும் முகங்கள் ; குரூரமான நிஜங்கள்.

“ உனக்கு வேணும்னா கூடவே ஊரெல்லாம் சுத்திண்டு திரியறையே அவனை இழுத்துண்டுதான் போப்போறேன்… ஆனா உங்கிட்ட சொல்லிண்டுதான் போவேன். பயப்படாதே …

அம்மா திடுமென விசிக்க ஆரம்பித்தாள்.

“ பாத்தியாம்மா.. பொம்மனாட்டி பேசறதை… வேலைக்குப் போற திமிர் .

ரகுவிற்கு உரக்கச் சிரிக்க வேண்டும் என்று தோன்றியது. இதுதான் உன் இலக்கா? வேலைக்குப் போகும் பெண். விடுதலையடைந்த பெண். வேலையின் அரவணைப்பில் சரணடையாத மன்னி.

“ அவளை ஏன் சீண்டற. உனக்கு தைரியம் இருந்தா மன்னியை அழைச்சிண்டு வந்து வாழறதுதானே, ஏன் தியாகி வேஷம் ?

அண்ணாவின் கை மின்னலாய் கன்னத்தில் இறங்கியது.

ரகு வாசல் கதவைத் தாண்டி இறங்கும்போது, சாப்பிட்டுப் போயேண்டா என்ற சரோவின்  குரல் தேயலாய்த் தெருவில் விழுந்தது.

ராஜி  அந்த இசையை நிறுத்திவிட முடியுமா என்று பேரரிடம் கேட்டாள். காப்பி ஷாப் அநேகமாய் காலியாக இருந்தது. மேஜைக்கு ஒரு அடி உயரத்தில் தொங்கிய விளக்குகள் மஞ்சள் வட்டங்களை சிந்தியிருந்தன. வார்னிஷ் அடித்த மூங்கில் பிளாச்சுக்கள்  இந்த அரையிருளில் மெலிதான பயங்களாய் விறைத்திருந்தன.

“ Well.  இப்போ சொல்லுங்கள். மேஜைப் பரப்பில் நிழல்கள் மோதின. ராஜி இன்னமும் தயங்கினாள்.

தாண்டி விட வேண்டும் இந்தக் கணத்தை. அவன் வாயிலிருந்தே வரட்டும். அது வரும், வரும்,  வரவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து வந்தாயிற்று, விளிம்புக்கு தெம்பிருந்தால், ராஜி, தாண்டு. இல்லையெனில் குதி, போர்வையைக் கழற்றி, இன்னும் எத்தனை  நாள் கண்ணாமூச்சி, வரப்போவதில்லை, அது அவன் நெஞ்சிலிருந்து.

சொல்வாயோ  பாஸு,  நான் நேசிக்கிறேன் உன்னை என.

ம்ஹும்,  உடையவில்லை  பனிக்கட்டி.

“உன்னைப் புரியவே இல்லையா உங்களுக்கு?அவள் தலை உயர்த்தி இருளில் அவன்  முகத்தைத்  தேடினான், உதட்டைப் பிதுக்கினான்.

“உண்மையில்…அவன் வார்த்தைகளைத் தேடினான். “ராஜி, நீங்க என்ன பேசறீங்கன்னே தெரியலை…

பொய்,  தன்னை அடித்துக் காலில் விழ வைக்கும் பொய்.

அவள்  மூச்சின் வெம்மை, கன்னங்களில் படர்ந்தது. இவன் மெல்லத் திரும்பினான். ராஜி,  மெல்ல  அவன் தோளில் கை வைத்துக் கொண்டாள்.

“ நான் இன்னும் காலி விழுந்து கேட்கணுமா?

இவன் தோளிலிருந்த கைகளை விலக்கினான். அவன் கண்ணுக்குள் பார்த்தான், எல்லையற்ற  சோகம் விரிந்து கிடப்பதாய் தோன்றியது. மனத்தின் மூலையைக் கவிழ்த்துக் கசிய வைக்கும் சோகம். பிரளமாய்ப் பொங்கிப் பொங்கி வரும் கசிவில் அடித்துக்கொண்டு போய்விடப் பார்க்கும் சோகம்.

“ராஜி… ப்ளீஸ்… என்னைப் புரிந்து கொள்ள முயலுங்கள். என் காயங்களை உங்களுக்குத் தெரிய வேண்டாம், தெரிய வேண்டாம். எத்தனை ரணங்களுக்கும், தழும்புகளுக்கும், அப்புறமும் நம் முகத்தை நம்மால் வெறுக்க முடிவதில்லை.  Well. முகங்கள்  எப்படியானாலும், அதுவே நம்முடைய அடையாளங்கள் இல்லையா…

இமைகளை மூடிக்கொண்டான். உள்ளே விரிந்தது எல்லையற்ற ஒரு வானம். காற்றை  கைகளில்  அளைந்து,  அளைந்து மிதக்க ஒரு வானம். ரத்தத்தை மெழுகிப் பூசின சிவப்பில்.  அளைந்த  கைகளிலும் சொட்டும் சிவப்பு.

கண்களைத்  திறந்து  முறுவலித்தான்.

ராஜி  இன்னும்  காத்திருந்தாள் அந்த வார்த்தைக்கு.

“ கல்யாணங்கள் – அதுவும் நம் கல்யாணங்கள்…  சுய பொருளாதாரத் தெம்பில், புத்தியின் பலத்தில் நிற்கும் நம் தலைமுறைப் பெண்களுக்கு ஒரு ஆணின் உடம்பைத் தருவதற்கு வழி செய்வதைத் தவிர நம் கல்யாணங்களுக்கு அர்த்தங்கள் வேறு இருக்கறிதா? Frankly எனக்குப் பயமாக இருக்கிறது. ராஜி இப்போது என்னை நானே ஆராதித்துக் கொண்டிருப்பதன் சுயக்கிறக்கம், கேலியாய் சிதைந்து போகுமோ?… போகுமோ, என் மையம் சிதறி.

இவன் தோளை மெல்லக் குலுக்கிக் கொண்டான். நெகிழ்ந்த மனசெல்லாம் நிமிஷத்தில் மூளையாய்க் கெட்டிப்பட்டு, இயல்பான நிலைக்கு வந்துவிட்டதற்காக இந்தக் குலுக்கல்? அவனின் வழக்கமான முகம் மெனு கார்டின் ஸிந்தெடிக் வழவழப்பில் நிழலிட்டது. கண்களில் முறுவல் தங்கிய, மனதை அடித்துப் போடும் முகம்.

“ … Well.  நாம்  நண்பர்களாக இருக்க முயல்வோம். நல்ல நண்பர்களாக …

ராஜியின் கண்களில் ததும்பிய நீர் மினுங்கிற்று. மறுதலிப்பில் தலை அசைந்தது. விரல்களில் சுழன்ற ஆஷ்ட்ரே ஒரு கணம் தயங்கியது. ரெஸ்டாரண்டுக்குள் இன்னும் இரண்டு பேர்  கதவைத் தள்ளிக் கொண்டு நுழைந்தனர்.  பேரர் வந்து வணங்கினான்.

“… உங்க முன்னால என் ‘ தான ழிஞ்சு போயிடும்…

இம்பாஸிபிள். இதெல்லாம் நம் கனவுகள். ராஜி…  But dreams must give way to reality.  எனக்கு, உங்களுக்கு, நாம எல்லாருக்குமே, ஒரு நாய்க்குட்டி வேண்டியிருக்கிறது. கூப்பிட்ட குரலுக்குக் குழைந்துகொண்டு ஓடிவர, விருந்தாளிகள் முன்னல் பிஸ்கெட்டைத் தாவிப் பிடிக்க, அதாரிட்டி அவனவன் ஈகோவைப் பூரிக்க வைக்கும் அளவு அவனவனுக்கு. அதுக்குத்தான் ராஜி இந்தக் கோபம், குழைவு, தவிப்பு எல்லாம்…

ராஜி ஜக்கிலிருந்து தண்ணீரைத் தம்பளருக்குச் சாய்த்தாள். கண்ணாடியில் பூத்தன நீர்ப் பூக்கள்.

“ அதுல ஒண்ணும் தப்பு இல்ல. நாம் நாமாகவே இருப்பதில் நமக்கென்ன கூச்சம்? நம் முகங்கள் நமக்கு அழகானவை இல்லையா…?

திடுமென்று  ஸ்பீக்கரில் கிதாரின் நரம்பு அறுபட்டது. முரட்டு மேளங்களும், பிளிறும் குரல்களும், குரல்கள் ; குரல்கள் ; முகங்கள் அற்றுப்போன குரல்கள்.

எல்லோருக்காகவும்  எல்லாருமாய்  இடும்  ஓலம்.

மிஷின்கள் வரிசையாய் முகங்களை உமிழ்ந்து கொண்டிருந்தன. வந்திறங்கி யிருக்கும் அந்நிய முகங்களுடன் இறுக்கமாய் உட்கார்ந்திருக்கும் அரசாங்க முகங்கள். பொய்யாய்ச் சிரிக்கும், உதட்டைப் பிதுக்கிக் கொண்டு விம்மும், கண்ணைச் சிமிட்டி அழைக்கும், கனவு மிதக்கும், முகங்கள் விளம்பரத்திற்காகவும் செய்திக்காகவும், நியூஸ் பிரிண்டின் பரப்புக்களை நிரப்பியவாறு முகங்கள்.

இவன் மிஷினிலிருந்து ஒரு பக்கத்தைக் கிழித்துக் கொண்டு வந்து மேய்ந்தான். காலையில் வீடு வீடாய் போய் விழுந்து திடுக்கிட வைக்கப்போகும் அதிர்ச்சி ; ஆபீஸ் லஞ்ச் நேரங்களின் தீனி. பஸ் ஸ்டாப், லிப்ட், க்யூக்களில் நேசத்திற்கு வீசப்படும் தூண்டில் முள், தன் கைபட்டுப் போகும் இந்த சின்ன அரசு எழுத்துக்கள், இவன் மெல்ல சிரித்துக் கொண்டான்.

கிண்ணத்தில் சாம்பலைத் தட்டியவாறே கூப்பிட்ட போனை எடுத்தான். பெயரைச் சொன்னான். அவள்தான் ; இவன் குரலைக் கேட்டதும், க்ளுக் என்ற ஒற்றைச் சிரிப்புடன் பேச்சில்லாமல் போனைத் துண்டித்தாள்.

சிரிப்பு.  வலியக் கூப்பிட்டு முகத்தில் அறையும் சிரிப்பு.

நெருப்பு  விரலைச்  சுட்டது.

உனக்கோ  முகங்கள்  பல  நூறு.

எனக்கும்தான்.

என்னுடைய ஏதோ ஒரு முகத்தை உன்னுடைய

ஏதோ ஒரு முகம் பார்க்க வீழ்ந்தாய் ;

மயங்கி அதனில்.

ராஜி

எழுந்திரு.

இதோ பார், என் விஸ்வரூபம்.

உனக்கு ஞானக் கண்ணிருந்தால், பலநூறு

முகங்களுடன் கூடிய என்னைப் பார், இதோ.

ராஜி செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினாள். மழைவிட்டுப் போயிருந்தது. குடையையும் மீறி சமயங்களில் ஊசியாய் முகத்திலிறங்கும் மழை. கண்ணை உறுத்தாத பிரகாசமாய், சூரியன் இதமாய்கூட இருந்தது. அங்கங்கு தேங்கி விட்ட ஈரங்களைத் தாண்டிவிட முடிந்தது. ஆனால் சேற்றைத்தான் தவிர்க்க முடிவதில்லை.

ராஜி திரும்பிப் பார்த்தாள். கைலி மேல் ஸ்லாக்கை மாட்டிக் கொண்டு ஸ்ரீதர் பின்னால் வந்து கொண்டிருந்தான். இவள் ஒரு முறுவலுடன் திரும்பி, “மணி என்ன ஆகிறது?என்றாள்.

மேலே சட்டையணியாத ஒரு பையன், தெரு நாய்க் குட்டியை விரட்டிக் கொண்டு ஓடினான், எதிரே.

( கணையாழி )

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *